இந்தியன் ~ ரியல் : அத்தியாயம் இரண்டு
மக்களுக்கு மிக அண்மையில் உள்ள அரசமைப்பு. உள்ளாட்சித் துறை.1986ல் அவனது தந்தை திடீர் மறைவு 65 ஆம் வயதுடன்.இறப்புச் சான்றிதழ் பதியச் சென்றான். எதற்கிந்த அவசரம் என்றார் அந்த இருக்கையை கவனித்த அலுவலர். இந்த இந்திய அரசில் ஒரு பக்கம் மக்கள் பிரதிநிதிகள் சக்தி படைத்தவர்களாகவும் அந்த அலுவலகங்களில் பணி புரியும் ஊதியம் வாங்கும் அலுவலர்கள் அரசின் நியமனங்களாகவும் அவர்களும் சக்தி படைத்தவர்களாகவும் இரு குதிரையேற்றம் எப்போதுமே. அவர்கள் கரங்கள் சேரும்போது(தான்) மக்களுக்கு ஏதாவது விளைவுகள் இருக்கும்.
வரையறுக்கப் பட்ட நாட்களுக்குள் சென்றால் ஏன் அவசரம் என்பார்கள், தாமதமாகச் சென்றால் ஏன் இந்த தாமதம் என்பார்கள். இப்படி ஏதாவது சொல்லி மக்களைக் குற்றவாளிகளாகவும் (குற்றவாளிகள் என்பது சற்று தடித்த வார்த்தைதான் அதை தவறிழைப்பவர்களாகவும் எடுத்துக் கொள்ளலாம்)அவர்கள் தயவுடன் மட்டுமே வாழ வேண்டிய நிர்பந்தத்தையும் புரிய வைத்து விடுகிறார்கள்.அதனால் மக்கள் யாவரும் ....
சுருங்கச் சொல்லி விடுகிறேன். உரியவாறு எல்லா ஆவணங்களும் அளிக்கப் பட்டு அளிக்கப் பட்டு என்பது கூட சரியான வார்த்தை அல்ல சமர்ப்பிக்கப் பட்டு இறந்த தந்தையின் பேரில் இருந்த வீட்டு வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தாயின் பேருக்கு மாற்றம் செய்யக் கோரினான் அவன்.மாதங்கள் பல, அல்லது வருடங்கள் சில சென்றன. நிலை அப்படியே இருந்தது. ஒரு பதிலும் இல்லாமல். மாற்றப் படவும் இல்லை அவர்கள் எதிர்பார்த்த கேட்காத கையூட்டும் கொடுக்கப் படவில்லை.
சில பல முறை முயன்று ஏன் அந்த பெயர் மாற்றம் செய்யப்பட வில்லை என்று கேட்டு விட்டு, இனி கட்டணங்கள், வரிகளை கட்ட மாட்டேன் தாயின் பேருக்கு மாற்றித் தர வில்லை என்றால் என இவன் சொல்லிக் கேட்டதைக் கண்டு வரித் தண்டலர்கள் மற்றும் அலுவலர்கள் இவனது வீட்டு குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதாக வந்து விட்டார்கள்.
இது ஏதடா வம்பு? கிணறு வெட்ட பூதம் அது அந்த ஐம்பூதம் அல்ல, மனித பூதங்கள், அரசின் பூச்சாண்டி பூதங்கள். வந்து விட்டனவே என...எல்லா வரிகளையும் உடனே செலுத்தி விட்டு...அன்றைய முதல்வர் அந்த பெண்மணிக்கு அப்போதெல்லாம் தட்டச்சு இயந்திரம் மட்டுமே அவனிடம் இருந்த படியால் ஆங்கிலத் தட்டச்சு எந்திரம் என்பதால் ஆங்கிலத்தில் ஒரு வயதான முதிய வயது விதவைத் தாய்க்கு உங்கள் ஆட்சி அதிகாரம் செய்வது பாரீர் என்ற ஒரு வரைவை அனுப்ப...
இவனறியாமலே விளைந்தது நற்புரட்சி. அந்த அம்மையாரின் ஆணைக்கிணங்க அந்த அலுவலகமே மாறுதலுக்கு உள்ளானது அதில் இருந்தோர் அனைவருமே வெவ்வேறு இடங்களுக்கு மாறுதல் ஆனார்கள். தலைமைப் பொறுப்பு அலுவலர் தம் வேலையின் கடைசி நாளில் இடை நீக்கம் செய்யப் பட்டார். அப்போதெல்லாம் அப்படி ஒரு பழக்கம் இருந்தது. இப்போது எப்படி எனத் தெரியவில்லை.
அதை அடுத்த வந்து பொறுப்பேற்ற அலுவலர், இவன் அவரை சந்தித்த வேளையில் பழசையெல்லாம் கேட்காதீர், உரிய கட்டணத்தை செலுத்தி நீங்கள் கோரிய பெயர் மாறுதலை பெற்றுச் செல்வீர் எனச் செயல்படுத்தி வைத்தார். ஆனால் அதற்குள் ஆன கால அளவும் வேதனையும் இங்கு சொல்ல முடியாததுதான்.
ஒன்று சட்டத்தை, கொடுப்பதுவும், வாங்குவதுவும் குற்றம் என்பதை கடைப் பிடிக்க வேண்டும். அல்லது கொடுப்பதுவும் பெறுவதும் சரிதான் என அந்த நடைமுறையில் இருப்பதாகச் சொல்லப் படும் வெறும் ஏட்டளவிலும் எழுத்தளவிலும் இருக்கும் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் அரசமைப்பிலிருந்தே அப்புறப்படுத்தி விட வேண்டும். அல்லது அதை அலுவலக முறைப்படுத்தி எந்த எந்த பணிக்கு எவ்வளவு கொடுப்பது பெறலாம் என்பதை சட்டமாகவே ஆக்கி விட வேண்டும். அப்போது இந்த தேவையற்ற குழப்பங்கள் எல்லாம் குறையும். மறைய வாய்ப்புண்டு.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment