Thursday, March 7, 2024

நூல் வேலி தியான ஒளி நடை மொழி உறவின் வழி துளி சதுரத்தில் நான்: கவிஞர் தணிகை

 நூல் வேலி தியான ஒளி நடை மொழி உறவின் வழி துளி சதுரத்தில் நான்: கவிஞர் தணிகை



"பெண்கள் நீரைப் போல ஆண்கள் மலையைப் போல" நீர் ஒரு போதும்... ஜிங்யி...என்ற 45 ஆண்டுகளாக காதலுக்காக காத்திருந்த பெண்....சின்ரன்... சீனப் பெண்கள் சொல்லப் படாத கதையில்...


நண்பர் வி.கி சொல்வது போல நான் என்பதை எடுத்து எறிந்து விட்டால் அதன் பின் எல்லாம் வெற்றிதான் என்கிறார் யார் உடன் வந்தாலும் வராவிட்டாலும் இவர் இலக்கு நோக்கி நகர்ந்தபடியே இருக்கும் ஒரு வெற்றியாளர்தாம்.


நண்பர் வசந்த் சொல்வது போல "சாய்வு நாற்காலி" போன்ற கதையை எல்லாம் ஏன் தோப்பில் மீரான் போன்ற எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்று நடு நாயகமான பாத்திரத்தின் மேல் அருவெறுப்பு கொள்ளும் கடைசி வரை தொடரும் முதலாளித்துவ சிந்தனையின் கொடுமைக் கதை.


எம்.வி. வெங்கட்ராம் எழுதிய காதுகள், நித்ய கன்னி போன்ற நூல்களைப் படித்தால் அந்த நபருக்கு எல்லாம் எதற்கு சாகித்ய அகாடமி விருது என்றே சொல்லத் தோன்றும். அவர் எதற்கு எழுதி அதை பிறர் படிக்க கொடுக்கிறார்கள். வெறும் நாட்குறிப்பாக எழுதி வைத்து அவரே நுகர்ந்து கொள்ளலாம்.


படிப்பாரை கேனை, முட்டாள் என்று நினைத்தபடி செலுத்தப் படும் உளறல் அல்லது உதவாத இலக்கியங்களுக்கு இவை எல்லாம் சான்று. இவை போன்ற புத்தகத்தை படிக்காதிருப்பதே நல்லது.


ரமண மஹரிஷி அழகாக சொல்வார்: அளவற்ற நூல்களை படிப்பதால் பயனில்லை எல்லா நூல்களிலுமே (மனோ நிக்ரஹமே) மனம் என்ற ஒன்றை இல்லாதததாக்குவதே குறிக்கோள் எனக் கொள்வார் அளவற்ற நூல்களை படிப்பதால்  பயனில்லை என்பார்


என்றாலும் எனைப் போன்றோர் நிறையப் படித்து கண்களையும் உடலையும் கெடுத்துக் கொள்வோம் காரணம் பிறருக்கு வழி காட்ட வேண்டும் என்ற பேராசை


வைரமுத்து கூட கவிதை எழுதலாம், சினிமாப் பாட்டு எழுதலாம், கருவாச்சி காவியம்,  கள்ளிக் காட்டு இதிகாசம் என்று படிப்பாரை நேர விரயமே செய்துள்ளார். தண்ணீர் தேசம் சற்று பரவாயில்லை.


கலைஞர், பேரறிஞர் போன்றோர் கூட எழுதிய எழுத்துகளில் சுவையற்றதாகவும் இருக்கிறது.


முனைவர் மு.வ வின் எழுத்துகள் கதைகள் யாவும் வறட்சியான நடையாய் இருக்கும் ஆனால் கருக்கள் அசாதரணமாக இருக்கும். படிப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும் 



இதை எல்லாம் விமர்சனப் போக்கில் சொல்வதில் தலை ஒன்றும் போய்விடாது. கலை கலைக்காக கலை மக்களுக்காக என்று எப்போதும் இரு வேறு கூறான விவாதம் உண்டு. நான் கலை மக்களுக்காக இருக்க வேண்டும் என்று வாழும் அணி.


சமீபத்தில் படித்ததில் பிடித்தது: சாவு சோறு என்ற இமையம் அண்ணாமலை அவர்களின் சிறு கதைத் தொகுப்பு நல்ல சிந்தையைத் தூண்டும்  க்ரியா வெளியீடு. விலை ரூ.190. பக்கம் 160. குளறுபடியில்லாமல் மிகத் தெளிவான நடை. எடுத்துக் கொண்டிருக்கும் கருக்களும் நன்றாக இருக்கிறது.


சாவு சோறு என்ற சிறுகதைத் தலைப்பையே புத்தகத்தின் பெயராகவும் கொண்டு சொல்லவே ஒரு துணிச்சல் இருக்கிறது. திருட்டுப் போன பொண்ணு, ஆகாசத்தின் உத்தரவு, அரசாங்கப் பள்ளிக் கூடம், பரிசு. எதை பத்தினி இலை என்கிறார் என எனக்கு விளங்கவில்லை... பத்தினி இலை, பேராசை, ராணியின் காதல், வரம் எல்லா பிரசுரமான, பிரசுரமாகா கதைகளும் நன்றாகவே இருக்கின்றன. பாராட்டலாம். இந்த இமையம் என்னும் அண்ணாமலை ஒரு பள்ளி ஆசிரியர் கடலூர் மாவட்டத்துக்காரர்.


அதன் பின் சீனத்துப் பெண்கள் சொல்லப் படாத இரகசியம் என்னும் நூல் அரிய நூல் சின்ரன் என்னும் சீனத்து வானொலி ஒலிபரப்பாளரின் அனுபவங்களாக வந்திருக்கிறது. இவரை சீனாவில் வாழவிடாமல் செய்து பெண்ணுரிமைப் போராளி என்ற வகையில் சீனாவில் இருந்து தப்பி யு.எஸ் வாழ்வு. அருமையான நூல் 316 பக்கம் 200 பக்கம் படித்து முடித்திருக்கிறேன் விலை ரூ. 280 எதிர் வெளியீடு. 96. நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642002. தொலைபேசி:04259 226012,9942511302 முதல் பதிப்பு டிசம்பர் 2016 தமிழாக்கம் ஜி.விஜயபத்மா.  நல்ல பணி சிறக்க வாழ்த்துகள்.


அதல்லாமல் பல நூல்கள் இன்னும் படிக்கப் படாமல்: சோ.தர்மனின் சூல்...500 பக்கம், காலாபாணி 1801 புத்தகத்தின் தொடர்ச்சி., நாடு கடத்தப் பட்ட சுதந்திர வேள்வியாளர்களின் நிலை என்ன ஆனது என ராஜேந்திரன் இ.ஆ.ப அவர்களின் பி.டி. எப்  இப்படி படிக்க இன்னும் நிறைய இருக்கிறது


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு: நூல்களில் கட்டுண்டும், தியான ஒளியில் சிதறுண்டும், நடைப் பயிற்சியில் உடல் ஆரோக்கியம் கொண்டும், உறவின் ஒரே வழிமொழிதலில் ஒட்டியும் எனது துளி சதுர வாழ்வில் நான்கு கோணங்களுடன் இணைந்து கிடக்கிறது எனது உயிரும் வாழ்வும்.


சொல்ல மறந்தது: முன் பகிர்ந்து கொண்ட‌ இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு... வம்சம் என்ற ஒரு பெண் அவரின் செயல்பாடு குடும்ப உறவுகளைச் சீர் படுத்துகிறது என்பதற்கும், தலைப்பு மறந்து விட்டது: அனைவராலும் கைவிடப் பட்டு இனி பிழைக்காது என்று இறந்து போனதாக எல்லாம் நினைத்த ஒரு குருவியை சிறுவன் அவனது பலத்த( இடைவெளி சந்தகமில்லா )நம்பிக்கை எப்படி அந்த குருவியை உயிர்ப்புறச் செய்து கடைசியில் உயிர்த்தெழச் செய்து பறந்து போக வைக்கிறது என்ற ஒரு மறக்க முடியாத கதை. அதை எல்லாம் நீங்கள் படிக்க வேண்டும். அது போலவே நானும் இருக்கிறேனோ என்ற சந்தேகக் கீற்று என்னிடமும் உண்டு.


மார்ச் 8 பெண்கள் தினம், மஹாசிவராத்திரி, இப்படி பல பார்வைகளுடன்... அது எப்படியாயினும் அதற்கு இந்த பதிவு அடையாளமாகட்டும்.


"பெண்கள் நீரைப் போல ஆண்கள் மலையைப் போல" நீர் ஒரு போதும்... ஜிங்யி...என்ற 45 ஆண்டுகளாக காதலுக்காக காத்திருந்த பெண்....சின்ரன்... சீனப் பெண்கள் சொல்லப் படாத கதையில்...



No comments:

Post a Comment