என் வீட்டுத் தோட்டத்தில் இறந்து போன கொடி: கவிஞர் தணிகை
அந்தப் பீர்க்காங்காய் கொடி எப்படி மண்ணிலிருந்து பிய்ந்து போனதோ தெரியவில்லை,இலைகள் எல்லாம் வாடிக் கொண்டிருந்தன, ஒரு 4 மணி நேரம் அடியேனும் துணைவியாரும் வெளியில் சென்று வந்து திரும்பவும் பார்த்த போது அவர் பார்த்து அதை என்னிடம் தெரிவிக்க, பார்த்தேன்.
இராமலிங்க வள்ளலார் போல வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன், வாடிக் கொண்டிருக்கிறேன் எனவே இந்தப் பதிவு.
அதை மண்ணில் மறுபடியும் பதித்து வைத்துப் பார்த்தேன் வீண் முயற்சி என்று தெரிந்த போதும்.
வெற்றுப் பூக்களாகவே பூத்துக் காய்ந்து விழுந்து கொண்டிருந்த போதும் அது பலனளிக்கும் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒரு பிஞ்சு ஒரு அடிக்கும் குறைவான நீளம் இருக்கும் விட்டிருந்தது. அது இனி பெரிதாக வாய்ப்பில்லை. எனவே அதைப் பறித்து விட்டேன்.
கொத்து அவரைக்காய் (கொத்தவரங்காய்), அவரைக்காய் போன்ற செடிகள் என் வீட்டுத் தோட்டத்தில் பலன் தருகின்றன பலம் தருகின்றன.செடிகளோடு கொடிகளோடு சேர்ந்து நிறைய கண்ணுக்குத் தெரியும் கண்ணுக்குத் தெரியா நிறைய பூச்சி இனம் மற்றும் களைகள் யாவும் பயிர்த் தொழில் எவ்வளவு கடினமானது என எனக்கு விளக்கி வருகிறது.
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லியபடி சுண்டைக்காய் இலைகளை நிறைய எடுத்து அரைத்துப் பிழிந்து சாறு எடுத்து எல்லா செடிகள் கொடிகள் மேல் எல்லாம் தெளித்தேன், உண்மை, அவர் சொல்லியிருந்தபடி அவரைக்காய்களை சிதைத்துக் கொண்டிருந்த அஸ்வினிப் பூச்சிகள் எல்லாம் அறவே இல்லை.
இரு முறை களைச்செடிகளை சுத்தம் செய்யும் போது எனக்குக் கிடைத்த பரிசாக கையில் முழுதும் மூன்று புள்ளிகளுடன் ஏதோ பூச்சி கடித்து வலது கை முழுதும் நமைச்சல், அரிப்புடன் தழும்புகள் கை நிறைய தொடராக விளைந்து தொல்லை தர ஆரம்பித்து விட்டன ஆனாலும் பயிர்த் தொழிலை செய்யவே ஆர்வம் ஆனால் அது ஆர்வக் கோளாறே.
இரத்தம் உடல் உயிர் உடமை குடும்பம் யாவற்றையும் தியாகம் செய்த எண்ணற்ற இந்திய விடுதலை வீரர்கள் பற்றியோ 78 ஆண்டுகளுக்கும் மேலாக சென்று கொண்டிருக்கும் இன்றைய அரசியல் பற்றியோ இந்தப் பதிவில்
அடியேன் எதையுமே குறிப்பிடவே இல்லை. ஆற்றாமையால் வந்த பதிவு இது இல்லை. ஆற்றியமையால் வந்த பதிவு.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை