Sunday, March 27, 2022

தமிழக அரசு கவனத்துக்கு: கவிஞர் தணிகை

  தமிழக அரசு கவனத்துக்கு:  கவிஞர் தணிகை



கடந்த பதிவில்  சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் என்ற என்னவெல்லாமோ எழுத முனைந்து அது வேறு முகம் காட்டி இருக்கிறது. இவை எல்லாம் நடப்பது எழுத்தின் வசத்தின் அல்லது எழுத்து வாசத்தால் விளைபவை. விளைந்தவை.


நான் குறிப்பிட வேண்டியது:


நங்கவள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஒரு உரையாடல்:

ஒரு( Aged/Age old ) விவசாயப் பெண்மணி தான் அறிந்தவரிடம்: மஞ்சப் பையில் இருந்து ஒரு அரசு ஆவணத்தை எடுத்துச் சொல்கிறார்: எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உண்டு. சகோதரர்கள் மூவருக்கும் ஆளுக்கு  ஒரு ஏக்கர் இருக்கின்றன. ஆனால் இவர்கள் பாதியாக ஒன்னரை ஏக்கர் தாம் இருக்கிறது என்று பட்டா அளித்திருக்கிறார்கள்...


இதைப் பற்றி சொல்ல வேண்டியது: 

இது இவருக்கு மட்டுமல்ல‌

பொதுவாகவே 5 சென்ட் இருந்தால் பாதிக்கு இரண்டரை சென்டுக்கு மட்டுமே பட்டா கொடுப்பேன் என்பது, கொடுப்பது

எவ்வளவு இடம் இருக்கிறதோ அதில் பாதிக்கு மட்டுமே அரசு ஆவணம் தருவது என்ற நிலையே பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மீதம் உள்ளவைக்கு மீண்டும் மீண்டும் அவர்களிடம் அரசு ஊழியர்களிடம் சென்று அல்லாட வேண்டும் அலைந்து அலைந்தே சாக வேண்டும் அல்லது இலஞ்சம் கொடுக்காமல் மீளவே கூடாது என்ற நிலையை வேண்டுமென்றே ஏற்படுத்துகிறார்களா? 

உள்ளதை உள்ளபடிக்கு அத்தாட்சி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மேலும் இணை நிலத்தாரின் நிலங்களின் நீள அகலத்தை மாற்றி மாற்றிக் கொடுத்து சிண்டுமுடிந்து முனைந்து அடிபட்டு உதைபட்டு அளக்க இவர்களை வரவழைக்க வேண்டும் என்றே செயல்பட்டு நில அளவைகளைக் குறிப்பிடுவது...

கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ என்று ஏற்கெனவே பிரிந்து கிடக்கும் மக்கள் இனத்தை மேலும் பிரித்து காளைமாடுகள் சிங்கம் நரி கதை செய்து வருகிறார்கள். நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால் என்ற பாரதியின் வரிகள் வரிக்கு வரி இங்கு பொருந்துகின்றன.


 இந்த இடைத்தரகர்கள் இருப்பதை குறைத்து பதிவு செய்வதும், அதன் பின் எங்கோ இருக்கும் ஆய்வாளர்க்கு இவ்வளவு தரவேண்டும் அவ்வளவு செய்ய வேண்டும் குறைத்துக் காண்பிக்கப் பட்டிருக்கிறது என நாய்ப் பிடுங்கல் பிடுங்குவதுமாகவே போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு அரசு போக்குவரத்து அலுவலர் நேர்மையாக செயல்பட்டு இலஞ்ச இலாவண்யத்துக்கு இடம் கொடுக்காமல் நேரடியாக மக்களுக்கே சந்திப்பு முறைகளை நடவடிக்கையாக மேற்கொள்கிறார் என அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகளை இந்த புரோக்கர்கள் செய்கிறார்கள் என்ற செய்திகளும் படிக்க வேண்டி நேரிட அதன் விளைவாகவே இந்தப் பதிவு... 

நல்ல அரசு ஊழியர்களை வாழவிடாமல் செய்வதும் தொல்லைகள் கொடுப்பதும் வாய்ப்பிருந்தால் வன்முறை கையாண்டு ஏன் கொன்று கூட விடுவதும், கொல்ல முயற்சிப்பதும், மற்ற அல்லக்கைகளுடன் நேரடி தொடர்பில் கூட்டு சேர்ந்து கொண்டு களவாணித்தனங்கள் செய்வதுமாக ஒரு திருட்டு நாட்டாண்மை நடந்து கொண்டு இருக்கிறது.


நல்ல அலுவலர்களுக்கு அரசு  பாதுகாக்க வேண்டிய கடமை பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமையுள்ளது மேலும் இது போல உழைப்பு பிழைப்பின்றி ஏய்த்துப் பிழைப்பார் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது.



அரசு பொதுவுடமை அரசு என்றால் கூட எல்லாம் அரசுக்கே என எடுத்துக் கொண்டு மக்கள் நலத்தில் கவனம் கொள்ளலாம் ஆனால் இது தனி உடமை அரசு என்னும் போது இருப்பதை ஏன் இப்படி இல்லாமல் காட்ட வேண்டும் என்பது புரியவில்லை. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை எல்லாம் ஊடகங்கள் வெளிச்சத்துக்கு நன்கு கொண்டு வந்து அரசின் கவனத்துக்கும் ஈர்த்து நிலையை சீர்படுத்தினால் மட்டுமே மக்கள் நலம் சிறக்கும்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment