Sunday, July 18, 2021

நெல்லஞ் சோறுதான் வேணும்: கவிஞர் தணிகை

 நெல்லஞ் சோறுதான் வேணும்: கவிஞர் தணிகை



மருத்துவர்களை விட செவிலியர்களும், சத்துணவுக்கான படிப்பு படித்த டையட்டீஷியன்களும் உணவு உட்கொள்ளல் பற்றி நல்ல நல்ல குறிப்புகள் தருகிறார்கள்.


வெண் சர்க்கரை, மைதா, பேக்கரி பொருட்கள், அரிசி உணவு, போன்ற வெள்ளை நிறப் பொருட்களை தவிர்த்து சிறு தானியப் பயிர்களுக்கு மாறுவது சிறந்தது.


நார்ச்சத்து உள்ள பொருட்களே நல்லது கோதுமை உட்பட‌


காய்கறிகளை அதிகம் சேர்த்து அரிசி உணவை குறைவாக உட்கொள்ளல் நல்லது

உடனே இல்லத்தரசி எதைச் சாப்பிட்டாலும் அதற்கேற்ற உடல் உழைப்பு இருந்தால் எல்லாம் நல்லதே...


 முறை சாராக் கல்வி வழியில் பயின்ற எனது தந்தை சுப்ரமணியன் அவர்களும்  பள்ளியிலேயே கால் வைக்காத படிக்காத தாய் தெய்வானை அவர்களும் மிக நன்றாகவே எங்களை வளர்த்து செம்மை செய்துள்ளனர். கல்வி என்பதற்கும் அறிவு என்பதற்கும் கூட இடைவெளி இருக்கிறது.


சிறுவர்களாக இருக்கும் போது நெல்லஞ்சோறுதான் வேணும் என நான் அடம் பிடித்து ஆரியக் களியை(ராகி, கேழ்வரகு ) கம்மஞ்சோற்றையும் நான் நிராகரித்தது உண்டு... உழவர்கள் தங்கள் உணவாக நெல்லஞ்சோற்றை விஷேச திருவிழா நாட்களில் மட்டுமே கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


அதன் அருமையை இப்பொது உணர ஆரம்பித்து விட்டோம். அதன் விலை செயற்கை உரம் போடாத அதன் விலை இப்போது பருத்தி ஆடை போல, நாட்டுச்சர்க்கரை பனை வெல்லம் போல உயர்ந்துள்ள நிலையில்.


ஆரியக் களி உருண்டையில் குழி செய்து பனை வெல்லச் சீவலைப் பொடி செய்து போட்டு அதில் நெய், அல்லது நல்ல எண்ணெயை விட்டு கொடுப்பார்கள் பாருங்கள் ஆஹா அதன் அருமை எந்த உணவுக்கு வரும்? அதே போல அந்த  ஆரிய மாவில் பனை வெல்லம் போட்டு ஆட்டி இனிப்பு தோசை சுட்டுக் கொடுப்பார்கள், கோதுமை மாவில் கூட பனை வெல்லம் சேர்த்த போண்டா மிகவும் பிரமாதமாக சுவையுடன் இருக்கும்


நாட்டுக் கம்பு தவிட்டுக் கம்பு, மேட்டாங் காட்டுக் கம்பு அல்லது விவசாய முட்டைக் கம்பு என இருவகை, நாட்டுக்கம்பு எனப்ப்படும் தவிட்டுக்கம்பை  இடித்து கம்மஞ்சோறு செய்தால் அதன் வாசம் கம கம வென மூக்கை துளைக்கும்...அப்படி இடிக்கும் போது சிறிது எடுத்து பிரித்து அதிலும் பனை வெல்லம் போட்டு இடித்து அருகிருக்கும் சிறு பிள்ளைகளான எங்களுக்கு கொடுப்பார்கள் மாலை வேளை டிபன்... கொழிஞ்சிப் பழம் கூட மாலை வேளையில் ஆளுக்கு ஒன்றாக டிபனாக கிடைக்கும் மரத்தில் இருந்ததால்...


மிகவும் நைஸாக இடித்து கொழித்து அதைக் கொஞ்சம் எடுத்து கொடுப்பார்கள் அந்தக் கம்பு தானியமணியின் கடைசி மாவு வடிவம் தொண்டையில் பட்டு சிலு சிலு வென உள் இறங்கும் பாருங்கள் அதன் சுகமே அலாதி...எளிதில் கிடைக்கத இன்பம் நொங்கு சாப்பிடுவது போல... பதநீர் தெளிவு குடிப்பது போல‌


கொள் சட்டினி, மொச்சைக் கொட்டைக் குழம்பு என வைக்கும் போது அதை வேகவைத்து நீரை வடித்து இறுத்து மூட்டுக் கொடுப்பார்கள் சிறுவர்களுக்கு என அதற்காகவே குழம்புக்கு என போடும் அளவை அதிகமாகப் போடுவார்கள் அன்று மொச்சைக் கொட்டைக் குழம்பும் கத்தரிக்காய் என்றிருந்தால் அது அடுத்த நாள் வரை தாங்கும் மேலும் அன்று தனியாகப் பொறியல் தேவையில்லை...(கண்ணதாசன் உருளைக் கிழங்கையும் தட்டைப் பயிரையும் தவிர்க்க சொல்லியதும் நினைவில் கொள்க)


உளுத்தம் பருப்புக் கஞ்சி எங்கள் வீட்டில் ரொம்ப பேமஸ்...அதில் சிறு சிறு துண்டுகளாக தேங்காய் துண்டுகளும் இடம் பெறும்...சரியான சத்துணவு... அதிலும் பனை வெல்லம் தான் ...


நான் அந்த வாழ்க்கையை இழந்து விட்டேன் இருந்த போதிலும் எனது காலத்திலும் மலையில் பணி புரிந்த போது நரிப்பயறு எனது தம்பிகள் கொடுப்பார்கள் அதை இடித்து மாவாக்கி உருண்டையும், தினை அரிசியை முருகனுக்கு உகந்த நாட்களில் தேனும் தினை மாவும் என தினைப்புனத்து நாயகி வள்ளிக் குறத்தியை நினைவு கொள்ளும் வகையில் எங்கள் வீட்டிலும் தினை மாவு இடித்து படைத்த இனிய சம்பவங்கள் யாவும் எனது தாயோடு போயிற்று...எள்ளிடி என்ற எள் உருண்டை...கோதுமை அல்வா, தேங்காய் எண்ணெய் அதிரசம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...


தேங்காய் நன்கு துருவி அதில் சர்க்கரையை சேர்த்து ஒரு தாம்பாளத்தில் இராமலிங்க வள்ளலார் பிறந்த நாளுக்கு என பொதுவுக்கு கொடுத்து விட்டு தட்டில் மீதம் வைத்து அவர்கள் விழாக்குழுவினர் கொடுக்காமல் எனது குழந்தைகளுக்கே அது கிடைக்கவில்லை என பொது  வாழ்க்கையை விட்டு, எங்கள் குடும்பத்தின் குழந்தைகளுக்கே தம் வாழ்வை அர்ப்பணித்த...எங்கள் வீட்டில் 5 பெண்கள், 3 ஆண்குழந்தைகள் பெற்றோருடன் சேர்த்து 10 பேர் அந்த பியர்ட்செல் என்ற இங்கிலாந்து சார்ந்த கம்பெனி வேலையால் உருப்பெற்றோம் அனைவரும் நன்றாகவே இருக்கிற நிலையை எனது பெற்றோர் உருவாக்கி விட்டனர் இதுவும் ஒரு உலகாதய சேவைதான்... ஒரு வேர் பல கிளைகள் பல மரங்கள் பூவும் பிஞ்சுமாக காய்த்து குலுங்கி வர...நல்லெண்ணம் உடையோர் வாழ்வு வாழையடி வாழையாக...அருகு போல் தழைத்துப் பரவி ஆல் போல் பரவித்  தழைத்து...


வாழ்த்துகள்  வணக்கங்கள் நண்பர்களே...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


























No comments:

Post a Comment