தமிழருவி மணியனுக்கும் கவிஞர் தணிகைக்கும் ஒரு தொடர்பு உண்டு: கவிஞர் தணிகை
நல்ல தமிழ் அறிஞர், தமிழருவி மணியன் அவர்கள் 1992 என நினைக்கிறேன் எனது மறுபடியும் பூக்கும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் மேட்டூர் தமிழ் சங்க நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக அன்றைய கொ.பெ.நா (கொ.பெ.நாராயணசாமி) என்னும் தமிழ் ஆசிரியர் அல்லது தமிழ் அறிஞர் தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர் இருந்தார் பூவோடு சேர்ந்து நாராக மணந்து அனைவரையும் கட்டி. நூலை நான் அந்த வெளியீட்டுக்கும் முன்பே விற்பனை செய்ய அல்லது கேட்பவர்க்கு விரும்புவார்க்கு விநியோகம் செய்ய ஆரம்பித்திருந்தேன் என்பதெல்லாம் வேறு கதை.
இன்று தமிழருவி மணியன் அவர்களின் துணைவியார் இருதய நோய் மற்றும் மருத்துவம் பற்றி அவர் பகிர்ந்திருந்த ஒரு காணொளியை காலையில் பார்க்க நேர்ந்தது. சித்த மருத்துவ மேன்மை பற்றியும் இரு சித்த மருத்துவர்கள் அல்லது சித்தர்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
பலனாக காலையில் இனி கறிவேப்பிலையை நானும் உட்கொள்வது என்று முடிவெடுத்து செயல் படுத்த ஆரம்பித்திருக்கிறேன். எங்கள் வீட்டில் கறிவேப்பிலை செடி நிறைய உண்டு. மண் சாரம் அதற்கு ஒத்துக் கொண்டது போலும். இவ்வளவு நாட்களாக அதைச் செய்யாதிருந்த நான் இன்று தமிழருவி மணியனின் காணொளி பார்த்து அந்த தூண்டு உணர்வோடு செய்ய ஆரம்பித்து உள்ளேன். நல்ல தூண்டு உணர்வைக் கொடுத்துதவியது அந்த பகிர்தல். இனி அதை என்றும் கடைப் பிடிப்பேன்.
ஏன் எனில் ஒரு கைப்பிடிக் கறிவேப்பிலை ஒரு டம்ளர் நீரில் போட்டு மிக்ஸியில் இட்டு அரைத்துக் குடிக்க வேண்டுமாம்.காலையில் வெறும் வயிற்றில் அது நரம்புகளை புத்துணர்வூட்டி நமக்கு நல் புத்துணர்வு சக்தி தருகிறதாக சித்த வைத்தியம் சொல்கிறதாம். ஆனால் நான் வாயை மிக்ஸி ஆக கருதி அதன் பின் அத்துடன் ஒரு டம்ளர் பழைய சோற்றுத் தண்ணீருடன் சேர்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.
எனது அன்பு நண்பர் இப்போதெல்லாம் எழுதுவதில்லை எழுதினாலும் சில எழுத்துகள் மட்டும் (ஹைகூ)எழுதி புரியாமல் முடித்துக் கொள்கிறீர் என அன்பாக உரையாடும்போது குறிப்பிட்டார். அவருக்காக இந்த பதிவு.
நிறைய விடயங்கள் தெளிவாக விளங்க வில்லை.அதில் ஒன்று:
குழந்தைப் பருவத்தில் எனது தலையில் மேல் பகுதியில் நீர்க்கட்டி தண்ணீர்பந்து போன்று உருண்டபடி இருந்ததாம். தாய் கதை கதையாக சொல்லக் கேள்வி...எப்படி வைத்தியம் செய்வது, என்ன செய்வது என அந்த சவாலை முறியடிக்க முடியாமல் மொத்த குடும்பமே திணறிக் கொண்டிருந்த போது அது 1962ன் காலம். நான் கைக்குழந்தை வயது ஒராண்டு கூட இல்லையாம்.
ஒரு சாமியார் அல்லது சித்தர் வந்திருந்தாராம் வீடு தோறும் பிச்சையெடுத்தபடி...அவர் குழந்தையாயிருந்த எனது தலையில் அவர் இடுப்பு பையில் இருந்த திருநீறை எடுத்து கண்மூடி தியானித்து அந்த தண்ணீர்பந்தளவு தலை மேல் இருந்த நீர்க்கட்டி மேல் பூசி தடவி விட்டு, சரியாகி விடும் கவலைப்படாதீர் என்று சொல்லி சென்று விட்டாராம்.
மறு நாள் காலை விடிந்த போது தூங்கி எழுந்து பார்த்தால் அந்த நீர்க்கட்டி காணாமல் போயிருந்ததாம்... என்னாலும் இப்போது நம்பமுடியவில்லை. ஆனால் நடந்த உண்மை அதுதான்.
அதன் பின் காலத்தில் தவழ்ந்தபடி இருந்த குழந்தையான நான் அம்மா, அக்கா போன்றோர் கால் சேற்றுப் புண்ணுக்கு தடவி குணப்படுத்த வைத்து இருந்த களிம்பு மருந்தை எல்லாம் எடுத்து வாயில் பூசிக் கொண்டிருக்கிறேனாம். அதை எல்லாம் எனது தாய் கவனித்து காப்பாற்றி இருக்கிறார் என்பது போன்ற செய்திகள் மேலும் உண்டு.
ஆதிபராசக்தி படத்தில் ஒரு காட்சி:உணர்ச்சி நடிகர் சுப்பைய்யா ஒரு உறி கட்டி கீழ் நெருப்பு மூட்டி பராசக்தியை அழைத்துப் பாடுவார் அபிராம பட்டராக . விண்ணில் தோன்றிய பராசக்தி தனது காதில் இருந்து ஒரு தோட்டைக் கழட்டி வானில் வீச அது நிலவாக ஒளிவீச அன்று நிறை நிலவு நாள்தான் என்று நிலவில்லா நாளை மாற்றிக் காட்டி மன்னர் முதலினோர்க்கு ஆதிக் கடவூர் சார்ந்த அபிராம பட்டருக்கு சார்பாக அவர் உயிர் காக்க நடந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள்...
அவர் எழுதிய அபிராமி அந்தாதி இருக்கிறது 100 பாடல்களுடன் முதல் பாடலின் அந்தம் அடுத்த பாடலில் ஆதியாக...
பதினெட்டு சித்தர்கள் இருந்த பூமி, இன்னும் என்ன என்ன இருக்கிறதோ என தெரிந்து கொள்வதற்குள் ஆயுள் போதாது போலிருக்கிறது..
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு:
ஒரு வில் ஒரு சொல் ஒரு இல்: இராமயணச் சுருக்கத்தில் இராமனுக்கு ஒரு வில், இராமனது ஒரு சொல் ராம,ஒரு இல் என்பது சீதை மட்டுமே என்பதைக் குறிக்க...
அதை அடுத்து: ஒரு வாள், ஒரு குதிரை, ஒரே பெண் (ஒரு மனைவி) இது சாண்டில்யன் காலத்தில் குறிப்பிட்ட மன்னர்கள் கதையில்
இப்போது ஒரு நாடு ஒரே வரி ஒரே தலைமை...இப்படிச் சொல்லலாமா?
மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தங்களுடைய இன்பத் தமிழ், அருவி போல் தொடர்ந்து சிறந்திட அன்பான வாழ்த்துகள்.
ReplyDeletethanks for your feedback and comment spudurkarthi.vanakkam.please keep contact
Delete