Saturday, February 8, 2020

கடவுள் இருக்கிறார் என்பது தெரியும்!


Dr.Ravikannan Cancer Specialist padma awardee Assam.




பதிவு செய்த நாள்

08பிப்
2020
00:00
நாட்டின் மிக உயரிய, 'பத்ம' விருதுகள் இவ்வாண்டு அறிவிக்கப்பட்ட போது, தமிழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ரவி கண்ணன் பெயரை பார்த்தவுடன், புற்றுநோயிலிருந்து குணம் பெற்ற, வட கிழக்கு மாநிலமான, அசாமை சேர்ந்த பேராசிரியர், ஜாய்தீப் பிஸ்வாஸ் தன் முகநுாலில், 'கடவுளை நான் பார்த்தது இல்லை... ஆனால், எனக்குத் தெரியும், கச்சார் கேன்சர் மருத்துவமனையில், கடவுள் இருக்கிறார்' என, பதிவிட்டிருந்தார்.

அசாமில், பராக் பள்ளத்தாக்கில், கச்சார் மாவட்டத்தில் உள்ள கேன்சர் மருத்துவமனையில், ஆண்டிற்கு, 20 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.நோயாளிகளுடன் வருபவர்களுக்கு, மருத்துவமனை வளாகத்தில், வேலை வாய்ப்பை உருவாக்கி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில், நோயாளிகளும், அவர்கள் உடன் இருப்பவர்களும், குறைந்த கட்டணத்தில் உணவு, தங்குமிட வசதி பெறுகின்றனர்.இதை உருவாக்கியவர், 2007ம் ஆண்டு வரை, சென்னை, அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட்டில், அறுவை சிகிச்கை நிபுணராக பணிபுரிந்த, தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணன்.தன்னுடைய அனுபவத்தை, நம்மிடையே அவர் பகிர்ந்து கொள்கிறார்:நாட்டிலேயே, மருத்துவ வசதி கிடைப்பதில் மிக பின் தங்கிய இடமாக இருப்பது, பராக் பள்ளத்தாக்கு. மருத்துவ சிகிச்சைக்கு, 350 கி.மீ., துாரத்தில் உள்ள, கவுகாத்திக்கு செல்ல வேண்டிய நிலை.சென்னையில் இருந்த போது, வட கிழக்கு மாநிலங்களில் பணி செய்யும் டாக்டர்களின் அழைப்பில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும், சிக்கலான அறுவை சிகிச்சைகளில் என்னுடைய உதவி தேவைப்பட்டால், சக டாக்டர்களின் அழைப்பிலும், பலமுறை இங்கு வந்துள்ளேன்.
விழிப்புணர்வு இல்லை


ஒரு கட்டத்தில், சென்னையை விடவும், இந்த பள்ளத்தாக்கு மக்களுக்கு என் உதவி அதிகம் தேவை என்று உணர்ந்தேன். என் முடிவை, மனைவி சீதாவிடம் சொன்னபோது, சற்று தயங்கினார்.காரணம், எங்கள் மகளின் படிப்பு. அப்போது மகள், ஐந்தாம் வகுப்பு மாணவி. ஐ.நா.,வின், குழந்தைகளுக்கான கல்வி நிதி அமைப்பின் இந்திய பிரிவில், என் மனைவி பணியில் இருந்தார்.இவை அனைத்திற்கும் மேலாக, அசாம் என்றாலே, தினமும் குண்டு வெடிப்பு, பயங்கரவாதிகள் தாக்குதல் என்று செய்திகளைப் பார்த்து, பாதுகாப்பு பற்றிய தயக்கமும் அவருக்கு இருந்தது. இந்நிலையில், ஒருமுறை என்னுடன் வந்து, இந்த மக்களை பார்த்த நொடியில், அவரின் மனம் மாறிவிட்டது. குடும்பத்துடன் வந்து விட்டோம். வட கிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாமில், புற்றுநோய் பாதிப்பு அதிகம். காரணம், மக்களின் வாழ்க்கை தரம், உணவு பழக்கம் மோசமாக உள்ளது. வெற்றிலை, பாக்கு, புகையிலை, மதுப்பழக்கம் அதிகம். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கிடையாது. புற்றுநோய் என்று உறுதியானால், அவ்வளவு தான்... என்ன செய்வது என்று தெரியாமல், வெளியில் சொல்லவே பயந்து, ரகசியம் காப்பர்.பணியை துவக்கிய போது, எங்களுக்கு இருந்த முதல் சவால், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள, யாரும் தயாராக இல்லை என்பது தான். குணப்படுத்தவே முடியாத வியாதிக்கு, ஏன் வீணாக செலவு செய்ய வேண்டும் என்று, அவர்கள் மனதில் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை.

புற்றுநோய்க்கான சிகிச்சை, தொடர்ந்து பல மாதங்கள் நீடிக்கும். பள்ளத்தாக்கில் இருப்பவர்கள், பெரும்பாலும் தினக் கூலிகள். வேலையை விட்டு சிகிச்சைக்காக அலைந்தால், மொத்த குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டும்.இந்நிலையில், சிகிச்சை கிடைக்காமல் ஒருவர் கூட, உயிரிழக்க கூடாது என்று முடிவு செய்தேன். ஒவ்வொரு நோயாளியிடமும், அவர்களின் உறவினர்களிடமும், தனித்தனியே பேசினேன்; எல்லா நோயையும் போன்றதே புற்றுநோயும். சர்க்கரை கோளாறு போல், குணப்படுத்த முடியாத வியாதி இல்லை என்று புரிய வைத்தேன். சில நோயாளிகளுக்கு, சிகிச்சையும் ஆரம்பித்தோம். அவர்களுடன் வந்திருந்தவர்கள், அரிசி பொரியை பச்சை மிளகாயுடன் சாப்பிட்டு, தரையில் படுத்து உறங்கினர். எங்களால் வசதி எதுவும், அவர்களுக்கு செய்து தர முடியவில்லை.

நான் இங்கு வந்தபோது, தன்னார்வலர்கள் சேர்ந்து ஆரம்பித்த, சிறிய அமைப்பு இருந்தது. போதிய நிதியோ, முறையான உள்கட்டமைப்பு வசதியோ, சிறப்பு டாக்டர்களோ இல்லை. இதனால், ஒரு முறை சிகிச்சைக்கு வந்தவர்கள், அடுத்த முறை வர மறுத்தனர்.மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சிகிச்சை நாட்களில், நோயாளிகளின் குடும்பத்திற்கு, வருமானத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தோம். பலரின் உதவியோடு, இந்த இரண்டையும் செய்தோம். ஆயிரக்கணக்கானவர்கள் முன் வந்து, இந்த மையத்தை உருவாக்கினர்.மருத்துவமனை வளாகத்தில் உள்ள சமையலறை, தோட்டம் என்று அனைத்து இடங்களிலும், எங்கள் ஊழியர்களுக்கு உதவியாக, நோயாளிகளின் உறவினர்களை, தினசரி உணவுடன் சேர்த்து, 250 ரூபாய் சம்பளத்தில், பணியில் அமர்த்தினேன்.புற்றுநோய் சிகிச்சை, ஒரு முறையோடு முடிந்து விடுவதில்லை. நீண்ட நாட்கள் தொடர்ந்து எடுக்க வேண்டிய, கண்காணிப்பில் இருக்க வேண்டியது. முதல்முறை, 5 ஆயிரம் ரூபாய் கட்டி, சிகிச்சை செய்து விட்டு சென்றவர்கள், அடுத்த முறை நாங்கள் சொன்ன தேதியில் வருவதில்லை.

ஏன் என்று பார்த்த போது தான், கொடுமையான உண்மை தெரிந்தது. ஒருவர், முதல் முறை சிகிச்சைக்கு, தன் குழந்தையை, பணக்காரர் ஒருவரிடம் விற்ற பணத்தில் வந்திருக்கிறார். மீண்டும் வருவதற்கு, பணம் இல்லை. இதை அறிந்து அதிர்ந்து போனேன். எப்படியோ, அந்தக் குழந்தையை மீட்டு கொடுத்தோம்.இதற்கு மாற்றாக, மையத்தில் வேலை செய்து பெற்ற பணத்தில், 500 ரூபாய் கட்டினால் போதும். வாழ்நாள் முழுவதும் பணம் ஏதும் கட்டாமல், சிகிச்சை பெறலாம் என்ற முறையை கொண்டு வந்தோம்.அதன்பின், நோய் பாதித்தவர்களில், 70 சதவீதம் பேர், முறையாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதே போல், சிகிச்சையின் போது, பற்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கும், இதே திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். ஒருமுறை, 500 ரூபாய் கட்டினால், வாழ்நாள் முழுவதும் இலவச சிகிச்சை, ஆலோசனை பெறலாம்.இங்கு வருபவர்கள் அனைவருக்கும், குறைவான கட்டணத்தில் சிகிச்சை தருகிறோம் என்பதால், தரத்தில் எந்த சமரசமும் கிடையாது. எல்லா பெரிய மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிச்சைக்கு, எந்த விதத்திலும் குறை இல்லாமல் தருகிறோம்.சிகிச்சைக்காக நீண்ட துாரம், மக்களை அலைக் கழிக்கக் கூடாது. அருகிலேயே கிடைக்க வேண்டும் என்பதற்காக, கரிம்சஞ்ச், கைலாகன்டி, திமாகசோயா மாவட்டங்களிலும், மையங்களை துவக்கி உள்ளோம். நவீன கருவிகளை வாங்குவதிலும், நிதி உதவி செய்வதிலும், அசாம் அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது.

அர்ப்பணிப்பு வேண்டும்


டாக்டர் ரவி கண்ணன் தாய், இந்துமதி கண்ணன் கூறுகையில், ''என் கணவர், விமானப்படையில் பணிபுரிந்தார். அவரின் வீர செயலுக்காக, 'விசிஷ்ட் சேவா' பதக்கம் வழங்கப்பட்டது. எங்கள் மகனை, டாக்டர் ஆக்க வேண்டும் என்று தான் விரும்பினோம். எங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அவன் சேவை செய்கிறான்,'' என்றார்.மனைவி சீதா கூறுகையில், ''இங்கு வந்தபோது, மொழி தெரியாது. மனிதர்கள் புதிது. இன்று, எத்தனையோ பேர், எங்கள் மேல் அன்பாக, அக்கறையாக இருக்கின்றனர். ''மகள், உயர் கல்வி படிக்கிறாள். இந்த விருது, தனி நபருக்கு தரப்பட்டதல்ல. அர்ப்பணிப்போடு செயல்படும், ஒரு குழுவிற்கு கிடைத்த அங்கீகாரம்,'' என்றார்.செல்லப் பிராணிகள் வளர்ப்பது, டாக்டருக்கு பிடிக்கும். அவரின் பிரியமான நாய்க்கு, ஜப்பான் மொழியில், 'ஹிரா' என்று பெயர் வைத்துள்ளார். தமிழில், 'வீரம்' என்று பொருள்.

டாக்டர் ரவி கண்ணன்,
கேன்சர் அறுவை சிகிச்சை
நிபுணர்,
கச்சார் கேன்சர் மருத்துவமனை,
அசாம்ravi.kannan@cacharcancerhospital.org

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நன்றி: தினமலர் 08.02.2020.

4 comments:

  1. கடவுள் இருக்கிறார். உறுதியாக...
    கடவுள் எப்போதும் நேரில் வருவதில்லை. தன் சார்பாக ஒருவரை அனுப்பி வைப்பார். நாம் புரிந்து கொள்வதில், அவரை ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது நம் பரந்த மனத்தின் ஆழமும், விசாலமும்.
    டாக்டர். ரவி கண்ணன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
    வாழ்த்துக்களுடன்
    நாகா
    கோவை

    ReplyDelete
    Replies
    1. thanks Naga for your comment on this post. vanakkam. pl.keep conatact.

      Delete
  2. Dr Ravi Kannan நம்மிடையே வாழும் கடவுள்..

    ReplyDelete