Thursday, April 27, 2023

தமிழ்ப் பற்றாளர் விருது: மூவேந்திர பாண்டியன் அவர்களுக்கு: கவிஞர் தணிகை

 தமிழ்ப் பற்றாளர் விருது: மூவேந்திர பாண்டியன் அவர்களுக்கு: கவிஞர் தணிகை



அகில இந்திய காந்திய இயக்கம் என்ற நாமக்கல் சார்ந்த சேவைப் பணியாற்றும் அமைப்பின் கீழ் திரு. செந்தில்முருகன் (துத்தி குளம்) அவ்வப்போது தாதியரை, ஆட்டோ ஓட்டுனர்களை இப்படி நற்சேவையாளர்களை எல்லாம் ஊக்கப் படுத்தி ஏதாவது செய்து கொண்டே இருக்கும் சமூக ஆர்வலர்.


இவர் பெண் எடுத்திருக்கும் ஊர் எமது ஊர், எனது நெருங்கிய நண்பர் குவெய்ட் செந்தில்குமாரின் கல்லூரி காலத் தோழர். எனவே இவர் என்னுடன் பழக்கம். சில ஆண்டுகளாக எனது நண்பர்.யார் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி துளியும் கவலைப் படாத சமூக சிந்தனையாளர் இயல்பில் பொறியியல் பட்டயம் பெற்ற பொறியாளர்.


புத்தக படைப்பாளர் என்ற முறையில் குறளுக்கு தெளிவுரை எழுதி காலத்தின் பக்கங்களில் இடம் பெற்று விட்ட நமது நண்பர் மூவேந்திர பாண்டியன் அவர்களுக்கு "தமிழ்ப் பற்றாளர்" என்ற விருதளிக்கும் நிகழ்வு2023.4.27 இன்று வியாழன் வீரக்கல் புதூர் ஊராட்சி புதுசாம்பள்ளியில் உள்ள சுப்ரமண்ய சாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.


ஒரு தமிழ் நிகழ்வுக்கு அதிலும் பகற்பொழுதில் இவ்வளவு பேர் குழுமியது மகிழத் தக்கதாக இருந்தது.

நமக்குத் தான் ஒரு நல்ல நிகழ்வுடன் இணைவதென்றால் ஆயிரத்தெட்டு தடங்கல் வருமே...எப்படி கலந்து கொள்வது எப்படியும் கலந்து கொள்வது என ஆர்வத்தில் இருந்தேன்...


அந்த நேரத்தில் குடி நீர் வர வேண்டிய நாள் பிடித்து வைக்க வேண்டும்

இல்லத்தரசி உடல் நலக் குறைவாக இருக்கும் தாயைப் பார்க்க சென்றிருந்தார்

வாழ்வோட்டத்தின் மிக முக்கியமான கட்டத்தில் ஒரு தலைமை இன்றிலிருந்து எனை பணிச்சேவைக்கு அழைத்து விடுவாரோ என்ற பதற்றம்...


இப்படி எல்லாவற்றையும் மீறி அப்பாடா:  விருது ஏற்பாளர் மூவேந்திர பாண்டியன், மற்றும் சமூக ஆர்வலர் செந்தில் முருகனுக்காகவும் மணி காலை 11.00க்குள் போய் சேர்ந்து விட்டேன்.


அங்கே தாய்மார்கள், ஊராட்சியின் மக்கள் பிரதிநிதிகள்,தமிழ் சான்றோர், நடை பயணம் வழி மதுவிலக்கு வேண்டும் காந்திய போராட்டக்காரர், அவேர்னஸ் அப்பா, இவர் பிச்சை எடுத்தாவது சேவை செய் என்கிறார், மதுவை, புகையை மறுத்து அதற்காகாவும் எல்லாவற்றுக்காகவும் சேவை செய்கிறார் அவர் பனியன் வாசகம் இன்சூரன்ஸ் பற்றி ,மது விலக்கு பற்றி இன்ன பிற பற்றி  எல்லாம் எடுத்துச் சொல்கிறது.  இப்படி பலவாறான நண்பர்கள் கூட்டம். நீண்ட நாட்களுக்கும் பின் எனைச் சார்ந்த நண்பர்கள் வட்டத்தில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.


என்னையும் பாராட்டி பேசச் சொன்னார்கள்: நல்ல தலைமையிருந்தால் ஆட்சி வழிமுறைகள் நன்றாகவே இருக்கும் என்ற சான்றாக குடி நீர் விநியோகம் சீராகி இருப்பதையும், சொத்து வரி விகிதத்தில் வசூலில் ஒரு நியாயமான போக்கும், புதுசாம்பள்ளியில் தயாராகி வருகிற‌ எரிவாயு தகன மேடை பற்றி எல்லாம் குறிப்பிட்டேன். 

மேலும் குடி நீர் விநியோகத்தில் குளோரின் கலப்பு விகிதத்தை பொருத்தமாக‌ முறைப்படி கலந்து கொடுப்பதை சற்று கவனித்து நெறிப்படுத்துங்கள் என்றும் கோரிக்கை வைத்தேன் மக்கள் சார்பாக.

நீண்ட நாள் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்வது வேண்டுமா? குறுகிய காலத்தில் சாதனை நிகழ்த்தி சென்று சேர்வதென்பது வேண்டுமா என்பதை மனிதர் தம் இலக்காக‌ நிர்ணயிப்பது என்பது பற்றிக் குறிப்பிட்டேன் சான்றுகளுடன்

குறைபாடுகள் விமர்சனங்கள் என்ற போக்கை விட்டு நல்லவற்றை பாராட்டவே வேண்டும் என சிலரின் செய்கைகளைக் குறிப்பிட்டேன். பசி தீர்த்தல், ஜீவ காருண்யம், இன்ன பிற... உள்ளூர் பிரதிநிதிகள் மாணிக்க சேகர், எஸ்.என். ராஜன்,இப்படி பலரையும் இந்த விழா ஒருங்கிணைத்திருந்தது. தங்களால் ஆன முயற்சிகளுடன் மக்களுக்காக சேவை செய்யும் நபர்களும் வந்திருந்தனர்.


மேதின மக்கள் கிராம சபைக் கூட்டம் எப்படி இருக்குமோ ஆனால் இந்த பாராட்டு விழாவில் நல்லதைக் கொண்டாடும் பாங்கு எல்லோரிடமும் இருந்ததைக் காணமுடிந்தது. எல்லோரின் முகத்திலும் ஒர் இனிமை கலந்த மகிழ்வு இருந்தது


எனவே அனைவரும் பொன்னாடை போர்த்தி, அவரைக் கௌரவப் படுத்தி பாராட்டு விருதை அளிக்க, நானும் கலந்து கொண்டு எனது வார்த்தைகள் மூலம் பெருமைப் படுத்தினேன். இருக்கும் போதே நல்லதைக் கொண்டாட தமிழ் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியதைக் குறிப்பிட்டேன்.


தமிழ்ப் பற்றாளர் என்பதையும் விட உயரிய விருதுக்கும் இவர் பொருத்தமானவர்தாம். எனவே இவரை நான் தமிழ்க் குயில் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் நல்ல தமிழ்ப் பெயர் வைக்கும் குழந்தைகளுக்கு இவர் தமது சொந்த ஊதியத்தில் இருந்து ரூபாய் ஆயிரம் பரிசளிக்கிறார் என்பதை அனைவரும் குறிப்பிட்டனர் இந்த அலை நாடெங்கும் ஏன் உலகெங்கும் பரவி இவரது ஊதியத்தை எல்லாம் காலி செய்யுமளவு வளர்ந்தாலும் வளர்ந்து விடும் அப்போது இவர் என்ன செய்வார் என மனதுக்குள்ளேயே எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தேன்.உள்ளூர சிரிப்பு எனது எண்ண அலையில் தவிர்க்க முடியாமல்... ஏன் என்றால் இந்தியாதான் இப்போது உலகின் நெம்பர் ஒன் மக்கள் தொகை நாடாக மாறி விட்டதே...


நன்றி கலந்த வணக்கங்கள்

ஒரு தமிழ் விழாவில் நானும் கலந்து கொள்ளச் செய்தமைக்கு: நன்றி: மூவேந்திர பாண்டியன் மற்றும் செந்தில் முருகன் மற்றும் அனைவர்க்கும்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment