கலாம் பெரியார் அளவு துணிச்சல் கொண்டவர் இல்லை என்றாலும்...: கவிஞர் தணிகை
பெரியார் பெண் விடுதலை பற்றி பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவர் குறுக்கிட்டு, அப்ப, மணியம்மையை(உங்கள் மனைவியை) எனக்கு கூட்டிக் கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு, அதை நீ மணியம்மையிடம் தான் (எனது மனைவியிடம் தான்) கேட்க வேண்டும், என்று கூலாக சொல்லி விட்டு குறுக்கிட்டு பேசியவரின் நோக்கம் கிஞ்சித்தும் நிறைவேற விடாமல் சிரித்துக் கொண்டே பேசி கூட்டத்தை தொடர்ந்து நடத்தியதாக அவரின் வரலாறு சொல்கிறது.
அது மட்டுமல்ல அதற்கு மேல் அதைப் பற்றி மேல் நடவடிக்கை என்று அவர் எதையுமே செய்ய வில்லை, அதுவே ஒரு சாதாரண மனிதர் வாழ்வில் நிகழ்ந்திருந்தால் ஒன்று செந்தில் கவுண்டமணி காமெடி போல , அண்ணே, பூவும் அல்வாவும் வாங்கி வந்து ஆத்தங்கரையோரம் கூப்பிட்டேன் அண்ணே, அடிக்க வராங்க என்று கும் வாங்கியதாகவோ அல்லது கொலையிலேயேக் கூட முடிந்திருக்கலாம். அப்படிப்ப பட்ட சமுதாயமாகவே இன்னும் இந்த சமுதாயம் இருக்கிறது.
ஆனால் நாம் சொல்லிக் கொண்டிருக்கும் தலைவர்கள் இந்த தமிழ் சமுதாயம், அல்லது இந்த உலகம் மேலும் மேலும் உயர வேண்டும் உயர்த்த வேண்டும் என தம் உயரத்துடன் எடுத்துச் செல்ல நினைத்தவர்கள்.
எதற்காக என்றே தெரியவில்லை , எனக்கு இன்று கலாமையும் பெரியாரையும் சேர்த்து வைத்து எழுத தோன்றிவிட்டது.
கலாம் தனக்கு 9 ஆம் நபராக வந்ததால்( 8 பேருடன் தேர்வு நிறைவு பெற்று பணி வாய்ப்பு கை நழுவிப் போனதால்) இந்திய விமானியாக வாய்ப்பின்றி சோர்ந்த போது இமயமலைச் சாரலுக்கு செல்கிறார் அங்கு ஒரு இந்து சமயக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்து சமயத் துறவியிடம் ஆறுதலும் ஆசிகளும் இரண்டு புத்தகங்களும் பெறுகிறார். இது இவரின் வரலாறில் உண்டு.
எல்லா மதக் கோவில்களுக்கும் செல்கிறார், ஏன் திருப்பதிக்கும் கூட குடியரசுத் தலைவர் என்றானபோதும் கூட கையெழுத்துவிட்டு பிறமதக்காரர் செல்லலாம் என்பதற்கேற்ப சாதரணர்களுக்கு இருப்பது போன்ற விதிகளை கடைப்பிடித்து சென்று வணங்குகிறார், மதத் தலைவர்கள் இடையே சென்று தாம் தம் நிலை எல்லாம் மறந்து கீழ் அமர்ந்து கொண்டு அவர்கள் மேல் அமர போதனை பெறுகிறார்.
எல்லாம் சரிதான். ஆனால் வாஜ்பேயி பிரதமரால் குடியரசுத் தலைவராக முன் மொழியப்பட்டு பதவி ஏற்கும் காலக் கட்டம். பதவி ஏற்பு நாள் அட்டமி (அஷ்டமி) ஆக இருக்கிறதே என்கிறார்கள்...அதற்கு புவி சூரியனைச் சுற்றும் நாள் எல்லாம் எனக்கு நல்ல நாளே...என மறு மொழி பகர்ந்து விட்டு பதவி ஏற்கிறார். மக்கள் குடியரசுத் தலைவர் என வரலாற்றில் அழிக்க முடியாத புகழ் பெற்று என்றும் வாழ்கிறார்.
27.07.2023 கலாமின் நினைவு நாள் இன்று.
ஏனோ 3 மணிக்கு விழிப்பு வந்து அது முதல் அவர் சொல்லுக்கேற்ப: கனா உறங்க விடாமல் செய்துள்ளது(உறக்கத்தில் வருவதல்ல கனவு உறங்க விடாதது என்பதற்கேற்ப)
பூனை இடம் வலம் போதல், கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொன்ன பொருள்,கௌளி சொல்லுக்கு பலன்(பல்லி), விரிகூந்தல் பெண் அபசகுனம், பாம்பு வீட்டுள் புகுந்தால் நல் விளைவில்லாதது...இப்படி எல்லாம் பார்க்கும் நமை எல்லாம் விட இந்த தலைவர்களின் துணிச்சல் எல்லை அற்றதுதான். பாராட்டத் தக்கதுதான்... சந்திராட்டமம், அட்டமி, நவமி... இப்படியாக குழப்பத்தில். நாம் பெரும்பாலும் மய்யத்தில்தான் இருக்கிறோம்.கலாமும் பெரியாரும் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.துணிவாக இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கற்க வேண்டியது இன்னும் உலகளவு இருக்கிறது
எல்லாம் கருத்துருவாக்கம்தான் என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment