Tuesday, March 14, 2023

படித்ததில் பிடித்தது:ஸ்விஸ் நாட்டின் மனித மலத்தை சேமிக்கும் வங்கி எதெற்கு பயன்படும்? கவிஞர் தணிகை

 நன்றி: பிபிசி தமிழ்

அனைவரும் படித்தறிய வேண்டிய அரிய கட்டுரை 




உலகளவில் பல வகையான பாக்டீரியாக்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால், அவற்றை பாதுகாப்பதற்காக மனித மலங்களின் மாதிரிகளையும் மற்றும் பிற உயிரியல் பொருட்களையும் சேகரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மிகப்பெரும் ஆய்வு கூடத்தில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இது பல ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சி என்றும், இதற்கான வேலைகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய முயற்சி மிகவும் அவசியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நம்முடைய உடல் ஆரோக்கியத்தில், பல்வேறு நுண்ணுயிரிகள் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த ஆராய்ச்சி உதவும் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய ஆராய்ச்சிகாக, எதிர்காலத்தில் உலகெங்கிலும் செயல்பட்டு வரும் பல்வேறு பல்கலைக்கழகங்களை ஒன்றிணைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. நாள்பட்ட நோய்களாக கருதப்படும் ஆஸ்துமா மற்றும் உடல்பருமன் போன்ற நோய்களுக்கு இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தீர்வு காணமுடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் மனித மலங்களை சேகரிப்பதற்காக வங்கி உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? உலகெங்கிலும் சில வகையான பாக்டீரியாக்கள் ஏன் அழிந்து வருகிறது?

விதைகள் முதல் பாக்டீரியாக்கள் வரை

பாக்டீரியாக்களின் அழிவை பாதுகாக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

விதை சேகரிப்பு பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகை தானியங்களோ அல்லது காய்கறிகளோ அழியும் நிலைக்கு சென்றால், நாம் சேகரித்து வைத்திருக்கும் விதைகளைக் கொண்டு நம்மால் மீண்டும் அந்த தானியங்களையோ, செடிகளையோ பயிரிட முடியும். இதே போன்று பாக்டீரியாக்களை பாதுகாப்பதற்காக தற்போது மல வங்கி உருவாக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் இதற்கான முயற்சியை முன்னெடுத்த நுண்ணுயிரியலாளர் மரியா குளோரியா டொமிங்குஸ்-பெல்லோ, பிபிசி நியூஸிடம் இதுகுறித்து பேசும்போது, ” இந்த நுண்ணிய உயிரினங்களின் பன்முகத்தன்மை சமீபத்திய ஆண்டுகளில் வெகுவாக குறைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “அமேசான் பழங்குடி மக்களிடம் நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின்போது நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால், அமெரிக்க மக்களின் குடல்களில் காணப்படும் பல வகையான பாக்டீரியாக்களை விட, இரண்டு மடங்கு அதிகளவில் பல்வேறு வகையிலான பாக்டீரியாக்களை அமேசான் பழங்குடிகள் தங்களது குடல்களில் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

நகரத்தில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவை எளிதாக கிடைப்பதால், அவர்கள் தங்களுடைய உடல் பிரச்னைகளுக்காக அதிகளவிலான ஆண்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதன் விளைவாக அவர்கள் தங்களது உடலில் இருக்கும் பல வகையான நல்ல பாக்டீரியாக்களை இழக்கிறார்கள்” என்று அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசியராக இருக்கும் மரியா குளோரியா தெரிவிக்கிறார்.

அழிந்து வரும் பாக்டீரியா இனங்கள்

நமது செரிமான அமைப்பில் இயங்கும் ’மைக்ரோபயோட்டா’ (microbiota) உடலில் இருக்கும் பல்வேறு வகையான நுண்ணியிரிகளுக்கு முக்கியமான இடமாக இருக்கிறது.

நமது ஆரோக்கியத்திற்கு தேவையான சுமார் 100 பில்லியன் வகையான பல்வேறு நுண்ணுயிரிக்களை ’மைக்ரோபயோட்டா’ கொண்டிருக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எனவே நமது வயிறானது இத்தனை பல்வேறு உயிரினங்கள் வாழும் ஒரு சிறிய நகரமாக செயல்படுகிறது.

இந்த நிலையில், இந்த பல்லுயிர்கள் சமீபத்திய ஆண்டுகளில் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

இதை பற்றி நாம் ஆழமாக சிந்திக்கும்போது, மனிதர்களிடம் அதிகரித்து வரும் பல வகையான நாள்பட்ட வியாதிகளுக்கு இந்த நுண்ணியிர்களின் அழிவே காரணமென தெரியவருகிறது. குறிப்பாக நகரங்களில் வாழும் மக்களிடையே இது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சியில் பிரேசில் நாட்டிலிருந்து ஒரே ஒரு பிரதிநிதியாக நுண்ணுயிரியலாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் மட்டுமே பங்கெடுத்திருக்கிறார். அவர் இதுகுறித்து பேசும்போது,” பாக்டீரியாக்களின் இந்த அழிவு நமது குடலில் நடக்கும் ஒரு மாற்றமாக மட்டும் பார்க்க முடியாது, எதிர்காலத்தில் இதனால் நாம் சில வகையான செடிகள் மற்றும் விலங்குகளை கூட இழக்க நேரிடலாம். ஏனென்றால் நமக்குள் இருக்கும் பாக்டீரியாக்கள்தான் இந்த இயற்கையிலும் கலந்திருக்கிறது” என்று கூறுகிறார்.

இது மிகவும் முக்கியமான பிரச்னை என்றும், மிக விரைவிலேயே இதன் தீவிரம் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் இந்த பாக்டீரியாக்கள் அழிந்து வருவதற்கான காரணங்கள் என்ன?

நவீன வாழ்க்கை வசதிகளும், அதன் விளைவுகளும்

மலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 மற்றும் 19ஆம் ஆண்டு நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின்போது, இந்த நுண்ணுயிர்களின் அழிவு தொடங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் கூறுகிறார்.

உணவுகளை நாம் குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதும், பதப்படுத்த துவங்கியதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவையான உணவுகளை சேகரிப்பதற்கு இந்த நவீன முறைகள் உதவி வந்தாலும், இதுவே இந்த பாக்டீரியாக்களின் அழிவிற்கும் காரணமாக அமைந்தது என்று அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த 20 ஆண்டுகளில் பிரேசில் மக்கள் தங்களது முக்கிய உணவான, நார்சத்து மிகுந்த பீன்ஸ் காய்களை எடுத்து கொள்ளும் அளவு கணிசமாக குறைந்திருக்கிறது என ஹாஃப்மேன் சுட்டிக்காட்டுகிறார். மாறி வரும் உணவு பழக்கங்கள், நமது உடல்களில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

மனிதர்கள் நார்சத்துகள் மிகுந்த உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் அவசியம். அதுதான் நமது குடல்களில் உள்ள நுண்ணுயிர்களுக்கு முக்கிய உணவாக இருக்கிறது.

இந்த நார்சத்துகள்தான் நமது குடல்களிலிருந்து, எந்தவொரு தொந்தரவுகளும் இல்லாமல் எளிமையாக மலம் வெளியேறுவதற்கு உதவி புரிகிறது.

அதேசமயம், நாம் எடுத்துக்கொள்ளும் ஆண்டிபயாடிக் மருந்துகளும் நமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சத்தமில்லாமல் அழித்து வருகிறது என மற்ற சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

1928ல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டி பயாடிக் மருந்துகள் மனிதர்களின் பல்வேறு விதமான நோய்களுக்கு தீர்வாக அமைந்திருந்தாலும் கூட, மற்றொருபுறம் இது நமது குடலில் உள்ள மைக்ரோபயோட்டாவில் பல மோசமான தாக்கங்களை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

ஏனென்றால் ஆண்டிபயாடிக் மருந்துகள் என்பது ஒரு அனுகுண்டுகள் போல நமது உடலுக்குள் செயல்படுகிறது. நல்ல பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரீயாக்கள் என்ற பேதம் இல்லாமல், இது அனைத்து வகையான பாக்டீரியாக்களையும் அழிக்கிறது. எனவே இது நமது குடலின் மைக்ரோபயோட்டாவில், ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.

இதன் காரணமாக நல்ல பாக்டீரியாக்கள் நிறைய அழிந்துவிடுகிறது. அதன் இடங்களையும் சேர்த்து கெட்ட பாக்டீரியாக்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

சிசேரியன் பிரசவ முறை

மனித மலத்தை சேமிக்கும் வங்கி - எதற்குப் பயன்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிகரித்து வரும் சிசேரியன் பிரசவ முறைகளும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஒரு குழந்தை இயற்கையான முறையில் பிரசவிக்கும்போது, அது தனது தாயின் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறது. ஆனால் சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை மூலம், நேரடியாக வயிற்றுக்குள் இருந்து குழந்தை எடுக்கப்படும்போது, அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.

எனவே இதுவும் அந்த குழந்தைகளின் மைக்ரோபயோட்டாவிற்கு தேவையான பாக்டீரியாக்கள் கிடைக்காமல் போவதற்கு காரணமாக அமைகிறது.

தொழிற்புரட்சி, மாறி வரும் உணவு பழக்கங்கள் மற்றும் சிசேரியன் பிரசவ முறை என இதுவரை நாம் பார்த்த இந்த மூன்று காரணங்களுமே மனிதர்கள் கையாளும் மோசமான விஷயங்கள் என கூற முடியாது. ஆனால் அதேசமயத்தில் இது அனைத்தும் மனிதர்களின் உடலில் உருவாகும் நல்ல பாக்டீரியாக்களின் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நமது சுற்றுச்சுழலுக்கு ஆதாரமாக அமைவதும் இந்த நுண்ணுயிர்கள்தான்.

இதில் மற்றுமொரு மோசமான விஷயம் என்னவென்றால், நமது மைக்ரோபயோட்டாவில் ஏற்படும் இந்த மாற்றங்களை போலவே, நமது சுற்றுச்சூழலிலும் மண், தண்ணீர் என அனைத்து நிலைகளிலும் இதேபோல பல வகையான நுண்ணுயிரிகள் அழிந்து வருகின்றன என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் டொமிங்குயூஸ் பியூட்டிஃபுல்.

இந்த நுண்ணுயிர்கள் அழிந்துவருவது நமது உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை உருவாக்கும்?

அதிகரித்து வரும் நாள்பட்ட வியாதிகள்

மாத்திரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அழிந்து வரும் இந்த பாக்டீரியாக்களினால், நமது உடலில் இரண்டு வகையான பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார் டொமிங்குயூஸ்.

இதில் முதல் சான்றாக நாம் தொற்றுநோய்கள் ஏற்படுவதை பார்க்கலாம். சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், அதிகளவிலான ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துபவர்களுக்கும் ஆஸ்துமா போன்ற வியாதிகள் ஏற்படுவதற்கான தொடர்புகள் அதிகமாக இருக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுவதாக டொமிங்குயூஸ் குறிப்பிடுகிறார்.

இதுபோன்ற ஆராய்ச்சிகள் இவைகளுக்கிடையே இருக்கும் தொடர்புகளை கூறுகிறதே தவிர, இன்னும் முழுமையாக ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து எதுவும் கூறவில்லை.

இரண்டாவது சான்றாக விலங்குகள் மீது மேற்கொண்ட பரிசோதனைகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். மிகவும் சிறிய பன்றி குட்டிகளின் மீது மேற்கொண்ட ஆராய்ச்சியில், அவைகள் மிகவும் பெரிய அளவில் இருப்பதாகவும், அவை தனது வாழ்நாள் முழுவதும் அதிக எடைக் கொண்டதாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு அதன் மைக்ரோபயாடடாவில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே காரணமாக இருக்கின்றன.

ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு விலங்கின் மைக்ரோபயோட்டாவை மற்றொரு விலங்கிற்கு பொருத்தும்போது, அதன் விளைவாக ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற நாள்பட்ட வியாதிகள் குணமாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

”இந்த புவியின் வாழ்நாள் என்பது, அதன் மீது வாழும் பல்வேறு உயிரினங்களுக்கிடையே இருக்கும் சமநிலை மற்றும் கூட்டமைப்பின் தன்மையை பொருத்து இருக்கிறது. அதாவது பாக்டீரியாக்கள் மனிதர்களையும், மனிதர்கள் பாக்டீரியாக்களையும் சார்ந்து இருக்கின்றனர்” என்று ஹாஃப்மேன் குறிப்பிடுகிறார்.

நமக்கு தெரியாதவற்றையும் பாதுகாக்க வேண்டும்:

சீஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைக்ரோபயோட்டாவின் முக்கியத்துவம் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கிடையே ஒருமித்த கருத்து நிலவி வந்தாலும், இன்னும் நுண்ணுயிர்களின் ஆழத்தை புரிந்துக் கொள்வதற்கு நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பல்வேறு வகையான நுண்ணுயிர்கள் அழிந்து வருகிறது என்ற கூற்று மட்டும் உண்மையாக இருக்கிறது.

ஒருவேளை அவைகள் முற்றிலும் அழிந்துபோய், நுண்ணுயிரிகளுக்கான வெற்றிடம் உருவாகும் பட்சத்தில் மட்டுமே, அதுவரை அவைகள் செய்துவந்த முழுமையான செயல்பாடுகள் குறித்து நமக்கு தெரிய வரலாம்.

ஆனால் அப்படியான ஒரு நிலை வந்துவிட கூடாது என்பதற்காகத்தான் தற்போது மனித மலங்களின் மாதிரிகளை சேகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பல்வேறு வகையான நுண்ணுயிரிக்களை நம்மால் ஆய்வுகூடத்தில் பாதுகாக்க முடியும்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த மனிதர்களின் மலங்களை சேகரிப்பதும்; தயிர், சீஸ் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவு வகைகளை சேகரிப்பதும் என இரண்டு வகையில் இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் தற்போது இதற்கான ஆய்வுகூடம் தற்போது துவக்கப்பட்டிருந்தாலும், இனி வரும் காலங்களில் கிரீன்லாண்ட் மற்றும் அர்ஜெண்டினா படகோனியா போன்ற பிற இடங்களிலும் இதற்கான கிளைகள் திறப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment