Thursday, February 4, 2016

இன்னும் 20மாதங்களில் உலகின் மிக உயரமான கடிகார கோபுரம் இன்போஸிஸ் மைசூரில்: கவிஞர் தணிகை

இன்னும் 20மாதங்களில் உலகின் மிக உயரமான கடிகார கோபுரம் இன்போஸிஸ் மைசூரில்: கவிஞர் தணிகை.

மிக அரிய செய்தியை பகிர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் நமது மறுபடியும் பூக்கும் தளமும்  பெருமை கொள்கிறது.

உலகிலேயே மிக உயரமான தனித்து நிற்கும் கடிகார கோபுரத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தங்களது பயிற்சி மையத்தில் அமைக்கவிருப்பதாக இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.




மைசூருவில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வி மைய வளாகத்தில் தனித்து நிற்கும் இந்தக் கோபுரம் அமைக்கப்படும் என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
சுமார் 135 மீட்டர் உயரத்தைக் கொண்டதாக இருக்கும் இந்தக் கடிகாரக் கோபுரத்தின் அடித்தளம் 22 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.
லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரக் கோபுரம் 96 மீட்டர் உயரமே உடையது என்ற நிலையில், இந்தக் கோபுரமே உலகின் மிக உயரமான தனித்து நிற்கும் பெரிய கடிகார கோபுரமாக அமையயும்.
எனினும் பிக் பென் கடிகாரத்தின் மணியோசை போன்று இந்த கடிகாரமும் ஒலி எழுப்புமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உலகம் முழுவதும் பெரும்பாலான மணிக் கூண்டுகளில் இயந்திரக் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் கோபுரத்தில் டிஜிட்டல் கடிகாரம் பொறுத்தப்படவுள்ளது என அந்த நிறுவனம் கூறுகிறது.
கோபுரத்தின் உச்சியில் எடையை குறைக்கும் ஒரு நடவடிக்கை இது என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உட்கட்டமைப்பு பிரிவின் துணைத் தலைவர் ராமதாஸ் காமத் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
"உலகிலேயே மிகப் பெரிய கார்ப்பரேட் பயிற்சி அமைப்பு இங்கே இருப்பதால், உலகிலேயே மிகப் பெரிய கடிகாரக் கோபுரத்தை இங்கே அமைக்க விரும்பினோம். இவ்வளவு பெரிய கல்வி நிறுவனம் இங்கிருக்கும்போது, குறிப்பிடத்தக்க வகையில் ஒரு கடிகாரக் கோபுரம் இருக்க வேண்டுமென்றும் விரும்பினோம். உலகம் முழுவதும் முக்கியமான பல்கலைக்கழகங்களில் அப்படித்தான் இருக்கிறது" என்றார் ராமதாஸ் காமத்.
கோதிக் பாணியில் கட்டப்படவிருக்கும் இந்தக் கோபுரம் 19 மாடிகளைக் கொண்டதாக இருக்கும். இதில் கூட்ட அறைகள், நூலகம், பார்வையாளர் மாடம் போன்றவையும் அமைந்திருக்கும்.
உலகின் மிகப் பெரிய பணியாளர் பயிற்சி மையம் இங்கே இருப்பதால், மிகப் பெரிய கடிகார கோபுரத்தையும் இங்கே அமைக்க விரும்பியதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
சுமார் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்தக் கோபுரம், 20 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகுதி பகுதியாக இந்தக் கோபுரம் செய்யப்பட்டு, மைசூருவில் பொறுத்தப்படவுள்ளது.
"பாரம்பரியக் கட்டடக் கலையும் தொழில்நுட்பமும் இணைந்த கலவை அது. மேலும் டிஜிடல் கடிகாரத்தைப் பொறுத்துவதால், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை அந்தக் கடிகாரத்தில் தெரியச் செய்ய முடியும். ஒரு கடிகாரத்தின் அகலம் என்பது சுமார் ஒன்பதரை மீட்டராக இருக்கும் நிலையில், சாதாரண கடிகாரமாக இருந்தால் எடை மிக அதிகமாக இருக்கும்" என்கிறார் ராமதாஸ் காமத்.
மைசூரில் 10,000 அறைகளுடன் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸின் பயிற்சி மையம் உலகின் மிகப் பெரிய தொழில்துறை பயிற்சி மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


நன்றி
வெப்துனியா
பிபிசி தமிழ்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment