Friday, June 10, 2022

நான் ஏன் எழுதுவதை மறுத்து வருகிறேன்?: கவிஞர் தணிகை




ஏன் இந்த இடைவெளி எதற்கு இந்த இடவெளி....


எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே: தாயுமானவர்.



எழுத ஏராளமான சம்பவங்களும் நிகழ்வுகளும் காலப் போக்கில் நடந்தேறி வருகின்றன உலகிலும், ஊரிலும், நட்பிலும் உறவிலும் வீட்டிலும் அரசு அலுவலகங்களிலும் குணம் மாறாத அலுவலர்களிடமும்.கால் போன போக்கில் எல்லாவற்றையும் எழுதி விட முடியாது, முடிவதில்லை. அப்படி எழுதும் எழுத்துகளால் என்ன என்ன விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்ற காரணம் கருதியே அந்த எழுத்துகளும், எண்ணங்களும் பின்னுக்குத் தள்ளப் பட்டு காலம் முன்னேறி சென்று விடுகிறது.


முன்பெல்லாம் எல்லாவற்றையும் எழுதி விடுவேன்... ஆனால் இப்போதோ எழுதும் முன் அதை வெளியிடும் முன் பதிவு செய்யும் முன் பல முறை யோசித்தே தள்ளி விடுகிறேன்.


பெரியார் போல எழுதாதே, அறிஞர் அண்ணா போல எழுது என்று ஒரு கலைஞர் கூறினார்


எழுத்து அதைப் படிப்பாரிடம் என்ன எப்படி விளைவு ஏற்படுத்தும் என முன் கூட்டியே தெரிந்த தொலைநோக்குடன் எழுதுங்கள் என்றார் ஒரு பேராசிரியர் நண்பர்.



கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ?....பாரதி

யாரிடம் குறையில்லை யாரிடம் நிறையில்லை...என்று பார்த்தால்...

எல்லோரிடமுமே குறை நிறைகள் காணப்படுகின்றன. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..

தவறே செய்யாதார் யார்? மகாத்மாக்கள் கூட தங்கள் தவறுகளிலிருந்து மீண்டவர்களே...

தவறு குறைவாகச் செய்பவர், அதிகமாகச் செய்பவர் என்று வேண்டுமானால் கணிப்பு செய்து கொள்ளலாம். நாடும், அரசும், மக்களும் அலுவலகங்களும், அலுவலர்களும் அனைவரையும் தவறு செய்யவே குற்றம் இழைக்கவே நிர்பந்திக்கிறார்கள்.


கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் கூட ஏற்றுக் கொள்ள முடியாமை, பரந்த மனப்பான்மை இல்லாமல் தற்பெருமையும், குறுங்குழுவாதமுமான மனிதர்கள்... எனவே... உலகின் போக்கு சற்றும் வளையாதது அது நாய் வாலாகவே என்றும்...

ஒரு தனி மனிதரைக் கூட ஒரு அறப்பணிக்குள் முழுதாக கொணர்வது என்பது கேள்விக்குறிதான். அவராக மாறினால் அன்றி...திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...பட்டுக் கோட்டை



குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்

மிகை நாடி மிக்க கொளல்...


ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால், எழுதினால் இன்னொருவர் கோபித்துக் கொள்வாரே என்ற தயக்கம் அதனால் அவரால் ஒருவேளை வந்து சேரவேண்டிய கிடைக்க வேண்டிய பயன், பலன் கிடைக்காமல் அவர் தடுத்து விடுவாரோ என்ற தயக்கம்


உண்மையை அப்படியே எழுதினாலே வம்பு வந்து சேருமே என்ற தயக்கம்


நடந்த சோகத்தை அப்படியே எழுதினால் அதிலும் ஏதாவது முரண், காயம் விளைந்திடுமோ என்ற தயக்கம்

இலஞ்ச இலாவண்ய ஊழலைப் பற்றி எழுதினால் இவனுக்கு இதைத் தவிர வேலை இல்லை என்ற எதிர்ப்பு

மது, போதை, புகை பற்றி எழுதினால் அரசும் அதன் நுகர்வோரிடம் வந்து சேரும் எதிர்ப்பு,40 ஆண்டுக்கும் மேலாக எழுதி, பேசி என்ன கிழித்து விட்டோம் என்ற தோல்வி மனப்பாங்கு,

உக்ரேன், ரஷியா போர், இந்து மத சிவலிங்கம், முகமதிய முகமது நபி இப்படி உலகளாவிய பிரச்சனை,

உணவுக் கலப்படம் சிறு பெண் வன்புணர்ச்சி, கற்பழிப்பை விடக் கொடுமையானது அது பற்றி எனக்கு ஏதாவது கருத்தளியுங்கள் என்ற நண்பரின் வேண்டல், அமெரிக்க மைனர்களின் துப்பாக்கி கலாச்சாரம், நல்ல சினிமா...நல்ல புத்தகம், நற்பணிகள்.....



நண்பா எனது தொடுதிரைக் கைபேசியை நாளுக்கொரு முறை உள்ளக வைப்பை சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்துக்கு உள்ளாக்கி உள்ளாய் அத்தனை குழுக்கள், அத்தனை உள்ளீடுகள்... பதிவேற்றமே இல்லாமல் போனாலும் 80 முதல் 90 சதம் அவை செயலி முடுக்கம் செயல் முடக்கத்தில்...




தற்புகழ்ச்சிக்காக எழுதல், தம் திறம் போற்றி எழுதல், பேசுதல் பொருள் பலமே வாழ்க்கை என்ற பேச்சு, எழுதல்

தமை வெளிப்படுத்திக் கொள்ள எழுதல், பேசல், இதை எல்லாம் விட்டு விட்டு


சிறிது காலமாக நான் சந்தித்த நல்ல நண்பர்கள் சிலர் பற்றி அவர்கள் வாழும்போதே சொல்லி விட நினைத்தவாறே இருக்கிறேன் எழுதாமல்...எழுத வேண்டுமே என்று நினைத்தபடியே...


சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானியரும்

புத்தரும் யேசுவும் உத்தமராம் காந்தியும் 

எத்தனையோ உண்மைகளை எழுதி 

எழுதி வைச்சாங்க...


எல்லாந்தான் படிச்சீங்க‌

என்ன பண்ணிக் கிழிச்சீங்க...

மறுபடியும் அதே பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.


இராமலிங்க வள்ளலார், வள்ளுவர் இப்படி யார் வந்த போதும்

அது 

கடைவிரித்தேன் கொள்வாரில்லை

கடையை கட்டிக் கொண்டேன் என்பதே.. 

கடைசிச் செய்தியாக...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



பி.கு: விக்ரம், டான், நயன் தாரா விக்னேஷ் சிவன் நாட்டு நடப்பின் தலைப்புச் செய்திகள்...


https://www.youtube.com/watch?v=zFZ_rxpx14k









No comments:

Post a Comment