நீங்களும் வானொலி தொடங்கலாம்!
கரோனா காலகட்டம் எவ்வளவோ நெருக்கடிகளைக் கொண்டுவந்திருந்தாலும், இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி இன்று பலரும் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அதுவும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் புதிது புதிதாகப் பலவற்றையும் கற்றுவருகின்றனர். இந்த வரிசையில் சேர்ந்திருப்பதுதான் ‘பாட்காஸ்டிங்’ (Podcasting). இதன் மூலம், பல நாடுகளிலும் இன்று குழந்தைகளும் வானொலி அலைவரிசைகள் தொடங்கி நடத்திவருகிறார்கள். இளைஞர்கள் மத்தியிலும் இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்ற வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் ‘பாட்காஸ்டிங்’, உண்மையில் ஒரு நல்வாய்ப்பு. காரணம், யார் வேண்டுமானாலும் எளிதாகத் தொடங்கக்கூடிய ஊடகம் இது. ‘யூடியூப்’க்குத் தேவைப்படும் அளவுக்கு இன்டெர்நெட் டேட்டாவும் இங்கே விரயமாகாது.
‘பாட்காஸ்டிங்’ என்றால் என்ன?
ஆப்பிள் நிறுவனம் ‘ஐபாட்’ அறிமுகப்படுத்தியபோது அதில் ‘பாட்காஸ்டிங்’கையும் இணைத்து அறிமுகப்படுத்தியது. அதன் பிறகுதான் இந்த வார்த்தை பரவலாகத் தெரியவந்தது. டிரிஸ்டன் லூயிஸ் 2000-ல் இந்தத் தொழில்நுட்பத்தை எழுத்து வடிவத்தில் அறிமுகப்படுத்தினார். அதற்குச் செயல் வடிவம் கொடுத்தவர் டேவ் வின்னர். ‘பிபிசி’யின் செய்தியாளரும், ‘தி கார்டியன்’ இதழின் பத்தி எழுத்தாளருமான பென் ஹாமெர்சுலி இதைப் பற்றி 2004-ல் ஒரு கட்டுரை எழுதினார். அதில் ‘பாட்காஸ்டிங்’ எனும் வார்த்தையை முதன்முறையாகப் பயன்படுத்தினார். ‘ப்ராட்காஸ்டிங்’ என்பது அனைத்து வகை ஒலி/ஒளிபரப்புகளையும் குறிக்கும். ‘ஜபாட்’ இதை அறிமுகப்படுத்திய பின் இதற்கு ‘பாட்காஸ்டிங்’ என்ற பெயர் வந்தது.
வழக்கமான வானொலியிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது?
‘பாட்காஸ்டிங்’ ஒலிபரப்புக்கும் வானொலி ஒலிபரப்புக்கும் மிக முக்கிய வேறுபாடே, நமக்குத் தேவையான நேரத்தில் தேவையான நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும் என்பதுதான். வானொலி நிகழ்ச்சிகளை, ஒலிபரப்பும்போது மட்டுமே கேட்க முடியும். தவறும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு வாய்ப்பே இல்லை. ‘பாட்காஸ்டிங்’ அப்படியல்ல; தேவையான வானொலியைப் பின்தொடரும் பட்சத்தில், உங்கள் செல்பேசிக்கே அந்த ஒலிபரப்பின் தகவல்கள் வந்துவிடும். தேவையான நேரத்தில் அந்த ஒலிபரப்பைக் கேட்டுக்கொள்ளலாம்.
யாரெல்லாம் ‘பாட்காஸ்டிங்’ தொடங்கலாம்?
தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் மட்டுமே ‘பாட்காஸ்டிங்’கைத் தொடங்க முடியும் என்றில்லை. யாரெல்லாம் ஃபேஸ்புக், வலைப்பூ, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்களோ அவர்களெல்லாம் மிக எளிதாக ‘பாட்காஸ்டிங்’ வானொலியைத் தொடங்க முடியும். வலைப்பூவை எப்படி இலவசமாகத் தொடங்க முடிகிறதோ, அதே போன்று ‘பாட்காஸ்டிங்’கையும் இலவசமாகவே தொடங்க முடியும். தனியாக நாமே ஒரு பக்கத்தை அமைப்பதற்குப் பெரிய சர்வர்கள் தேவைப்படும்; அதனால், முதலில் ஏதேனும் ஒரு ‘பாட்காஸ்டிங்’ வழங்குநர் பக்கத்தை நாடலாம். இதற்குப் பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. மேலும், செயலியை செல்பேசியிலும் பதிவிறக்கிக்கொள்ள முடியும். நம் செல்பேசியிலேயே நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து, அதிலேயே எடிட்செய்யும் வசதியும் உள்ளதால், குழந்தைகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இன்று ‘பாட்காஸ்டிங்’ தொடங்குவது மிகவும் எளிதாகியுள்ளது.
எதுவும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா?
இணைய வசதி கொண்ட, ஸ்மார்ட்போன் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் ‘பாட்காஸ்டிங்’ வானொலியைத் தொடங்க முடியும். இதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. இதற்காக ‘ஆங்கர்’ (anchor.fm), ‘ஸ்பாட்டிஃபை’ (open.spotify.com), ‘கூகுள் பாட்காஸ்ட்’ (google.com/podcasts), ‘ஆப்பிள் பாட்காஸ்ட்’ (podcast.apple.com), ‘பிரேக்கர்’ (breaker.audio), ‘காஸ்ட் பாக்ஸ்’ (castbox.fm), ‘ஓவர் காஸ்ட்’ (overcast.fm), ‘பாக்கெட் காஸ்ட்’ (pca.st), ‘ரேடியோ பப்ளிக்’ (radiopublic.com) போன்ற இணையதளங்கள் இலவசமாகவே இடம் தருகின்றன. ஆனால், திரைப்படப் பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமாயின் முறையான அனுமதி பெற வேண்டும். மேலும், ஒலிபரப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டே ‘பாட்காஸ்டிங்’ ஒலிபரப்பும் இருக்க வேண்டும். ஒலிபரப்புக் கொள்கைகளை ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்துக்குச் (mib.gov.in/broadcasting/air-broadcast-code) சென்று பார்த்துக்கொள்ளலாம்.
பணம் சம்பாதிக்க முடியுமா?
முடியும். உதாரணமாக, ஆங்கர் (Anchor) செயலியை எடுத்துக்கொள்வோம். இதன் உதவியுடன் உங்களின் ‘பாட்காஸ்டை’ இலவசமாக உருவாக்குவதோடு மட்டுமல்லாது, அதைப் பல்வேறு செயலிகளின் ஊடாக விநியோகிக்கவும் முடியும். இதன் மூலம், ‘யூடியூப்’பைப் போல ‘பாட்காஸ்டிங்’ வழியாகவும் பணம் சம்பாதிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
சில உதாரண வானொலிகள்
இந்த கரோனா காலத்தில் நான் தொடங்கிய வானொலி ‘தமிழ் சிறுகதைகள்’ (https://anchor.fm/tamilsirukathaikal). இந்த வானொலியில் இதுவரை தமிழின் மிக முக்கியமான 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் கதைகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த கரோனா காலத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒலிபரப்பாகிவரும் மற்றுமிரு ‘பாட்காஸ்டிங்’ வானொலிகள் ‘பொன்னியின் செல்வன்’ (http://anchor.fm/uma-chari), ‘மழலையர் உலகம்’ (http://anchor.fm/aysha-thameem5). இந்த இரண்டு வானொலிகளும் தொழில்நுட்பம் தெரிந்த புலிகளால் தொடங்கப்பட்டதல்ல; ஆர்வம் கொண்டவர்களால் தொடங்கப்பட்டதாகும். ‘பொன்னியின் செல்வன்’ உமா சாரியால் திருச்சியிலிருந்தும், ‘மழலையர் உலகம்’ கோவையிலிருந்து தஸ்லீமா பர்வீனாலும் ஒலிபரப்பப்பட்டுவருகிறது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ என்றாலே பலர் அது பெரிய புத்தகம் என்று பயப்படுவார்கள். ஆனால், அதை மிக அழகாகவும் எளிமையான தொனியிலும் வாசித்துள்ளார் உமா சாரி. ‘மழலையர் உலகம்’ வானொலியை, கொஞ்சும் தமிழில் ஒலிபரப்பிவருகிறார் தஸ்லீமா. இவர்களைப் போல உங்கள் பகுதியில், உங்கள் மக்களுக்காக நீங்களும் ஒரு ‘பாட்காஸ்டிங்’ வானொலியைத் தொடங்கலாம்!
- தங்க.ஜெய்சக்திவேல், உதவிப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: bbcsakthi@gmail.com
No comments:
Post a Comment