Wednesday, January 2, 2019

சிறந்த சமூக செயல்பாட்டாளர் விருது: கவிஞர் தணிகை

சிறந்த சமூக செயல்பாட்டாளர் விருது: கவிஞர் தணிகை
No automatic alt text available.


2019 ஜனவரி முதல் நாள், நாமக்கல் பிரியா டவர்ஸ் உணவு மற்றும் தங்கும் விடுதி மாலை 5 மணிக்கு விடியல் நண்பர்கள் சு. தணிகாசலம் என்ற எனக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கினார்கள்.
அந்த தருணத்தில் எனது உளக்கிடக்கையை பகிர்ந்து கொள்ள முனைந்தேன்.

நாமக்கல்: என் வாழ்வில்  சில நேரங்களில் முக்கியமாகிவிடுகிறது.நண்பர் குகனை செருக்களை புதுப்பாளையம் என்ற கிராமத்தில் சென்று அவர் வீட்டில் சில முறை தங்கி இருக்கிறேன்..

தங்கையை நாமக்கல் ஆசிரியர் பயிற்சிப் பணியில் இரண்டாண்டு பயிற்சியில் சேர்த்து விட்டு நண்பர் குகனுடன் சேர்ந்து வைதேகி காத்திருந்தாள் அப்போது மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த படம் பார்த்தது

தாயும் நானும் ஒரு முறை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல சென்று வந்தது...

ஏன் எல்லாவற்றையும் விட நான் சேலம் நேருயுவக் கேந்திராவில் தேசிய சேவைத் தொண்டராக சேவை புரிந்த போது அப்போது நாமக்கல் உள்ளடங்கிய சேலம் மாவட்டத்தில் இது நடந்தது 1983 அல்லது 1984ல் இருக்கலாம்...காவிரிக்கரையின் கீழ் சாத்தம்பூர் என்ற ஊரில் 15 நாள் பணி முகாம் நடத்தி அந்த ஊருக்கு இளையோரைக்கொண்டு மத்திய அரசின் திட்டப்பணியுடன் ஒரு இணைப்புச் சாலை அமைத்துக் கொடுத்தது..

காலை பணி முகாம், மதிய உணவுக்குப் பின் மாலை முழுதும் பேச்சுப் போட்டிகள், கருத்தரங்கம், கவியரங்கம், பட்டி மண்டபங்கள் பாட்டரங்கங்கள் என நடத்தியது... இப்படி சொல்லச் சொல்ல இங்கு இருக்கும் அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகும். அதற்கு மேல் சொல்வதென்றால்.. நாமக்கல் கோட்டை மேல் ஒரு முறை ஏறிப் பார்த்த நினவையும் சொல்லலாம்..

மேலும் நாமக்கல் கவிஞரின் " கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என அஹிம்சைப் போர் குறித்து இந்தியச் சுதந்திரப் போர் காந்தி தலைமை குறித்து கவிஞர் பாட அது காந்திக்கு பிடித்த பாடலாக ...இப்படி எத்தனை தான் நாமக்கல் என்னுடன் இணைந்த நினைவுகளுடன்...இப்போது அங்கே எனக்கு சிறந்த சமூக சேவகர் என்ற விருதும்...

இந்த விருது நான் கல்ராயன் மலையில் பணி புரிந்தபோது எனது உதவியாளராக முதல் அமைப்பாளராக விளங்கிய தற்போது விண்ணகப்பதவியில் இருக்கும் இலட்சுமணன்...

ஒரு முறை இவரும் நானும் சேலம் கல்ராயன் மலையில் இருக்கும் முடவன்கோயில் குக்கிராமத்தில் இருந்து தென் ஆற்காடு மாவட்ட எல்லையில் இருக்கும் சேத்தூர் கிராமத்துக்கு செல்ல முனைகிறோம். ஆனால் இடையில் ஒரு சிறு நதி. வெள்ளம். மழைக்காலம் எனக்கு நீச்சல் தெரியாது. தம்பி இலட்சுமணனுக்கு நீச்சல் தெரியுமா  தெரியாதா என்பதும் இப்போது என் நினைவில் இல்லை.

என்ன துணிச்சல் எப்படி வந்ததோ, இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஆற்றின் குறுக்கே கடந்து சென்றோம். இப்போது நினைத்தாலும் மயிர்க்கூச்செறியும் சம்பவம் அது...சாவின் விளிம்பில் நின்றே விளையாடி இருக்கிறேன்.

இப்போது துணை வந்த அவன் இல்லை... இவன் போன்ற களப்பணியாளர்களுக்கும், உயிரை ஈந்த மனிதர்களுக்கும் இந்த உலகு என்ன செய்து விடப்போகிறது?...யார் அவர் மேல் எல்லாம் கவனம் செலுத்த இந்த நாட்டில் இருக்கிறார்கள்...ஏன் நானே என்னால் கூட அவர் தம்குடும்பத்துக்கு ஏதும் செய்ய முடியவில்லையே...

அது மட்டுமல்ல எத்தனையோ முறை களப்பணி என இரவு நேரத்தில் காடு மலை கடந்து செல்வோம் ஒற்றையடிப்பாதை புதர்களில் எல்லாம்...இரவின் நடந்தால் அதிகம் கால்கள் சோர்வடையாது என அந்த நேரத்தை அதிகம் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்தை அடைய பயன்படுத்திக் கொள்வோம். அப்போது ஒரு கிராமத்தின் வாயிலில் நுழையும் முன்பே ஒரு மூங்கில் குச்சுகள் போன்றவற்றால் ஆடு மாடு உள் நுழையக்கூடாது என கழிகளைக் கட்டி வைத்திருப்பார்கள்...அதை தாண்டித்தான் நாம் மனிதர்கள் அந்தக் கிராமத்தில் நுழையவே முடியும்..சமயத்தில் பார்த்தால் ஒரு முறை காலைத் தூக்கி வைக்க எத்தனிக்கும்போது அதில் நீளமாக பாம்பு படுத்திருக்கக் கண்டு சுதாரித்துக் கொண்டேன்

மலை வாழ் இளைஞர்கள் நம்மைத்தான் முதலில் நடந்து செல்ல அனுமதித்து அவர்கள் நமது பின் தான் வருவது வழக்கம். எனவே எது நடந்தாலும் கேப்டன் தாம் முதலில் அனுபவிக்க வேண்டும்.

அது போல ஒரு முறை எனது சரும வியாதிக்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் இலை பறிக்க கையை அந்த செடியில் வைக்க அதிலிருந்த பாம்பு புறப்பட்டது...அந்த இலை இருந்த இடம் நீர் விநியோகத்திற்காக தேக்கி வைக்கும் பெரிய தொட்டி ஒரு சிறு குன்றின் மேல் இருக்கும் இடம், மேலும் அது போன்ற நல்ல நீர்வளம் உள்ள இடத்தில் தான் இந்த செடியும் அதன் இலைகளும் செழிப்பாக வளரும்...

இப்படி அப்போதெல்லாம் என்னுடன் பயணம் செய்த இலட்சுமணன்,
எனது மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டப்பணிகளில் என்னுடன் இயைந்து ஒத்துழைத்த எனது அன்புச் சகோதர நண்பர் கொ.வேலாயுதத்துக்கு  அப்போது அவர் சேலம் மாவட்ட நேருயுவக்கேந்திராவின் ஒருங்கிணைப்பாளர் அதே போல அவரது பணிகளில் நானும் ஒத்துழைப்பேன் இருவரும் இணைந்திருப்பது போன்றும் இணைகோடு போன்றும் பயணம் செய்து கொண்டே இருப்போம் அவருக்கு...

இது போன்ற வாய்ப்புகளை நல்கும் கருணாநிதிகளுக்கு...

இந்த நாட்டின் பெயர் தெரியாமலே பெயர் வெளி வராமலே உதிர்ந்து போன எண்ணற்ற சுதந்திரப் போராட்ட தியாக மறவர்களுக்கு அனைவர்க்கும் அர்ப்பணிப்பாகும்.

மேலும் நிறைய நிறைய சொல்ல ...

கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை

2 comments: