Saturday, July 27, 2019

மேற்கத்திய நாடுகளின் குப்பைத்தொட்டியாகும் ஆசியா

தெரிந்தோ தெரியாமலோ உலகில் நடக்கும் பல சம்பவங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சீனா சம்பந்தப்பட்டு விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.






மேலை நாடுகளில் கழிவு மேலாண்மை மிகவும் சவாலான விஷயம். இங்கு இருப்பது போன்று கழிவுகளை தரம்பிரிக்கவோ, மறுசுழற்சிக்கு அனுப்பவுதற்கோ அவர்களுக்கு நேரமும் இல்லை, மனதும் இல்லை. எனவே அவற்றை கப்பலில் வைத்து ஆசிய நாடுகளுக்கு அனுப்பி விடுகின்றனர்.இதுவரை அந்த கழிவுகளை சீனா இறக்குமதி செய்து வந்தது. அதை மறுசுழற்சிசெய்து பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்தது. ஆனால் வரும் கழிவுகளுடன், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நச்சுக் கழிவுகளும் அதிகம் வரத்துவங்கின. இவற்றை மறுசுழற்சி செய்ய முடியாதது மட்டுமின்றி அழிப்பதிலும் பிரச்னைகள் எழுந்தன. இதையடுத்து 2018 ம் ஆண்டு முதல் பிற நாட்டு கழிவுகளை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்தது. இந்த தொழிலில் கோடிகளை சம்பாதித்துக்கொண்டிருந்த மேலை நாட்டு ஏற்றுமதி நிறுவனங்கள் விழி பிதுங்கிப்போயின. இதையடுத்து வளரும் நாடுகளை வளைத்துப்போட்டு வருகின்றன. துறைமுக அதிகாரிகள், சுங்கத்துறையினர் உள்ளிட்டோரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து வேறு பெயரில் அனுப்பி வருகின்றனர். தற்போது அதற்கும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.





காகிதக்கழிவு பெயரில் ஏற்றுமதி


இந்தோனேஷியாவின் சுரபயா துறைமுகத்துக்கு அண்மையில் ஆஸ்திரேலியாவிலிருந்து எட்டு கண்டெய்னர்கள் வந்தன. அவற்றில் 218 டன் கழிவு காகிதங்களை அனுப்பியுள்ளதாக 'ஓஷியானிக் மல்ட்டி டிரேடிங்' என்கிற ஆஸ்திரேலிய நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் சில சுங்க அதிகாரிகளுக்கு அதன் மீது சந்தேகம் ஏற்பட்டது. கண்டெய்னர்களை திறந்து பார்த்தனர். அவற்றில் பாலிதீன் பைகள், எலக்ட்ரானிக் -கழிவு பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள், டயபர்கள் என மாசுபடுத்தும் கழிவுகளே இருந்தன. இதையடுத்து அந்த எட்டு கண்டெய்னர்களையும் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்பினர். கம்போடியாவின் தென்மேற்குத் துறைமுகமான சிஹானோக்வில்லேவில் கடந்த வாரம் 83 கன்டெய்னர்கள் வந்திறங்கின. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்கள் என்ற பெயரில் வந்த அந்த கன்டெய்னர்களில் பாலிதீன் கழிவுகள் 1,600 டன் இருந்தன.





திருப்பி அனுப்பிய கம்போடியா

இவற்றில் 70 கன்டெய்னர்கள் அமெரிக்காவிலிருந்தும், 13 கன்டெய்னர்கள் கனடாவிலிருந்தும் அனுப்பப்பட்டிருந்தன. அவற்றை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். கம்போடியா, இந்தோனேசியாவில் மட்டுமல்ல, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் காகிதம் என்ற பெயரில் அனுப்பப்பட்ட கழிவுகள் பிடிபட்டுள்ளன. ஏற்கனவே பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட 49 பெட்டகங்களை இந்தோனேசியா சில வாரங்களுக்கு முன்பு திருப்பி அனுப்பியது. மே மாதம் 450 டன் பிளாஸ்டிக் கழிவுகளை மலேசியாவும், கடந்த மாதம் கனடாவிலிருந்து வந்த குப்பைக் கழிவுகளை பிலிப்பைன்சும் திருப்பி அனுப்பியுள்ளன.முன்பு கழிவுகளின் கிடங்காக ஆப்பிரிக்க நாடுகள் இருந்தன. தற்போது ஆசிய நாடுகள் மீது மேலை நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தான் கழிவுகளின் குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.





இங்கு நடந்தது என்ன

இதுவரை இந்தியாவில் துாத்துக்குடி துறைமுகத்துக்கு 2005-ஆம் ஆண்டு வந்து இறங்கிய 25,000 டன் பழைய கழிவுகள் பிடிபட்டது தான் அதிக அளவாக கருதப்படுகிறது. அதன் பின் பெரிய அளவில் எதுவும் பிடிபடவில்லை. ஆனால் குப்பைகள் வந்து இறங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே இங்குள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்தும் குப்பைகளால் நிரம்பி நிலத்தடி நீரை அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டன. இந்நிலையில் கழிவுகளை இறக்குமதியும் செய்து மேலும் சூழலை கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கவனிக்கப்படுவதும், அதில் கிடைக்கும் வருமானத்தால் அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுமே இதற்கு முக்கிய காரணம். இதே நிலை நீடித்தால் மேலை நாடுகளில் குப்பைத்தொட்டியாக ஆசியா மாறுவதை தடுக்கவே முடியாது.





கட்டுப்படுத்த சட்டம் இல்லை


அண்மையில் நார்வேயில் கழிவு மேலாண்மை குறித்து கூட்டம் நடந்தது. 185 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் கழிவுகளைக் கையாள்வதில் பல கோடி ரூபாய் புரள்வதும், அந்த நிறுவனங்கள் எந்தவித சட்டங்களுக்கும் உட்படவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியும் வெளியிடப்பட்டது. கழிவு மேலாண்மைக்கென எந்த சர்வதேச சட்டமும் இல்லை. எனவே அதை மேலை நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கான சட்டம் உருவாக்குதல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே மேலைநாடுகளின் குப்பை தொட்டியாக ஏழை நாடுகள் மாறுவது தொடர்கிறது.

நன்றி: தினமலர்

No comments:

Post a Comment