சூல் : நாவல்: சோ தர்மன்: கவிஞர் தணிகை
இரண்டே எழுத்தில் தலைப்பிட்டு புகுந்து மாயங்கள் செய்கிறார் எழுத்தாளர். சூல்: கருக் கொண்ட மேகம், சூல் கருக் கொண்ட தாய் அல்லது கர்ப்பம் தரித்த பெண், சூல் அறுவடைக்கு விளைந்து நிற்கும் பயிர்களுடைய நன்செய், புன்செய், வெள்ளாமை பற்றிய செயல்கள், இப்படி சொல்லிக் கோண்டே போகலாம் சூல் பூவுள் இருக்கும் மகரந்தக் கேசரம் கூட. அற்புதமான நாவல் மிகவும் நெருங்கிய சிறு எழுத்துகளின் அச்சுக் கோர்ப்பில். இதே 500 பக்கங்களை 600, 700 பக்கங்கள் கூட கொண்டு செல்ல வாய்ப்புகள் உண்டு பண்ணுமளவு.
1801,காலாபாணி போன்ற நாவல்கள் ஒரு வகையில் சோக சரித்திரம் சொல்கிறது என்றால் அதே காலக் கட்டத்தில் சூல் பொது மக்கள் வாழ்வைப் படிக்க ஆவலூட்டுகிறது.
இன்னும் ஐந்தாறு நூல்கள் கைவசம் படிக்கப் படாமல் இருப்பினும் சூல் பற்றி சொல்லியேயாக வேண்டிய நிலை. 500 பக்கம் விலை ரூ.380. அடையாளம் பதிப்பு. புத்தாநந்தம் . 2016 முதல் பதிப்பு 2020 வரை மீள் பதிப்புகள். தற்போதைய விலை ரூ.450 என சற்று முன் இணையவழியில் கண்டேன். சாகித்ய அகாடமி முதல் பல விருதுகளை வென்ற நாவல்.அல்லது இந்தியாவின் தென்னகத்தின் தமிழகத்தின் கட்ட பொம்மு காலம் முதல் தற்கால மக்கள் வாழ்வு மாற்றங்கள் பற்றிய காலப் பதிவு மிகவும் உற்சாகமான சுவையான பதிவு.
எட்டி இருந்து அரசு, அரசாங்கம், ஆட்சி, இராசாமார்கள் பற்றியும் கிட்ட இருந்து மக்கள் வாழ்நிலை மாற்றங்களையும் மிக நன்கு விளக்கப்பட்டுள்ளது. மேலும் எழுத்தை எண்ணத்தை மிகவும் இலாவகமாக கையாண்டுள்ளார் தர்மன். பாராட்டாமல் இருக்க முடியாது.மேலோட்டமாக என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் ஒரு அடி ஆழம் தொட்டுச் சொல்லும் நாவல்.
நிறைய மாந்தர்கள் உலாவுகிறார்கள். எனவே எல்லாரையும் பற்றி இங்கு சொல்ல முடியவில்லை. புத்தகத்தை திருப்பிக் கொடுத்த பின் தாம் இந்த பதிவு என்பதால் சில குறிப்புகளில் பேதம் இருக்கலாம். அதாவது 25 அல்லது 21 அத்தியாயம் என நினைக்கிறேன்.
மகாலிங்கம் பிள்ளை தரமான வெற்றிலைக் கொடி ஆர்வம் அவர் உயிரை எப்படி மாய்க்கிறது என மிகவும் இயற்கையான நயத்துடன் சொல்லப் பட்ட விதம் வாழ்க்கை எப்போது எப்படி மனிதர்க்கு முடிந்து போகக் கூடும் என்பதை அழகாக சொல்லி விடுகிறது.
ஆசாரி ஒருவன், பனையேறி ஒருவன் இருவரும் சேர்ந்து எப்படி கட்டபொம்மு ராசாவுக்கு உதவியாக இருந்து அவர் குதிரைக்கு இலாடம் அடித்து விட்டு வாழ்க்கை முழுதும் ஒரு புதையலை கட்டிக் காக்கும் பூதமாக விளங்குகிறார்கள் என்பது
குஞ்ஞான் என்னும் மலையாள மாந்திரிகன் எப்படி இராசாவை ஒன்றுமில்லாமல் அடித்து மாயமாக மறைகிறான் என்பது,
காலம் எப்படி சோற்றை விற்பனை செய்ய ஆரம்பிக்கிற நிலையில் கொப்புளாயி எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னிடம், தயிர், மோர், பால், வெண்ணெய் ஆகியவற்றை இலவசமாகவே பெற்றுப் பயனடைவோரிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார் என்பதையும் அவர் தமது எருமைகளை தமது மாருடன் சேர்த்து தேய்த்து குளிப்பாட்டுகிறார் என்பது முதல்,கிறித்தவ தேவாலயங்கள், பள்ளிகள் எட்டிப் பார்ப்பு,
ராசாமார்களிடம் இருந்து விடுதலை பெறுவது, வெள்ளைக்காரர்களிடம் இருந்து விடுதலை பெறுவது அதன் பின் எப்படி மக்கள் வாழ்வு மாறிச் செல்கிறது என்பதை உடன் இருந்து பார்ப்பது போல இரசித்துச் செல்கிறார். இரசித்துச் சொல்லி இருக்கிறார்.
மேலும் நிறைய சொல்ல உண்டு...ஆனால் படியுங்கள் அது அவசியம். படிக்கும் பழக்கம் நாளாக நாளாக அருகிக் கொண்டே இருக்கிறது என்பதைக் காண முடிகிறது ஏன் எனில் பேசுவோர் எல்லாரும் செய்வாராக, ஏன் தமது செய்ல்பாடுகளை குணாம்சங்களை நேர்மையாக வைத்திருப்பாராக இல்லாது போவதால்...
இல்லையெனில் 1330 குறள்களை சிறுவர்களை படிக்க நிர்பந்திக்காமல்: தோன்றின் புகழொடு... ஒரு குறள் படி வாழ்ந்தாலே வாழத் தலைப்பட்டாலே போதுமே...சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றாய் வாழும் வரை எவரையும் யாருமே நம்பவே போவதில்லை... இது மிகவும் சுருக்கமாக... ஏன் எனில் சூல் இரண்டெழுத்தில் ஒரு வரலாறை தேக்கிச் சொல்லி உள்ளது போல...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment