Sunday, December 31, 2023

இறுகப் பற்று:இந்தக் காலத்துக்குத் தேவையான திரைப்படம்: கவிஞர் தணிகை

 இறுகப் பற்று:இந்தக் காலத்துக்குத் தேவையான திரைப்படம்: கவிஞர் தணிகை



நிறைய சோகங்களும் சம்பவங்களும் நிறைந்த 2023 ஆம் ஆண்டில் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் "இறுகப் பற்று" என்ற காலத்துக்குத் தேவையான ஓரு படம் அக்டோபர் 6ல் வெளிவந்துள்ளது..


நிறைய பேர் கவனித்திருக்கவும் வாய்ப்பு குறைவே.


ஆனால் காதல் திருமணம், சேர்ந்து வாழ்தல், பிரிதல்,விவாகரத்து போன்ற இளைஞர்களின் பிரச்சனையில் சத்தமின்றி அணுகி இருப்பது மட்டுமின்றி  நல்ல தீர்வையும் முன் வைத்துள்ளது.உடனடியாக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடிப்பதைத் தவிர்த்து அவரவர்க்கு உண்டான கால அவகாசத்தை வழங்கினாலே போதும் குடும்பங்கள் பரிமளிக்கும் என்ற செய்தியை எளிமையாக இழையோட விட்டிருக்கும் படம்.


விக்ரம் பிரபு, ஸ்ரத்தா , விதார்த், மனோ பாலா போன்ற தெரிந்த முகங்களுடன் அதிகம் இது வரை பதியாத முகங்களுடன் இந்தப் படத்தை முன் வைத்துள்ளனர். யுவராஜ் தயாளன் இயக்குனர் சற்றும் தொய்வின்றி படத்தை கொண்டு சென்றுள்ளார்.


இரண்டு ஜோடிகளின் வாழ்வுப் பிரச்சனைக்குள் புகும் மன இயல் வல்லுனர் ஒருவரின் வாழ்விலும் அதே பிரச்சனை எவ்விதம் ஊடுருவிச் செல்கிறது என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நைஸாக ஏற்றி படத்தை பார்க்க வைத்துள்ளனர். ஆக 3 ஜோடிகளின் வாழ்வின் தடுமாற்றம் மற்றும் தடம் மாற்றம்.


எனக்கென்னவோ நம் வயது போன்றோர் பார்ப்பதை விட இன்றையக் காலக் கட்டத்தில் உள்ள தம்பதிகள் அவசியம் பார்க்க வேண்டும் அது விவாக ரத்து நீதிமன்ற வழக்கு, வாழ்வின் நற் தருணங்களை இழக்காதிருத்தல் ஆகியவற்றுக்கு பெரிதும் உதவும் என்றே தோன்றுகிறது.


ஆர்வத்தை அதன் ருசியைக் குறைக்காதிருக்க இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். முடிந்தால் ஒரு முறை பாருங்கள் இளையோரைப் பார்க்கச் சொல்லுங்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment