அயோத்தி : தமிழ் திரைப்படம்: கவிஞர் தணிகை
அயோத்தி என்றாலே பிரச்சனைக்குரிய எல்லைகளைத் தொடுவது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். எனவேதான் அயோத்தி என்ற தமிழ் திரைப்படம் பார்த்த பாதிப்பு இன்னும் அடங்காததை உங்கள் முன் எடுத்து வைக்கிறேன் நமது மொழியும் சாத்வீகம் தான் என்பதற்காக தமிழ் திரைப்படம் என்பதையும் சேர்த்தே தலைப்பில் இணைத்து விட்டேன்.
கொண்டவளைக் கஷ்டப்படுத்திய கதை அயோத்தியில் நடந்ததை இராமாயணம் சொல்வது
அயோத்தி இராமர் கோயில் பிரச்சனை எந்தளவு நாட்டை நாட்டு மாந்தரை பிரிவினைக்குள்ளாக்கியது என்பதெல்லாம் காலச் செய்திகளை பார்த்து வருவார்க்கு தெரிந்ததே.
மந்திர மூர்த்தி என்னும் புதிய இயக்குனர் இசை ரகுநாதன் தயாரிப்பாளர் ரவீந்தரன் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ், மாதேஸ் மாணிக்கம் ஒளிப்பதிவு என்றும் சன் லோகேஷ் என்பவர் எடிட்டிங் என்றும் இந்தப் படம் மார்ச் 8.2023ல் வெளிவந்தது என்றும் குறிப்புகள் இருக்கின்றன.ஜனவரி பொங்கல் வெளியீடாக வரவிருந்த படம் தாமதமாக வெளிவந்ததாம்.
எத்தனை பேர் பார்த்திருப்பீர் எனத் தெரியவில்லை.
பார்க்க வேண்டும் என்று(ம்) மத நல்லிணக்கம் வேண்டுவோர்.
சினிமாவை அழவைப்பதற்கென்று எடுப்பார் சிலர் உண்டு. அப்படி எடுக்கப் பட்ட படம். இதைப் பற்றி திரை உலகம் மறந்து போயிருக்கலாம்.
அழாமல் பார்க்க இயலவில்லை.
மிகவும் கடினமான பொருளை கையாண்டிருக்கிறார் இயக்குனர். எந்த துணிச்சலுடன் எடுத்தார் என்றே தெரியவில்லை. சொல்லாமல் விட்டால் நீங்கள் பார்க்காமல் விட்டு விடுவீர், சொன்னாலும் பார்க்காமல் விட்டு விட்டால் என்ன செய்வது என சொல்லியும் சொல்லாமால் விடுகிறேன். ஆனாலும் சொல்லித் தான் ஆகவேண்டும் இல்லையேல் எனக்கு நானே துரோகம் செய்தவனாவேன். எனவே சொல்லி விடுகிறேன்.
படத்தின் நாயகன் அப்துல் மாலிக் தனது பேரை பல்ராம் என்னும் சமய வேள்விகளில் மூழ்கிப் போய் எதுமறியாமல் வெறும் மதப் பற்றில் மூழ்கி குடும்பத்தை வருத்தி வாழ்ந்து கெட்ட மனிதர்க்கு அவர் அன்பால் நெகிழ்ந்து திருந்தி கடைசியாக கேட்டறியும் நிலையில் இருப்பதால் தன் பேரை சொல்கிறார்.
அடடா! அதற்குள் தான் எத்தனை வேதனை?
அயோத்தி என்ற இடத்தில் இருந்து ஒரு தமிழ் மொழி தெரியாத ஒரு குடும்பம் தரிசனத்துக்காக அல்லது ஒரு புனித பயணத்திற்காக இராமேஸ்வரம் வருகிறது. அயோத்தி டு ராமேஸ்வரம் என்றும் சொல்லி இருக்கலாம். அல்லது ராமேஸ்வரம் என்று கூட பேர் சொல்லி இருக்கலாம். அயோத்தி என்று பேர் வைத்து அந்த பேருடன் ஒரு நடந்த கதையை எள்ளி நகையாடி இருக்கிறார் இயக்குனர் துணிச்சலுடன்.அயோத்தீ எனையும் பற்றிக் கொண்டது
அப்துல் மாலிக் சசிகுமார், பல்ராம் என்பாராக யஷ்பால் ஷர்மா , ப்ரீத்தி அஸ்ரானி என்னும் நடிகை ஷிவானியாக வாழ்ந்து நம்மை எல்லாம் உருக வைத்திருக்கிறார் படத்தை நகர்த்தும் அச்சாணியாக இருக்கிறார் என்னதான் நமது சசிக்குமார் ஹீரோவாக இருந்த போதும். ஆனால் சசிக்குமாருக்கு இது ஒரு மைல் கல்லான படம். பசங்க எப்படி சமுத்திரக்கனிக்கு ஒரு உயர்வைக் கொடுத்ததோ அப்படி இதுவும் இருக்கும்.ஆனால் இந்தப் படம் திரை உலகில் எப்படி வரவேற்கப்பட்டது? வசூல் வெற்றியா என்பதெல்லாம் தெரியவில்லை.
அஞ்சு அஸ்ராணி என்பவர் ஜானகியாக சிறிது நேரமே வந்து ஷிவானிக்கும் அவள் தம்பி சோனு(அத்வைத் வினோத்) ஆகியோரின் தாயாகி உயிருடன் இருந்து நமையும் ஒரு நல்ல தாயாக வசீகரித்து இறந்து அதன் பின் கதைக்களத்தின் நாயகியாகி நிற்கிறார்.
ஜானகி என்ற பேரில் ஆங்கிலத்தில் எழுதும் போது வரும் எழுத்து மாற்றங்கள் ஒவ்வொரு சான்றிதழிலும் வேறு ஆக இருக்கும் போது நமது நாட்டு சீரிய தன்மை பற்றி பேசும் போது அது பார்ப்போரிடம் பெரும் தொடர்பை ஏற்படுத்தி விடுகிறது அது சினிமாக் கதை அல்ல நிஜமான நடைமுறையில் உள்ள போக்கு என்று...(இறந்தவர்க்கு பேரில் எந்த எழுத்து மாறினால் என்று ஒரு நியாயம் ஆனால் அரசு ஏற்றுக் கொள்ளாதே...ஆனால் அரசுதானே அந்த சான்றுகளைக் கொடுக்கிறது அப்போது அவை யார் தவறுகள்?இப்படிப் பட்ட விவாதப் போக்கு நீண்டு கொண்டே போகும்...வேண்டாம் விட்டு விடுவோம்...)
இது போன்ற கதையை எடுத்து பொதுவாக சினிமாவாக்க நிறைய இயக்குனர்கள் பெரிதும் விரும்பாத களம். ஆனால் இதுவே நாட்டின் யதார்த்தமாக நடைபெறும் செயல்பாடு என்பதை நிதர்சனமாக அப்பட்டமாக காட்டி இருக்கிறார்கள்.
யாரும் அறிமுகமற்ற ஒரு இடத்தில் விபத்தாகவோ அல்லது வேறு இயல்பாகவே கூட ஒரு உயிர் போய்விட்டால் அந்த உடலை இறுதிச் சடங்கு செய்வதற்குள் எத்தனை எத்தனை துயரத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றனர்.
அதையும் ஏற்று இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்னும் சொல்லும்படியான உண்மை மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை, அவர்களை எந்த மதமும் பிரிப்பதில்லை, தடுக்கவும் முடியாது, மதமல்ல, மனிதமே நமை என்றும் இணைக்கிறது மனித நேயம் இருக்கும் இடத்தில் மதபிரிவினைக்கும் துவேஷத்துக்கும் இடம் இல்லை என அழவைத்து பாடமாக இருக்கிறது இந்தப் படம். பழைய கருதான் ஆனால் எடுத்துச் சொன்ன விதம் நெஞ்சைப் பிழிவதாக இருக்கிறது...
இதை எத்தனை பேர் பார்த்திருப்பார்? பார்த்து பல்ராம் போன்ற மனிதர்கள் தங்களை மாற்றிக் கொண்டிருப்பார்களா அப்படி மாற்றிக் கொண்டால் எங்காவது சிலரோ அல்லது ஒருவரோ இருந்தாலோ இந்தப் படத்துக்கு கிடைத்த வெற்றிதான்
எந்தவித பிரதிபயனும் கருதாது அப்துல் மாலிக்கும் அவர்கள் நண்பர்களும் எப்படி எல்லாம் உதவுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நம்மால் இதைப் பற்றி இது போன்ற மனிதர் பற்றி பாராட்டாமல் இருக்க முடியாது.
அப்படிப்பட்ட நோக்கத்தில் மட்டுமே இந்தப் படம் துணிச்சலுடன் வெளிப்பட்டு இருக்கிறது. மிகவும் தாமதமாக பார்த்து இருக்கிறேன். ஆனாலும் இது போன்ற படங்கள் ஊக்குவிக்கப் பட வேண்டும் இந்த தேசத்தாலும், உலகத்தாலும் தேச மக்களாலும், உலக மாந்தராலும்...அப்படி நேசம் யாவற்றையும் ஒழுங்கு செய்து மாந்தர் தம் துயர் தீர்க்கும்...
அழத் தயாரகிக் கொண்டு ஒர் முறையாவது இந்தப் படத்தைப் பார்த்து விடுங்கள் விடியல் குகன், லகர் இன்னும் எனது அன்பர்களே ( பார்க்க வில்லை என்றால் கட்டாயம் பார்த்து விடுங்கள் மற்றவர்க்கும் சொல்லுங்கள், மலையாளப் படம், ஆங்கிலப் படம் என்றெல்லாம் தான் நல்ல படம் வருமா? தமிழ் படத்தில் கூட இப்படி ஒருவர் முயற்சி செய்திருப்பதை அனைவர்க்கும் தெரியப்படுத்தி விடுங்கள். நன்றி...வணக்கம்.)
வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள் மந்திர மூர்த்திக்கு.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment