அதிகபட்ச பயன்பாட்டுக்கான மூலாதாரங்கள்: கவிஞர் தணிகை
மேக்ஸிமம் யூட்டிலைசேஷன் ஆப் ரிசோர்ஸஸ்....
எந்தப் பொருளை எடுத்தாலும் அது எப்போதாவது பயன்படும் என்று எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் வழக்கமாகி விட்டது அவனுக்கு.
எதையும் தூக்கி எறியும் பழக்கமே அவனுக்கு இல்லை
ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பொருள்கள் பழக்கத்துக்கு வந்து விட்ட நிலையில் இந்தப் பழக்கமுடைய இவனது குணாம்சம் கேலிக்குரியதானது.
இது ஒரு வித்தியாசமான நடவடிக்கையாகவும் பிறர் கண்களுக்குத் தெரிந்தது
பெற்ற தாய் தந்தை உற்ற சகோதரங்கள் இவர்களை எல்லாம் கூட தூக்கி எறிந்து விடும் உலக நடப்பில் இவன் வேறுபாடு அனைவரின் கண்களுக்கும் பளிச்சென தெரிய...
எல்லாவற்றையுமே அதிக பட்சம் அதாவது அதன் உச்சம் வரை, அதாவது அதன் கடைசி விளிம்பு எல்லை வரை பயன்படுத்திப் பார்க்கும் அவனுக்கு
ஒரு மஞ்சள் கோடு போட்ட வெள்ளை சட்டை ஒன்றை எடுத்து எறியவே மனசில்லை.
அவனுடைய மனைவி அதைப் போடவேண்டாம் என்று மறுத்த போதும் அந்த முழுக்கை சட்டையை விட மனமில்லாமல் இடது கைப்பக்கம் கிழிந்த போதும் மனைவிக்கு தையல் கலை தெரியும் என்று இருந்ததால் அதை தைத்து இன்னும் கொஞ்ச காலம் போடுகிறேன் என்று அணிந்து வந்தான்.
அன்று அதிகாலை கோவிலில் குனிந்து நிமிர இடது கையில் மடிப்பு இருந்த இடத்தில் சுமார் அரை அடி தூரம் கிழிந்து விட்டது. நேரமோ ஆகிவிட்டது. பேருந்து பிடித்தே ஆக வேண்டும். அன்று அவனது அலுவலகத்தில் ஆய்வுப் பணி என செய்தி. அவன் அந்த அலுவலகத்தின் ஒர் முக்கிய புள்ளியென்பதால் அவன் இருந்தாக வேண்டும்.
மறுபடியும் வீடு வந்து மாற்றிக் கொண்டு செல்லும் நேரம் இல்லை. அப்படியே பேருந்து ஏறினான். கைகள் வெளித் தெரிய...கொஞ்ச நேரம் கழித்து வழக்கமாக செல்லும் பேருந்தின் நடத்துனர் அறிவு மதியிடம் குண்டூசி இருக்கிறதா எனக் கேட்டான். அவர் இல்லை ஸ்டேப்லர் பின் அடித்துக் கொள்ளலாம் என எதற்கு என்று கேட்டார்.
கிழிந்த இடத்தைக் காட்ட வரிசையாக பின் அடித்த சட்டையுடன் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்து அங்கும் மறுபடியும் சில பின்களை சேர்த்து அடித்துக் கொண்டான்.
ஏதோ நெருடியது... என்றாலும் இதெல்லாம் சகஜமப்பா...என்ற குரலுடன்
அன்றைய அலுவலக நாளை ஓட்டியே விட்டான்...
பின் அடித்த சட்டை நீங்கள் போட்டிருக்கிறீர்களா...போட்டுப் பாருங்கள் அது கூட ஒரு சுகமான அனுபவமானது என்கிறான்.
தேசத்தின் பிதா என்றவர் சட்டை எல்லாம் போடாமல் இது போன்று பின் அடிக்க வாய்ப்பே இன்றி மேல் ஒரு வேட்டி கீழ் ஒரு வேட்டி என உலகெலாம் வலம் வந்த கதையும், போடவே ஆடையின்றி உண்ணவே உடையின்றி இருக்கவே இடமின்றி இந்த உலகில் எத்தனை எத்தனை ஜீவன்கள் அவை எல்லாம் அவன் நினைவில் ஆடியது...
அவன் வீட்டில் இருக்கும்போது ஒரு துண்டை மட்டும் தனது அரையில் அரை என்றால் இடுப்பு ....கட்டிக் கொண்டே அலுவலகம் செல்லா நாட்களில் இருந்து நாட்களை கடத்துவதுண்டு..
எதையுமே அது உயிர் இருக்கும் வரை முழுவதுமாக பயன்படுத்தியே ஆக வேண்டும்...
அது துணியாக இருந்தாலும் பணியாக இருந்தாலும் உடலாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும்..
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment