Wednesday, May 31, 2017

சமயோசித புத்தி: கவிஞர் தணிகை

சமயோசித புத்தி: கவிஞர் தணிகை
Image result for brain


கல்வி என்பது ஒரு ஆபத்தான நேரத்தில் தமக்கோ அடுத்தவருக்கோ அந்த ஆபத்திலிருந்து அவரைக் காத்து மீட்டெடுப்பதாய் இருக்கவேண்டும். அது தான் சரியான கல்வியாய் இருக்க முடியும்.அந்தக் கல்வியை நமது அரசுகளும் சமுதாயமும் வழங்கிட வேண்டும்.நான் சொல்வது முதல் உதவி பற்றியது மட்டுமல்ல. அது ஒரு சம்பவமோ, விபத்தோ நடந்தபின்னே உதவுவது, அதற்கு பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால் நான் சொல்ல முனைவது.


சரியாக எழுத்தறிவின்மை இல்லார் கூட சிலரைப் பாருங்கள் அவர்களின் அறிவும் ஆற்றலும் மூளையின் செயல் திறனும் மிகப் பிரமாதமாக வேலை செய்து அவரை சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் மதிப்பு மிக்கவராய் மாற்றியிருப்பதற்கு நிறைய உதாரணங்களைக் காணலாம்.

முகநூல் மார்க் ஜக்கர்பெர்க் ஹார்வேட் பலகலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர் அதே பல்கலைக்கழகத்தில் அழைத்து கௌரவ டாக்டரேட் பட்டம் பெற்றதும், சுந்தர் பிச்சை, வெங்கி இராமகிருஷ்ணன், கலாம் போன்ற மாமேதைகள் உருவான கதைகள் எல்லாம் இந்த சமயோசித அறிவு அதிகமாக பயன்பட்டதால் இருக்கும் என நினைக்கிறேன்.

பொதுவாகவே எமைப் பொறுத்த மட்டில்  மற்றவர்களுக்கு என்றால் ஒரு ஆத்திரம் அவசரத்தில் சிறப்பாக ஓடிச் சென்று உதவ முடிந்திருக்கிறது நிறைய முறைகளில் நிறைய வழிகளில் அப்போதெல்லாம் மிகச் சிறப்பாக செயல்பட்ட மூளை எனது தாய் உடல்நிலை மோசமான நிலைக்குச் சென்றபோது அன்று சரியாக செயல்படவில்லையோ என்ற சந்தேகம் அவர் இறந்து 11 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் என்னுள் எண்ணமாய் நிழலாடிக் கொண்டே இருக்கிறது.

யேசுநாதர் இறைவாக்கினர் தம் ஊரிலும் வீட்டிலும் தவிர வேறெங்கும் மதிப்பு பெறுவர் என்பது போல எல்லாருக்கும் நன்மை செய்கிற நம்மால் நமக்கு என்று ஒன்று வந்துவிட்டால் மட்டும் ஏதும் செய்து கொள்ள முடியாமல் மூளை அயர்ந்து விடுகிறது.

Image result for presence of mind and action

பொதுவாகவே எனைப்போன்றோர்க்கு ஏதோ ஒரு கற்பனை அல்லது எண்ண சஞ்சாரம் இருந்து கொண்டே இருக்கிறது. அது சில நேரங்களில் உடனடியான செயல்பாட்டிற்கு மிகவும் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுகளை எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.

இன்று நான் சேலத்தில் ஒரு வாகன முனையத்தில் மேட்டூர் செல்ல பேருந்துக்காக கையில் 5 தேங்காய் உடன் டப்பர் வேர் குடிநீர் ஒரு லிட்டர் வைத்திருக்கிறேன். ஒரு ஆம்னி நான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வந்து மேட்டூருக்கு எப்படி போகிறது என வழி கேட்கிறார்கள் வாகனத்திலும் பின் பக்க இருக்கைகள் காலியாகவே இருக்கின்றன. வழி சொல்லி விட்டு அந்த வாகனம் எனக் கடந்து போன சில விநாடிகளில் அட நாம் அங்கே செல்வதாக சொல்லி அந்த வாகனத்திலேயே  லிப்ட் கேட்டு சென்றிருக்கலாமே பேருந்துக் கூட்டத்தில் 20 ரூ கட்டணம் மீதமாகியிருக்குமே என்று எண்ணிக் கொண்டிருந்த சில நிமிடங்களில் பேருந்து வந்து விட ஏறிக்கொண்டு பயணித்த நிகழ்வு இன்னும் என்னுள் எண்ண அலைகளை அலை பரப்பிக் கொண்டிருப்பதால் இந்த பதிவு.ஒரு வேளை வயது ஏற ஏற மூளை பணி புரியும் வேகமும் குறைந்து விடுமோ?

Image result for presence of mind and action

என்னை நானே சமாதானபடுத்திக் கொண்டேன், அப்படி எல்லாம் தெரியாதார் வண்டியில் ஏறிக் கொண்டு பயணம் செய்வது எல்லாம் சரியல்ல என்றும் பேருந்தில் நாம் தனிக்காட்டு இராஜாவாக பயணம் செய்வதும் அடுத்தவர் வாகனத்தில் அவர் உதவியைப் பெற்றாராகவும் செல்வதும் நம்மை நாமே ஒரு படி தாழ்த்திக் கொள்வதாகும் என்றே எண்ணிக் கொள்கிறேன்.

அடுத்தவரிடம் ஒரு உதவியைக் கேட்டுப் பெறுவதும் கூட தன்மானத்துக்கு ஒரு மாற்றுக் குறைவுதானே.

வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சரியாக இருப்பதால்தானே இந்த பணிக்கு செல்ல முடிகிறது இதை விட பெரிய வாய்ப்பு வரும் எனக் காத்திருந்திருந்தால் இந்தப் பணி நிறைவு இருந்திருக்காதே...

ஒரு வாட்ஸ் அப் செய்தியில் நேற்று ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்: ஒரு மனிதர் ஒரு இளைஞரை அழைத்து நான் வளர்த்து வரும் மாடுகள் 3 அதில் ஒரு மாட்டின் வாலையாவது நீ தொட்டுவிட்டால் நீ கேட்பதை எல்லாம் செய்வேன் என்று சொல்ல...அந்த இளைஞரும் சவாலை ஒத்துக் கொண்டு அவர் இருப்பிடம் செல்ல, முதல் மாடு வருகிறதாம், அதன் துள்ளல், ஆட்டம், சீற்றம் எல்லாவற்றையும் பார்த்த இளைஞர் அருகே செல்லவில்லையாம், அடுத்த மாடு வரட்டுமே பார்த்துக் கொள்ளலாம் என...

அடுத்த மாடு முதலில் வந்ததை விட மிகப் பெரிய அளவில் அளவில்லாத ஆர்ப்பாட்டத்துடன் ஓடி மறைந்ததாம் இவனால் நெருங்கவும் துணிய முடியவில்லையாம்.


Related image
3 வது மாடு வர வேறு வழியே இல்லை என இளைஞர் இதைப் பிடித்தே ஆகவேண்டும் வாலை என நெருங்கினால் அந்த மாட்டுக்கு வாலே இல்லையாம்.

இப்படி வாய்ப்பு வரும்போது  பயன்படுத்தாவிட்டால் இப்படியும் முடியலாம்.ஆனால் நான் முன் சொன்னவை பின் சொன்னவற்றிலிருந்து வேறுபட்டவை என்பதை நீங்களும் உணரமுடியும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


2 comments:

  1. ...---பொதுவாகவே எமைப் பொறுத்த மட்டில் மற்றவர்களுக்கு என்றால் ஒரு ஆத்திரம் அவசரத்தில் சிறப்பாக ஓடிச் சென்று உதவ முடிந்திருக்கிறது ----
    உண்மைதான் நண்பரே, நமக்கு என்று வரும்பொழுது நம்மையும் அறியாமல் ஒருவித பதட்டம் உடன் வந்து ஒட்டிக் கொள்ளும், மற்றவர்களுக்கு எனும்போது, நமது மூளை தெளிவாய் வேலை செய்யும்
    உணர்ந்திருக்கிறேன்

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam

    ReplyDelete