Thursday, February 19, 2026

அறிவியல் விஞ்ஞானியா? நாகேஸ்வர ராவ் நீ டீம் லீடரா?":கவிஞர் தணிகை.

 இவன் எல்லாம் ஒரு அறிவியல் விஞ்ஞானியா?/ டீம் லீடரா?? கவிஞர் தணிகை





அறிவியல் விஞ்ஞானியா? நாகேஸ்வர ராவ் நீ  டீம் லீடரா?

நாகேஸ்வர ராவ் சந்தியா தம்பதிகள் ஆந்திராவைச் சார்ந்தவர்கள், பெங்களூரில் மிக மேல் தட்டு மக்கள் வசிக்கும் ஒயிட் ஃபீல்டு பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். மகள் வழக்கம் போல அமெரிக்கக் குடியரசில்.தாம் இன்னும் 3 அல்லது 4 வயதுதான் இருப்போம் என இந்த 76 வயது மனிதன் அதற்கும் பின் சந்தியாவை யார் பார்த்துக் கொள்வார் என சினிமா பாணியில் காலை 10.15 மணிக்கு சமையலறையில் பணி செய்து கொண்டிருந்தவரை பின் பக்கமாகச் சென்று அவரது முகத்தை துண்டை வைத்து  மூடி இறுக்கி கொன்று விட்டு,பக்கத்தில் 20 நிமிடம் மௌனமாக இருந்து விட்டு பக்கத்து வீட்டுக்காரரை உதவிக்கு அழைத்து, அவர் மருத்துவரை அழைத்து, மருத்துவர் ஆம்புலன்ஸ் போன்றவற்றை அழைத்து எல்லா காட்சிகளும் அரங்கேற அந்தக் காவல் துறை அலுவலரிடம் இந்த ஓய்வு பெற்ற இஸ்ரோவில் பணி புரிந்த அதுவும் ஒரு டீம் லீடராக இருந்தவர், தமது நிலை பற்றி விளக்கி அதனால் தாம் கொன்றேன் என காவல்துறையிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.


 இந்த அசம்பாவிதம் நேற்று புதன் காலையில் பெங்களூருவின் ஒயிட் பீல்ட் (வெள்ளை வயல்) என்ற இடத்தில் நடந்த உண்மைச் சம்பவம் பாக்யராஜ் படமல்ல. இதெல்லாம் ஒரு அதிர்ச்சி அறிக்கை. எளிதில் செரித்துக் கொள்ள முடியாததால் இந்தப் பதிவு. இந்தியாவில் மட்டுமல்ல இந்த உலகில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்குமய்யா!


இப்படியும் இருக்கிறார்கள்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


நன்றி: டைம்ஸ் ஆப் இன்டியா 19.02.2026 (7 மணி நேரம் முன்பு).


அறி!


p.s:அதே நேரத்தில் தற்போதுதான் கீச்சொலியில் ட்விட்டரில் Dhinakaran ஒரு செய்தி பகிர்வு: தொடர்ந்து 30 நிமிடம் சிபிஆர் (நெஞ்சை மருத்துவ முறையில் அழுத்திக் கொடுத்து)செய்து ஒரு பெண் நோயாளியை ஒரு மருத்துவ தேவதை காப்பாற்றியுள்ளதாக...https://x.com/i/status/2024061286317760908/

Monday, February 16, 2026

திருவாகி:கவிஞர் தணிகை

 திருவாகி



காலப் புத்தகத்தின் தாள்களைத் திருப்பி

காற்று படிக்கிறது

இயற்கை காற்று படிக்கிறது


விந்தை மழை வித்தை புவி யோனி வாங்கி

உயிராக்கி பயிராக்கி உருவாக்கி

கருவாக்கி எருவாக்கி...


புவி சுழற்சி செய்கிறது

கால்கள் இல்லாமலே கவி(தை) வாங்கி

சுழற்சி செய்கிறது

செய்கை சுழற்சி செய்கிறது


சிரிப்போம், அழுவோம்

சிந்தை தெளிவாக...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Wednesday, February 11, 2026

CINEMA சினிமா சினிமா: கவிஞர் தணிகை

 சினிமா சினிமா: கவிஞர் தணிகை



ஆக்கபூர்வமாக வாழ்வில் சாதிப்பார் பெரும்பாலும் சினிமா பார்க்காதாராகவே இருப்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வருகிறேன். பெரும் ஞானிகள், விஞ்ஞானிகள், நிர்வாகிகள்,சாதனை புரிந்தோர் இப்படி எல்லாம் இருப்பார் சினிமா பார்ப்பதில்லை என்றே சொல்கிறார்கள், என்னிடம் என் தனிப்பட்ட கேள்விக்கு பதிலாக தெரிவித்தார்கள். அப்படியும் சினிமா வேண்டுமெனில் இப்போதெல்லாம் நேரம் குறைவாக சில பல நிமிடங்களில் சொல்ல வேண்டியதை சொல்லி விடும் திரைப்படங்கள் நிறைய வந்து விட்டன. சில நாட்களுக்கும் முன் 22 நிமிடத்துக்குள் ஒரு குறும்படம் ஒரு 3 மணி நேர சினிமாவின் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததை சிறுமியர் கடத்தல் ,பாலியல் குற்றம் போன்றவற்றை சிறப்பாக சொல்லி இருந்ததைக் கவனிக்க முடிந்தது.


சினிமா கூட ஒரு போதையாகவே இருப்பதை நான் தனிப்பட்ட முறையில் என் கருத்தாக வைக்கிறேன்.ஆவதும், ஆனதும் சினிமாவாகவே, அது ஒரு தவிர்க்க முடியா சக்தியாக,அது ஒரு தொழிலாக இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு நிறைவான வென்றெடுக்க வேண்டிய சமுதாயக் கட்டமைவுக்கு போதை, மது,சூதாட்டம்,சிறுவர் கடத்தல்கள்,பாலியல் குற்றங்கள்,கட்டுப்பாடில்லா இணையத் தேடல்களும் சுதந்திரமும்,சினிமாவும் கூட‌பெரும் தடைகளே. தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றமும் நாட்டின் வளர்ச்சியும் கூட இதனால் பாதிப்படைகின்றன.


வரலாற்று முக்கியத்துவம் மிக்க, காந்தி,(அட்டன்பரோ இயக்கியது) ஸிண்ட்லர்ஸ் லிஸ்ட்,குழந்தைகள் பெரிதும் விரும்பும் டைனசோர் போன்ற படங்கள் தவிர, வரலாற்று ஆவணப் படங்கள்,தவிர‌ வணிக நோக்கில் வன்முறையைப் பரப்பும் படங்கள் இருக்கக் கூடாது, அதுவும் பல மணி நேரம் இருக்கக் கூடாது பெரும்பாலான மனிதர்களின் நேரத்தைக் கொல்வதாக இருக்கக் கூடாது.ஆக்க பூர்வமாக மனிதர் இருக்கும் போது இயங்கும் போது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்கும்,


 ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் கிடைத்த வாய்ப்பு என்பார் நேரத்தை மிக அரியதான சக்தியாக இழந்தால் அதைப் பெற முடியாத வாய்ப்பாக நினைக்கிறார்கள். பொருளை இழந்தாலும் திரும்ப பெற்று விட முடியும்.நேரத்தை இழந்தால் அதைத் திரும்ப பெற வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதை எல்லாம் கேட்ட பின் நான் எவ்வளவு நேரத்தை இப்படி இழந்து விட்டேன் என நினக்கும் போதே எனது குற்ற உணர்வு எனை மென்று தின்கிறது, அவ்வளவு படங்கள் பார்த்திருக்கிறேன் என் வாழ்வில் இளைமையில் இருந்து, ஏன் சிறுவனாக இருக்கும்போதிருந்தே சினிமா, சினிமா என்றே பார்த்து அழிந்திருக்கிறேன். இல்லையேல் இன்னும் கூட சிகரத்தொடல்களுக்கு சென்றிருக்கலாமோ என காலங் கடந்த பின் தோன்றுகிறது.


இதை எல்லாம் சாவின் அருகே அருகே செல்லும் மனிதர்கள் அனைவர்க்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. எவன் கேட்கப் போகிறான்? யார் படிக்கப் போகிறார்? எவர் இதை பின் பற்றப் போகிறார்? என்றெல்லாம் நினைக்கலாம்.

 கியூபாவின் தொலைக்காட்சி அந்த நாட்டின் விவசாயம், விளையாட்டு,மக்களுக்குப் பயன்படும் கருத்துகள் தவிர வேறு எதையும் ஒளி பரப்புவுதில்லை. ஒளிபரப்ப வில்லை. எனவே அந்த சிறு நாட்டை வல்லரசுகள் எல்லாம் விழுங்கப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை மேலும் அதன் கட்டமைவில் பெரும் பங்கு வகித்த அதன் தலைமைக்கு செய்த கொலை முயற்சி பலிக்கவே இல்லை. சிங்கப்பூர் கூட நல்ல கட்டமைவில். ஏன் இப்போதிருக்கும் அரேபிய நாடுகள் எல்லாம் இது போன்ற நிலை வழியில் பயணம் செய்ய முயன்று வருகின்றன.


அவை எல்லாம் சிறிய நாடுகள் இந்தியா பெரிய நாடு என்பார்க்கு, ரஷியாவும் சீனாவும் முன் நிற்கின்றன.இஸ்ரேலின் ஒவ்வொரு இளைஞரும் அந்த நாட்டின் கட்டமைவுக்கு உறுதுணையாக இருப்பதை செய்திகள் தெரிவிக்கின்றன.கட்டுப்பாடு அவசியம் ஒவ்வொரு தனிமனிதர்க்கும், ஏன் சமூக மாற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும்.


சொல்லத் தோன்றியதை சொல்லி விட்டேன் மிகச் சுருக்கமாக‌

பிறகு உங்கள் விருப்பம்.


1897ல்(PATENTED)developed between 1889 and 1892,  தாமஸ் ஆல்வா எடிசன் மூவி கேமிராவை ஆக்கபூர்வமான விடயங்களுக்குப் பயன்படுத்தவே கண்டு பிடித்தார் வெடிமருந்தை ஆல்ப்ரட் நோபெல் கண்டறிந்தது போல ஆனால் அவை எல்லாமே காலத்தால் மனிதர்களால் எதிர்மறையாகவே பயன்படுத்துவது அவர்கள் கண்டிருந்தால் இதை எல்லாம் கண்டறியாமலே விட்டிருக்கலாமே என நமது ஜி.டி நாயுடு போல வேதனைப் பட்டிருக்கவும் கூடும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, February 9, 2026

மலையும் மடுவும் இலையும் நதியும் சருகும் விறகும்: கவிஞர் தணிகை

 மிஸ்டர் கி: கவிஞர் தணிகை



ஒன்று

கர்வத்தின் சிகரத்தில் ஏறி நிற்கிறாய்

இல்லை

அதல பாதாளத்தில் 

அனைவரின் கால்களிலும் விழுந்து

புழுவாய்த் துடிக்கிறாய்


அட உனக்கு(ம்) கொம்புகள் இல்லை

இங்கே  எண்ணிப் பார்

எனது எழுத்துகளில்

எத்தனை கொம்புகள் என்று,,,


   மறுபடியும் பூக்கும் வரை

   கவிஞர் தணிகை

CRICKETகிரிக்கெட் விளையாட்டு (உலகளாவிய வியாபாரம்) 10 ஓவர் போதுமே: கவிஞர் தணிகை

 கிரிக்கெட் விளையாட்டு (உலகளாவிய வியாபாரம்) 10 ஓவர் போதுமே: கவிஞர் தணிகை



நீண்ட காலத்துக்கும் முன்பே கிரிக்கெட் (மட்டைப் பந்து) 10 ஓவரே போதும், டி20,50 ஓவர், டெஸ்ட் பார்ம் எல்லாம் சுருக்கப் பட்டு 10 ஓவரிலேயே கூட முடித்துக் கொள்ளலாம்,முடித்துக் கொள்ள வேண்டும் அது மற்ற விளையாட்டுக்களைப் போல என்று நமது கருத்தை வலை தளத்தில் வேர்ட்பிரஸ்ஸில் நாம் எழுதிக் கொண்டிருந்த போதே முன் வைத்தோம். குறைந்த பட்சம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நம் நாட்டிலாவது.


மாலை முழுதும் விளையாட்டு என்றான் பாரதி. ஒவ்வொரு நாளும் நாளின் ஒரு பகுதியான நேரத்தில் தாம் விளையாட்டு அவசியமாக இடம் பெற வேண்டும். நாள் முழுதும், சினிமா, விளையாட்டு என்பவை தவறான வாழ்வின் முறை.


உடற்பயிற்சிக்கான விளையாட்டுகளாகப் பார்க்கப் படும் இந்த விளையாட்டில் முதிர்ச்சி பெறும் நபர்கள் வேண்டுமானால் தம் வாழ்வை அதற்காகவே அர்ப்பணிக்கட்டும், ஆனால் உலகின் பெரும்பாலான மனிதர்கள் அப்படி முழுநேரமும் அதில் ஈடுபட அவசியமில்லை. வியாபாரிகள் பெரும் முதலீடுகளை வைத்து அதிலிருந்து பெரும் பொருள் ஈட்டி வருவது யாவரும் அறிந்ததே.அரசியல் இதில் துளியும் இருக்கவே கூடாது.


விளையாடுவோரில் 3 பிரிவு, சம்பள வேறுபாடுகள்,அரசியல், அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதார் அதைக் கைகொண்டுவிடுவது இப்படி நிறைய அதில் குறைபாடுகள் உள்ளன. கபில்தேவ், தோனி போன்றோர் மட்டுமே அல்லது நிரூபித்த நபர்கள் மட்டுமே அதை மேலாண்மை செய்ய வேண்டும்...


வைபவ் சூரிய வன்சி போன்ற சிறுவர்கள் வயது காரணமாக இல்லாமல் தேசிய முதன்மை அணியில் இணைக்கப் பட்டு நிரூபிக்கப் படாத வீரர்கள் எல்லாம் அப்புறப் படுத்தப் பட வேண்டும்.


கைப்பந்து/வாலிபால், கூடைப் பந்து/பேஸ்கட் பால், கால் பந்து/ஃபுட் பால் கபடி,தட கள விளையாட்டுகள்,பூப்பந்து, இறகுப் பந்து இப்படி எல்லா விளையாட்டுகளுமே சில மணி நேரங்களே இருக்க, சில மணிகளுக்குள் முடிந்து விட, கிரிக்கெட் மட்டும் பல மணி நேரங்களை ஏன் நாள் கணக்கைக் கூட எடுத்து விழுங்கி வருவது குறைக்கப் பட வேண்டும். அதற்கு 10 ஓவர் மட்டுமே நடத்தப் படும் விளையாட்டுகள் அவசியம். எல்லாருடைய முக்கியமாக‌ இளையோரின் உழைப்பை எடுத்து உறிஞ்சுவது  தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.


பொதுவாக கிரிக்கெட் என்பது வெள்ளைக்கார இங்கிலாந்து நாட்டவரால் குளிர் காலத்தில் தம் உடலை பயிற்சி செய்து கொண்டு வெம்மைப் படுத்திக் கொள்ள ஏற்படுத்திய விளையாட்டு.அதை விளையாடட்டும் தவறில்லை அவருடைய பாட்டல்/மதுக்குடுவைக் கலாச்சாரத்தோடு இதையும் சேர்த்துக் கொள்வது தவறு.


10 ஓவர் எனும் போது நேரம் நிறைய சேமிக்கப் படும், ஒவ்வொரு ஓவரும் மிக முக்கியம்.(ஒரு ஓவருக்கு 10 பந்துகள் கூட எடுத்துக் கொள்ளட்டும் தவறில்லை).ஆனால் ஒரு ஓவரில் ஒரு விளையாட்டு ஓவர் இடம் பெறச் செய்ய வேண்டும், அதாவது ஒரு ஓவருக்குள் அந்த மட்டை பிடிக்கும் வீரர் அவுட் ஆகவில்லை என்றாலும் அடுத்த ஓவருக்கு அடுத்த வீரரே வந்து மட்டை பிடிக்க வேண்டும்.எனவே எல்லா வீரர்களும் பந்து வீசுவதும், அடித்து விளையாடுவதிலும் பயிற்சி பெற்றாக வேண்டும். ஒரு வீரர் அவுட் ஆகிவிட்டால் மற்ற வீரர் வந்து ஆடலாம் மொத்தத்தில் 10 ஓவர்கள் 10 விக்கெட்டுகள்.அந்தக் காலம் வருவது வெகு தூரத்தில் இல்லை. இப்போது டி 20 மற்ற கிரிக்கெட் வடிவங்களை எல்லாம் எடுத்து விழுங்கி பிரபலம் அடைந்தது போல இதுவும் ஒரு நாள் நடக்கும் பாருங்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, February 8, 2026

RAJYA SABHA KAMAL HAASAN'S MAIDEN SPEECH:ராஜ்யசபாவில் கமல்ஹாசனின் கன்னிப் பேச்சு: கவிஞர் தணிகை

 ராஜ்யசபாவில் கமல்ஹாசனின் கன்னிப் பேச்சு: கவிஞர் தணிகை



திரை உலக ஞானி என்றழைக்கப் படும் கமல்ஹாசனின் ராஜ்யசபா பேச்சை புரியவில்லை என்று ஒரு சார்பான நபர்களும், ஊடகங்களும் சொல்லி இருப்பதை பேசி வருவதைக் கவனித்தீர்களா? அறிவிலிகளுக்குப் புரியாது அறிவு இருப்பார்க்கு அது நன்கு புரிகிறது. அதில் புரியாதது ஏதுமில்லை. ஏன் எனில் ராஜ்யசபா என்பது மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினர்களின் தேர்தல் மூலம் அல்லது கட்சிகளின் சார்பாக போதுமான வாக்குகள் பெற்ற‌ அறிவாளிகள் அல்லது கலைஞர்கள் அல்லது படிப்பாளிகள், படைப்பாளிகள் போன்றோரைக் கொண்டது. பேரறிஞர் அண்ணா பேசியதை  அங்கில உரையை புத்தகமாகப் படித்த நினைவுகளில் இந்தப் பதிவு செய்யவும் எனக்கு அவா.


அவர் (கமல்) ஒரு  நல்ல கவிஞரும் கூட. எனவே தமது கவிதை மூலம் அறம் பாடியிருக்கிறார் இது அனைவர்க்கும் புரியாது வாழ்க ஒழிக என்ற கூச்சல் மட்டுமே இடுவோர்க்கு. ஏன் எனில் வீழ்க வளமுடன், தமிழ் படித்தால் திருடவும், பிச்சை எடுக்கவும் முடியாது என்றெல்லாம் தமது ஆற்றாமையை சொல்லாடி இருக்கிறார்.சுமார் ஏறத் தாழ 12 நிமிடத்துக்கு சற்றேறக் குறைய பேசியதை அடியேனும் கவனித்தேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் தமது பணியை செவ்வனே செய்திருப்பதாகவே கருதுகிறேன். முடிந்தால் வாய்ப்பிருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.


சட்ட மன்றங்களிலும்கூட‌  யாம் சிறுவயதில் கண்டதுண்டுM.L.C எம்.எல்.சி என ஒரு மேலவைப் பிரதிநிதித்துவம், மேலவை இப்போதெல்லாம் கலைத்து வெகு காலம் ஆகிவிட்டது. அவை எல்லாம் பொது மனிதர்க்கு, படிப்பார்க்கு, படைப்பார்க்கு என இருந்தது. அதெல்லாம் கூடத் தேவையில்லை என விட்டு விட்டார்கள்.


ஒரு நாடு எப்படி இருக்கிறது என்பதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதே சான்று. அந்த ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தால் அந்த மக்கள் எப்படிப் பட்டவர்களாக இருந்து இவர்களை எல்லாம் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதும் புரியும்.


மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி, மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி. சாக்ரடீஸ் கிரேக்க தேசத்தில் கி.மு 300 முதல் 400களிலேயே எப்படி இந்த மக்களாட்சி தத்துவம், வாக்கெடுப்பு முறை மூலமே மரணம் தழுவினார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அறிஞர்களுக்கு எப்போதுமே அது விதி. ஆனால் காலத்தை மிஞ்சி சரித்திரம் சொல்லும் அவர் பேர்களை அதுவும் ஒரு விதி.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு: WITH THE  CONSIDERATION  OF IN FORMALLY சரியாக பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாத ஒரு நபர் இவ்வளவு பெரிய ஏணியில் ஏறி இருக்கிறார் என்பதில் இருந்து அவரது உழைப்பை  அவரது திறத்தை நாம் கணித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.Don't try to be neglect it.







Saturday, February 7, 2026

கோழி பாலு (எ) பிகே BK பிராய்லர்ஸ் பாலச்சந்திரன்: கவிஞர் தணிகை

 கோழி பாலு (எ) பிகே BK பிராய்லர்ஸ் பாலச்சந்திரன்: கவிஞர் தணிகை




நம்ப முடியாதவை எவ்வளவோ இருக்கின்றன.நடந்து விடுகின்றன. ஓர் அந்தி சாய்ந்த வேளை, கிராமியப் பகுதி மலையடிவாரத்தில் வேறு ஊருக்கு சென்று விட்டு நமது நாயகன் கால் நடைப் பயணமாக  விரைவாக ஊர் திரும்புகையில் இருட்டில் காலை ஒரு பாம்பின் மேல் வைத்து  விட்டதை உணர்கிறான் கால் பாதத்தின் அடியில் பாம்பு அதுவும் படம் எடுத்து கொண்டு தலை தூக்கி நிற்கிறது, இவனை ஏதும் செய்யவில்லை. இவன் அதிர்ச்சியில் உறைந்து போய் மெதுவாக பதற்றம் உள் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் அசையாமல் கீழிருந்த தனது வேட்டியை கைகளால் உயரத் தூக்கி ஏற்றிக் கட்டியபடி மெதுவாக அசையாமல் அசங்காமல் காலை நகர்த்திக் கொள்ள அந்த நாகம் இவனைத் தீண்டாமல் சென்று விடுகிறது. அதனால் தாம் அதன் பேர் நல்ல பாம்பு. 


இது கதை அல்ல உண்மைச் சம்பவம் இதை மறு நாளில் எனைப் பார்த்து பகிர்ந்து கொண்டார் நான் இன்று  உயிருடன் இருப்பதே பெரும் பேறு,என்னாலேயே இதை நம்ப முடியவில்லை என பெரும் வியப்புடன் கூறி இப்படி ஒன்று நடந்து விட்டது என விவரிக்கும் போதே என்ன உணர்வு என அறிய முடியாமலேயே இன்ப அதிர்ச்சி மறு நாள் காலை வரை குறையாமல் இருந்ததை அப்படியே சொன்னார்.  அந்த உண்மைச் சம்பவத்தின் நாயகன் பாலச் சந்திரன். அதன் பின் இவர் வாழ்வே மிகுந்த செல்வாக்கு மிக்கதாக மாறியுள்ளதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறேன்.


கோழி பாலு எனச் செல்லமாக என்னால் அழைத்து வரப் படும் பாலச் சந்திரன் மங்கிய கீச்சுக் குரல். நல்ல செயல்வீரர்,மென்மையான குணம் ஆனால் வீரியமுள்ள போர்க்குணமும் கொண்ட நல்ல விவசாயி.அடிப்படையில் இவர் விவசாயி நிலக்கிழார் ஆனாலும் இப்போது பல ஆண்டுகளாக BK பிகே பிராய்லரின் உரிமையாளர்.பெரிதாக படிப்பு ஒன்றும் இல்லை. ஆனால் மகனை எம்.எஸ்M.S பிரான்ஸில் படிக்க வைத்து வருகிறார். பெண் ஒரு பல் மருத்துவர்B.D.S இலண்டன் என்.ஆர்.ஐக்கு மணம் செய்து வைக்கிறார்.


ஒரு காளி கோவிலை தமது விவசாய நிலத்தின் சாலையோரத்தில் கட்டி பராமரிப்பு செய்து வணங்கி வருகிறார், மேலும் பாடம் போடுவதுமுண்டு.இவர் ஈனத்தொழில் புரிவதுதான் இவருக்கு ஏற்றது என இவரது குடும்ப சோதிடர் சொன்னதைப் பின் பற்றி கோழி வெட்டி இறைச்சி கடைக்கு சொந்தக்காரராக இந்தப் பகுதியில் பிரபலமடையக் காரணம் கோழி, காடை, முட்டை போன்றவை எல்லாக் கடைகளையும் விடவும் இவர் கடையில் 5 அல்லது 10 எப்போதுமே  விலைக் குறைவு என்பதுவும் மேலும் எடை நாணயம் போன்றவை.


வாரமொருமுறை வெகுதூரம் தமது சொந்த TEMPO வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்று பழநி அருகே சென்றேன், ஊத்துக்குளி சென்றேன்,என்று ஏதோ ஒரு தொலை தூர குக்கிராமங்களுக்கெல்லாம் சென்று பறவைகளை டெம்போ நிறைய  வாங்கி வந்து விற்று கை கண்டு விட்டார்.


இவர் நிலை கண்டு இவருக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்ற இவரது மாமனார் குடும்பம் தேடி வந்து பெண்ணளித்து குடும்பமாக்கிய கதையில் சோதிடம் பங்கு வகித்தது அதை அவரது சோதிடர் அப்படியே சொன்னதாக சொல்வதிலிருந்து அதைக் கேட்பார் மனதில் கூட சோதிடத்தின் மேல் ஒரு நம்பிக்கை வந்து நிற்கும்.


மொத்தத்தில் வளமான பாலு, பலமான பாலு, விவசாயத்தை நம்பி வீண்போகாத பாலு குடும்பத்தை சிறக்க வைத்தும் பிள்ளைகளை வளமுடன் வாழவைக்கும் வழிகள் கண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார். கல்வி ஒரு பொருட்டல்ல  முழு முயற்சியே  வாழ்வின் முன்னேற்றத்திற்கு முழு முதல் காரணம் என. என்றாலும் இவருக்கு இவரது முன்னோர் வைத்து சென்றுள்ள நிலமகள் அத்தனைக்கும் ஆதாரம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

 பி.கு:‍ இத்தனைக்கும் அடியேன் 40 ஆண்டுக்கும் மேலான‌ தியானப் பயிற்சியிலும், இராமலிங்க வள்ளலார் பற்றும் , சைவ‌ நெறிமுறைகளைப் பின்பற்றும் முயற்சியில் இருந்தாலும் இந்த கசாப்புக் கடைக்கார விவசாயியும் நானும் நல்ல நண்பர்கள்.


Friday, February 6, 2026

செந்தில் குமாரும் செந்தில் முருகனும்: கவிஞர் தணிகை

 செந்தில் குமாரும் செந்தில் முருகனும்: கவிஞர் தணிகை



மேலை நாட்டுக்கு சென்று விட்ட ஒரு ஜென்டில்மேனும் அவருடன் ஒரே கல்லூரியில் படித்த மூத்த தோழரும் எனது நண்பர்களானார்கள்.


செந்தில் குமார் என்னும் செந்தில் எப்படி என்னுடன் நெருங்கினார் என்பதே என் நினைவில் இல்லை. ஆனால் அவருடைய் செயல்பாடுகளும் அளவான சொற்களும் அவரை ஒரு இனிய நபராகவே என்னுள் வைத்திருக்கிறது இனி(யன்), கனி (மொழி) என்ற தீந்தமிழ் சாற்றுப் பெயர் பாரம்பரியப் பெயர் தொடர்ச்சிகளுடன்...


எனது திருமண நாளும் இவருடைய திருமண நாளும் ஒன்றாகும் ஒவ்வொரு ஆண்டும் தவறாத வாழ்த்தை கோர்ப்பது அவரது இயல்புக்கு சான்றாகும். அவர் வாங்கிக் கொடுத்த 2 தொப்பிகள் நினைவு பறை சாற்ற‌

ஒரு முறை முடக்கு அறுத்தான் கீரையை தொடர்ந்து உண்ண (பச்சையாகவே) உடலில் சிறு கொப்புளங்கள் ஊசி முனை அளவு உண்டானதை கிள்ளியதால் அவை பெருத்தன பிரச்சனை உண்டு பண்ண அறுவை சிகிச்ச்சை செய்யுமளவு சென்று அவற்றை மருத்துவம் பார்க்க உடன் இருந்து இவர் செய்தது உதவி.


மூத்த இனியனை இலண்டனில் முதிர் நிலை கல்வி பயிலவும், இளைய கனியை விருப்பம்போல படிக்க வைப்பதும் அவரின் தகுதி . எல்லோருடனும் நல்நட்பு பாராட்டியே உயர்ந்தோரில் இவரையும் நாம் சேர்த்துக்  கொள்ளலாம். நாங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய் ஆட்களா? எங்களைப் பற்றி எல்லாம் எழுதுவீர்களா? என்றார் பதிலாக எமது கணக்கில் நல்லவர், கெட்டவர் தாம் பெரியவர் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லியதால் விளைந்த பதிவு இது...


இவர்தாம் தமது சீனியர் என செந்தில் முருகன் என்னும் சமூக ஆர்வலரை தமது கல்லூரியில் படித்தவர் என்று அறிமுகப் படுத்தினார். அது முதல் இவரை பல நிகழ்வுகளில் இவரை சந்தித்தேன். இவர் நடத்திய நிகழ்வுகளிலும் பங்கு கொண்டேன்.


கெட்டதே பார்க்கத் தெரியாத மனிதம். எல்லாத் தரப்பு மனிதரிடையேயும் சென்று நல்லதை முன் மொழிந்து இருக்கும் இடத்தை இனியதாக்கத் தெரிந்த மானிடம். 


இவர்கள் இருவர்க்கும் இந்தப் பதிவின் மூலம் நன்றி


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


 

Thursday, February 5, 2026

திருவில்லிப் புத்தூர் இரத்தின வேல் அய்யா: கவிஞர் தணிகை

 திருவில்லிப் புத்தூர் இரத்தின வேல் அய்யா: கவிஞர் தணிகை



அரிய இந்த மனிதரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இணையத்தில், வலை தளத்தில், முக நூலில் கிடைத்த ஓர் நல் முத்து.இவர் மாதிரி இணையத்தை நல்லதுக்குப் பயன் படுத்தி வரும் நாயகன் எவருமே இல்லை எனச் சொல்லலாம். பெரியவர், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்.நிறைய அறிவார் சார்புடைய சபைத் தொடர்பு. இவர் போன்ற மனிதரைக் காண்பதரிதிலும் அரிதே.


எல்லாரையுமே மகள், மகன், என்று அழைத்துக் கொண்டு, எல்லோரிடமும் அன்பு மழை எப்போதும் பொழிந்து கொண்டு சூல் கொண்டு உயிர் மேகமாய் வாழ்ந்து வரும் ஒரு ஆற்றல் மிக்க மனிதர்.சொல்லை விட செயலை விரும்பும் செயல் வீரர்.மென்மையான மேன்மையான செயல்பாட்டாளர் பொறுமை நிதானத்துக்கு சொந்தக்காரர் அவர் நீடூழி வாழ இந்தப் பதிவு வாழ்த்துகிறது. முதுமை அல்ல இவருடன் இருப்பது நிறைய அனுபவத்துடனான இளமை.


நானறிந்த வரை எதையுமே, எவரையுமே இவர் புறம் தள்ளுவதே இல்லை. ஆண்டாள் உற்சவம் திருவில்லிப் புத்தூரிலிருந்து இவர் உலகெலாம் தொடர்பேற்படுத்திக் கொள்வதைக் காண முடிகிறது, சிவகாசியில் ஒரு தீப்பெட்டி உற்பத்தித் தொழில் செய்வதாக அறிந்தேன். இவரின் வாரிசுகள் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். நாங்கள் இது வரை நேரில் சந்தித்ததே இல்லாத போதிலும் மிகவும் அணுக்கமான நண்பர்களாகவே இருக்கிறோம் எப்போதும்.


இவர் வழியாக சில புதிய‌ புத்தகங்கள் எனக்கு கிடைத்தன. அவை பற்றி எனது வலைப்பூவில் எழுதினேன்.எனது நூல்களையும் வாங்கி என்னைப் பெருமைப் படுத்தினார். வெளியே சொல்லக் கூடாது என்று என்னிடம் உறுதி மொழி வாங்கியபடி எனக்கு சில முறை எனது முக்கியமான கட்டங்களில் எனது மகனின் கல்விச் செலவுக்கு உதவிய மாமனிதர்.


சுஜாதா தமது இரத்தம் ஒரே நிறம் நாவலுக்கு இவரிடம் ஆதாரங்கள் பெற்றமை பற்றியும், அவர் எழுதிய கடிதத்தையும் பெருமையாகக் கூறுவார். அவருக்கு சுஜாதாவுக்கு நான் எனது நூல்களை அனுப்பி வந்தமை பற்றியும் அவர் எனை எனது பேரை ஒரு நூலில் (சிறு கதை நாவலில்) கதையின் நாயகனாக வைத்தது பற்றியும், கலாம் எனக்கு எழுதியிருந்தது பற்றி எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அவர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டமையின் போது ஏற்பட்ட இடைவெளியைக் கூட ஏன் உங்களைக் காணவில்லை என்பதற்கு பதிலாக‌ குறிப்பிட்டிருந்தார்.


இவரது விலாச அட்டையில் இவரது தர்மபத்தினி துணைவியுடன் இருப்பது எப்போதும் எம் கண்களில் நிற்கிறது. நட்பு என்பதும், அன்பு என்பதும் உலகின் எந்த மூலையிருந்தாலும் மலர்வதே மணம் பரப்ப, மனிதம் மனித நேயம் எப்போதும் உயிர்ப்புடன்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



Wednesday, February 4, 2026

ரைட்டர் சினிமா விமர்சனம் writer Tamil movie:கவிஞர் தணிகை

 ரைட்டர்  சினிமா விமர்சனம்:கவிஞர் தணிகை



எனது மடலேற்றுக் கட்டு , என்ன புரிகிறதா? தன் முகவரி உடைய கடிதத் தாள் கற்றையில் லட்டர் பேடில் ,,ஆங்கிலத்தில் பொயட், ரைட்டர், ப்ரீலேன்ஸ் ஜர்னலிஸ்ட் கம் சோசியல் ஆக்டிவிஸ்ட்(POET,WRITER,FREELANCE JOURNALIST CUM SOCIAL ACTIVIST) என்று எனது உருவம் மற்றும் காந்தி உருவத்தை அச்சடித்து தந்தார் அந்த நண்பர் அவர் தாம் இந்த வலைப்பூவையும் ஆரம்பித்து தந்தார் அதை எல்லாம் மறப்பதே இல்லை.


ரைட்டர் என்றால், எழுத்தாளர் என்றும் சொல்லலாம், எழுதும் பணி புரிபவர் என்றும் பொருள் இருக்கிறது அதுவும் காவல் நிலையங்களில் அந்த பெயர் தொழிலாக முன் வரிசையில் நிற்கிறது. இப்போதெல்லாம் சினிமா பார்ப்பதில் ஆர்வம் நாட்டம் இல்லை. அது பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டு பேசுவதுமில்லை. சிறை பார்க்க வேண்டும் என நினைத்தேன்,மேலும் வெளி நாட்டு நண்பர் ஊருக்கு வந்திருந்த போது பராசக்தி படத்துக்கு அழைக்கலாம் என்று இருந்து சார் தியேட்டருக்கு எல்லாம் வர விரும்ப மாட்டார் என விட்டு விட்டதாகவும் கூறினார்.


இப்போதெல்லாம் சினிமா பார்ப்பதில்லை நேரம் குறைவு மற்றபடி அவை விரயம் என்றே தோன்றுவதால் செல்வதால்.


ஏன் எனில் ரஜினிகாந்த், கமல், ஏன் இளையராஜா போன்றோர் கூட மது அருந்தும் மானிடர்தாம் என்பது அறிய முடிந்ததால் அவர்கள் தேவர்கள் அனுப்பி வைத்த தூதர்களாக எண்ணி இருந்ததும் உண்டு வெளித்தோற்றத்தை வைத்து அண்ணாந்து பார்த்தபடி...மதுவுக்கு எதிரான போராட்ட களம் கண்ட தோற்றுப் போன காந்திய சிந்தையானர்களில் நானும் ஒருவன்.


1980களில் தொட்டதெல்லாம் கவிதைத்தெறிப்பு என்னிடம் கண்ட எனது தோழர்களும், நண்பர்க்ளும் ஏன் காந்த காந்திய மூத்த‌ இயக்கத் தோழர்களும் கூட சினிமாத் துறைக்குச் செல்லுங்கள் மிகப் பிரபலமான பெரிய ஆளாய் வருவீர் என்பார்கள்...நல்ல வேளை நான் அந்த தவறை செய்யவில்லை. எனது இலக்கு நோக்கி நல்லபடியாக நகர்ந்திருக்கிறேன். என்னால் முடிந்தளவு நாட்டுக்கும் வீட்டுக்கும் செய்து விட்டதாகவே எண்ணுகிறேன்.


இப்போது ஒரு செய்தி பார்த்தேன் சிவாஜி ராவ் கெய்க்வாட் அவர்கள் 45 பவுன் எடுத்து உரியவரிடம் சேர்த்த அந்த பெண் துப்புரவுத் தொழிலாளியை அவர் தம் குடும்பத்தை அழைத்து கட்டி அணைத்து அளவளாவி 2 பவுன் செயினை பரிசளித்ததாக, முதல்வரும் ஒரு இலட்சம் கொடுத்துள்ளார் அது அரசியல் தளம். மற்றபடி ரஜினிகாந்த் என்னும் சிவஜி ராவ் கெய்க்வாட் அவர்களுக்கு விஜய் தேவலை அந்த ஒரே ஒரு விடயத்தில் துணிந்து அரசியலுக்கு தம் நலத்தை பின்னுக்குத் தள்ளி வந்து விட்டதால். மற்றபடி அவருக்குத் அந்தத் தகுதி, அரசியல் எல்லாம் தெரியுமா என்றால் எல்லாம் மைனஸ்.


கடந்த ஞாயிறு அன்று எண்ணுகிறேன், கலர் தொலைக்காட்சி channel , கலைஞர் மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது அளித்த அதே தொலைக்காட்சியில்...அதை சிறிது நேரம் நேர்படப் பேசு மற்றும் சிறகடிக்க ஆசைக்காக பயன்படுத்தி வருகிறோம் இணைய வலைதளச் செலவு நீங்கலாக அதற்கு வேறு 130 ரூ செலவு மாதம்...


அதில் சிறிது நேரம் சமுத்திரக் கனி நடித்து, ஜேக்கப் இயக்கி பா இரஞ்சித் தயாரித்த‌ இந்த ரைட்டர் படம். ஒர் சேனலை விளம்பரம் விரும்பாமல் மாற்றி பார்க்க...ஓடிக்கொண்டிருந்ததை விட்டு வெளி வராமல் மனம் தைத்தது.பார்த்து முடிக்கும் போது மணி 11.30 இரவு ஆகி இருந்த்து உறக்கம் குறைந்தது.அப்புறம் தேடலில் அந்தப் படம் 2021லேயே வெளி வந்த படம் அதை யூ ட்யூப் சேனலிலேயே இலவசமாகக் காணலாம் என்றும் தெரிந்தது


எந்தத் துறையையுமே ஒட்டு மொத்தமாக நாம் கெட்டது, நல்லது என பார்க்க முடியாது பொதுவாகவே மனிதர்களுக்குரிய தனித் தன்மையுடன் மட்டுமே எவற்றையும் பார்க்க வேண்டும் என்பதற்கேற்ப இந்த சமுத்திரக் கனி ரைட்டர் கேரக்டர் மிக அருமை. படம் மிக இயல்பாக வந்திருக்கிறது ஆர்ப்பாட்டம் துளியின்றி. அதனால் எவரும் அதிகம் பார்த்திருக்க மாட்டார் என்றே எண்ணுகிறேன். வசூல் பற்றியும் வெற்றி தோல்வி பற்றியும் இந்தப் படம் பெற்றி பெரிதான செய்தி ஏதுமில்லை.


என்ன இது அநியாயம் ஒரு கல்லூரி மாணவனைப் பிடித்து காரணமில்லாமலே சிறையிலடைத்து என்கவுண்டரும் செய்கிறார்களே, என்று பார்க்கப் போனால் அதில் காவல்துறையினரின் தற்கொலை மரணங்கள் பற்றி தமது முனைவர் படிப்புக்காக ஆய்வு செய்யும் மாணவராக அவர் தேடப்பட்ட குற்றவாளி போல சித்தரிக்கப் பட்டு கொலை செய்யப் படுகிறார். அதில் ஒரு நியாயமான சாதுவான இந்த தங்கராஜ் என்னும் சமுத்திரக் கனி ரோல் எப்படி அதை அணுகுகிறது என்பதே படம்...வலையில் அகப்பட்ட எலி போல் காவல் துறைப் பணியில் சிக்கிய இந்த கேரக்டர் அல்லாடுகிறது ஒரு நீதியும் செய்து முடிக்கிறது. எல்லாமே இயல்பாக இருக்கிறது அதிகம், குறைவு என்பதெல்லாம் இல்லை.


முடிந்தால் ஒரு முறை பாருங்கள். மிக நல்ல படம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Tuesday, February 3, 2026

சாமி யார் அம்மா? சாமியாரம்மா: கவிஞர் தணிகை

 சாமி யார் அம்மா? சாமியாரம்மா: கவிஞர் தணிகை



எனது அன்பு வாசகர்களுக்கும் அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் இன்று நான் எடுத்துக்  கொண்டிருக்கும் கருப் பொருள் மகா நுட்பமனது நுட்பமானது, நுணுக்கமானது ஏன் சிக்கலானதும் கூட. எனவே சற்று கூடுதலான கவனம் தேவை இதைப் படித்துப் பரிசீலிப்பதற்கு.


கடவுள் இல்லை என்பாரிலும் கடவுள் உண்டு என்பாரிலும் எவ்வளவோ சக்தி புதைந்து கிடைக்கிறது என்பது  மறுக்க முடியா உண்மை.


நான் இல்லை அடியேன் சிறுவனாக இருந்த போதிருந்து பார்த்து அனுபவித்து ருசித்த அனுபவத்தையே இந்தப் பதிவில் தருகிறேன். இதற்கும் முன்பே வேறோ எங்கோ தந்திருப்பதாகவும் நினைவு.இருந்தாலும் இன்று அதை மறுபடியும் தருவதால் எவர்க்காவது பயன்படும் என்ற நோக்கம் உண்டு.


பொதுவாகவே வானொலியில், தொலைக்காட்சியில் மின்பொருளாய் இருக்கும் ட்ரான்ஸ்மீட்டர் வழியே நமக்கு வேண்டும் அல்லது வேண்டாத அலைநீளத்தின் வழியே செய்திகளை, காட்சிகளை ஒலி, ஒளியாகப் பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அதே போல் இன்றைய செல்பேசிகள், செயலிகள்,செயற்கை நுண்ணறிவு(ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஏ ஐ) அதே நிலை அதை விட அதிக சக்தியுடன் மனித மூளைக்கும் உண்டு அதை பண்படுத்தி பயன்படுத்திப் பார்ப்பதில் தான் வேறுபாடு. சிலர் அதை ஆன்மீகம் , மனோசக்தி என்றே சொல்ல, சிலர் பலர் அதை பக்தி, மதம் என்று சொல்லி வருவதும் உண்டு. மனோ வேகம் வாயு வேகம் என்பார்களே கேள்விப்பட்டதுண்டா?


மற்ற உயிர்களை விட மனிதர்க்கு நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ வேண்டும் உடல் அதனுள் உறையும் உயிர் எப்போதும் வேண்டும் என்ற பேரவா உண்டு.எனவே அறிவியல், ஆன்மீகம் வழித் தேடல் உண்டு கொண்டு தொடர்ந்தபடி...அதி மன உணர்வு, அடி மன உணர்வு, உள்ளுணர்வு என படிமங்கள் நினைவாற்றலாய் சேமித்து வருவதாகவும் அதில் உள்ளுணர்வை ஆன்மா தொட்ட பிறகு அந்த உடலின் உயிருக்கு நிறைய வாழ்வின் வழிகாட்டல்கள் உள்ளதாகவும் அறிவியலும் ஆன்மீகமும் சொல்லி ஏற்றுக் கொள்கின்றன.


எங்கள் ஊர் அருகே இராமன் நகரில் அந்த சாமியாரம்மா அருள் வாக்கு சொல்வதை அனுபவித்து இருக்கிறேன். இப்போது அவர்கள் இல்லை என்றாலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் என் காதுகளில் கணீரென ஒலித்தபடியே  அந்தக் காட்சிகளும் விரிந்த படியே இருக்கின்றன.


சத்தி சங்கர, சத்தி சங்கர, வேலு முருகனும் வேலு முருகனும், வேலாயுத பண்டிதனும் வேலுமுருகனும்,...நீதி அழியாது, நிச்சயம் தவறாது, கோடு தவறாது, குறிப்பு தவறாது , கட்டு தவறாது, கணக்கு தவறாது, பள்ளிகர தேசத்திலே பள்ளி கொண்டிருக்கும் பட்சம் கள்ளி கர நாட்டிலே கதறிக் கொண்டிருக்கும் பட்சம்,நம்புறவனுக்கு நடராஜன் நடராஜந்தான்,கண்ணே, நம்பாதவனுக்கு யமன் ஒரு தூதுவன் தான்...யமன் ஒரு தூது வந்தான்...என தீப்பந்தம் ஒன்றை எரியும் குத்து விளக்கின் நல்லெண்ணயில் தோய்த்து வாயில் வைத்து 3 முறை செய்து வித்தை போல விதியைச் சொல்லும் விதியைக் கொல்லும் நல்ல சொல்லும்...


அப்பப்பா, அம்மமா சொல்லி மாளாது அதன் முகத்தின் அப்போதைய‌ தேஜஸை அப்போது அந்த சாதாரணமான டிபிகல் கவுண்டச்சியிடம்.க்ளுக் என ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்கள் அதில் தெய்வத்தைக் காணலாம். வாக்கு கேட்க முதலிலேயே போய்விட வேண்டும்.இல்லை தாமதமகும் போது அல்லது நேரம் கடக்கும் போது வேறுபாடு இருப்பதாக எங்கள் வீடுகளில் சொல்வார்.அப்படியானால் அந்த சக்தி கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கும் அதிக நேரம் நீடித்து இருப்பதில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது. தெய்வம் காட்டும் ஊட்டாது என்ற சொல்லுக்கேற்ப.


நான் அதற்கு பிடித்த சிறுவன், விருப்பத்துடன் அந்த சாமியாரம்மா, அது பூ மரம் எனச் சொல்லும் அவரது கணவர் வெங்கடாஜலம் என்னும் பெரியவர் அவருக்கு எல்லாம் சிறு சிறு பணி செய்து அந்த அறைக்கே செல்லும் உரிமை பெற்றதுண்டு...வேறு யாரும் அத்தனை சீக்கிரம் அந்த அறையில் காலடி எடுத்து வைக்க முடியாது. ஒரு புறம் முருகன் சிலை, இன்னொரு புறம் வேங்கடமுடையோன் இரு பக்கங்களிலும் வெள்ளிப் பிரம்புகள், வெள்ளி வேல்கள் இப்படி  இவரிடம் வரும் பக்தர்கள் கொடுத்த காணிக்கைப் பொருட்கள்.யாரையும் எப்போதுமே காணிக்கை எனக் கேட்டதே இல்லை.அவரவர் மனமுவந்து செய்ததை ஏற்றுக் கொண்டதுண்டு. ஊரின் மிகப் பெரிய பிரபலங்கள்கூட வந்திருந்ததைப் பார்த்ததுண்டு.


ப்யூச்சர் அவுட்லுக் FUTURE OUTLOOK,விஷன்  VISION தொலை நோக்குப் பார்வைஎன்றெல்லாம் சொல்வது போல பல காலம் கடந்து நடக்க இருப்பதை முன் கூட்டியே சொல்லும் ஆற்றல் அதை கருத்தாழி சொல்லுகிறேன், கட்டும் உண்டு போடுகிறேன், தடமும் உண்டு ஓட்டுகிறேன் வழியும் உண்டு காட்டுகிறேன்...அந்தப் படிக்காத பாமர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அந்தப் பெண்ணிடம் என்ன ஒரு வார்த்தை பாருங்கள்: கருத்தாழி, சுனாமியை ஆழிப் பேரலை என்பது போல கடலுள் ஆழ் கடலுள்,ஆழ் கடல் வாழ்வில் கிடக்கும் ஒரு கருத்து முத்தை கொண்டு வந்து கொடுக்கும் ஆற்றல்... நாளுக்கு, நாள், தேதி, எனச் சொல்லி விரல்களில் எண்ணி ஒரு முடிவைச் சொல்லும்...அவை தவறாது... புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வாக்கு சொல்லும்.திங்களும் உண்டா என மறந்து விட்டது. 

3 பிரிவாய் வாக்கு சொல்லும். முன் பின் வந்தார் அதற்கே நன்கும் தெரியும் அழைத்து சொல்லும், 1.ஒன்று நடந்து விடும் என்று சொல்லும்2. இரண்டு முய‌ற்சி செய் அல்லது நாள் பட நடக்கும் என்று சொல்லும் வழியும் சொல்லும், 3.மூன்று நடக்கவே நடக்காது வேண்டாம் விட்டு விடு என்று சொல்லி கருத்தை விட்டு விடச்  சொல்லும்.அதற்கு அந்த வாயுள் 3 முறை சென்று வரும் எண்ணெய்த் தீப்பந்தம் அணைந்தோ எரிந்தோ வழி காட்டும்,எப்போதோ நடக்க இருப்பதை அப்போது பிட்டு பிட்டு வைத்து விடும் நல்லதோ கெட்டதோ என அறிய வழிகாட்டும்.


எங்கள் குடும்பம் அவர்களுடன் மிக நெருக்கமுடையதானது. எனது தாய் தெய்வா(னை)யும் அந்த அம்மாவும் மிக நெருக்கமான நட்பில் நனி சிறந்தார்.


அங்கு வந்து தீர்க்க முடியா பிணிகளை வெறும் மந்திரித்த திருநீறு எலுமிச்சம் பழங்களை வைத்தே தீர்த்த நிலைகளும் உண்டு....பேய் பிடித்தவர்களை ஓட்டி அவர்கள் முடியை எடுத்து அந்த வீட்டின் முன் இருந்த பெரிய புளிய மரத்தில் வைத்து கட்டியதும் உண்டு அதை எல்லாம் நான் கண் கூடாக கண்டிருக்கிறேன். அந்த இடத்துக்கு வந்து அமர்ந்த நிலையிலேயே இது போன்ற துர்சக்திகள் தங்களை வெளிப்படுத்தியதயும் கண்டிருக்கிறேன்.


இதன் நீளம் அதிகம்... எனக்கென்னா கேள்வி எனில்:முருகன் வெங்கடாஜலபதி என இரண்டு கடவுளா?சரி விட்டு விடுங்கள்


திருப்பதி, திருவண்ணாமலை, பழநி,ஏன் எங்கள் ஊர் நாங்கள் செய்த கபாலீஸ்வரர் ஆலயம்,எங்கள் வீட்டு பிரார்த்தனை அறை, தியான அறை, குளியல் அறை,திருவரங்கம்,சேலம் கேம்ப் பேருந்து நிலையம் இப்படி எல்லா இடங்களிலும் ஆன்மீக வழிகாட்டலை அடியேன் உணர்ந்திருக்கிறேன்.இது 40 ஆண்டுக்கும் மேலாக தியானப் பயிற்சியில் ஈடுபட்டதற்கான பரிசு. இதை சுமார் 10 ஆண்டுகளுக்கும் பின்பிருந்து பெற ஆரம்பித்திருந்தேன். ஒலியற்ற வார்த்தைகள். எனது கணிப்பு சரியாக இருந்தால் கடவுள் சக்தி என்பது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது அதை ஒரு சரியான அலை நீளத்தைப் பயன்படுத்தி நாமும், எவரும் , யாரும் பெற முடியும்.அதற்கு உடல் ஒரு கருவி, உயிர் ஒரு ஆன்மாவை அறியும் முயற்சியில் நமக்கு கிடைத்த பரிசு.OMNI POTENT OMNI PRESENT.

அகம் ப்ரம்மாஸ்மி

இங்கு அறிவியல் அண்டப் பெருவெளி, பிரபஞ்சம், கோள்கள், புவி, விண்மீன்கள்,கருந்துளை,ஆகாயம் அதன் துளிகள் இப்படி எல்லாம் விரிக்கும் போது மனிதம் ஒரு சிறு கூறு அது அதற்கே செய்து கொள்ளும் ஒரு சமாச்சாரமே இவை எல்லாம். மற்றபடி விண்ணளந்த ஆற்றல் ஏதுமில்லை


இது போன்ற கொடுப்பினையை வைத்த சிலர் அதை வேறு வழிகளில் கொண்டு செல்கிறார்கள், சிலர் நாம் தாம் பெரியவர் வேறு யாவருமே ஒன்றும் அறியாதார், அல்லது பிறர் யாவருமே தவறான ஆட்கள், நாம் ஒருவர் செய்வதுதான் சரியானது என தப்புக் கணக்கில் வாழ்ந்து வருவதையும் நான் கண்டு வருகிறேன்.


இது ஒரு ஆய்வுக்குரிய கருப்பொருள்.... நகைப்பிற்கிடமின்றி ஆராய்ந்து பாருங்கள் நன்றி வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Monday, February 2, 2026

A.P . RAAJA .A.P. ராஜா : கவிஞர் தணிகை

 A.P. ராஜா : கவிஞர் தணிகை



ஒவ்வொருவருள்ளும் ஒரு நாயகன், நாயகி இருக்கிறார். அதை கண்டு கொண்டால் அவர் வீழ்வதில்லை.கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக மாலையில் நடைப் பயிற்சியில் 7 கி.மீ கிராமப் புறத்தில் நடந்து வருபவனான எனக்கு ஒரு புது நபர் அறிமுகமானார். அவர் கடந்த கோவிட் 2019 முதல் தமது நடைப் பயிற்சியை துவக்கி உள்ளதாகவும்,காலையிலும் சுமார் 5 கி.மீ செல்வதாகவும் அறிந்தேன். நமது தெரிதல், அறிதல், புரிதல்,உணர்தல் தத்துவம் இவருடன் பயணம் செய்வதாக அமைந்து விட்டது நாளடைவில்.


யார்ரா இது?, நமக்கே சவால் விடுகிற மாதிரி ஒட்டுப் பள்ளம் வந்து திரும்புகிறாரே,தினமும் நமக்கு முன்னரே வந்து செல்கிறாரே நம்மை விட வயது மூத்தவராகவும் இருக்கிறாரே எனப் பார்த்தால் அவரைப் பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. சற்று பொறுமையாக உற்று கவனித்து படித்துப் பாருங்கள்.


இந்த A.P.ராஜா அப்பாண்ட ராஜா, முதல் முதலாக இந்தப் பேரைக் கேள்விப்பட்ட உடன் தமிழ் அகராதியில் பேருக்கு என்ன பொருள் பார்த்தால் அப்பு நீர் அதை ஆண்ட ராஜா என்றால் பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால் அல்லது பெருமாள் என்ற பெயர்க் காரணம் வருகிறது என்பதை பகிர்ந்து கொண்டேன் இவ்வளவு நாளும் அதை எல்லாம் அறியாதிருந்தேன் என்றார். தெரிந்தது தெரியாதது என அப்பட்டமாக சொல்லிக் கொள்ளும் ஒரு சிறு குழந்தை இந்த 71 வயது மனிதர்.எல்லாரிடமும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை விரும்புகிறார்,ஏதோ ஒரு பேச்சை மூலமாக வைத்து அனைவரையும் சுற்றமாக அமைத்துக் கொள்ள விரும்புகிறார், உங்களால் தாம் அனைவரிடமும் பேசி வருகிறேன், முன்பெல்லாம் எவரிடமும் பேசவே மாட்டேன் என்பார். யாரிடமாவது பேசி விட்டால் போதும் அவர் யார், இவர் யார், எப்படி என விவரம் அறியாமல் விடமாட்டார்.


சரி விடயத்துக்கு வருவோம், பீடிகை முன்னுரை போதும்.இந்த மனிதர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ வீரர் , மெட்ராஸ் ரெஜிமென்ட் என்று பெருமையாகச் சொல்வார்,ஆந்திரா வெள்ளத்தின் போது பல நாட்கள் சாப்பிடவே முடியாது அவ்வளவு கொடுமை ரயிலில் ரயிலுடன் மூழ்கியிருந்த பிணங்களை மீட்டோம், மீட்பு பணி எல்லாம் நிறைய செய்தோம் , இப்படி ஆரம்பிக்கும் இவருடைய கதை இந்திய‌ இலங்கை அமைதிப் படையில் 2 ஆண்டுகள் பணி புரிந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மீண்ட கதை, நாயை விரும்பி உண்ணும் நாகாலாந்து கதை,ஹைதராபாத் பணிக்காலம், பனிச்சிகரமான லே ...லடாக் பனிக் காலம், மூச்சு விடவே சிரமமான காலம், குளிக்காத காலம், சூடான தேநீர் உறை காலம் இப்படி இந்தியாவெங்கும் பயணம்.


 இவரை இலங்கையில் ஒரு முறை மொழிபெயர்ப்பாளர் என்பதற்காக ஒரு மொழி பெயர்ப்பு வேண்டி தனியாக ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் சென்ற இராணுவப் பெருமை, அப்போது மொழிபெயர்க்கும் போது சிக்கிக் கொண்ட மனிதரைப் பார்த்து சிரித்துவிட்டால் நாமும் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான் என்ற விவரம்...


இந்தக் கதைக்கெல்லாம் மயங்குவோம் என்றா நினைத்தீர்கள்? இது போல வரலாறுதாம் நமக்குத் தெரியுமே, என்றால் அங்கு தான் வருகிறார் சிறுவன் அப்பாண்ட ராஜா. நிறைய பேர் அடங்கிய பெரிய‌ குடும்பத்தில் ஒரு கீழ் நிலை அரசுப் பணியில் இருந்த இவரது தந்தை எப்போதும் காரணமின்றியே இவரை தினமும் நையப் புடைத்து விட்ட கதையில் நமக்கும் இவரது தந்தை மேல் கோபம் வரும் அந்த சிறு குழந்தையை எதற்கய்யா அப்படி அடித்தீர் என,இதில் இராமலிங்க வள்ளலார் பக்தர் வேறாம், என்ன பண்றது அப்பன் குடுத்த மூஞ்சி என குணாவில் குணா பாத்திரம் சொல்லி சொல்லி சுற்றி வருமே அப்படி...ஆனால் கேட்காவிட்டாலும் அந்த உடல் நிறம் எல்லாம் அங்கிருந்து இவருக்கு வந்ததுதானே. அது மட்டுமல்ல சரியான துணி மணிகள் செருப்பு கூட இல்லாமல் அந்தச் சிறுவன் மேச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வரைப் படித்து தேறி, அதன் பின் மளிகைக் கடையில் பொட்டலம் மடித்துத் தரும் பணியைச் செய்து வந்திருக்கிறார்  சில ஆண்டுகள்... 


இதெல்லாம் கூட கிளைமாக்ஸ் இல்லை, நம்ம கதையில்...மனிதர் மதுவுக்கு அடிமையாக இருந்து உடல் நலம் கெட்டு அதன் பின் அதன் தீமையை நமது தத்துவப் படி தாமே தானே தெரிந்து, அறிந்து, புரிந்து , உணர்ந்து அதிலிருந்து மீண்டு ஒரு துளிகூட நுகராமல் மீண்டு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதுடன் அசைவை உணவைக் கூடத் தவிர்த்து விட்டார் மேலும் உடற்பயிற்சியின் மூலம் சிறு மெல் ஓட்டம் மூலம் ஊதிப் பருத்து வந்த தனது உடலையும் கட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்...இந்தப் படிதான் எனை இவருடன் சேர்த்துள்ளது.


இந்த சில பல ஆண்டுகளாகவே  நன்றாக அனுபவித்து வாழ்ந்து வருகிறேன் எங்கு பார்த்தாலும் என்னை அடித்து நொறுக்கினார்கள், சிறுவயதில் அப்பா,அதன் பின் இராணுவத்தில், அதன் பின் குடும்ப நிகழ்வுக்கான பிரச்சனையில் சமூகம் இப்படி இந்த உடல் வாங்காத அடி இவ்வளவு அவ்வளவு என்று இல்லை என தமது துன்பியலை படம் பிடித்துக் காட்டுவார்.

மொத்தத்தில் மனிதர் இப்போ ரொம்ப ஜாலி இல்லாத சிறு அப்பியிருக்கும் பின் மண்டை முடிக்கும், நரை விழுந்த மீசைக்கும் டை அடித்துக் கொண்டு தினமும் முகச் சவரம் மற்றும் அடிக்கடி முடித் திருத்தம் செய்து கொண்டு விதவிதமான ஆடை அணிகலன்கள் நிறைய காலணிகள் என மாற்றி மாற்றி தினமும் ஒன்றை அணிந்து கொண்டு நடைப் பயிற்சியே ஒரு தவமாக‌ உண்மையிலேயே ராஜாவாக , நான் அவருக்கு அனுப்பும் செய்திகளை பிறர்க்கு அனுப்பும் பார்வேட் Forward Raajaa  ராஜாவாக,அனைவர்க்கும் தம்மால் ஆன உதவிகளைச் செய்யும் மூத்தவராக, ஜோதிடக் கலை எனை 60 வயதுகளிலேயே இறந்து விடுவேன் என்றது ஆனால் நானோ 71 வயதில் 12 கி.மீ தினமும் நடைப் பயிற்சி செய்து வருகிறேன் என்கிறார்.


இரு சக்கர வாகனத்தில் தமது அரசு ஆசிரியரான துணைவியாரை தினமும் பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்வதிலிருந்து நிறைய குடும்ப பொறுப்புகள்,மகனையும், மகளையும் நல்நிலையில் நிலை நிறுத்த பாடுபட்ட கதைகளையும் சொல்வார், தாம் இராணுவ ஓய்வு பெற்றவுடன் ஒசூரில் டி.வி.எஸ் பணி புரிந்த  கதை இப்படி இவரைப் பற்றிச் சொல்லச் சொல்ல கதை விரியும் .

 ஒரு பதிவு செய்து பகிர வேண்டிய ஒரு தாமே ஒரு தீய பழக்கத்திலிருந்து மீண்டு பாடுபட்டு அனைவர்க்கும் வாழ்வின் முன் மாதிரியான ஒரு மனிதர் அவரை எனது நடைப்பயிற்சியில் தோழமையாக பெற்றமை இயற்கை செய்த லீலை, மேலும் நடைப் பயிற்சியில் சரியான நேரம் காப்பாளராக இருக்கிறார், மேலும் வராமல் போகும் போது அன்று வரமாட்டேன் என பள்ளிகளில் லீவ் லெட்டர் கொடுப்பது போல (ஐம் சவ்வ்ரிங் ப்ரம் பீவர் சோ ஐ அம் அனேபிள் டு அட்டன்ட் தி வாக்கிங்...என்று தவறாமல் தகவல் கொடுத்தும் விடுவார்),


எப்போது வேண்டுமானலும் திமிறிச் செல்லும் ஒரு அடங்காத கரைக்கடங்காத நதியாய் இருந்த எனக்கு ஒரு வரம்புக்குள் வர, உங்களுடையதும் உடல் தாம் , நேரம் காலம் பாதுகாப்பு அனைவர்க்கும் வேண்டிய காலம் இது எனச் சொல்லாமல் சொல்லி என்னுடன் பயணம் வந்து கொண்டிருக்கும் இந்த மனிதரை உங்களுக்கும் இன்று அறிமுகப் படுத்தி விட்டேன். நன்றி வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Sunday, February 1, 2026

வேணு வேலாயுதம்: கவிஞர் தணிகை

 வேணு வேலாயுதம்: கவிஞர் தணிகை



என் தம்பி வேலாயுதம்


வாணியம்பாடி, திருப்பத்தூர் பக்கம் இருந்து மின்சார அலுவலகத்தில் பணி புரிய பிட்டர் (பொருத்துநர்) வேணு மாறுதலாகி வந்து பக்கத்து வீடுகளில் பல ஆண்டுகளாக குடி இருந்தார். அரைக்கால் சட்டையுடன் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு வாயில் குதப்பியபடியே இருக்கும் நெடிய ஒடிசலான சற்று கூன் விழுந்த உருவம்  4 பெண்கள், ஒரு ஆண்.அந்த ஆண் குழந்தைதான் வேலாயுதம்.


குழந்தை முதலே அவனைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பிள்ளைகளிடம் சென்று எங்கே அம்மா அல்லது அப்பா? என்று கேட்டால்  "டாக்டர்கட்டிக்கிட்ட" போய் இருக்காங்க என்று மழலையில் சரியாகத் தமிழே தெரியாமல் சொல்வார்கள் அதைக் கேட்டு சிரிக்கவே நாங்கள் கேட்டுப் பார்த்தது இன்றும் என் நினைவில்.


தாயகரம் ஆடுவோம் சளைக்காமல்,ஒரு முறை அவர்(வேணு) தவறாக ஆடிவிட்டு நான் சிறுவனாக இருந்தாலும் எப்போதும் நியாயத்தை பறை சாற்றி வருபவன் என்பதால் அதை சுட்டிக் காட்டி அவர் ஏமாற்றி ஆடுகிறார் என்பதை வெளிப்படுத்தி விட்ட  காரணத்தால் ‍ஆதலால் வேணு எனை சிறுவனான என்னை அடித்துவிட்டார், அப்போதிருந்து நான் அந்த ம‌னித‌ரிடம் பேசவேயில்லை அவர் வாழ்நாள் இறுதி வரை. ஆனால் அந்தக் குடும்பம் எமக்கு மிக நெருக்கம்.


அப்போதெல்லாம் பள்ளி இறுதித் தேர்வுக்கு கட்டணம் உண்டு. எங்க வீட்டு பெரிய புடுங்கிக்கு கட்டணம் கட்ட வழி இல்லாமல் என் தாய் அவருடைய  கொழுத்த கொழுந்த‌ நாறிடம் சென்று கடன் கேட்க அப்போது பிள்ளையில்லாத அவரோ  ஊரறிந்த அடகு கடை நடத்தியவர் பெரிய குடும்பத்துக்குத் தாயான அண்ணிக்கு பணம் தர மறுக்கும் காரணத்துடன் "அடகுக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா? என்று கேட்க வெறுத்துப் போன எங்கள் தாயிடம் ஆறுதலாக வேணு "அம்மா இதுக்கு ஏம்மா கவலைப் படறீங்க? என்னிடம் 3 பவுனில் செயின் இருக்கிறது (அப்போதெல்லாம் தங்கம் பெரிய விலை எல்லாம் இல்லை ஆனால் அதற்குண்டான மதிப்பு இருந்தது) அதை அடகு வைத்து எனக்கும் கொஞ்சம் பணத் தேவை இருக்கிறது இருவரும் வாங்கிக் கொள்ளலாம் பின்னால் மீட்டுக் கொள்ளலாம் " என்று சொல்லி வாங்கிக் கொடுத்து எங்க வீட்டு சிக்கலைத் தீர்த்து முதல் ஏர் முன் ஏர் தேர்வு எழுத வழி காட்டிய சம்பவம் உண்டு.


இதை ஏன் குறிப்பிடுகிறேன் எனில், இயல்பாகவே அவன் இரத்தத்தில் பிறர்க்கு உதவும் குணம் உண்டு. அவன் எனச் சொல்லும் நிலை கடந்து ஊர் உலகுக்கு இப்போது அவர் ஆகிவிட்டார். எனவே நாமும் அவர் என்றே இந்தப் பதிவில் குறிப்பிட்டாக வேண்டும் இனி அந்த வயது வந்து விட்டது...நிறைய பேருக்கு நிறைய உதவிகள் அதை எல்லாம் சொல்ல இந்தப் பதிவு இடம் கொடுக்காது. சுருங்கச் சொல்ல வேண்டி: பரந்த மனது உதவிடும் ஈர நிலம்.


 வேலாயுதத்துக்கு இரண்டு பெண்கள் சிறந்த அறிவு ஆற்றலோடு படித்து பட்டம் பெற்று பணி, படிப்பு என்று பெருமை பெற வைத்துள்ள இவர் இந்த வட்டார தொழிற்சங்க செயலராகவும் இருந்து பல ஆண்டுகளாக அனைவர்க்கும் நல்லுதவி புரிந்திருக்கிறார்.


இப்போதும் பணியில் பல உயர்வுகள் பெற்று சேவையில் தொடர்கிறார் ஒரு கட்சிப் பிரமுகராகவும் விளங்கி வருகிறார்.அனைவரிடமும் பண்புடன் பாசத்துடனும் நடந்து கொள்பவர். வெகு ஜனத் தொடர்பு அதிகம். நான் ஏதாவது விவரம்  வேண்டுமெனில் இவரிடம் எப்போதும் உரிமையுடன் எங்கிருந்தாலும் அழைத்து கேட்பதுண்டு.இப்போது பெரிய பொறுப்பான மின் ஊழியராக இருந்த போதும் எப்போதும் ஒரே மாதிரியான குணத்தை வெளிப்படுத்தும் நல்ல மனிதர் மேலும் நாம் உயர்ந்து விட்டிருக்கிறோம் என்ற வெட்டி பந்தா எப்போதும் இவருக்குள் வருவதே இல்லை. அலட்டிக் கொள்ள மாட்டார்.


பொருளாதாரத்தில் எத்தனை ஏற்றத் தாழ்வுகள் கண்ட போதும் வந்த போதும் மனிதம் மனிதாபிமானம் அதற்கும் மேல் என்று வாழ்ந்து காட்டி வரும்  நல் மனிதத்தின் அடையாளம். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ இந்த சகோதரனை இந்தப் பதிவின் மூலம் வாழ்த்து சொல்லிப் பெருமைப் படுகிறேன். நன்றி என்றும் உரித்தாகட்டும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை