Thursday, March 23, 2023

23.03.23 மாவீரன் பகத் சிங் நினைவு நாளுடன் கவிஞர் தணிகையின் 62 ஆம் பிறந்த நாளும் கூட:கவிஞர் தணிகை.

 23.03.23 மாவீரன் பகத் சிங் நினைவு நாளுடன் கவிஞர் தணிகையின் 62 ஆம் பிறந்த நாளும் கூட:கவிஞர் தணிகை.



திரும்பிப் பார்க்கிறேன்

அட! 61 ஆண்டுகள் போனதே தெரியவில்லை.

'62ல் பிறந்து இன்று 62ல் அடி எடுத்து வைக்கிறேன் 


தூங்க விடவில்லை கனவு


ஜிட்டு.கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல இன்றும் புத்துணர்வுடன், இளமையுடன்,அறியத் துடிக்கும் குழந்தைத்தனத்துடன் இருக்கிறேன்.


சில மைல்கற்களைத் தொட்டிருக்கிறேன்.

மனிதமாய்த் தழைத்திருக்கிறேன்.


அதில் மகனை பொறியாளராய் செய்ததும், தாயை அவருடைய கடைசி 20 ஆண்டுகள் தாலாட்டியதும் அடங்க எனது வாழ்வு பொருள் பொதிந்ததாய் ஆனது. மனம் நிறைந்து போனது.


இதற்குள் வந்த நட்பு, பகை, உறவு, சுற்றம் எல்லாமே அந்த அந்த தருணத்து வேடிக்கையாகப் போனது.


நிறைய நினைத்துப் பார்க்க இருக்கிறது அதற்காக உங்கள் நேரத்தை நான் எடுத்துக் கொள்வது தவறாகும்.


எனது முதல் புத்தகமான மறுபடியும் பூக்கும் முன்னுரையில் சொன்னதையே மீண்டும் சொல்ல வேண்டியதாக இருக்கிறது:


நானே கருவாகி தானே உருவாகி உங்கள் உள்ளத்தில் ஒரு சிறு பகுதியை தொட்டுச் செல்ல நான் எடுத்துக் கொண்ட காலமும் சிரமமும் மிக அதிகம்


நான் பாரதி, தாகூர் போன்ற மகாக் கவியில்லை


என்னால் உலகு உய்யப் போகிறது என்று சொல்லுமளவு நான் முட்டாளுமில்லை


என்னால் இந்த நாடு சுபிட்சம் அடையப் போகிறது என எண்ணிக் கொள்ளுமளவு நான் பெரிய தியாகியுமில்லை


என் பின்னோடு எந்த மதமும் தொடர்ந்து வரப் போவதில்லை என்பதையும் நானறிவேன் என்றாலும்


நான்/ அடியேன் கால எல்லையை குறுகிய சாதி, மதக் கோடுகளை வாழ்வின் நடமுறை யதார்த்தத்திலும் பிடிவாதத்துடன் கடக்க ஆசைப்படும் ஓர் சாதாரண மனிதன். கொள்கை எனைக் கொன்று தீர்த்து விடும் போலிருக்கிறது.


சக மனிதரின் துன்பம் கண்டு துயரம் கொள்பவன்


நிறைய ஏமாற்றங்கள் என்னிடமும் உண்டு


ஆனாலும் என்னால் எவருமே என்றுமே ஏமாற்றப் பட்டு விடக் கூடாது என்று பிரார்த்திப்பவன்.


பல முறை மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்டிருக்கிறேன் அது மரணத்தின் பிடிதான் என்பதை அறியாமலேயே...


எனது வாழ்வு விடைபெறும் முன்பே என்னால் முடிந்த அளவு எனது வீட்டுக்கும் எனது நாட்டுக்கும் நான்/அடியேன் செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்து விட்டதாகவே உணர்கிறேன். அந்த திருப்தி எனக்கு எப்போதுமே உண்டு. அதன் அடையாளமாகவே எதையாவது எப்போதாவது எழுதுகிறேன். நான்/ அடியேன் இனி எப்போது இறந்தாலுமே எனக்கு மகிழ்வே ( அதை முதல் புத்தக முன்னுரையிலேயே 1990களிலேயே குறிப்பிட்டு விட்டேன் அதற்கு பின்னும் இன்னும் மீதம் தொடரும் எனது வாழ்வு யாவுமே இயற்கை எனக்கு அளித்த கருணைக் கொடை)


என் குடும்ப உறுப்பினர்களைக் கூட உலகின் அங்கமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு முகம் தெரிந்த தெரியாத இவ்வுலகின் எல்லா மனிதர்களையுமே என் குடும்ப உறுப்பினர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன் அதன் எதிரொலியாகவும் எதிரொளியாகவுமே எப்போதாவது எழுதுகிறேன்.

எத்தனையோ சிகரங்களையும் தொட்டதுண்டு,மலை மடுவுப் பள்ளத்தாக்குகளிலும் வீழ்ந்து எழுந்ததுமுண்டு....வாழ்க்கையில் எத்தனை அனுபவப் பாடங்களைப் பெற்றபோதும் மனிதர்களை நம்பி ஏமாந்தே போவதிலிருந்து இன்னும் விடுபட முடியாத சுழல் சூழல். தவறான வழிகாட்டல் மூலம் கற்றவை ஏராளம் பட்டவையும்...


ஈயிக்கு தலையில், தேளுக்கு கொடுக்கில், பாம்புக்கு பல்லில்,மனிதர்க்கு உடலெல்லாம் விஷம் ...என்பதை மாற்றிக் கொள்ளாத மனிதர் உள்ள உலகிடையே பட்ட பாடுகளும் ஏராளம்... உண்மை, தூய்மை,சுயநலமின்மை இவற்றுக்கு எல்லாம் விலை இல்லை மதிப்பும் இல்லை.


ஆனாலும் மனிதாபிமானமும் அன்பும் இவற்றை எல்லாம் துடைத்தெறிந்து விடுகின்றன...


அன்புப் பிரவாகத்தின் சுழலில் அகப்பட்டு மீளத் தெரியாத எனது அவ்வப்போதைய மீறிய துக்கமும், பீறிய மகிழ்வுமாக ஒரு கவிதையாகவே வாழ்கிறேன்.


பல கோணங்களுடைய வாழ்வின் ஒரு பரிமாணம் மட்டுமே எப்போதும் பார்வைக்குத் தெரிகிறது.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment