Monday, October 21, 2024

எல்லாந் தெரியு(மு)ங்க: கவிஞர் தணிகை

 எல்லாந் தெரியு(மு)ங்க: கவிஞர் தணிகை



நண்பர் 70 நெருங்கி வருகிறார்,அவரும் அடியேனும் தவறாமல் நடைப் பயிற்சியில்.அவர் ஒரு முன்னால் இராணுவ வீரர், இந்திய அமைதிப் படையில் இலங்கையில் கூட இரண்டாண்டு பணியில் இருந்தவர்.அவரும் அடியேனும் நடைப் பயிற்சியில் அவர் சாலையின் இடப் புறமும் அடியேன் வலப்புறமும் நடை பயில்கிறோம் செல்லும் போது.அது போக்குவரத்துக்கு சுலபமாக இருக்கட்டுமே என்று.


 அது பார்ப்பவர்க்கு வித்தியாசமாக இருக்கிறது போலும்.என்னிடம் நேற்று ஒரு மகிழுந்து ஓட்டிய இளைஞர் எதிரில் வந்தவர் , அந்தப் பக்கம் போங்கள், சாலையில் தவறான பக்கத்தில் செல்கிறீர் என்றார் அடியேனை. இதுதான் சரியான முறை சாலை விதியும் கூட என்றேன்.


 வாகனங்களுக்கு இந்திய சாலை விதி இடது பக்கம் செல்லச் சொல்லி இருக்க, பாதசாரிகளுக்கு வலது பக்கம் செல்லவே சொல்லி இருக்கிறது அதை பள்ளிகளில் முதலில் பிள்ளைகளுக்கு படிப்பிக்க வேண்டும். எவருமே இதைக் கடைப் பிடிப்பதில்லை.கண் பார்வைக்கு பார்வை தொடர எதிரே வரும் வாகனமும் நடப்பாரும் எளிதாக மோதிக் கொள்ளாமல் (எவராவது ஒருவர்) விலகிச் செல்ல முடியும் எனவேதான் இந்த ஏற்பாடு. இது விபத்தை தவிர்க்க.துவிசக்கர வண்டிகளும், பாதசாரிகளையும் பார்ப்பதே இப்போது சாலையில் அரிதாகிய சூழலில் இதை நான் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.


இவ்வளவு ஏன் பீடிகை என்றால், இந்த நாட்டில் மக்கள் எல்லாமே விதிக்கு மேம்பட்ட வாழ்வே வாழ்கிறார்.அல்லது விதியை, சட்டத்தை, நீதியை, தர்மத்தை , இயற்கையை, இயல்பை மீறியபடியே வாழ்ந்து கொண்டு வருகிறார் சுய நலம் என்ற ஒரே போக்கில்.எல்லாமே தனிப்போக்குவரத்துக்கு தாவியுள்ள காலம் பொதுப் போக்குவரத்து ஏழைக்கென ஒதுக்கப் பட்டது போல நினைக்கிறார்கள்.


அவர்கள் எதையுமே கடைப் பிடிப்பதில்லை.காரணம் பலப் பல. அவற்றை எல்லாவற்றையுமே இங்கு சொல்ல அவா இல்லை. ஒரு புறம் அரசே மக்களை தவறு செய்ய நிர்பந்திக்கிறதோ என்ற கேள்விகளும் உள்ளன. அவை எல்லாம் வேறு.


பல் விளக்கத் தெரியுமா? தெரியுமே, வெளிக்குப் போய்ட்டு கால் கழுவத் தெரியுமா? அடச் சீ இந்த ஆளுக்கு வேறு வேலை இல்லை, இதை எல்லாம் போய் பேசிக் கொண்டு இருக்கிறார் பார், இதெல்லாம் தெரியாதா? குளிக்கத் தெரியுமா? இதெல்லாம் தெரியாமலா இருப்பார்கள்? வாய் சுத்தம், ஆசன வாய் சுத்தம், குளித்தல் குளிர்வித்தல் எல்லாம் நாடி சுத்தி பாடங்கள், நாடி சுத்தி, கபால‌ பாத்தி என இருவகை மூச்சு பயிற்சி செய்வார்க்கும் சுவாசக்  குழல்/மூச்சுக் குழல் சுத்தம் செய்யப் படுகிறதாம் தெரியுமா? யோவ் வேற வேலை இல்லையா போய்ப் பார்,சுவாசிப்பது இருப்பது மனிதர் உயிரோடு இருப்பது வரை இயல்பாக இருப்பது, இதை எல்லாம் போய் கவனித்து வர வேற வேலையா இல்லை? என்பார்க்கு இந்தப் பதிவு அவசியமில்லை.


இங்கு எதுவுமே தெரியாமல், புரியாமல், உணராமல் மனிதப் பயணங்கள் நிகழ்ந்தபடி உள்ளன. எனது நண்பர்கள் சிலர் தினம் ஒரு திருக்குறள் தருகிறார்கள், சிலர் புதிய முயற்சி செய்கிறார்கள். பாராட்டுகள். எவ்வளவு பேர் ஒரே ஒரு குறளையாவது பின்பற்றி வாழத் தலைப்படுகிறார் என்பதுவே கேள்வி.அல்லது அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை இளந்தலைமுறையிடம் ஏற்படுத்த விழைகிறார் அவர் தம் வாழ்வை அதற்கு  முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறார் என்பதுவே கேள்வி.


சட்டமும், நீதியும், ஏட்டிலும், எழுத்திலும், பேச்சிலும் இருக்கின்றன அனைவரும் சமம் சட்டத்தின் முன் எனச் சொல்லும் (அப்படி எல்லாம் இல்லை என்பது வேறு) இந்திய தாய்த் திரு நாட்டில் எவருக்குமே எதைப்  பற்றியுமே அதற்கு எதிராக செயல்படுவது பற்றிய சிந்தனை மாற்றம் பற்றிய துளி சுய உணர்வு கூட பாதிப்பாகத் தெரியவில்லை. அல்லது அதெல்லாம் பாத்தா வாழ முடியுமா என்கிறார்கள் அதிகம். நடை முறை பற்றியே இங்கு சொல்லப் புகுந்தேன். அது வேறு வேறு பொருள் பொதிந்ததாய்த் தெரிந்தால் வாழ்வின் நடைமுறைப் பற்றி எல்லாம் குறிக்கிறது என்றால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




No comments:

Post a Comment