Wednesday, May 12, 2021

பிரபலங்களின் தொடர்புகள்: கவிஞர் தணிகை

 பிரபலங்களின் தொடர்புகள்: கவிஞர் தணிகை



நேற்று எனது மறுபடியும் பூக்கும் தணிகை மணியம் யூ ட்யூப்பில் மறுபடியும் பூக்கும் புத்தக வெளியீடு பற்றி குறிப்பிடும் போது வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் எம்.ஜி.ஆருக்கு சற்று நெருக்கமாக இருந்து தாய் என்னும் வார இதழை நடத்திக் கொண்டிருக்கும் போது எனது கவிதைகளை அனுப்பி வைக்கச் சொல்லி அவருடைய "கவிதா பானு" என்ற நிறுவனத்தின் வழியாக வெளியிடுவதாகவும் சில நிபந்தனைகளுடன் கேட்டிருந்தார். அதைச் சொல்ல மறந்ததால் இந்தப் பதிவுக்கு அவசியமாகி விட்டது



அவை எனக்கு ஒத்து வரும் என்று தோன்றாததால் பிற பதிப்பகங்களை எல்லாம் நாடிவிட்டு, அதன் ஒரு முனையில் மீரா பதிப்பகம் புதுக்கோட்டை அவர்களுடன் எனக்கு நேர்ந்த அனுபவங்களைக் குறிப்பிட்டு இருந்தேன். ஈரோடு புத்தகத்திருவிழாவுக்கு வந்திருந்த கௌரா ஏஜன்ஸி கூட உங்கள் கருத்துகளை எடுத்து வாருங்கள் புத்தகம் செய்யலாம் என பின் நாளில் அதாவது நான் ஈரோடு புத்தகத் திருவிழாவில் எனது புத்தகங்களையும் போட்டு விற்பனை செய்த ஆண்டில் பேசியதாக நினைவு. ஆனால் அதுவும் ஏனோ எந்த காரணத்தாலோ தள்ளிப் போக விட்டாகி விட்டது. 



ஆனால் அப்போது இது போல எவரிடம் எல்லாம் நாம் சிறு சிறு தொடர்புகள் கொண்டிருந்தோம் என எண்ணிப் பார்க்க வேண்டியதாயிற்று: சுஜாதா ஒரு  நாவல் எழுதுகையில் தணிகை என்ற ஒரு கேரக்டரை நாயகனாக அதிக  சந்தேக புத்தி உள்ளவனாக செய்திருப்பார் கதையின் பெயர் மறந்து விட்டது..



நாம் என்ன நூல் செய்தாலும் அதை உரிய முறையில் செய்து இந்தியாவில் உள்ள மும்பை பொது நூலகம், கொல்கொத்தா தேசிய நூலகம் பெல்வடார் ,கன்னிமாரா சென்னை,டெல்லி பொது நூலகம்,அண்ணா நூற்றாண்டு நூலகம், போன்ற நூலகங்களுக்கு 2 நூல்கள் அனுப்பி ஒப்புகை சீட்டு பெற்று வைத்திருப்பது சிறந்தது. அதன் படி எனது நூல்களை அனுப்பி அப்படி ஒப்புகை சீட்டு பெற்று வைத்துள்ளேன்



லேனா தமிழ்வாணன் வெட்டி பந்தா எல்லாம் இல்லாமல் எப்போதும் தம்மை மதிப்பவருக்கு அவரது பதிலை எழுதுவார் அப்படி சில அவர் எழுதிய சில கடிதங்கள் எனக்கும் உண்டு



சுந்தர ராமசாமி ஒரு முறை இப்போதைய இளைஞர்கள் எல்லாம் காதலிப்பது இல்லை என்று பேட்டி கொடுத்திருந்தார் அதைப் பார்த்து அப்படி எல்லாம் இல்லை உங்கள் பார்வைக்கு மாறாக இப்போதும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என எழுதி அவரும் எனக்கு பதில் எழுதி, அவரின்" ஒரு புளிய மரத்தின் கதை, ஜெ ஜெ. சில குறிப்புகள்" என்னிடம் வந்து சேர்ந்தன.



ஒரு திருமணத்தில் மலைச்சாமி ஐ.ஏ.எஸ்  அவர்களை சந்தித்து நூல் பரிமாறி உரையாடினோம். நன்றாகப் படித்து அதைப் பற்றி ஒரு கடிதம் எழுதி வியக்க வைத்தார். கொஞ்ச நாள் எம்.பியாக இருந்தார் சீக்கிரம் மறைந்தார்.



தாரமங்களத்தில் அரட்டை அரங்கம் வந்து நடத்திய விசுவுக்கும் எனக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்டு சில கடிதங்களைப் பரிமாறிக் கொண்டோம். அவர்தாம் முதலில் லிட்டில் திங்க்ஸ் மேக்ஸ் பர்வெக்சன் பட் பெர்வெக்சன் ஈச் நாட் லிட்டில் திங்...என தமது கடித தலைப்பில் பயன்படுத்தி இருப்பதை முதன் முதலாக அவரிடம் இருந்துதான் பார்த்தேன்...



அவரின் சீடராகவும் உறவினராகவும் இருந்த பாஸ்கர் ராஜ் உடன் அகடவிடகம் பவானியில் செய்கையில் எனக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட எனது "அளவுக்கு மிஞ்சினால் " நூல் அவரால் மெச்சப் பட்டது. மறுபடியும் புதுக்கோட்டை ஒளிப்பதிவுக்கு அழைத்தார் உடல் நலம் இடமளிக்காது என மறுத்துவிட்டேன். இவரின் அகட விகட நிகழ்வில் பேசியபோது வி.ஜி.பி. செல்வராஜ் என நினைக்கிறேன், அவர், நடிகர் சந்திரசேகர்,அறிஞர் அப்துல்காதிர் ஆகியோருடன் நல் தொடர்பு ஏற்பட்டது. அப்துல் காதிர் மிகவும் உயர்ந்த பேச்சு என என்னுடையதைக் குறிப்பிட்டார்.



அகடவிகடத்தில் பேசியதால் மறுபடியும் என்னை தாரமங்களம் நிகழ்வுக்கு பிறகு தலைவாசல் போன்ற நிகழ்வுக்கு அவர்களாகவே அழைத்தும்  என்னை அவர்கள் நிகழ்வில் பேசவிடவில்லை. விசுவுக்கும் பாஸ்கரராஜுக்கும் அந்தளவு போட்டி பொறாமை ஏன் ஏற்பட்டது என்றுதான் எனக்கேத் தெரியவில்லை.



டாக்டர் குழந்தைசாமி  சிகாகோவில் ஒரு தமிழ் மாநாடு நடப்பதாக சொல்ல அவருடன் நான் கடித வழி, தொலைபேசி வழி தொடர்பில் இருந்தோம். அப்போதுதான் நான் கலாமின் கடிதத்தோடு சிறு பிள்ளைகளுக்கான "தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள்" என்ற நூலை பரப்ப முயன்று வந்தேன்...அந்த ஒருங்கிணைப்பாளர் செலவு ஏதும் தரமுடியாது நீங்கள் உங்கள் சொந்த செலவில் வேண்டுமானால் வரலாம் என்ற காரணத்தால் அந்த புறப்பாட்டைக் கைவிட்டேன். ஆனால் அப்போது குழந்தை சாமி அவர்களின் நட்பு சிறிது காலம்



கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டுக்கு பார்வையாளராக வாருங்கள் என அழைப்பு வந்தது, கலாம் கலந்து கொள்ள அழைக்கப் படவில்லை என்ற குறையும்,  எனது நெருங்கிய நண்பராக அப்போது இருந்த ஒருவர் போட்ட தடையும் அதில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று. ஆனால் எனது தூண்டு உணர்வால் ஒரு நூல் வெளியிட்ட விருமாண்டி என்ற பாரதிய வங்கி மேலாளர் அங்கே சென்று அவர் புத்தகத்தையும் "ஞான உதயன் " என்ற பேரில் "இறைவனும் மனிதனும்" என்ற பேரில் வெளியிட வாய்ப்பாயிற்று.





State Bank  தனிக் கணக்கு மேலாளராக இருந்த மா.ஜார்ஜ் மணோகரன் அவர்கள் எனக்கு பெரிய ரேப்பர் போட்ட பைபிளை  நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் இருந்தால் நீங்கள் கேட்டதெல்லாம், விரும்பியதெல்லாம் நடக்கும் என்ற வார்த்தைகளை எழுதி கையொப்பமிட்டு " வார்த்தை கடவுளாயிருந்தார்" என்ற யோவானின் வார்த்தையுடன் பரிசளித்தார்










பொன் மாணிக்கவேல் சேலம் காவல் துறைக் கண்காணிப்பாளராக இருக்கும்போது கருமலைக்கூடல் காவல் நிலையக் கட்டடத்தை ஒரு டி.ஐ.ஜி. திறக்க வந்திருந்த போது மதுவிலக்குக்கு ஆதரவாக கையொப்பமிடுங்கள் எனக் கேட்க அவரோ , அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக எப்படி ஒரு அரசு ஊழியரான தான் கையொப்பம் இட முடியும் என அன்புடன் விளக்கம் தந்தார்.




மிக நெருக்கமாக சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.எப். பாரூக்கி அவர்களுடன் பழக வாய்ப்பு வந்ததது. அவர்தாம் முதன் முதலில் சேலத்துக்கு மேம்பாலம் தந்தவர், நள்ளிரவில் பேருந்து நிலையத்தை தற்போதிருக்கும் அர்ச்சுவான் ஏரிக்கு மாற்றி அந்த பெரும் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தவர், அவர் நான் எதிரில் வந்தால் காரை நிறுத்தியும் கூட என்னுடன் பேசாமல் செல்லாத குணவானாக இருந்தார். அவர் அதன் பிறகு மத்திய அரசின் கீழ் தொழிற்சாலை செயலராக இருந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன்.



அவருடன் செயல்படும்போதுதான் க.ராசாராம் அவர்களின் மூத்த சகோதரர் ஜெயசீலன் அவர்களுடன் அப்போது அவர் சேலம் மாவட்ட கைப்பந்துக் கழக தலைவராகவும் இருந்தார் அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது அவர் எனது புத்தகம் ஒன்றை சேலம் தமிழ் சங்க வழியாக வெளியிட துணை செய்தார் ஆனால் எனது கா.வை.பழனிசாமி என்பாரின் வெளிப்படையான புத்தக‌ விமர்சனம் ஒன்றால்  அந்த முயற்சியை  அந்த வங்கியில் பணிபுரிந்தவரும் அப்போது  சேலத்து தமிழ் சங்க நிர்வாகிகளை உறவினராகப் பெற்றிருந்தவருமான கா.வை பழனிசாமி அதை தடை செய்து விட்டார். சிரித்துப் பேசிய அந்த சந்திப்பு  என்றும் கசந்துபோகும்படியாக மாறிப்போனது .பாம்பின் கால் பாம்பறியும் என்னும்படி இந்த நாட்டில் தமிழ் எழுத்தாளர் ஒருவர்க்கொருவர் எப்படி துணைபுரிய மாட்டார் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு என்பதை உணர்ந்து கொண்டேன்.



ஹோகேனக்கல் கவிதைப் பட்டறை வாருங்கள் என்றார்கள், நிறைய பேர் ஜெமொ, சாருப்ரபா சுந்தர் (அரைக்கால் சட்டை பிரபலம்)விக்ரமாதித்யன் இப்படி நிறைய பேர் வந்திருந்தார்கள். இரண்டு நாள் நிகழ்வு முதல் நாள் முடியுமுன்பே போதுமடா சாமி உங்கள் சகவாசம் என பிய்த்துக் கொண்டு ஓடி வந்து வீடு சேர்ந்தேன். ஏன் எனில் எல்லாம் தாக சாந்திக்காகவே வந்திருந்தது போல் இருந்தது. முதல் சுற்றில் அவரவர் அவ்வப்போதைய எழுதிய கவிதையை சமர்ப்பித்து கலந்துரையாடலாம் என்றவர்கள் முதலில் இருந்த புதிய நபர்கள் அப்படி முயற்சி செய்து சமர்ப்பிக்கையில் பிரபலமானவர்கள் எல்லாம் அவரவர்கள் ஏற்கெனவே எழுதிய கவிதையை சமர்ப்பித்தார்கள்.இப்படி முதலில் இருந்தே முரண்பாடுகள்...இருந்தாலும் சிலருக்கு எனது புத்தகத்தை பரிசளித்தேன் விக்ரமாதித்யன் எனக்கும் ஒரு புத்தகம் கொடுங்கள் எனக் கேட்டு வாங்கிக் கொண்டார். இவர் நான் கடவுள் வயோதிகப் பிச்சைக்காரராகவும் இப்போதைய சுல்தானில் கூட கார்த்திக்கிடம் விவசாயம் பற்றி உரைப்பவராகவும் வருகிறார். இவர் எல்லாம் இன்னும் இருப்பதில் என் போன்றோர்க்கு மகிழ்வே. ஏன் எனில் நரை விழுந்து, பல் போய், சரியான உணவு கூட அக்கறையின்றி மதுவுக்குள் மாய்ந்து போனவராக காணப்பட்டார்.



ஏன் பெரும்பாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் இப்படி போதைக்கு அடிமையாகி மனித வாழ்வை தொலைத்து விட்டு உடலையும் கெடுத்துக்கொள்கிறார்களோ அதனால் தாம் என் போன்றோர் சினிமாத் துறைக்கே செல்ல வில்லை என்பதையும் எப்போதும் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு...விதிவிலக்கு: சிவகுமார் அவர்கள்


ஈரோடு புத்தக கலைவிழாவில்: நிறைய பிரபலங்கள் பேசுவதைக் கேட்க சென்றோம். 2 முறை மகனுடன் கலாமை பார்க்க, ஒரு முறை சிவகுமார் பேசுவதையும் கேட்டோம், நெஞ்சுருகிப் போனது அவருடைய புத்தகங்கள் உண்மையைப் பேசியது.



எங்கள் இயக்க சசி பெருமாள் உண்ணா நோன்பிருந்த  போது சசிக்குமார் நினைவுடன் சிவக்குமார் அவரை வந்து சந்தித்தது மனித நேயத்தை அவர் எவ்வளவு மதிக்கிறார் மரியாதை செய்கிறார் என்பது தெரிந்தது.


சில முறை நான் எழுதிய முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவுப் பிரச்சனைக்கு கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகவும் நல்ல செயல்பாட்டை தீர்வாகத் தந்தார்கள். அதையும் மறக்க முடியாது.


எல்லாவற்றையும் விட சிகரத்தின் உச்சிக்கு என்னை நினைக்க வைப்பது: கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது எனக்கு எழுதிய கடிதம், அவருக்கு எனது புத்தகங்களை சேர்ப்பித்தது,


இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1988 வாக்கில் இருந்த பிரபல்ல குமார் நட்வர்லால் பகவதி அவர்தாம் பி.என்.பகவதி அவர்கள் அவையில் சேவையாளருக்கு அரசு தரப்பில் என்ன மரியாதை கிடைக்கிறது இன்னும் மக்களுக்கு எப்படி சேவையைக் கொண்டு செலுத்துவது போன்றவற்றை பேசி இந்த வாய்ப்பே எதிர்பாராத போது திடீரென கிடைத்த வாய்ப்பாக இருக்க ஆங்கிலத்தில் சில நிமிடம் பேச நேர்ந்தது அது மட்டுமின்றி அன்று ஹைதராபாத் ரிட்ஜ் ஹோட்டலில் மதிய உணவும் சுமார் அரை நாள் அவருடன் இருந்து பல்வேறுபட்ட நாடு சார்ந்த முன்னேற்றம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி கலந்தளாவியது...

இவை யல்லாமல் சேலத்தில் ஒரு தமிழ் சங்க நிகழ்வில் சாலமன் பாப்பையா,அப்துல் ரஹ்மான், மு.மேத்தா,சிலம்பொலி செல்லப்பன் அனைவரையுமே சந்தித்து எனது நூலை பரிசளித்துள்ளேன்...இப்படியே செல்லும் இந்தப் பயணத்திற்கு....



இப்போதைக்கு இது போதும்,இன்னும் ஏதுமிருப்பின் பின் நாள் ஒருநாள் தொடர்வேன் என்று சொல்லி

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை






No comments:

Post a Comment