Tuesday, December 12, 2023

பூலோகம் ஆனந்தத்தின் பிள்ளை. கவிஞர் தணிகை

 

               பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

 


கூவும் குயில்கள் இன்னும் இருக்கின்றன

பாயும் நதிகளும் இன்னும் இருக்கின்றன

தாவும் குரங்குகள் வாழ்வு தடம் மாறிய போதும்

தாயும் சேயும் தற்கொலை விழையும் போதும்

 

மேலை நாடுகளின் வியாபார யுக்தியும் யுத்தமும்

கீழைக் காற்றில் விசிறிடும் நச்சும் புகையும்

தாழை மலர்களில் வாசம் செயும் நாகமும்

காலை எழும் நட்புச் சொற்களும் கதிரும் இன்னும்...

 

மலைகள் பெயர்ந்த போதும் பூமியின் எடை ஒன்றே

மழை வீச்சு தாறுமாறானபோதும் புவி வெப்பச் சூழல்

பிழைகளாய் பிரிந்த போதும் அச்சும் சுழலும் ஒன்றே

குழந்தைகள் செல்பேசியில் குழந்தை மனங்கொண்டார்

                                   சொல் பேச்சினில்.

 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிரிவினைகள் மறந்து இங்கு கூடிடலாம் ஒன்று

சீர் பிரித்து சீர் சேர்த்து செய்த கவி ஒன்று

 

நன்று செய்வோர் நானிலத்தில் அரிய மலர்ச் செண்டு

ஒன்று இணையும் பூவாய் நாருடன் சொற்கற்கண்டு

தமிழ் மொழியுடன் உலகு விரிந்த சரித்திரம் கண்டு

மொழியும் சொல்லில் அண்டப் பெருவெளி முடியா நூற்கண்டு

 

அரசியல் சித்து விளையாடல் அறியோம் நாம்...தொண்டில்

அரிசியியல் கொண்டு ஆட்டுவிப்போர் பின் தாம் அழியோம்

நல்வினை தீவினை இரண்டின் ஆட்சி மாட்சிமை நின்று

நல்வினையும் தியாகமுமே சிறந்த நகை செய்வோம் என்றும்

 

இலட்சங்களால் கோடிகள் சேர்த்துக் கொள்வார் வென்று

தேர்தலில் வெற்றி ஒன்றே பெற்றிடுவார் நின்று

இலட்சியத்தில் தடுமாறி தியாக தீபம் ஏற்றிக் கொண்டு

வாழ்ந்து மறைவர் விடுதலைப் போராளிகள் நினைவுடனே

                   அடையாளம் தெரியாது சென்று....

 

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை உண்மைதான்

பூலோகம் ஆனந்தத்தின் பிள்ளை.

மறுபடியும் பூக்கும் 

கவிஞர் தணிகை


 

No comments:

Post a Comment