Monday, October 5, 2026

ஒரு கிலோ குச்சுக்கிழங்குக்காக ஓராண்டாக தவம்: கவிஞர் தணிகை

 ஒரு கிலோ குச்சுக்கிழங்குக்காக ஓராண்டாக தவம்: கவிஞர் தணிகை



உரம் போடாத இயல்பான குச்சுக் கிழங்கு நல்ல ருசியுடன் இருக்கும், வேகவைத்து உண்ணவும், அதை மீண்டும் தாளித்து சுவை சேர்த்து உண்ணவும்...அது ஒரு ஓராண்டுப் பயிர்.


 நடைப்பயிற்சியின் போது சுமார் ஓராண்டுக்கும் முன் ஒரு முதிய காட்டுக் குத்தகைக்காரப் பெண்ணிடமிருந்து அவ்வப்போது புதிதாகப் பிடுங்கி எடுத்த கிழங்கை ஓரிரு முறை வாங்கி உண்டு சுவைத்து அனுபவித்தோம்.கிலோ ரூ.30 என.ஆனால் சுமார் ஒன்னரைக் கிலோ வரைகூட கொடுத்தார்கள் ஒரு கிலோ விலையிலேயே. தோட்டத்தில் நேரடி விற்பனை.


அத்துடன் விட்டோமா? அந்த கிழங்கு எடுத்த பின் இருக்கும் குச்சியை நட்டு வைத்தால் ஓராண்டுக்கும் பின் நல்ல கிழங்கு விளைச்சல் இருக்கும் என்றதால் அதை வெட்டி கணுக்களுடன் சிறு சிறு துண்டுகளாகச் செய்து  சுமார் ஆறெழு இடங்களில் வீட்டின் முன் இடத்தில் நட்டு வைத்தேன். மீதமானதை பக்கத்து வீட்டிற்கும் நடச் சொல்லி பகிர்ந்தளித்தேன்.


காலம் ஓராண்டுக்கும்  மேல் ஓடிவிட, பக்கத்து வீட்டார் நல்ல விவசாய குடியானவக் குடும்பம், நல்ல தளர்வான மண்வளம் வேறு அவர்களுடையது. நட்டு வைத்து வளர்த்தார்கள். வளர்ந்தது.சில மாதங்களுக்கும் முன் பார்த்துப் பேசுகையில் சொன்னார்கள், அண்ணா, பெருக்கானோ(பெருச்சாளி) பன்றியோ செடியை நோண்டி விட அதைப் பிடுங்கிப் பார்க்க ஒரெ செடியில் சுமார் இரண்டரைக் கிலோ வரை கிழங்கு இருந்ததென்று சொன்னார்கள்.


நாம் நெகிழ்வுடன் இளகிய மனம் படைத்தவர் ஆனால் நமது மண் அப்படி இல்லை. சிமென்ட் சாலை அமைக்கையில் வீட்டின் முன் இருந்த மின் கம்பம் மண் திட்டின் மேல் இருந்ததால அது மழை மண் அரிப்பில் ஏதாவது சாய்ந்து அபாயம் விளைத்திடக் கூடும் என எண்ணி, சாலை அமைக்கும் ஒப்பந்ததார வேலைக்காரத் தம்பி ஒருவரிடம் கம்பத்தடியில் கொஞ்சம் கலவைக் கொட்டித் தர வேண்டுமென்று வேண்டுகோள் வைக்க அவரும் செய்தார். உடனே நமக்கு நெஞ்சில் உவப்பு.அவருக்கு ஒரு புத்தகம் வேறு சிறு அன்பளிப்பு அன்பின் அடையாளமாய் அந்த ரோடு போட்ட‌ டீமுக்கு காபி டீ கூட கொடுத்ததாக நினைவு பிஸ்கட்களுடன்.


அவர் சாலையில் இருந்து அகற்றிய கற்களுடனான மண் குவியலை வண்டியில் ஏற்றி அப்புறப்படுத்தினால் அது செலவு பிடிக்கும் என்பதால் எம் இடத்தில் கொட்ட அனுமதி கேட்க எவ்வித முன் யோசனையுமின்றி கொட்டிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன். 


அதன் விளைவு கற்களும் சரளையுமானது எங்கள் சிறு காலி இடம். எந்தவித செடியும் மரமும், கொடியும் வருவதாக இல்லை. அதற்காக மெனக்கெட்டு ஏதாவது செய்தாக வேண்டிய நிலைக்கும் முன் ஏதாவது விதை போடுங்களேன் முளைக்கட்டும் என அக்கம் பக்கத்தார் வலியுறுத்த முயற்சி செய்தோம். ஒரு முறை ஏதோ பூச்சிகள் கடித்ததோ, ஒத்தியதோ ஒன்னரை மாதம் சிகிச்சை எடுத்தும் வலது கையில் நமைச்சல், கை தோல் உரிந்து ஒரே களேபரம். ஆங்கில வைத்தியத்தை நமது மருத்துவ சீடர் சொல்லியும் அதன் படி நடந்தும் பிரச்சனை தீராமல் கடைசியில் சிறியா நங்கை இலைகளை சிறிதளவு உண்டு வர விஷக்கடி நீங்கினாற்போல் நீங்கியது. மேலும் மலச்சிக்கல் நேரும்போது அலர்ஜி வந்து அந்த அரிப்பு அவ்வப்போது தோன்றுவதால் தோட்ட வேலைக்கு ஒரே முழுக்கு. அவ்வப்போது சிறிது நீர் காட்டுவதோடு சரி.அனுபவ விவசாயிகள் சொன்னார்கள் அவ்வப்போது நன்றாக கொத்தி விட்டு நிறைய நீர் விடுங்கள் என்றார்கள் கிழங்குச் செடிகளுக்கு மட்டுமல்ல எல்லா செடி கொடிகளுக்கும் வாழைகளுக்கும்.


இராமலிங்க வள்ளலார் பிறந்த இன்றைய  தினத்தில் குறிப்பிடுகிறோம் யாதெனில், அவர் சொல்லியபடி, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடுவதோடு சரி, நீர் கொடுக்க நீரும் இல்லை நமக்குத் தெம்பும் இல்லை.முடிந்ததைச் செய்தோம்.


குச்சுக் கிழங்கு செடிகள் ஆளுயுரம் வந்திருந்தன. மகனைப் பிடுங்கச் சொன்ன போது ஒரு கிலோ தேறியது 6 செடிகளுக்கும் சேர்த்து. ஓராண்டு பராமரிப்புக்குப் பின். ஏன் எனில் செடியின் வேர்கள் மண்ணில் இறங்காமல் இந்தக் கற்புதைகள் அவற்றை தடுத்ததால்.


என்றாலும் நாங்கள் விளைத்தக் கிழங்கு நல்ல ருசியுடன் இருந்தது, உரம் போடாத எங்கள் வீட்டு வளர்ப்புக் கிழங்காயிற்றே...ஒரு முறை ருசி பார்த்தோம் அவ்வளவுதான். நாங்கள் இளகிய மனம் படைத்தவர்கள் நெகிழும் தன்மையுடன் இருப்பவர்கள். ஆனால் எங்கள் மண் அப்படிப்பட்டதல்ல ஒரே கற்களுடன்....


ஒரு புதரின் இடையே இரண்டு நாய்கள் 9 குட்டிகள் போட்டிருக்க சிலர் எடுத்துக் கொள்ள,அந்த நாய் பாவம் பால் கொடுக்க வர பரிதாபத்துடன் அதை துரத்தாமல் அனுமதிக்க அதன் பருவம் முடிந்து குட்டிகள் கால் முளைத்து சென்ற பின் அதன் பிறகு ஒரு வெள்ளைத் தாய்ப் பன்றி தானும் குட்டி போட இடம் பார்க்க ஆரம்பிக்க அதை அடிக்காமல் விரட்ட வேண்டிய ஒரு முனப்பாங்கு தேவைப்பட்டது.


 இங்கு எறும்புகள், கட்டெறும்புகள், பாம்புகள், பல்லிகள்,குழவிகள், ஈசல்கள், பூச்சிகள், வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள்,அந்துப் பூச்சிகள், விட்டில் பூச்சுகள் எல்லாம் கருணை மயம் வீட்டுள்ளேயே வந்து வசிக்க எங்களை நேசிக்க ஆரம்பித்திருக்கின்றன. மறுபடியும் ஒரு குருவி பண்பலை வானொலிப் பாட்டு போட்டால் கூட காலை விடியும் வரை எழுந்து போகவே மாட்டேன் என பயமிரா உறக்கத்தில்...இவைகள் எல்லாம் எமது குடும்பத்துடன்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை