Friday, March 24, 2023

பா.மூவேந்திரபாண்டியனின் திருக்குறள் உரை: கவிஞர் தணிகை

 பா.மூவேந்திரபாண்டியனின் திருக்குறள் உரை: கவிஞர் தணிகை



 காபி டீ பழக்கம் கிடையாது, இவருக்கு தோன்றின் புகழொடு தோன்றுக ...குறள் தாம் முதல் குறளாய் பிடிக்கும், இவரும் சாதி மதங்களைக் கடந்தவன் என்றெல்லாம் சொல்லச் சொல்ல‌ இப்படி நிறைய இவருக்கும் அடியேனுக்குமான ஒற்றுமை நிறைய‌ இருப்பதால் ஒட்டிக் கொண்டோம்.புதிய மனிதராய் அறிமுகமாகி இருந்த போதும் பூர்வீகத் தொடர்பில் சகோதர நண்பராய் இருந்திருப்போம் என்றே எண்ணிட இப்போது அது தொடர....

 இவர் அரசுப் பொறுப்பில் இருந்தும் கூட வெட்டி பந்தா எல்லாம் இல்லை,ஒரு முறை பார்த்தால் அப்படியே நினைவில் கொள்ளும் நினைவாற்றல். இவர் போன்றோரை பார்ப்பது அரிது. பாரதி பற்றி காந்தி சொன்னது போல இது போன்ற மனிதரையெல்லாம் காலம் அதிகம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவரெல்லாம் அபிராமி அந்தாதியில் சொல்வது போல பதினாறு செல்வங்களும் பெற்று மக்களுக்கு நீண்ட சேவையாற்றிட நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இயற்கை அருள் செய்யட்டும் என்ற பிரார்த்தனையுடன்...

வான் புகழ் கொண்ட வள்ளுவத்தை மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு பா.மூவேந்திரபாண்டியன் அவர்கள் மூலம் எனக்கு கிடைத்தது. இவர் 1. சிகரங்கள் தொடுவதற்கே,2. வார்தா என்ற சிவப்பு ரோஜா பேசுகிறேன் என்ற இரண்டு கவிதை நூலையும் ஏற்கெனவே செய்துள்ளவர்.

இவருடைய பெயரே  தனிச் சிறப்பாய் இவரை அடையாளப்படுத்தி விடுகிறது.பெயர் வைத்ததில் ஒரு பெருமிதம் இருக்கிறது சேர சோழ பாண்டிய மூவேந்தர்களுக்கும் இவர் பாண்டிய மன்னர் என பேர் வைத்தாரை பாராட்டத்தான் வேண்டியதிருக்கிறது.

சிகரம் தொடுவதற்கே என்ற இவருடைய‌ புத்தகத்தின் பெயரைக் கேட்டறிந்தவுடன் ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது.

சரி திருக்குறள் உரைக்கு வருவோம்.

3 ஆண்டுகள் மனிதர் உண்மையாய் உழைத்து உள் நுழைந்து வாழ்ந்திருக்கிறார் 1330 குறள்களுக்குள்ளும் என்பதை இவருடைய நூலின் வெளிப்பாடே நமக்கு பறை சாற்றி விடுகிறது. ஒரு உள்ளங் கைக்குள் அல்லது ஒரு சட்டைப் பைக்குள் அடங்குமளவான நூலை எவ்வளவு பெரிய அளவாக்க வேண்டுமோ அவ்வளவு பெரியதாக ஆக்கிக் காட்டி இருக்கிறார்.அதிலிருந்து குறளின் பால் குறளோனின் பால் இவரின் நேசம் எவ்வளவு என்று புரிகிறது

 இதற்காக நிறைவு செய்ய காசி பாரதி  சில காலம் வாழ்ந்த சிவமடத்துக்கே சென்று அமர்ந்து பணி நிறைவு செய்திருக்கிறார். வாழ்வில் இவருக்கு  ஒரு உயரிய‌ நோக்கம் இருக்கிறது. இந்த நூலை பல்கலைக் கழகத்திற்கும் பள்ளிக் கல்லூரிகளுக்கும் தமிழ் பாடமாக வைக்கலாம் அதில் ஒன்றும் குறை இருக்காது.


கீழடி அரசு மேனிலைப் பள்ளியோடு வேறு தொடர்புடையவர் என்கிறார்.கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு எனவே அரசுப் பணி இவரை அதிகம் பந்தாடாமல் வைத்திருந்தால் இவர் இன்னும் இவரது வாழ்நாளில் நிறைய செய்வார் என எதிர்பார்க்கலாம்.


சுமார் 300 பெரிய அளவிலான பக்கங்களுடன், ஒவ்வொரு பக்கத்துக்கும் பெரிய எழுத்துகளில் 5 குறள்களும் அதனடியில் இவருடைய எளிய சிறப்பான சுருக்கமான உரையும். நேரடியாக பளிச்சிடுகிறது பொருள். இவரது எழுத்தின் எளிமை எனக்கு கண்ணதாசனை நினைவுபடுத்துகிறது.


நூல் நல்ல படைப்பாக்கம் மிக நல்ல உருவாக்கம்.


பரிமேலழகர், மணக்குடவர்,போன்ற ஆரம்ப கால உரையாசிரியர்களுடன், டாக்டர் மு.வ உரை அதன் பின் கலைஞர், சாலமன் பாப்பைய்யா, இப்படி நூற்றுக்கு மேற்பட்டார் குறளுக்கு உரை எழுதிட அவ்வரிசையில் இவரும் சேர்ந்து கொள்கிறார். அடியேன் மு.வ உரை காலத்தவன்.

இவருடைய முயற்சியைக் காணும் போது: அடியேனும் கூட உரை எழுதியிருக்கலாம் என்ற நினைப்பு வருகிறது. 2004 வாக்கில் :" தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் 100" என்ற குறள் சிறு நூலை நான் கொண்டு வந்த போது செல்வம் பிரஸ் மா. துரைசாமி பெரியவர் என்னையும் உரை செய்யக் கேட்டுக் கொண்டார் அதை செய்தால் இன்னும் செலவு அதிகமாக இருக்குமே என தவிர்த்துவிட்டேன், அதற்கென்று நிறைய உரை இருக்கிறது அவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டுமே மேலும் அவை எல்லாமே மிகவும் பிரபலமடைந்த குறள்கள் தாமே என்று தவிர்த்து விட்டேன்.

தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சுமை தரக்கூடாது, சுகம் தர எண்ணினேன். ஆனால் சகோதரரின் முயற்சியைப் பார்க்கும் போது அடியேனும் செய்திருக்கலாமே என உண்மையாகவேத் தோன்றுகிறது. மேலும் ஒவ்வொரு வார்த்தைகளையும் அவரவர் அனுபவ ஆற்றல் சிறப்பு செய்து எடுத்துரைக்கும் என்ற நம்பிக்கை ஊட்டும் உழைப்பு இந்த மனிதருடையது.

எடுத்துக்காட்டாக: கேடில் விழுச் செல்வம்...கேடில்லா(குற்றமில்லா) விழுச் செல்வம், கெட்ட நிலையிலும் உதவி கை தூக்கி விடும் விழுச்செல்வம் கல்வி...இப்படி சில பொருள் வேறுபாட்ட்டில் பொருள் கொள்ள வழி இருக்கிறது. பூரணத்தை பூரணமாக எடுத்துக் கொடுத்தாலும் பூரணம் பூரணமாகவே இருக்கும் என்பது கல்விக்கு மட்டும் தானே?

காலத்தின் பதிவுகளில் தமது பெயரும் இடம் பெற வேண்டும் எனில் குறளுக்கான உரை எழுதுவது என்பது ஆன்றோரிடம் குறிப்பிட்ட ஒரு செயலாக காணப்பட்டுள்ளதை கலைஞர் உரை, சாலமன் பாப்பைய்யா உரை போன்றவற்றின் மூலம் கண்டோம். அது போல இவரும் அந்த பட்டாளத்துடன் சேர்ந்து கொள்கிறார். அந்த நாடியை இவரும் பிடித்து விட்டார். ஆனால் இவரின் உழைப்பு இவரது சிறப்பு. இவரின் நூலை கல்விக் கூடங்களில் சேர்க்கும் என்று நம்புகிறேன்.

தேடிப் பார்த்தாலும் தென்படாத எழுத்துப் பிழைகள்...மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். வாழ்க என்றும் வாழ்த்துகிறேன்

குறள் என்றுமே நமக்கு வழிகாட்டும் , விடை தரும் , சிறப்புரையாற்ற கைகொடுக்கும், தெரியாத போது அதை துணைக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம் தெரியாதவற்றை...

 ஆனாலும் எனைப் பொறுத்தவரை எழுத்து என்று வந்து விட்டாலே படைப்பு என்று வந்து விட்டாலே இலக்கியம் என்று சொன்னாலே யாவுமே விமர்சனத்துக்கு உட்பட்டதுதான். வேறு தெய்வத்தை வணங்காது கணவனை மட்டுமே வணங்கும் வாழ்க்கைத் துணை பெய்க‌ மழை என்றால் பெய்யும் என்பது,புலால் மறுத்தாரை உலகு வணங்கும் என்பது,புலால் உண்பாரை நரகத்தில் சிக்க வைக்கும் என்பது, யாக்கைக்கு மருந்தெனெ வேண்டாவம் என்பது (இக்காலத்தில் பொருந்தவில்லை பிறக்கும் குழந்தைக்கே நோய்கள் இருக்குமளவு உலகு கெட்டுவிட்டது)

 குறள்:1121 பாலும்தேனும் கலந்தது போன்றது காதல் பெண் உமிழ் நீர் என்பது இது போன்ற குறள்கள்...கவிதைப் பொய்கள் என்றே காமத்துப் பாலில் உள்ளன.

 இந்த காலத்தில் சில குறள்கள் பொருந்தாமல் போனது பற்றி நாம் தாம் வெட்கப் பட வேண்டும். மனித குலம் தாம் தரம் தாழ்ந்தது பற்றி யோசிக்க வேண்டும். ஆனாலும் அவை குறளுக்கு சிறுமை அல்ல ஆனாலும் இந்த காலத்துக்கு பொருந்த வில்லையே என்பது போன்ற கருத்துகள் குறள்களில் உள்ளது பற்றி முரண் அல்லது மாறுபட்ட கருத்துகள் எனக்குள்ளும்  உண்டு.

புலால் மறுப்பு பற்றி இவர் மற்றும் இராமலிங்க வள்ளலார் போன்றோர் போற்ற விவிலியம், முகமதியம் போன்ற நெறிகள் ஏற்கவில்லை.

அடியேன் புலால் மறுப்பாளன் என்றாலும் உலகு அப்படி செல்லவில்லை என்றே ஆதங்கப் படுகிறேன்.

வாழ்த்துகளும் வணக்கங்களும் நன்றிகளும் அன்பு சகோதரர்: உரையாசிரியர் பா.மூவேந்திரபாண்டியன் அவர்களுக்கு...நூல் விலை மதிப்பற்றது என்பதுவும் உண்மைதான்.


வணக்கங்கள் மற்றும் நன்றிகளுடன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பி.கு: 133 அதிகாரத்தில் 3 அதிகாரம் இடைச் செருகல் என்றெல்லாம் கேள்வி, உண்மையை யாரால் ஆராய முடியும் ?









No comments:

Post a Comment