Friday, August 26, 2022

நம்மாழ்வார்: கவிஞர் தணிகை

 நம்மாழ்வார்: கவிஞர் தணிகை



இந்த அரிய மாமனிதரை நிறைய நேரங்களில் கடந்தே வந்திருக்கிறேன் என்றாலும் அவரிடம் கழுத்தில் மாலை பெற்றவர்கள் கூட தேநீர், காபி அருந்துவதையும் காண்கிறேன். நான் தேநீர் காபி அருந்துவதில்லை. எனக்குத் தெரியும் எனது அன்புச் சகோதரர்  சிற்பி.கொ. வேலாயுதமும் அருந்துவதில்லை இதை எங்களுடைய 40 ஆண்டுக்கும் மேலான நட்புத் தொடர்பின் மூலம் சொல்கிறேன். அதே போல நம்மாழ்வார் சொல்வதை நண்பர் விடியல் குகன் அஞ்சல் செய்திருந்தார் அதில் 11 ஆம் கருத்தை கடைப் பிடித்தால் மட்டுமே அதில் காபி டீயுடன் மதுவும் சேர்த்து சொல்லப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும் இந்த குறைந்த பட்ச தகுதி இருந்தால் மட்டுமே தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மாமன்ற உறுப்பினராக தகுதி என்று இருக்க வேண்டும்.  மற்றபடி இதில் சொல்லப் பட்டிருக்கும் அனைத்து கருத்துகளும் 21 கருத்துகளும் ஒரு நல்ல இயக்கத்துக்கு கண்களாக இருக்க வேண்டும்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் 21 அம்ச வாழும் கிராம செயல் திட்டம்(சில திருத்தங்களுடன்)


1. கிராமங்களில் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இயற்கை விவசாயம் மட்டும் செய்யப்பட வேண்டும்.


2. கிராமந்தோறும் உடற்பயிற்சி செய்ய மற்றும் விளையாட ஒரு  விளையாட்டுத் திடல் ஏற்படுத்த வேண்டும்;


3.  கிராமந்தோறும் குடிநீருக்கு  கை கால் கழுவாமல் தூய்மையாய், பாதுகாப்பாய் வைத்திருக்கக் கூடிய சுற்றுச்சுவர், படித்துறை கொண்ட ஒரு குளத்தை ஏற்படுத்த வேண்டும்; 


4. கிராமப்புறங்களில் உள்ள சிறு தெய்வ வழிபாட்டை உயிர்ப்பித்து கொண்டாட வேண்டும்;


5. ஒவ்வொரு விவசாயியும் தனது  நிலத்தில் ஒரு குளமும், குளத்து மண் மேட்டில் ஒரு கொட்டகையும், ஆடு மாடுகளும் மரம் செடிகளும் வைத்து வாழ வேண்டும்; விவசாய துணைத் தொழிலாக குளத்தில் மீன் வளர்ப்பும் செய்யலாம்;


6. ஒவ்வொரு கிராமத்தின் மாடுகளும் அந்தந்த கிராமத்தின் எல்லை தாண்டி போகக்கூடாது; 


7. ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராமம் தொடர்பான -  கிராமத்துக்கு தேவையான அரசு அலுவலகங்களின் ஆவணங்கள் அனைத்தையும் தெரிவிக்கவும், வழங்கவும் கூடிய  ஒரு தகவல் மையம் ஏற்படுத்த வேண்டும்;


8. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம மக்கள் வாடகைக்கு பயன்படுத்தக்கூடிய கிராமத்திற்கு தேவையான கருவிகள் மற்றும் இயந்திர சாதனங்கள் உள்ள பண்ணை சேவை மையம் ஏற்படுத்தப்பட வேண்டும்;


9. கிராம பள்ளிக்கூடங்கள் தரமுள்ள கல்வி  வழங்கக்கூடியதாகவும், விவசாயம் மற்றும் கிராம தொழில்களை கற்றுத்தரக்கூடியதாகவும், படைப்பாற்றல் மற்றும் பண்பாட்டைக் கற்றுத் தரக்கூடியதாகவும் மேம்படுத்தப்பட வேண்டும்;


10. கிராமப்புறத்தில் சிறு தொழில் மூலம்  தயார் செய்து கொள்ள வாய்ப்பு உடைய பல்பொடி, சோப்பு, ஷாம்பு,  எண்ணெய், மிட்டாய் போன்ற பொருட்கள் வெளியில் இருந்து கிராமங்களுக்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறான அனைத்தையும் கிராமத்திலேயே தயார் செய்து கொள்ள வேண்டும்;


11. கிராமத்தில் காப்பி டீ குடிக்கக் கூடாது; காப்பி டீக்கடை இருக்கக்கூடாது; அதேபோன்று மது குடிக்க கூடாது. மதுக்கடையும் இருக்கக் கூடாது;


12. ஒவ்வொரு கிராமத்திலும் மாதந்தோறும் கிராம சபை கூடி கிராமத்துத் தேவைகளை பரிசீலித்து திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும்;


13. கடைகளில் விதைகள் வாங்குவதைக் கைவிட்டு, எல்லா விவசாயிகளும்  அவரவர் நிலங்களில் பயிர் செய்வதற்கான பாரம்பரிய விதைகளை அவரவர் வீடுகளில் வைத்திருக்கவேண்டும்; 


14. அலோபதி மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ போன்ற மாற்று மருத்துவத்தையும் போற்றி வளர்த்து ஆரோக்கியமான கிராமத்தை ஏற்படுத்த வேண்டும்;


15. ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் வேப்பமரம், முருங்கை, பப்பாளி, சவுண்டல், சீதாப்பழ மரம்,  வாழை, தென்னை, கருவேப்பிலை, எலுமிச்சை, நெல்லி கொய்யா, மா, பலா என பழ மரங்களும் பயன் தரும் மரங்களும் இருக்க வேண்டும்; 



16. மர நிழல்களில் தேன்பெட்டி வைக்க வேண்டும்; உணவுப் பொருட்களில் சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்த வேண்டும்;


17. எல்லா வீடுகளிலும் கொல்லைப் புறத்தில் ஆடு, மாடு, எருமை, கோழிகளின் எச்சங்களிலிருந்து எரிவாயு தயார் செய்யக்கூடிய சாண எரிவாயு கலன் அமைக்கப்பட வேண்டும்; மேலும் சூரிய சக்தி மின்சார சாதனங்கள் அமைத்து பயன்படுத்த வேண்டும்;


18. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  தட்டச்சு பயிற்சி வழங்கபப்பட வேண்டும்;


19. ஒவ்வொரு கிராமத்திலும் பொது மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும்; 


20. விவசாயம் மற்றும் கிராம தொழில்கள் அனைத்தையும் கிராம மக்கள் பரஸ்பரம் உதவிக் கொண்டு கூட்டாக உற்பத்தி செய்ய வேண்டும்; 


21. கிராமத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அந்தந்த கிராம மக்கள் அந்தந்த கிராமத்திலேயே பணத் தேவை இல்லாமல் பண்டமாற்று முறையில் பரிமாற்றிக் கொள்ள வேண்டும். கிராமச்சந்தை மற்றும் கிராம இயற்கை அங்காடிகள் நிறைய ஏற்படுத்த வேண்டும்; superb. Good Sharing. No Objection . All points are valid.

சரியான ஆலோசனை

நன்றி நண்பர்க்கு

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



பி.கு: ஆனால் எல்லாமே கிராமியம் சார்ந்த கனவுகள் நிறைவேற்றுவது மிகவும் கடினம்தான் என்ற போதிலும் கனவு மெய்ப்பட வேண்டும் நேற்றைய கனவுதானே இன்றைய வாழ்க்கை எனவே கனவு தூங்க விடவில்லை.

தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மாமன்றம் இதை மட்டுமே ஒரு குறிக்கோளாக வைத்து 5 கிராமங்களை முதலில் உருவாக்கினால் போதும் அவை மாதிரியாகி உலகுக்கே வழி வகுக்கும்.

அதற்கு சக்தியுள்ள‌ ஆர்வமுள்ள இளைஞர்கள் அல்லது வழிகாட்டிகள் முதலில் வாரம் ஒரு முறை 10 பேர் இணைந்து இந்த குறிக்கோள்களை மனதில் இறுத்திக் கொண்டு கிராமங்களுக்கு சென்று 24 மணி நேரம் இருந்து செயல்படலாம். அங்கேயே உறங்கும் 8 மணி நேரம் கழித்தால் மீதமுள்ள 16 மணி நேரம் கூட ஆரம்பத்தில் போதுமானது....


No comments:

Post a Comment