Sunday, March 26, 2023

வாக்காளர் தினம் பற்றி சோனா எப்.எம் பண்பலையில் எனது சிற்றுரை: கவிஞர் தணிகை

 வாக்காளர் தினம் பற்றி சோனா எப்.எம் பண்பலையில் எனது சிற்றுரை: கவிஞர் தணிகை



ஜனவரி: 25 ஒவ்வொரு ஆண்டுமே வாக்களர் தினம் என்று கடைப் பிடிக்கப் படுகிறது. கடந்த வாக்களர் தினத்தில் சேலம் சோனா எப்.எம். எனது சிற்றுரையை அன்றைய தினத்தில் ஒலி பரப்பினர். அந்தப் பதிவை என்னால் இந்த வலைப்பூவில் ஏற்றி காத்து வைக்க போதிய தொழில் நுட்ப அறிவு என்னிடம் இல்லாததாலும், அல்லது அது போன்ற வசதி  படக் காட்சிகளை சேமித்து வைப்பது போல ஒலிப் பதிவை ஏற்றி காத்து வைக்க இல்லாததாலும் அல்லது எனக்குத் தெரியாததாலும் ஆக்கபூர்வமாக நேரத்தை செலவு செய்ய வேண்டி இப்போது இதை நான் பதிவு செய்கிறேன். ஏற்கெனவே கேட்ட எனது நட்புறவுகள் மறுபடியும் படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏதும் இல்லை.

ஊடகங்கள் எப்போதுமே அவரவர்க்குரிய கட்டுப்பாடுகளை வைத்தே தணிக்கை செய்தே எதையும் வெளிப்படுத்துகின்றனர்.

சிலவற்றை மட்டுப் படுத்துகின்றனர், சிலவற்றை வெட்டி விடுகின்றனர், சிலவற்றை வெளியே விடுவதும் இல்லை.

1. அடியேன் வாக்களிக்க அதன் பிரதியாக‌ எப்போதுமே பணம், பொருளை வாங்கி அதற்கு மாற்றாக  வாக்குகளை விற்றதில்லை. எனச் சார்ந்த குடும்பத்தாரும் அப்படித்தான். ( எனது 21 வயது முதல் 61 வரை)

2. பல முறை 49 ஓ என்ற விதியை பயன்படுத்தி வாக்குச் சாவடிக்குச் சென்று மறுப்பு தெரிவித்தும் இருக்கிறேன்.

3. தேர்தல் ஆணையம் செய்யும் மாபெரும் பணி இது.

இது பற்றி நான் பேசியவற்றிலிருந்து நினைவுக்கெட்டிய வரை:

சாக்ரடீஸ் கிரேக்க மேதை கி.மு: 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர். கையில் பகலிலேயே கைவிளக்கேந்தி மனிதரைத் தேடுகிறேன் என்று சுற்றி அலைந்த ஞானி, இளைஞர் பட்டாளத்தை அநீதி, மற்றும் அநியாயத்துக்கு எதிராக திருப்பி எதிர்க்க முனைந்தவர். அன்றைய அரசிடம் இவர் பற்றி அவதூறாக இவர் நாட்டுக்கு எதிராக கலகம் செய்கிறார் என பொய்யுரை பரப்பப் படுகிறது. 

அப்போது அந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என அரச குடும்பம் இவரால் பெரிய அரச துரோகம் ஏதும் இல்லை என முடிவை மக்களுக்கே விட்டு விட ஒரு வாக்கெடுப்பின் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கிறது. இதனிடையே சிறை செய்யப் படும் சாக்ரடீஸை காக்க இவரது ஆதரவு இளைஞர்கள் இரவோடு இரவாக தப்பிக்கலாம் என யோசனை தெரிவிக்கிறது அப்படி ஒன்றும் கடுங்காவல் இல்லை என்றும் ஆளும் வர்க்கம் அப்படி ஒன்றும் பழி வாங்கும் நோக்கில் இல்லை என்றும் சொல்ல, 

வாக்கெடுப்பில் 20 வாக்குகள் அதிகம் இவர் கொல்லப் பட வேண்டும் என விழுந்ததை அடுத்து மாமேதை சாக்ரடீஸ் விஷக் கோப்பை ஏந்தி மக்களின் வாக்களிப்பு மாண்பை மனதில் கொண்டு அதன் விழுமியத்தை உயர்த்திப் பிடிக்க  விஷம் அருந்தி தன்னுயிரை மாய்த்துக் கொள்வதாக வரலாறு.

நமது நாட்டிலேயே கூட முதலில் அனைவர்க்கும் வாக்களிக்க உரிமை அளிக்கப் படவில்லை, படிப்படியாக, படித்தவர்களுக்கு என்றும் அதன் பின் பெண்களுக்கு என்றும் 21 வயது ஆனவர் அதன் பின் 18 வயது நிரம்பியோர் தகுதி படைத்தவர் என்றும் வளர்ந்தது.

ஆரம்பத்தில் பெண்களுக்கு வாக்களிக்க வைக்க ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தப் பட்ட போது பெண்கள் தங்கள் பெயரை, குறிப்பிட்டுக் கொள்ள விரும்பாமல் தமது குடும்பத்தில் தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு இன்னாரின் மகள், அல்லது இன்னாரின் மனைவி என்றே தெரிவித்திருந்த நிலை நிறையக் காணப்பட்டதாக புள்ளி விவரங்கள்  கூறின.

சுகுமார் சென் என்ற தேர்தல் தலைமை ஆணையர் முதல் ஆணையராக இருந்தது, நமது டி.என்.சேசன் போன்றோர் அப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்பதை வெளிக்காண்பிக்க நிறைய செயல்பட்டது அது முதல் தேர்தல் ஆணையம் என்ற அமைப்பின் ஒரு முக்கிய பங்கு வெளிப்பட ஆரம்பித்தது. இப்போது வரை இந்தியா போன்ற பெரிய உப கண்டத்தில் இந்த அமைப்பு சிறப்பாக பணி செய்து தேர்தல்களை மாநில அளவிலும் மத்தியிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

அதனிடையே கிராமப் புற ஊரகப் பகுதிகளில் மற்றவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு கிடைப்பது போல எங்களுக்கு இல்லையே அதனால் அன்றைய தினம் அன்றாடம் கிடைக்கும் கூலி போகிறதே அதனால் அதற்கு மாற்றாக நாங்கள் ஏன் எங்களுக்கு கொடுக்கப் படும் பணம், பொருள் போன்றவற்றை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்புவதை குறிப்பிட வேண்டியே இருக்கிறது.

இதற்கெல்லாம் வளர்ந்து வரும் தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்து மேலும் வாக்குகளின் முக்கியத்துவத்தை வளர்த்து விட வேண்டும். ஏன் எனில் நாட்டில் ஊரக பகுதிகளில் உள்ளாரே பெரும்பாலும் தவறாமல் வாக்களிக்கிறார்கள் நகர் புறம் சார்ந்தாரை விட...மேலும் நகர் புறம் சார்ந்த மேட்டுக் குடி மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை என்ற செய்திகளும் உண்டு.

ALL PARTY PARTICIPATION :

எல்லாக் கட்சியினரும் மக்களுக்கு நல்லாட்சி, நல்லரசைத் தர வேண்டும் என்ற நோக்கத்துடனேயே கட்சியை ஆரம்பித்து நடந்தி வருவதால் ஏன் ஆட்சியில் விகிதாச்சார முறை கொண்டு வந்து செய்யக் கூடாது? அதாவது வேட்பாளர் நிறுத்துவதற்கு மாறாக ஒரு கட்சிக்கு எவ்வளவு வாக்களிக்கப் பட்டுள்ளது என்ற அதன் அடிப்படையில் அவரவர் கட்சியின் பிரதிநிதிகளை நியமித்து அனைவரையும் சேர்த்து ஏன் அமைச்சரவை , மக்கள் மாமன்றங்களில் பங்கெடுத்து சேவையாக‌ அரசியல் செய்யக் கூடாது அதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் கையில் எடுக்க வேண்டிய காலம் கனிந்து விட்டது அதன்படி செய்தால் அது மக்களுக்கு நல்லது செய்யும் தேர்தல் ஆணையப் பணியாக குறிப்பிடும்படியாக இருக்கும் என்பதை வெகு நாட்களுக்கும் முன்பே எனது அன்பு சகோதர நண்பர் சமூக மேம்பாட்டு சிற்பி கொ.வேலாயுதமும் அடியேனும் ஜனநாயக மறு சீரமைப்பு என்ற சிற்றிதழில் காந்தி படத்துடன் வெளியிட்டோம்.

RE CALLING POWER

மேலும் சரியாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமையை பயன்படுத்தி திரும்பவும் அவருக்கு மாறாக நன்றாக செயல்படும் பிரதிநிதியை அனுப்பவும் அமைப்பு முறையில் உறுதிப் படுத்த வேண்டிய தேர்தல் முறையை ஏற்படுத்த வேண்டும் அது இந்த அறிவியல் சார்ந்த காலத்தில் கடினமான காரியமல்ல என்பதையும் குறிப்பிட்டேன்.

மறைந்த எழுத்தாளர், அறிவியல் அறிஞர்: சுஜாதா ரங்கராஜன் வாக்களிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய குழுவுக்கு தலைமையாக இருந்து இந்த நாட்டில் இப்போது நடப்பில் இருக்கும் வாக்களிக்கும் முறைக்கு தமது வாழ்நாளின் மாபெரும் சாதனையை செய்ய காரணமாக இருந்திருக்கிறார் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்

ஒரு முறை சட்ட மன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ஆகி இருந்தாலுமே அவருக்கு வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் தருவது அல்லது ஊதியம் கொடுப்பது சரிதானா என்பவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுவதுடன் சேவை என்று வரும் அனைத்து மக்கள் பிரதி நிதிகளுக்கும் பராமரிப்பு செலவுக்கு என்று உண்மையான செலவினங்களை ஏற்கலாம் ( அதாவது தகவல் தொடர்புக்கு, போக்குவரத்துக்கு, தங்குவது, உண்பது அவசியமான கூட்டம் போன்றவற்றுக்கு) அதற்காக ஒரு பெரும் தொகையை அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ஊதியமாக தருவது போல தந்து மக்களின் பணத்தை செலவு செய்யத்தான் வேண்டுமா?

அதைப் பற்றி எல்லாம் ஆலோசிக்க வேண்டும்... தேர்தல் ஆணையம் என்றெல்லாம் குறிப்பிட்டேன். எனினும் அவை ஒலிபரப்பில் தணிக்கையில் வெளித் தெரிய வரவில்லை.

மேலும் இந்த நாட்டில் ஆக்ஸ்பார்ம் என்ற உலகளாவிய நிறுவனம் ஏறத்தாழ 40 சதவீத செல்வ வளம் யாவும் 1 சதவீதம் பேர் கையிலும் கீழ் உள்ளோர் 40 முதல் 50 சதவீத மக்களின் செல்வ வளம் சொல்லத் தரமில்லாமல் இழிந்து போய்க் கொண்டிருப்பதாகவும் பணம் படைத்தார் மேலும் பணம் சேர்த்தும், நலிவடைந்தார் மேலும் நலிவு பெற்று வருவதுமான சூழல் நிலவி வருவதைக் குறிப்பிட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் பணி மூலம் தான் இது போன்ற இடைவெளிகள் சீர் செய்யப் பட்டாக வேண்டும்...வேறு மார்க்கம் இருப்பதாக கைக்கருகே தற்போதைக்கு தெரியவில்லை.

இது பற்றி பொருளாதார அமைப்பு இந்தியா என்பது பற்றி நாங்கள் எங்களுக்கு அளிக்கப் பட்ட ஒரு பயிற்சியின் போது 1980களிலேயே அறிந்திருந்தும் இப்போது ஆண்டுகள் 43 ஆண்டுக்கும் மேல் ஆகியும் ஏதும் செய்ய வழியில்லாமல் அப்படியே போய்க் கொண்டிருக்கிறது.

உத்திரமேரூர் சோழர் கால கல்வெட்டில் குடவோலை முறை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.யார் யார் வேட்பாளராக நிற்பது என்பது பற்றி எல்லாம் அதை விட முக்கியமாக இந்தக் களத்தில் வருவார் இலஞ்சம் ஊழல் ஏதாவது செய்தார் எனில் அவர் குடும்பம், குலம் ஏதுமே அரசுப் பணிகளில் மக்கள் பணிகளில், ஈடுபடக் கூடாது, முடியாது என்பதும், அவர்கள் வேட்பாளர்களாக முடியாது என்றும் தெளிவுபடக் கூறி இருக்கின்றனர் அப்போதே...நாம் அவற்றை எல்லாம் கையில் எடுப்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கு அவசியமான மைல்கற்களாய் இருக்கும்.

மற்றபடி வாக்களிக்க நல்ல வசதி வாய்ப்புகளை நேரம் காலம் கருதி செய்வதில் எல்லாம் தேர்தல் ஆணையத்தை குறை சொல்வது போல இல்லாமல் நல்ல ஏற்பாடுகளை செய்து வருகிறது எனவே அனைவரும் பங்கெடுத்து மதிப்புணர்ந்து வாக்களித்து ஒரு நல்லாட்சியை நல்லரசை அமைப்பது மக்கள் ஒவ்வொருவர் கடமையாகவே காலம் காலமாக இருந்து வருகிறது. இனியும் அப்படித்தான் இருக்கப் போகிறது.விழித்தெழுக என்றார் விவேகானந்தர், 2020 கனவு என்றார் கலாம்...ஒன்றும் நடக்கவில்லை. மக்களே விழித்துக் கொள்ளுங்கள், பசித்திரு தனித்திரு விழித்திரு என்பார் இராமலிங்கர். இந்த 3 பதங்களில் உள்ள முதல் எழுத்தை சேருங்கள் அது ப த வி . அபிராம பட்டர் 16 செல்வங்களுள் ஒன்றாய் கோணாத கோல் என்கிறார். குறள் ஆட்சி, அரசு பற்றி நிறைய சொல்லி இருக்கிறது. படிக்க வேண்டுமல்லவா? காபி கடைக்கு போனது போல நமது மனிதர்கள் மதுக்கடைக்கு போகும் நிலை வந்து விட்டதோ என எண்ணும்படியாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்க நமது ஜனநாயகத்தை யார் தான் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை எடுத்துக் கொள்வது?

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.









No comments:

Post a Comment