கர்மா VS இயற்கை: கவிஞர் தணிகை
சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் பகிர்ந்தார் கர்மா பற்றி முக நூலில். அதன் அதிர்வலைகள் இன்னும் இருப்பதால் அது பற்றி நமது பதிவும்...
புத்தர் சொல்லிச் சென்றது: வினை தொடரும் என்பது
கணியன் பூங்குன்றனார்: நன்மையும் தீமையும் பிறர் தர வாரா...
இயற்பியல் கோட்பாடு: ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும்...
மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கர்மா என்பது வினைப் பயன். தொடரும் ஒரு வினைச் செயல்.(வினை என்பது செயல் என்பதாக எடுத்துக் கொள்ளப் பட வேண்டியதாகிறது பொதுவானது அது இதிலிருந்து விலகி நிற்கிறது இலக்கணப்படி. எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது தொடர் ஓட்டம் இருக்கிறது இதனுள்.
இது வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது பழமொழி போல் போன்று(ம்) தோன்றும் எக்காலத்திற்குமான மொழி.விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா (வேறா) முளைக்கும் என்றும் ஒரு சொல்லடை உள்ளது.
அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்களிலிருந்து அடுத்தவருடன் நமக்கேற்படும் அனுபவங்கள் வரை இவை அடங்கும்
சரி மனிதர்க்குத் தான் கர்மா, எல்லாமா என்றால் அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.விலங்கு போராடி உணவைப் பெறுகிறது அடுத்த விலங்கைக் கொன்று...பறவைகள் உணவைத் தேடிப் பெறுகின்றன, சில வகை விலங்கைப் போலவும் கொன்று தின்கின்றன.இந்த வாழ்வா சாவா போராட்டம் அனு தினமும் தொடரவே செய்கிறது...
எங்களது வாழ்விலேயே ஒரு மனிதர் வேட்டியைப் போட்டு தாண்டிவிட்டார் தன் மூத்தவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட வீட்டுப் பணத்தை இல்லையென்று சொல்லி, முதுமையில் கால்களை இழந்து மிகவும் வேதனை அனுபவித்ததை கண்கூடாக யாம் கண்டதுண்டு.
அறம், தர்மம், நீதி, நியதி, யமம் இப்படி எல்லாம் இருக்கிறது என்பாரும் இல்லை என்பாரும் இங்கு உண்டு. கடவுள் கட உள் கடந்து பார் கர்மா இருக்கலாம், கடவுள் இருக்கிறதோ இல்லையோ கர்மா இருக்கலாம்.
இது போல் எண்ணிலடங்கா நிகழ்வுகள் மனித வாழ்வில் இருக்கலாம், இருக்கும்...ஆனால் எம் கேள்வி எல்லாம் அதல்ல...
ஒரு திரைப் படத்தில் வண்ணத்துப் பூச்சியின் சிறகசைவுக்கும், சுனாமிக்கும் தொடர்பிருக்கிறது என்ற ஒரு கருத்தை சொன்னார்கள்...எப்படி என்பதை முழுதுமாக விரித்துப் பார்த்தால் அஞ்ஞானமும், விஞ்ஞானமும், மெய்ஞானமும் இருக்கும்.இருக்கலாம்.
பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், புயல், காற்றின் சீற்றங்கள்,போர்கள், மனிதப் பிழைகள், அறச்சீற்றங்கள், மறைச்சீற்றங்கள், அணு வெடிப்புகள், ஆயுதக் கலாச்சாரங்கள், வேதியல் நிகழ்வுகள் வேதியியல் விபத்துகள் இப்படி பல இயற்கை மற்றும் செயற்கை நிகழ்வுகள் பூமியை அலைக்கழிக்க, உயிர்கள் அழிவு ஒரு புறம்,ஆக்கம் உணர்ச்சியால் ஒரு புறம் இருக்க பூமிக்கே ஒரு ஆயுள், விண்மீனான சூரியனுக்கும் ஒரு ஆயுள் என விண்ணியல் விரிந்தபடி இருக்க இதில் மனிதர்களும் கர்மாவும் இயற்கையில் இருக்கிறதா என்பதை நாம் கலந்துரையாடி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமாகிறது.
வாயேஜர்1,2 வேறு நிறைய விண்ணியல் புள்ளி விவரங்களைத் தந்த படி சென்று கொண்டே இருக்கிறதாம் ...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment