Saturday, November 25, 2023

சு. வெங்கடேசன் அவர்களின் வீர யுக நாயகன் வேள்பாரி: கவிஞர் தணிகை

 சு. வெங்கடேசன் அவர்களின் வீர யுக நாயகன் வேள்பாரி: கவிஞர் தணிகை



தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், சாகித்ய அகாடமி பரிசு பெற்ற படைப்பு எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ஆனந்த விகடன் வெளியீட்டின் வீரயுக நாயகன் வேள்பாரியை படித்து முடித்தது முதல் அது பற்றி உங்களுக்கு(ம்) சொல்ல வேண்டும் என்ற அவாவை எண்ண முடிப்பை இன்று நிறைவேற்றிக் கொள்ளவே இந்தப் பதிவு.


விடியல் குகன் இதில் அதிக படங்கள் இடம் பெற்றிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். மணியம் செல்வத்தின் ஓவியங்கள்


கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல... என்பதற்கேற்ப இந்த சரித்திர ஓவியத்தை உரிய நேரம் காலத்தில் படிக்க முடியாமல் இப்போதுதான் புலவர்.ரா.சௌம்யா அவர்களின் புத்தகம் கொடுத்து உதவல் மூலம் படிக்க வாய்ப்பு  கிடைத்தது.அவர்க்கு எம் இதய பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.


1400 பக்கங்கள் அதன் விறுவிறுப்பில் மூழ்கி விரைந்து படித்து எனக்கு உடல் சூடு,கண் கீழ் இமைகள் வீக்கம்.ஆனாலும் நாளையே சாகப் போவது போல செயல்பாடு இருக்க வேண்டும், என்றும் நிலைப்பது போன்று இருக்க வேண்டும் என்ற காந்திய சிந்தனை, நோக்கத்தோடு இந்த அரிய வரலாற்றுப் பதிவைப் படித்தேன். மிக வாழ்வின் அரிய பணியை நிகழ்த்தி தமது வாழ்விற்கு பொருள் தேடிக் கொண்டார் வெங்கடேசன்.


மிகவும் அருமையான தயாரிப்பு நேர்த்தியான நூலாக்கம். மிகவும் உயர்ந்த தரமான தாள்களுடன் தெளிவான அச்சுப் பிரதியுடன் முதற்பதிப்பு 2018 டிசம்பர்,2021 வரை ஏழு பதிப்புகள் கண்டுள்ளதாக குறிப்பு.ரூபாய் 1600 விலை என்ற போதும் புத்தகத் திருவிழாக்களில் குறைந்த விலையுடன் கிடைக்கலாம்.


அடியேனும் பல ஆண்டுகள் மலைவாழ் மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக பாடுபட்டவன் என்ற முறையிலும் அந்த வாழ்க்கையில் தொடர்புடையவன் என்ற கோணத்தில் இந்த நூல் அதன் இடங்கள், சம்பவங்கள், வீர வரலாறு, காடு , மலை அதன் பின் புலம், அதை சார்ந்த உயிர்களே படைக்கலங்களாக பயன்பட்டமை ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்ள நேர்ந்தது.சொல்ல வார்த்தை இல்லை பாராட்ட மொழி இல்லை. தமிழ் தெரிந்த அனைவருமே படித்தாக வேண்டிய ஒரு ருசிகரமான வீரியமான படைப்பைக் கொடுத்துள்ளார்.


முருகன் வள்ளி பாரியின் முன்னோர் என்று சொல்லப் படுகிறது. காக்கா விரிச்சிப் பறவை, சுண்டாப் பூனை,ஆண் காட்டெருமையின் காதுக்குள் இருக்கும் முடி அதில் இருக்கும் பூச்சிகள், காட்டெருமையின் பின் கால் ஜவ்வு போன்ற உறுப்பின் பாகத்தை வெட்டி விட்டால் அது நகர முடியாமல் நின்ற இடத்தில் இருந்தே போரிடும் என்ற தகவல், விஷப் பாம்பின் வாயைத் திறந்து அதில் போடப்பட்டு விஷம் தோய்த்தெடுக்கப் படும் முட்கள் கருவிகளாகும் ஆயுதங்கள், அலவன் என்னும் விஷத்தை முறிக்கும் அளவு விஷமுடைய சிறுவன்


வான் நிகழ்வை உற்று நோக்கும் திசை விழையார்,சேர சோழ பாண்டிய ஏன் வேள் பாரிக்கும் போற்றத் தக்கவரான கபிலர், எந்தப் பக்கம் விட்டாலும் வடக்கு நோக்கியே அமரும்   தேவாங்கு,காட்டுக் கொல்லி விதைகள்,(விசித்திரம் : மீன்களும், பறவையும், விலங்குகளும் அதனால் கவரப்பட்டு மயக்கமடைதல்) ஆட் கொல்லி மரம், காம முறுக்கி, காமச் சுருக்கி ,மரங்கள்....


இப்படி எங்கு தொட்டாலும் அரிய செய்திச் சுரங்கத்தை வைத்திருக்கிறது இந்த புத்தகப் பெட்டகப்  பொக்கிஷம்.


சாண்டில்யன், கல்கி, தீபம் நா. பார்த்த சாரதி, கோவி. மணி சேகரன், அகிலன், இப்படி எண்ணற்ற வரலாற்று கதாசிரியர்களோடு பயணம் செய்த நாம் இப்போது வேள்பாரியுடன் சு. வெங்கடேசன் அவர்களுடன் பயணம் செய்தமைக்கு மகிழ்ந்து அவர் உழைப்புக்கு தலைவணங்கி அவரது முயற்சிக்கு பாராட்டைத் தெரிவிக்க வேண்டிய கடமைப் பாட்டில் இருக்கிறோம்.


எண்ணிக்கையில் மிகக் குறைவான படை வீரர்கள் ஏன் படை என்று கூட சொல்ல முடியா வீரர்கள் உடைய‌ ஒரு தலைவன் எப்படி தக்க சூழ்நிலைகளையும் இடம் பொருள் ஏவல் கொண்டு அங்கிருக்கும் உயிரினங்களின் தன்மைகளை பயன்படுத்தி வீரத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் உயர்ந்தோங்கிய சேர சோழ பாண்டிய மன்னர்களை ஒரு சேர படையெடுத்து வேள் பாரியை ஒழித்துக் கட்ட சூழ்ந்து நின்றார்களை ஓட ஓடத் துரத்தி அடித்தான் என்பதே இந்த கதை.


 இதன் விதை முல்லைக்குத் தேர் ஈந்த பாரி என்பதே அதில் இருந்து முளைத்ததே. இரு மல்லிகைக் கொடி ஒர் இரவில்/இரவுக்குள் இவன் நிறுத்திச் சென்று இருந்த தேர் மேல் விரவிப் படர்ந்து சேர முயற்சிப்பதைக் கண்டு தேரை எடுத்தால் அந்தக் கொடிகள் அறுபடுமே என்பதற்காக பாரியும் அவன் தோழி ஆதினியும் அந்த தேரை அப்படியே விட்டு விட்டு நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எங்கே தேருடன் சென்ற நமது தலைவன் நடந்து வருகிறானே என பறம்பு மலை மக்கள் கண்டு வியக்க.


பகல் எல்லாம் சூரிய ஒளியை தனது இலைகள் மூலம் எடுத்துக் கொண்டு இரவில் ஒளி விடும் மரம் இப்படி இன்னும் நிறைய நிறைய சொல்கிறார் காடு மலை சார்ந்த வியப்புகளை வெங்கடேசன்.


அங்கவை, சங்கவை என்றால் சாலமன் பாப்பைய்யா மூலம் கேலிக்குள்ளான சங்கர் ரஜினியின் கூட்டணியில் உருவான சிவாஜி படம் தான் நுனிப்புல் மேய்வார்க்கு நினைவு வரும் . ஆனால் இங்கே இதில் வரும் உண்மையான வீர மகள்கள். அங்கவை சங்கவை என்னும் பாரியின் பெண்களை  கபிலர் காப்பாற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றதான செய்யுள்களைப் படித்ததுண்டு. ஆனால் இந்த வேள்பாரி வேறு.இதில் அப்படி எந்தக் காட்சியும் இல்லை.


இந்த வேள்பாரி உண்மையிலேயே வீர யுக நாயகன் தான். அவனுக்கு உதவிடும் நீலன், காலம்பன், தேக்கன், காடன் இப்படி எல்லா பாத்திரங்களும் மேலும் அற்புதமான பெண் படைப்புகளும் நமது கண் முன்னே காவியத்தைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன.


பொன்னியின் செல்வனைக் கூட எடுத்துக் காட்டி விட்டார்கள். ஆனால் வேள்பாரியைக் காட்டுவதென்பது அத்தனை சுலபமல்ல . ஒரு வேளை (சிஜி) கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வழியே கொண்டு வந்தால் தான் உண்டு. படித்தே ஆக வேண்டும் அது ஒரு சுகம். இது ஒரு தமிழின் வரம்.

thanks su. Venkatesan M.P sir.

hats off to you.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment