Monday, May 16, 2016

2016 மே‍ 16 தமிழகத் தேர்தல் திருநாள்: ஜனநாயகக் கோடுகளும் கேடுகளும்: கவிஞர் தணிகை

2016 மே‍ 16 தமிழகத் தேர்தல் திருநாள்: ஜனநாயகக் கோடுகளும் கேடுகளும்: கவிஞர் தணிகை




திருவண்ணாமலையில் அ.இ.அ.தி.மு.கவும் தி.முகவும் மோதல் 3 பேர் மண்டை உடைந்தது, கோவையில் அ.இ.அ.தி.முகவும் பாஜகவும் மோதல் கார் கண்ணாடி உடைந்தது...தேர்தல் திருவிழா நோம்பிக்காசு போல 200 ரூபாய் முதல் 7000 வரை இடத்துக்குத் தக்கபடி பட்டுவடா.கள்ளச் சந்தையில் மதுவின் விற்பனை அமோகம்.இன்னும் சில‌

1.3 நாள் மதுக்கடைக்கு விடுமுறை தேர்தலுக்காக என்றார்கள்.ஆனால் விடுமுறை நாள் ஒன்றுக்கு ஒரு கோர்ட்டர் வீதம் வழங்கலாம் என்றது தேர்தல் ஆணையம் அதை மீறி இன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகம் என்று செய்திகள் வருகின்றன.. தேர்தல் பிரச்சார நாட்களில் மது விற்பனை சுமார் 40 சதவீதம் அதிகம் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன.தேர்தல் ஆணையம் அதை ஒப்புக்கொண்டுதான் தேர்தல் ஒழுங்காக அமைதியாக நடக்க வேண்டுமானால் மதுக்கடை விடுமுறை வேண்டும் என 3 நாள் மூடியது. பயனில்லை.தமிழ‌கத் தேர்தல் நிலை பாரீர்.

2. இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்பது போலவே வாக்குக்கு காசு வாங்கினால் 2 ஆண்டு சிறை என்றது தேர்தல் ஆணையம். கொடுப்பவர்க்கு எத்தனை ஆண்டுகள் என்ன நடவடிக்கை என்று சரியாகத் தெரியவில்லை.ஜனநாயகம் நிர்வாணப்பட்டு கற்பிழந்து மானமிழந்து அவமானப்பட்டு துணி அவிழ்க்கப்ட்டு முச்சந்தியில் சிரித்துக் கிடக்கிறது. சிரிக்கக் கிடக்கிறது. எத்தனை வாங்கிய பேரையும் எத்தனை கொடுத்த பேரையும் சிறைக்கு அனுப்பியது இந்த அரசும் தேர்தல் ஆணையமும் எனத் தெரியவில்லை.ஜனநாயகத் தேர்தல் நிலை பாரீர்.

3. எமது வீதி வரை பணம் பாய்ந்தது உண்மைதான். ஆனால் வாங்கியவரும் கொடுத்தவரையும் நம்மால் நிரூபிக்க முடியாது. ஏன் எனில் இலஞ்சம் கொடுத்து இலஞ்சம் வாங்கிய போது எப்படி அதை நிரூபணபடுத்த முயன்று நாம் அவமானப் பட்டு நின்றோமோ அதே அனுபவம் இதிலும் ஏற்படும் . ஜனநாயகம் பாரீர்.

4. முகநூலில் தேர்தல் அலுவலர் முன் ஒரு வேட்பாளர் குமுறுகிறார் நான் என்ன முட்டாளா கிழவிகளின் காலில் எல்லாம் விழுந்தபடி இருக்க இவங்க 2 கட்சியினரும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டால் என்ன இது ஜனநாயகம் என கேட்கிறார், காவல் துறையையும் சேர்த்து ஏசுகிறார். இது வரை என்ன நடவடிகை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது எமது உசிதமான புகாருக்கு என கர்ஜிக்கிறார். அரசு அலுவலர் பேசாமல் மௌனமாக இருக்கிறார்.பண நாயகம் பாரீர்.

5. தேர்தல் ஆணையம் 50 % வெற்றி பெற்றிருக்கிறது சுவர் விளம்பரம்,சத்தம், ஆர்ப்பாட்டம், கொடிகள் கம்பங்கள், பூத் சிலிப் தருதல்,போக்குவரத்து இடைஞ்சல் போன்றவையுடன் ப்ளக்ஸ் கலாச்சாரம் போன்றவை முற்றிலும் தடைப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் பணப்புழக்கத்தை அதனால் பெரிதும் தடை செய்ய இயலவில்லை. செயல் பாடின்மை பாரீர்.

6. மகன் மணியத்தையும் அவரது நண்பர் ஒருவரையும் தமது வாகனத்தை நிறுத்தி மேட்டூர் கோட்டாட்சியர் வாக்குக்கு பணம் அளிக்கிறார்களா எனக் கேட்டிருக்கிறார். அவர் அய்யா எனக்கு வாக்கு இல்லை அது பற்றி ஏதும் தெரியாது என மறுமொழி கொடுத்து வந்தார்.முயற்சிதான்... ஆனாலும் பாரீர்.

7. தேர்தல் முடியும் வரை மின் நிறுத்தம் இருக்கக் கூடாது என அரசை கண்டிப்புடன் வலியுற்த்தியது தேர்தல் ஆணையம். ஆனால் இன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை எமது ஊரில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.ஆணை எப்படி நடைமுறைப்படுத்தப் படுகிறது என்று பாரீர்...



திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

பெரியார் சொன்னபடி

அயோக்யன் தேர்ந்தெடுக்கபடுகிறான் எனில்
தேர்ந்தெடுப்பவன் முட்டாள் ....உண்மைதானே!

ஒழுக்கமில்லா ஜனநாயகம், கட்டுப்பாடில்லா சுதந்திரம், தியாகமில்லா சாதனைகள்...ஒரு நாட்டை விளங்க வைக்காது...தத்துவ மேதை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்...

ஒரு பொதுக் குடி நீர்க் குழாயில் தனி நலம் பாராட்டி எவரும் தமது வீட்டுக்கு நீளமான (ஹோஸ்) குழாய் போட்டு நீர் ஏற்றிக் கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி செயல்படுத்த படாத பாடு பட வேண்டியிருக்கிறது. அதற்கும் கூட கண்குத்திப் பாம்பாக உறங்காமல் இருக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுப்பாடில்லா நாட்டில் ஒழுக்கம் இல்லா நாட்டில், தியாகம் இல்லா நாட்டில் எந்த நல்லதையும் செய்வது மிகக் கடினமானது.

வெகு ஜனவாதி பொது ஜன விரோதி.பொது ஜனவாதி வெகு ஜன விரோதி.

காமராசர் முதல்வராக இருக்கையிலேயே தமது தாய்க்கும் கூட ஊராட்சி குடி நீர்க் குழாயை தமது வீட்டு வாயில் முன் புதிதாக போடப்பட்டிருந்ததை அனுமதிக்கவில்லை...

அது போன்ற புண்ணீய புருசன்கள் பிறந்த நாட்டில் இந்த அவலங்கள் இப்படிக் கேடுகள்...

அய்யா இந்த தேர்தல் இவ்வளவு ஜனநாயக நசுங்கல்கள் கசங்கல்களுக்கு இடையே நடந்த போதும் ஆளும் கட்சி தூக்கி எறியப் பட்டால் அது எமக்கு மகிழ்வே.

அடுத்த தேர்தல் விழா ஊராட்சி, நகராட்சி இன்னும் ஓராண்டில் அதை அடுத்து பாராளுமன்றத்திற்கு. அடுத்து சட்டமன்றத்திற்கு அடுத்து ....இப்படியே போய்க் கொண்டே இருக்கும் இந்தத் திருநாள்கள்....ஜனநாயகம் ....தேர்தல் ஆணையம் தம் பணியில் ஒவ்வொரு படியாய் மேல் ஏறிக் கொண்டிருக்கட்டும்... நாமும் இருக்கும் வரை பேசுவோம். எழுதுவோம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





2 comments:

  1. அய்யா இந்த தேர்தல் இவ்வளவு ஜனநாயக நசுங்கல்கள் கசங்கல்களுக்கு இடையே நடந்த போதும் ஆளும் கட்சி தூக்கி எறியப் பட்டால் அது எமக்கு மகிழ்வே. - நிஜம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post sir. vanakkam.please keep contact

      Delete