Monday, July 24, 2023

TRINITITE:மனித அழிவின் விசித்திரங்கள்: கவிஞர் தணிகை

 நன்றி: பிபிசி தமிழ்

  • செசார் மெனோர்-சல்வான்
  • பதவி,தி கான்வர்சேஷன்
அணுகுண்டை முதலில் தயாரித்து பயன்படுத்திய அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவிலிருந்து உருவான‌ இந்த டிரினிடைட் பற்றி ...

டிரினிடைட்: முதல் அணுகுண்டு வெடிப்பில் உருவான பல வண்ண 'ஒளிரும் கற்கள்




Trinitite – ட்ரினிடைட். இந்தப் பெயரைக் கேட்டால் இது ஒரு தாது அல்லது கனிமம் என்று தோன்றலாம். ஆனால் இது ஒரு கனிமம் அல்ல. இயற்கையானதும் அல்ல.

இது அறிவியலும் அரசியலும் சந்தித்துக் கொண்ட ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வின் போது உருவான ஒரு பொருள்.

1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவின் அலமோகோர்டோ என்ற இடத்தில் நடந்த முதல் அணு வெடிப்பின் போது உருவானதுதான் இப்பொருள்.

அந்தச் சோகமான வரலாற்று நிகழ்வின் போது என்ன நடந்தது என்பதை ட்ரினிடைட் நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்துகிறது.

இரண்டாம் உலகப்போரின் முடிவு நெருங்கிக் கொண்டிருந்தது. முதல் அணுகுண்டைத் தயாரிக்கத் துவங்கப்பட்ட மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) 1941-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட், ஜெர்மனி ஒரு புதிய வகை பேரழிவு ஆயுதத்தை உருவாக்கும் சாத்தியக்கூறுகளால் உந்தப்பட்டு, வரலாற்றிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சவால்களில் ஒன்றைச் சோதித்துப் பார்க்க அனுமதித்தார்.இந்தத் திட்டத்திற்காகப் பல இயற்பியலாளர்கள், வேதியியலாளர்கள், பொறியாளர்கள், கணிதவியலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரத்தைப் பொருட்படுத்தாமல் உழைத்தனர்.

மன்ஹாட்டன் திட்டத்தின் தொழில்நுட்பச் சாதனைகள் அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்கமளித்தன. பனிப்போருக்கான விதைகளையும் விதைத்தன. ஆனால் அதன் முதல் பலன்: கேட்ஜெட்.

ஜூலை 1945-ல் நியூ மெக்ஸிகோவில் உள்ள லாஸ் அலமோஸ் ஆய்வகத்தில் பிறந்த இந்த ‘கேட்ஜெட்’.

‘கேட்ஜெட்’ - முதன்முதலில் உருவான அணுகுண்டு

கேட்ஜெட் என்பது முதன்முதலில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட அணுகுண்டின் முன்மாதிரி.

1945-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி, கோட்பாட்டு ரீதியான கணிப்புகளைச் சோதித்து உறுதிசெய்யும் நோக்கில் வெடிக்கத் தயாராக இருந்தது. இந்தச் சோதனைக்கு ‘டிரினிட்டி சோதனை’ (Trinity Test) என்று பெயரிடப்பட்டிருந்தது.

சாதாரணமாகச் சொன்னால், ‘கேட்ஜெட்’ உள்நோக்கி வெடிக்கும் ஒரு குண்டு. ஒரு சாதாரண வெடிபொருள், இந்தக் குண்டின் புளூட்டோனியம்-239- ஐசோடோப்பால் ஆன மையக்கருவை அழுத்துகிறது. இந்தப் புளூட்டோனியம் அதன் பொருண்மை உச்சவரம்பை (critical mass) அடைகிறது. இது ஒரு சங்கிலிப் பிளவை ஏற்படுத்துகிறது. அதுவரை யாரும் கண்டிராத பெருமளவு ஆற்றலை இது வெளியிடுகிறது.

புளூட்டோனியம்-239 என்பது, நியூட்ரான்களுடன் கூடிய யுரேனியத்தின் கதிர்வீச்சை உள்வாங்குவதன் மூலம், எளிதில் அணுப் பிளவுக்கு உட்படக்கூடிய ஒரு ஐசோடோப் ஆகும்.

அணுகுண்டு, ஓப்பென்ஹெய்மர், அமெரிக்கா, ஹிரோஷிமா, நாகசாகி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

'கேட்ஜெட்' - முதன்முதலில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட அணுகுண்டின் முன்மாதிரி.

தனிப்பட்ட முறையில் புளூட்டோனியம் இயற்கையில் காணப்படுவதில்லை. சில யுரேனியம் படிவுகளில் புளூட்டோனியத்தின் சுவடுகள் மட்டும் காணப்படும்.

யுரேனியத்திலிருந்து போதுமான அளவு தூய புளூட்டோனியத்தைப் பெறுவதே மன்ஹாட்டன் திட்டத்தின் முக்கியச் சவாலாக இருந்தது. இதற்காக அவர்கள் வாஷிங்டனில் இருக்கும் ரகசிய ஹான்போர்ட் புளூட்டோனியம் உற்பத்தி ஆலையை பயன்படுத்தினர்.

இப்போது இது ஒரு அருங்காட்சியகமாக இருக்கிறது. அப்போது அது புளூட்டோனியம் உற்பத்திக்கான முதல் வணிக அணு உலை ஆகும். இது DuPont நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இந்நிறுவனம் இது அதன் லாபங்களைத் துறந்து, வெடிகுண்டின் வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்பட விரும்பாமல் தன்னை விலக்கிகொண்டது.

1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி, காலை 05:29 மணிக்கு, ஜோர்னாடா டெல் மியூர்டோ என்ற தொலைதூரப் பகுதியிலிருக்கும் பாலைவனத்தில் ‘கேட்ஜெட்’ வெடிக்கப்பட்டது. இதுதான் வரலாற்றில் முதல் அணு வெடிப்பு. தோராயமாக 19 கிலோ டன் அளவுக்கு ஆற்றலை வெளியிட்டது. இது கணக்கிடப்பட்டதை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. பாதுகாப்பான தொலைவில் இருந்த சில கருவிகளையும் அழித்தது.

முதல் செயல்முறை அணுகுண்டுகள்

அணுகுண்டு, ஓப்பென்ஹெய்மர், அமெரிக்கா, ஹிரோஷிமா, நாகசாகி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜப்பானிய நகரமான நாகசாகியில் வீசப்பட்ட ‘ஃபேட் மேன்’ அணுகுண்டு

இந்த ‘கேட்ஜெட்’டின் செயல்முறை ராணுவப் பதிப்புகளான ‘லிட்டில் பாய்’ மற்றும் ‘ஃபேட் மேன்’ என்று அழைக்கப்படும் அடுத்த இரண்டு அணு குண்டுகள் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் சுமார் 2 லட்சத்துக்கு மேலான மக்களைக் கொன்றன. இதில் பாதி பேர் வெடிப்பினாலும், வெடிப்பிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்தாலும் இறந்தனர்.

சூரியனின் மேற்பரப்பை விட அதிக வெப்பத்தில் உருவான 'டிரினிடைட்'

அணுகுண்டு, ஓப்பென்ஹெய்மர், அமெரிக்கா, ஹிரோஷிமா, நாகசாகி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எல்லாம் முடிந்ததும், பாலைவன நிலப்பரப்பு வண்ணக் கண்ணாடிச் சில்லுகள் போன்ற பொருட்களால் மூடப்பட்டிருந்தது

கேட்ஜெட் வெடித்தபோது உருவான வெப்பம் சூரியனின் மேற்பரப்பின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தது. வெப்பம் பாலைவன மணலை உருக்கியது. நூற்றுக்கணக்கான மீட்டர் சுற்றளவில் ஒளிரும் கண்ணாடித் துகள்கள் போன்ற சில்லுகள் மழைபோல் பொழிந்தன.

எல்லாம் முடிந்ததும், பாலைவன நிலப்பரப்பு வண்ணக் கண்ணாடிச் சில்லுகள் போன்ற பொருட்களால் மூடப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். இவை பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருந்தன. சில அழகான கண்ணாடிக் கற்கள் போல இருந்தன. இந்த வரலாற்று நிகழ்வின் நினைவாக இக்கற்களின் மாதிரிகளைச் சேகரித்தனர்.

இவை ‘டிரினிடைட்’ என்று அழைக்கப்பட்டன.

இவற்றில் சிலவற்றை வைத்து சிலர் நகைகளையும் செய்துகொண்டனர்.

ஆனால் இது ஒரு மோசமான யோசனை என்பதை மிக விரைவிலேயே உணர்ந்தனர்.

டிரினிடைட்டில், அணு வெடிப்பினால் உண்டான தனிமங்கள் மற்றும் தீவிர கதிரியக்கத்தன்மை இருந்தது.

இன்று, டிரினிடைட் அதன் கதிரியக்கத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டது. அதனை நாம் பாதுகாப்பாகக் கையாள முடியும்.

ஆனால் அது இன்னும் அணு வெடிப்புக்கான சாட்சிகளைக் கொண்டுள்ளது.

கதிரியக்க கூறுகள் காலப்போக்கில் மறைந்துவிடும், ஆனால் இந்தப் பொருளின் விசித்திரமான பண்புகள், மற்றும் விசித்திரமான கட்டமைப்புகள் மனித நாகரிகம் மறைந்த பிறகும் இருக்கும்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment