பச்சைக் கறிவேப்பிலை காலையில் உண்போரின் கவனத்திற்கு, ஒவ்வொரு உடலும் ஒரு தனி உலகம்: கவிஞர் தணிகை
தமிழருவி மணியன் அவர்களின் துணைவியார் இருதய அடைப்பு காரணமாக வெளியிட்டிருந்த காணொளியைக் கண்டுவிட்டு அதன் தொடர்பாக அடியேனும் இனி அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை உண்பதாகக் குறிப்பிட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதன் பின் விளைவாக தொப்பூள்...வயிற்றின் மையப்பகுதியில் சூடு தோன்றி பிரச்சனை ஆரம்பித்து விட்டது.உஷ்ண மின்னல் கீற்றுகள் அவ்வப்போது இறங்க ஆரம்பித்தன தொப்பூள் மையத்திலிருந்து ஆண் குறி வரை...எனவே முன்னதாக விழித்துக் கொண்டு அப்படி உண்பதைக் கைவிட்டதால் இந்த சில நாட்களாக அந்த உடல் சூடு கோளாறு சொல்லாமல் கொள்ளாமல் மறைந்தது. நீர் போதாமை, இந்த நாட்களின் அதிக புவிச் சூடு போன்றவையும் காரணமாக இருப்பினும் அவற்றின் விளைவு எல்லாம் வேறு தினுசு, இது வேறு இரகம்.இதை எல்லாம் புரிந்து கொள்ள முனைவது அவசியம்.
பைபாஸ் சர்ஜரி, வால்வு, பெரும் செலவு பற்றியும், இரு சித்த மருத்துவர்கள் மூலம் துணைவியாரின் இருதயக் கோளாறு பிரச்சனையை செலவின்றி வென்று எடுத்த மகிழ்வையும் தமிழருவி மணியன் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது காலையில் கறிவேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு உண்பது புத்துணர்வூட்டி, நரம்புகளுக்கு புத்துணர்வு அளிக்கிறது என்று சொன்னதன் உந்துதல் பேரில் நல்லதென அடியேனும் முயன்றேன்.
ஆனால் ஒவ்வொரு உடலும் ஒரு தனி உலகம் அதை நாம் கவனித்துக் கற்க வேண்டும்.பொதுவாக ஹோமியோ,சித்தா போன்றவற்றில் பக்க விளைவு இல்லை என்பார். ஆனால் மூலிகை வைத்தியத்தில் பக்க விளைவு உண்டு என்பதை இந்தக் கறிவேப்பிலை பரிசோனையில் இருந்து கூட நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் கொழுப்பு சார்ந்த தன்மை கொண்ட உடலுக்கு வேண்டுமானால் அந்த மருத்துவம் பயன்படலாம். ஆனால் அவை இல்லாத குடற் புண் போன்றவை உள்ள என் போன்றோர்க்கு எதையுமே சோதனை செய்து பார்த்து தான் பயன்படுத்த வேண்டும்.
மேலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை எந்நிலையிலும் நாம் மறப்பதற்கில்லை. காந்தியம் கற்ற காலச் சூழலில் ஒரு கைப்பிடி வேப்பிலை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு குடற் புண் பெற்றதும் என் நினைவில் நிழலாட்டம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment