Sunday, April 30, 2017

வேணு பார்த்திபன் கனவு: கவிஞர் தணிகை

வேணு பார்த்திபன் கனவு: கவிஞர் தணிகை

Image result for very good friendship

மேதின வாழ்த்துகள் சொல்லி எழுதினா திரட்டி.இன் ஏற்கெனவே எல்லாம் எழுதிட்டாங்கன்னு பதிவை இணைக்க மாட்டேன் என்பாங்க,பார்த்திபன் கனவுன்னு எழுதினா ஏற்கெனவே வந்த பழைய சினிமா ஜெமினி கணேசன் காலம் மலையேறிவிட்டது இப்போது எதுக்கு என்பார்கள், ஏற்கெனவே கல்கி எழுதிய கதையா என்பார்கள்,எனவே தான் இந்த வேறுபட்ட தலைப்பு. உண்மையிலேயே இது எனக்கொரு பால்ய நண்பன் பார்த்திபன் என்று இருந்தான் அவன் தந்தை வேணுகிருஷ்ணன் இப்போது இருவரும் இல்லை சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு தன் உயிரை விட்ட அந்த நண்பன் இன்று அதிகாலை 5 மணிக்கு எனது கனவில் வந்து விட்டான் அதுவும் மேதினமுமாக இன்றைய பதிவு.

எழுதுகிற ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும், அதையும் தான் பார்ப்போமே என்ற நோக்கு இவர்களுக்கு இப்போது இங்கு இல்லை.எனவே அமேரேந்திர பாஹூபலி, மகேந்திர பாஹுபலி,சூ மந்திரக்காளி புஸ் என்ற எனது பதிவை திரட்டி.இன் இணைப்பகம் பதிவு செய்ய நேற்று மறுத்து விட்டது. எத்தனையோ பேர் பாஹுபலி கன்குளூசன் பார்ட் பற்றி எழுதி இருக்கலாம். ஆனால் என்னுடையது வித்தியாசமானது, ஒவ்வொருவர் அனுபவம் என்பதும் வேறாக இருக்கிறதே... எனவே டைட்டில் செலக்சனில் கமல் விருமாண்டியில் சொல்லியபடி நாமும் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.

உலி ஸ்டெக் ஸ்விஸ் மலையேறும் மெஷின் என அழைக்கப்பட்ட அரிய மனிதர் தமது 40 வயதில் மரணமடைந்ததும் மேதினமும் இன்றைய அடையாளங்கள்.இன்று இந்த பதிவு பார்த்திபனுக்கான அஞ்சலி பதிவாக...


8 மணி நேர வேலை நமக்கு பரிசளித்த இந்த நாளை சிகாகோவில் அன்றைய மக்கள் போராடித் தந்த இந்த நாளை ஒரு விடுமுறை நாளாக எண்ணி அனுபவித்துக் கொண்டு இருக்கும் தொழிலாள வர்க்கம் இந்தியாவைப் பொறுத்த வரை இன்றைய மோடிக் காலக் கட்டத்தில் எந்த தொழிலாளர் உரிமையையும் சட்டமாக்கப்பட்ட வரையறையில் உரிய முறையில் பெறவே முடியவில்லை. அவ்வளவு வேலை இல்லாத் திண்டாட்டம். அவ்வளவு போட்டி. இந்திய மக்கள் தொகைப் பெருக்கம் எல்லாவற்றையும் அப்படி செய்து விட்டது.

ஆனாலும் ஆம், குடிக்கத் தண்ணீர் கூட அணையில் இல்லை ஆனாலும் எங்கள் ஊரில் லூர்துமேரி ராஜேஸ்வரி ஈஸ்வரியின் அதாங்க எல்.ஆர்.ஈஸ்வரியின் கிழடாகிப் போன குரல் காதை கிழித்துக் கொண்டுதான் இருக்கிறது மாரியம்மன் திருவிழா நாளை முதல் 3 நாளைக்கு. கோவில் ,நின்று விடுகிறது, மனிதம் மடிந்து விடுகிறது. எனவே ஆளுக்கொரு கோவில் காசிருந்தா கட்டிக் கொள்கிறார்கள்.அது எப்படி சம்பாதித்த காசாக இருந்தாலும் சரி. அதை எல்லாம் கேட்கக் கூடாது. அதாங்க மேதின உழைப்பாளர் தினச் செய்தி. ஆனால் கடவுள் மறுப்பு சிந்தனையாளர் என்ன சொன்னாலும் இங்கு வேலைக்காகாது.
Image result for very good friendship


சரி விடுங்க நம்ம பதிவுக் கருப்பொருள் பற்றி ஏதாவது சொல்ல முயல்வோம்.

பார்த்திபன் எனக்கு முதலாம் வகுப்பு முதலே நண்பன். அப்புறம் அவங்க மால்கோ காலனிக்கு குடி பெயர்ந்து விட்டார்கள். அதன் பின் தொடர்பு இல்லை. மறுபடியும் பள்ளி இறுதி ஆண்டு . நானும் அவனும் அதே வைத்தீஸ்வரா உயர் நிலைப் பள்ளிதான். கபாடிப் போட்டி இறுதி ஆட்டம், நான் மஞ்சள் அணியின் தலைவன்.

எப்ப சார் பைனல்? என்ற எம் நச்சரிப்பை பொறுக்க மாட்டாத செல்வன் பி.ஈ.டி ஆசிரியர் ஒரு கட்டாந்தரையில் சிறு சிறு கற்கள் முட்டிக் கொண்டிருக்கும் தரையில் கபடி கிரவுண்ட் எனக் கோடிட்டு விளையாட விட்டு விட்டார்

முதல் ரைடராக பார்த்திபன் எமது அணியை நோக்கி வருகிறான். நான் அணியின் தலைவன் மட்டுமல்ல சைடு மெயின் கேச்சர் கூட, சற்று நேரம் விட்டு விட்டு எகிறி டைவ் கேச் ஒன்றைப் போட்டேன் ஆள் அவுட். ஆனால் எனது வலது முழங்கையில் இரத்தம் கொட்டிக் கொண்டிருக்கிறது அதெல்லாம் யார் பார்த்தா? அதை எல்லாம் பார்த்தா ஜெயிக்க முடியுமா? எடுத்தவுடன் அட்டாக் ,அதிர்ச்சி அந்த அணி எங்களிடம் பணிந்தது நாங்கள் வென்றோம். இன்னும் அந்த கிழிந்து போன சான்றிதழ் என்னிடம் இருக்கிறது. அதை விட எனது வலது முழங்கை பின் புறத்தில் 25காசு அகலத்தில் ஒரு தழும்பு.நல்ல நினைவாக.

என்னுடைய உடம்பில் நிறைய விழுப்புண்கள் உண்டு அதுவும் முழங்காலில் எண்ணிக்கையின்றி. விளையாட்டு விளையாட்டு என்று ஒரே விளையாட்டுதான். இப்போது வாழ்வே ஒரு விளையாட்டாகத் தெரிகிறது.

பார்த்திபன் மறுபடியும் எப்படியோ இணைந்து விட்டான், அவன் திருச்சியில் பி.யு.சி படித்து விட்டு ஜாலியாக சுற்றிவிட்டு, கரஸ்பாண்டன்ஸில் டிகிரி படிக்கிறேன் என ஊரை சுற்றியபடி ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்தான். அவன் பெற்றோர்கள் தங்கம். அவனை எப்போதும் நம் பிள்ளை உதவாக்கரையாக போக மாட்டான் என நம்பினார்கள். அவனும் நல்ல பிள்ளையாகவே  இருந்தான்.

Related image

எனக்கு என் வீட்டுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனே ப்ரண்ட் இன் நீட் ஈஸ் ப்ரண்ட் இன் இன்டீட் என்பதற்கேற்ப செயல்படுவான், ஏதாவது விசேஷம் என்றால் இலை அவனது வீட்டிலிருந்து வரும், மாம்பழ சீசன் என்றால் அவன் வீட்டு மரம் பழம் எங்கள் வீட்டுக்கும் கொடுக்கும்.

காலையில் வாக்கிங் முயன்றோம் முடியவேயில்லை. தொடர்ந்து சில மாதங்கள் கூட...எனவே எப்போதும் மாலை நடைப்பயிற்சிதான். அவர்களது காலனியிலிருந்து என் வீடு வந்து எனை அழைத்துக் கொண்டு வாக்கிங் முடித்துவிட்டு மறுபடியும் வீட்டுக்கு வந்து விட்டு விட்டு, அவன் வீடு செல்வான். இரண்டாம் ஆட்டம் சினிமா அவனுடன் மட்டும்தான் நான் பார்த்திருப்பதாக நினைவு.

ஒரு முறை நா.மகாலிங்கம் கல்லூரி ஒன்றில் மேதின புரட்சி போல் ஒரு புரட்சியை செய்து விட்டு என்னை நீ பரீட்சைக்கு மட்டும் வந்து எழுதி விட்டு போனால் போதும் என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அப்போது நான் கல்லூரி இறுதி ஆண்டு.உலகமே முடிந்து போனது போலவும், வானமே தலைமேல் வந்து விழுந்து விட்டது போலவும் இருந்த நிலை.அப்புறம்தானே வானம் என்றால் அதில் ஏதும் பெரிதான போர்வை போன்றோ திடப் பொருளோ இல்லா வாயு நிலை என்பதும், பூமியின் சில மில்லி மீட்டர்களிலேயே வானம் ஆரம்பித்து விடுகிறது என்பதும் தெரிந்தது புரிந்தது, உணர முடிந்தது.

ஆனால் வீடு எல்லாம் என்னை ஒரு துஷ்டன் போல எண்ணியது, கஷ்டப்படும் குடும்பத்தில் இப்படி ஒரு கோடாறிக் காம்பா என்று கேள்வி எழுப்பியது. அது போன்ற வெறுத்துப் போன நிலையில் எனக்கு ஒரே ஆறுதலாக இருந்தவன் இந்த பார்த்திபன் தான்.

எனக்கு பாலமலை சென்று சேவைப்பணி செய்தபோது முன்னால் ஆந்திரப் பிரதேசத்தில் பட்கல் , என்ற தொழு நோய் மருத்துவ மனை , மஹ்பூப்நகர் மாவட்டத்தில் அது உள்ளது.அதில் பணி 3 மாதப் பயிற்சி, என்னவோ தவறு சாப்பாடு சரியாக சாப்பிடாததாலா என்னவோ, ஒரு செந்நிறத் தழும்பு வலது கையில் மேல் புறத்தில் உருவாகி இருந்தது, மூத்த சகோதரி கேட்டார் இதென்ன என்று, அது பாலமலையில் சுயசமையல் செய்யும்போது ஏதாவது நெருப்பு விழுந்திருக்கும் என எண்ணினேன். ஆனால் அது மற்ற இடங்களுக்கும் சிறிது சிறிதாக தனது பரவலை அடையாளம் காட்ட ஆரம்பித்தது.

Related image

அப்போதும் கூட இந்த பார்த்திபன் தான் இல்லை தணி, அதெல்லாம் இருக்காது, அதெல்லாம் நமக்கெல்லாம் வராது என்றான். ஆனால் அந்த நோயை ஒரு சாமியாரம்மா வழிகாட்ட பார்த்திபன் அம்மா அடையாளம் காட்டிய ஒரு பெருமருந்துக் கொடி என்னும் மூலிகை வைத்தியத்தில் ஆட்டுப் பால் கலந்து புளி, மாமிசம் நீக்கி பத்திய சாப்பாட்டுடன் ஓட ஓட விரட்டியதுடன், அதை நான் இது நாள் வரை பார்க்கும் அத்தனை பேருக்கும் வைத்திய உதவியாக செய்து வருவதற்கும் கால அனுபவம் கிடைத்தது.

நான் அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டேன்டா பார்த்திபா என்றால், அவனும் அக்கணமே விட்டுவிட்டான், நான் சினிமா பார்ப்பதை ஓராண்டுக்கு நிறுத்தி என்னை சோதித்துக் கொள்ள நினைக்கிறேன் என்றால் அவனும் அக்கணமே சினிமாவுக்கு செல்வதை விட்டு விடுவான்,

இப்படி சொல்ல ஒன்றா இரண்டா  எத்தனையோ...எனது பொருளாதார நிலைக்கேற்ப அவனுக்கு மாலை மலர் , தினத் தந்தி நாளிதழ்களில் நினைவஞ்சலி எனது தந்தைக்கு கொடுத்தது போல சில ஆண்டுகள் கொடுத்தேன். அப்புறம் விட்டு விட்டேன்.

வேலை கிடைக்காமல் தடுமாறும்போது, இல்லடா, பணம் கொடுத்தா டி.என்.பி.எஸ்.சியில் வேலை வாங்கிவிடலாமாம், அந்தப் பையன் கொடுக்கிறான், என்றான், கொடுத்தவன் வேலைஇ வாங்கிவிட்டான் நான் சொல்வது 1982 = 83 வாக்கில். அன்று குடும்பம் இருந்த நிலையில் அதை வீட்டில் கூட சொல்லவில்லை, அதெல்லாம் வேண்டான்டா ஏமாற்றி விட்டால் என்ன செய்வது என்று சலனம், அவனும் அந்த முயற்சி செய்யவில்லை.

மால்கோவில் வாரிசு வேலைக் கிடைக்கும்போதும் அதை தன் தம்பி வாங்கிக் கொள்ளட்டும் என விட்டுக் கொடுத்து விட்டு நான் எப்படியும் பிழைத்துக் கொள்வேன் தம்பிக்கு அந்த வாரிசு வேலையைக் கொடுத்து விடுங்கள் என பெற்றோரிடம் சொல்லி விட்டு விட்டான்.

நட்பு நட்பு என ஒரு புத்தகக் கடைக்கு நாளைக் கழித்தான். அதன் பின் ஒரு மதுபானக் கடைக்கு வேலைக்கு சென்றான், அது எமக்கு பிடிக்காததால் அவனிடம் பேச மாட்டேன் என ஒரு பாசாங்காட்டம் சில நாள் செய்தோம்.

அதன் பின் திருப்பூர் வேலைக்கு சேர்ந்தான். நன்றாக இருப்பதாகவும் சொன்னான். ஆனால் வங்கிக்கு சென்று டிமான்ட் டிராப்ட் எடுக்க போக்கும்போதும் வரும்போதும் வாகன வேகமும் அதன் கூட்டமும் தமக்கு ஏதாவது நேர்ந்து விடும் போலிருக்கிறது என அவன் தாயிடம் பகிர்ந்து கொண்டிருந்தான்.

நான் பணி நிமித்தம் வேறு மாநிலங்களில் இருந்த போதெல்லாம், தனியாக இருந்த என் பெற்றோர் , அத்துடன் என்னை நம்பிய என் தங்கை ஆகியோருக்கு நான் இருக்கும்போது என்ன என்ன செய்வேனோ அதெல்லாம் செய்தான், எனது கடிதத்தைப் பார்த்து அதை எல்லாம் செய்து விட்டு பதில் எழுதுவான்.

அவனுக்கு ஓர் வேலை என்னிடம் கேட்டார்கள். என்னால் அவனுக்கு வேலை கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டேன். அப்போது நான் திட்ட அலுவலராய் இருந்து பலருக்கும் சிறு ஊதிய அளவில் வேலை கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். ஒரு நண்பனை எனக்கும் கீழ் வேலை செய்பவராக என்னால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.அதை எல்லாம் யார் யார் எல்லாம் எப்படி எடுத்துக் கொண்டு அப்போது என்னைப் பற்றி என்ன நினைத்தார்களோ அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவே இல்லை.

அவனுடன் நான் மிதிவண்டியில் சேலம் சென்று வந்திருக்கிறேன். எனக்கு வண்டி ஓட்டுவதில் அவ்வளவு பயிற்சி எல்லாம் இல்லை எனினும்...அதே போல நினைத்தால் சாப்பாடு கொஞ்சம் எடுத்துக் கொண்டு விரும்பிய வழியில் எல்லாம் நடக்க ஆரம்பிப்போம் மாலை இருள் சூழ்வதற்குள் வீடு வந்து சேர்ந்து கொள்வோம், அப்படி ஒரு முறை சின்ன திருப்பதிக்கு சென்றோம், அங்கே மதிய உணவருந்த ஒரு பெரிய வீட்டில் இடம் கேட்டோம். அந்த தனியாக இருந்த மங்கை எந்தவித துளி சந்தேகமும் இன்றி வீட்டை திறந்து வைத்து நீரெல்லாம் கொடுத்து உபசரித்தார். என்னடா திருமணமாகா இரண்டு இளைஞர்கள் இவர்களுக்கு எப்படி இதை எல்லாம் செய்வது என்றெல்லாம் அவர் யோசித்தாற்போல் இல்லை. இத்தனைக்கும் அவருக்கும் இளவயதுதான்.இப்போதெல்லாம் அப்படி நடக்க முடியுமா? சாப்பிட்டு விட்டு திரும்பினோம். இப்படி அவனும் நானும் சேர்ந்தபோதும் சேராதபோதும் எனக்குத்தான் அவனால் எவ்வளவு நல்லவை நடந்தது? உண்மையில் அவன் தான் என்றுமே எனது நண்பனாக இருக்கிறான், இருந்தான், இருப்பான்....

ஆமாங்க,,, அவன் இத்தனை ஆண்டுக்கும் பின் இதே மேதின நாளில் வாழ்வை தொலைத்த இதே நாளில் நான் எந்த வகையிலும் அவன நினைக்காத போதும் கூட அதிகால 5 மணி இருக்கலாம் கனவில் வந்து இருந்தான்.

அவன் என்னுடன் இருக்கிறான். அது ஒரு சாலை. என் குடும்பம் சார்ந்தார் எல்லாம் ஒரு ஜீப்பில் இருந்து புறப்படுகிறார்கள், நானும் அவனும் சேர்ந்து அந்த வண்டியில் ஏறிக் கொள்ள இடம் இருக்க எனச் செல்ல அதில் எங்களுக்கு இடம் இல்லை. உடனே கனவு முடிந்து விட்டது.

அது நான் பணியில் சற்று மெருகூட்டிய காலம், சென்னைக்கு காமிரா வாங்க புறப்பட்டேன். உடன் பேருந்து ஏற்ற எனது தாய், சித்தி, ஆகியோர் வருகின்றனர். சற்று தூரம் சென்றதும் பாதையில் இடமிருந்து ஒரு பூனைக் குடும்பமாக அதாவது ஒரு தாய்ப் பூனையும் அதன் குட்டிகளும் குறுக்காக சென்றன.

உடனே என்னை தாயும், சித்தியும் வீடு வரச் சொல்லி சற்று நேரம் அமரச் செய்து , கொஞ்சம் குடிக்க நீர் கொடுத்து விட்டு அதன் பின் நான் புறப்பட்டு விட்டேன். சென்னையில் சில நாட்கள் பெஸ்ட் அன்ட் கிராம்ப்டன் கம்பெனியில் பணி செய்த ஒரு கல்லூரி நண்பரின் அறையில் தங்கி விட்டேன். காமிரா மூர் மார்க்கெட்டில் மினோல்ட்டா எக்ஸ் எல் ஆர் வாங்கிக் கொண்டோம். ப்ளாஸ் லைட், சார்ஜர், செல் எல்லாம். வாங்கி வீடு வந்து சேர்ந்தேன். அப்போதெல்லாம் இந்த போன் வசதி எல்லாம் அவ்வளவு இல்லை... ஏன் இல்லை என்றே சொல்லலாம்.

 பார்த்திபன் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் விழுந்து இறந்து விட்டான். தள்ளி விட்டாரா, தவறி விட்டானா என்றெல்லாம் தெரியவில்லை. உன்னை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை என்று நானும் தாயும் சென்று வந்தோம் என்றார் எனக்கும் மூத்த சகோதரர். சென்றேன் எல்லாம் முடிந்திருந்தது. அவனை நான் அந்த நிலையில் பார்க்காததும் எவ்வளவு நல்லது. அவன் அப்படியே இருக்கிறான். அவனை அவன் உடலைத் தேடிக் கண்டு பிடித்தார்களாம்...

அதன் பின் ஜெயமோகன், பிரம்ம ராஜன்,சாரு நிவேதா, விக்கிரமாதித்யன் ஆகியோர் அடிக்கடி நடத்தி வந்தார்கள் கவிதைப் பட்டறை, எழுத்துப் பட்டறை என எப்போதும் போகவில்லையே  என என் வாழ்வில் ஒரே முறை ஒகேனக்கல் சென்றேன். அதிலும் அவர்கள் அடித்த குடிகார கூத்து பிடிக்காததால் முதல் நாள் மாலையே திரும்பி விட்டேன். விக்கிரமாதித்யன் போன்றோர் எனது முதல் நூலான மறுபடியும் பூக்கும்  கவிதை நூலை கேட்டு வாங்கிக் கொண்டனர். அன்று சந்தித்த முகங்கள் இன்று பெரும் பிரபலங்களாக விளங்க அவர்கள் பேர் எல்லாம் கூட எனக்கு எவர் எல்லாம் கலந்து கொண்டார்கள் ஒகெனக்கல் வந்தார்கள் என்று...

ஒரு முறை அதிகாலை நானும் அவனும் இருக்கும் ஒரு போட்டோவை எங்கள் வீட்டுப் பூனை சுவற்றில் ஏறி இறங்கும்போது தட்டி விட்டது நல்ல வேளை உடையவில்லை, கோணலாக நின்று கொண்டிருந்தது அது கம்பி கட்டி மாட்டி வைக்கப் பட்டிருந்ததால்...அன்று அவனின் தந்தை இறந்திருந்த செய்தி வந்தது. அப்போது மால்கோ எல்லாம் மூடி விட்டார்கள். காவி நீரை மாசுபட வைக்கிறது அந்த பாக்சைட் மண் எச்சம் என அந்தக் கம்பெனியை மூடி விட இப்போது மால்கோ எனர்ஜி  லிமிடெட் ஆக இருக்கிறது.

ஒரு முறை அந்த மால்கோ மனமகிழ் மன்ற ஆங்கிலப் புத்தாண்டிற்கு விருந்தினர் டிக்கட் வாங்கி விட்டு கடைசியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றிருந்த எங்களுக்கு உணவு கிடைக்காததால் அவன் சண்டையிட்டது, அந்த மனமகிழ் மன்றத்தில் அவர்கள் உறுப்பினர் கார்டில் நான் அந்த நூலகத்தில் புத்தககங்கள் பெற்றுக் கொள்ள ஆவன செய்தது, அவன் தந்தை அனுபவ அறிவாளி ஆனால் மது பான அடிமை. ஆனால் ஜென்டில்மேன். அவரிடம் தான் ஆங்கிலக் கடிதங்கள் எப்படி பொலைட்டாக எழுதுவது என தெரிந்து கொண்டது...அந்தக் காலக்கட்டத்தில் தான் காசு செலவின்றீ எல்லா வார,மாத ஆங்கில தமிழ் நாளிதழ் யாவும் படித்தது அதுமட்டுமில்லாமல் ஆங்கில இலக்கியத்தில் அந்தநூலகத்தில் உள்ள அத்தனை நூல்களையும் படித்தது மேலும் தமிழ் நூல்களையும் முடித்தது...

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. அது ஒரு கால் நூற்றாண்டு நட்பின் பால்ய காலம் தொட்டு இளமைவரை தொடர்ந்த ஒரு அன்பின் கதையல்ல உண்மைச் சரித்திரம்.
அவனது தாயை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கனவுதான் அவனிடம்.மேலும் காதலுக்கும் தோள் கொடுத்தவன் அவன் ஒரு நல்ல நண்பர் வேறு ஏதாவது வார்த்தையை நட்புக்கு மீறி ஏதாவது சொல்ல முடியுமா என்ன? அவனது 25 வயதிலான மரணம் எனக்கு அதன் பின் நல்ல நட்பு எதையுமே மயிர் ஊடாடுமளவு கொடுக்க வில்லை.
Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை4 comments:

 1. அருமையான பதிவு. மிகவும் நெகிழ வைக்கிறது. நன்றி.

  ReplyDelete
 2. நட்பின் பெருந்தக்க யாவுள

  ReplyDelete
  Replies
  1. thanks sir vanakkam. good feedback

   Delete