Friday, March 20, 2026

மழை நேற்று நள்ளிரவில் இரண்டாம் கோடை மழை 19/20.03.2026 :கவிஞர் தணிகை

 மழை  நேற்று நள்ளிரவில் இரண்டாம் கோடை மழை 19/20.03.2026 :கவிஞர் தணிகை



நானும் விவசாயிதான்.தம்பி கார்த்தி வெள்ளையன் சொன்ன மாதிரி களை எல்லாம் பிடுங்கினால் அந்த செடிகள் பரப்பிலேயே இட்டு விடுகிறேன் அப்போது நீர் ஆவியாவது தடுத்து, நீர் தேவையைக் குறைத்து நமது நீர் கொடுக்க வேண்டிய பணியை சற்று மெத்தனப் படுத்தலாம் என்ற யோசனை நன்றாக இருந்ததால் அப்படியே செய்துள்ளேன்.


மேலும் சாம்பல் பை நிறைய சேர்த்து நம்மாழ்வார் மற்றும் இந்த தம்பி சொன்ன மாதிரி கோலம் போடும் தகரத் குப்பியின் வாயில் வைத்து தெளிக்கிறேன் அதனால் அந்த துவாரங்களில் இருந்து நன்கு வீசப்படும் சாம்பல் எரு பயனளிக்கிறது. கை கொண்டு வீசினாலும் நன்றாகவே பரப்பப் படுகிறது.


எனது தியான வாழ்வுக்கு இது 42 ஆம் ஆண்டு. சில பல நாட்களாக கடும் கோடை, எனவே வேண்டாம் என்கிற அளவு மழை பொழிவு வேண்டு(ம்) என எமது தியான மைய சுவர் எழுத்துகளிலும் தியான நேரத்திலும் பிரார்த்தனை வைத்தோம், காக்கா ஒக்கார பனம்பழம் விழுந்த கதை என்று வைத்துக் கொண்டாலும் சரி 

...ஆனாலும் மற்றொரு ஆசிரியையின் தந்தை படுத்த படுக்கையாய் மரண விளிம்பில் இருந்த போது அந்த உயிர் பட்ட வேதனை சகிக்காது விரைவில் செல்ல வேண்டும் என கடந்த அமாவாசை நாட்களில் இரு முறை தியானத்தில் பிரார்த்தனையில் வைத்தோம் அதுவும் நடந்தது. அட வேற யாரும் சொல்லலைன்னாலும் நாம்பளாவது நம்ம பெருமையை சொல்லி வைப்போமே... ஆக 2 பிரார்த்தனைகள் இது வரை பலித்து விட்டது.


வயது முதிர முதிர மழையின் பெருமை, ஆவல், மகத்துவம் எல்லாம் தெரிந்து மகிழ்வு, சிறப்பு, நன்றி என்று சொல்லத் தோன்றுகிறது. கொண்டாடத் தோன்றுகிறது.நேற்று முன் தினம் இரவில் இரண்டு உழவு அல்லது இரண்டு வள்ளம் பெய்தது பேசு பொருளானது.


ஆனால் நேற்று நள்ளிரவு 11.57க்கு ஆரம்பித்தது பாருங்கள் ஒரு ஊழித்தாண்டவக் காற்று அதிசயமாக இரண்டு வாழை வைத்திருக்கிறேன் அந்தக் குலை வாழை எல்லாம் பிய்த்து தலையாட்டி தூக்கி விசிறி எறியப் போகிறேன்  பார் என சுழட்டி சுழட்டி அப்படி ஒரு பெரும் காற்று.ஆனால் நள்ளிரவில் தாம். எவருக்குமே தொல்லையில்லாமல் தாம், கண்ணாடி ஜன்னல்களை மூடினால், ஊய், ஊய் என எதற்கு மூடினாய் என ஒரே சத்தம் வேறு....


அது மட்டுமல்ல அது பெரும் மழையை இந்தக் கோடையில் இரண்டாம் முறையாக பெய்ய வைத்து விட்டது. விவசாயிகளுக்கு பெரும் கொண்டாட்டம் எனக்கும் தான்.


எனது துணைவியார் வண்டி நிறுத்தும் இடத்தில் இருந்த கோலப்பொடி எல்லாம் நனைந்து விட்டது,துணி மிதி அடிகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டது,கடலை மாவுக் கிண்ணத்தை தூக்கி விசிறி வேறு இடத்தில் வைத்து அதில் நீர் நிரப்பி விட்டது,காய வைத்திருந்த துணிகளை எல்லாம் நனைத்து தூக்கி எறிந்து விட்டதே.... இப்படி அவருக்கு ஆயிரம் கவலை


அவரவரக்கு ஆயிரம் கவலை ஆனால் மழையும் நீரும் அத்தனையும் நீக்கும்.


நிலத்தடி நீர் பெருகும், தாவரங்கள் செழிக்கும், புவிச் சூடு தணியும் எமக்கு பெரு மகிழ்வு...நேற்று அடித்த வெயில் உணர்த்தியது இன்று இரவுக்குள் மழைப் பொலிவு இருக்கும் என...அது பொய்க்கவில்லை. இயற்கை பொய்ப்பதில்லை, மனிதர்கள்தாம்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment