பேரறிஞர் அண்ணா (துரை): கவிஞர் தணிகை
டாக்டர் காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரை:
15 செப் 1903 முதல் 03.02.1969
இவரின் பிறந்த நாள் நாளை வருகிறது. அதற்காக ஒரு பதிவு செய்யுங்கள் என என் அன்புத் தம்பி மதியழகன் அவர்கள் கேட்டதற்கிணங்க இந்தப் பதிவு.
அவர் ஒரு திறந்த புத்தகம். அவரைப் பற்றி எவருக்கும் தெரியாத விவரத்தை அடியேன் என்ன சொல்லி விடப் போகிறேன் அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு பேரறிஞர்.அவர் உயரம் மனிதத்தின் உச்சம். அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைமைப் பதவி எல்லாம் கூட கிட்டி இருந்தாலும் அதை விட உயரமான ஒரு படியாகவே இவர் வாழ்வு இருந்திருக்கும் இவை யாவற்றையும் விட பேரறிவு பெற்றவர். சிறந்த நிர்வாகி சிறந்த தம்பிகள் உடையார். இவர் முதல்வராக இருந்த காலத்தில்தாம் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்ற பேர் பெற்றது.
டாக்டர் சி.என் அண்ணாதுரை அவரது மறைவுக்கு கூடிய மனிதக் கடலின் உலக சாதனையை இன்னும் வேறு எந்த தலைவராலும் மிஞ்சவே முடியாத மறைவு அவரது புகழ் சொல்லும். மக்கள் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு சிறுவர்கள்தாமே அழைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கருதாமல் சென்று அவர் பேசிய பேச்சை கேட்டு உத்வேகம், உற்சாகம் பெற்றதாக மாமனிதர் அப்துல் கலாம் அவர்களே தமது எழுத்துகளில் பதித்து குறிப்பிட்டிருக்கிறார்.
எல்லாவற்றையும் விட தம்பி , தம்பி என எழுதிப் பேசி ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அரசியல் தலைவிதியை மாற்றியவர். வெளிப்பாட்டுத் தன்மை உடைய கண்ணியவான். தமது தவறைக் கூட ஏற்றுக் கொள்பவராகவே இருந்தார். எந்த குயுக்தியும், குள்ள நரித் தனத்தையும் தமது தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் பொதுவாழ்விலும் துளியும் பயன்படுத்தாதவர். தோல்வி கண்டு துவளாதவர், பள்ளி இறுதித் தேர்வில் தோற்ற இவர் கல்லூரியில் சென்று இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றவராக பின்னர் தன்னை மாற்றிக் கொண்டவர். நன்கு படித்த மேதை.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை இந்த பூமிக்கு வழங்கி அதன்படியே வாழ்ந்த மாமேதை. எளிமைக்கு காமராசரைச் சொல்வார்கள் அது போலவே இவர் வாழ்வும் மிக எளிமையானதே. மேலை நாடு போகும் போதுதான் கோட், சூட் அணிந்ததாகவும் அதுவும் அன்புத் தம்பி ஒருவர் செலவை ஏற்று தைத்து தந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் , என உலகெலாம் வாழும் மாந்தர் யாவரும் ஒன்று பட வேண்டும் ஒரே கடவுளைக் கருத வேண்டும் என தமது தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் கடவுள் மறுப்பு சிந்தனையிலிருந்து மாறுபட்ட மக்கள் அனைவரும் ஏற்கும் படியான நிலையை எட்டி நாட்டை ஆள பாட்டை போட்டவர்
மேலும் சொல்லிக் கொண்டே போகலாம், நிறைய எழுதியிருக்கிறார். ஒரு சான்று: ஒரே இரவில் ஓர் இரவு என்ற நாடகத்தை எழுதி அது திரைப்படமாகவும் ஆனதெல்லாம் வரலாறு. சூழ்நிலை மறந்து ஆழ்ந்து படிப்பவர் ஒரு அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்தே வேண்டாம் ஒரு புத்தகம் கொடுங்கள் என வாங்கி படித்துக் கொண்டே இருக்க அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டார் என்பதும், சென்னை கன்னிமாரா (அப்போது மாபெரும் நூலகம் அதுவே) நூலகத்தின் அத்தனை நூல்களையும் படித்து முடித்தவர் என்பதும் எந்த கருப்பொருளைக் கொடுத்தாலும் எந்தவித தயாரிப்பும் இன்றி மேடையில் பேரூரை நிகழ்த்துவார் என்பதெல்லாம் இவரின் பெருமைக்கு சான்று. கல்கிதான் இவரது உரையைப் பார்த்து இவருக்கு முதலில் அறிஞர் அண்ணா என பட்டம் கொடுத்தார் என்பதும் காலத்தின் பதிவு.
இவரது ஆங்கிலப் புலமையை ஆங்கிலம் மெத்தப் படித்தாரும், ஆங்கிலேயரும் கூட வியந்து பார்த்திருக்கின்றனர் என்பது ஒரு பக்கம்.
பேரறிவு என்பதை ஞானம் என்பார் இவர் தமிழுக்கு கிடைத்த ஞானி.ஆங்கில மொழியை தமது சொற்பொழிவில் ஆட்படுத்தி எழுதி அனைவருக்கும் ஒரு வியப்பை ஏற்படுத்தி விடுபவர் என்பதெல்லாம் சொல்ல சுவையானது.என்ன இவர் அதிக நாட்கள் உயிருடன் இல்லை என்பதும், ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதும் இந்த மண்ணின் விதி. நல்ல தலைமைப் பண்பு கொண்ட நல்ல தலைவர். இவரின் ராஜ்யசபை பேருரை ஆங்கிலத்தில் மிக நல்ல நூல் அடியேனும் கூடப் படித்திருக்கிறேன்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் இவர் பேச ஆரம்பித்தால் மெய் மறந்து கேட்டுக் கொண்டே இருப்பாராம் பாராளுமன்றத்தில்.எவரையும் தடுக்க அனுமதிக்க மாட்டாரம். தலைமையால் மெச்சத் தக்க பெருந்தலைமை.அறிவு செறிந்தார்க்கு அறிவு செறிந்தாரையே பிடிக்கும். சமய நெறிக்கு விவேகானந்தர் எவ்வளவு பங்களித்தாரோ அதே போல அரசியலில் இவர் பங்களித்திருக்கிறார் மக்கள் வாழ்வு நல்வாழ்வாக மலர தம்மால் ஆனதை எல்லாம் தமது குறுகிய வாழ்நாளில் அரிய உழைப்பால் செய்து சென்று விட்டார்.
பிறந்த நாள் நினைவு நாள் என்பதெல்லாம் இருக்கும் நாம் இவர்களின் சிறப்பு இயல்பை எண்ணிப் பார்ப்பதற்காகத்தானே கொண்டாடுகிறோம் அப்படிப் பார்த்தால் இந்த தமிழகத் தலைவரை உலகெலாம் இவர் தமிழுக்காகவும், ஆங்கிலத்துக்காகவும் கொண்டாடலாம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment