Monday, February 6, 2023

சில நினைவுகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது: கவிஞர் தணிகை

 சில நினைவுகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது: கவிஞர் தணிகை



சில நினைவுகளை சில நினைவலைகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது....

தயாரிப்பு இல்லாமலும் குறிப்புகள் இல்லாமலும் சோனா எப்.எம். சமுதாய வானொலியில் மகாத்மா காந்தியைப் பற்றி பேசும்போது சம்ப்ரான், சௌரி சௌரி சத்யாக்கிரகம் என்று குறிப்பிட மறந்து சம்ப்ரான் என்பதற்கு மாறாக பொக்ரான் என்று குறிப்பிட்டு விட்டேன்.

வாக்காளர் தினம் பற்றி பேசிய பேச்சில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே அவர்கள் ஒலிபரப்பி உள்ளனர்.

சுஜாதா என்னும் ரங்கராஜன் அவர்களே எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் அமைத்த அறிவியல் அறிஞர்கள் குழுவின் தலைவர் ...ஆம் நமது சுஜாதா ரங்கராஜன் எழுத்தாளர் அவர்களே...

ஏழை தினக் கூலிகள் அன்றாடங் காய்ச்சிகள் வாக்களிக்கும் தினத்தில் வேலைக்குப் போகாமல் கூலி இல்லாமல் போவதால் அதற்கு மாறாக வாக்குக்கு காசு வாங்கினால் என்ன தவறு ? என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. அதைப் பற்றி தேர்தல் ஆணையமும் ஆட்சிகளும் முடிவெடுக்க வேண்டிய நிலை.

 வெகு காலத்துக்கும் முன் ப்ரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பாக மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ வாக சுரேந்திரன் (நாயர்) என்பவர் தொழிலாளர்களின் தோழர் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது இருந்தால் எனக்கு ஏழெட்டு வயது இருக்கும். எங்கள் வீடு ஓடையோரம்...அப்போது கடைசி வீடு இப்போது அது ஊரின் மையம். விவரம் தெரிய ஆரம்பிக்கும் தருணம்... கட்டாக  நோட்டுகளை புதிதாக அப்போதுதான் பார்த்தது.ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நோட்டுகளை கட்டின் பின்னிலிருந்து எடுத்து தேர்தல் முதல் நாள் இரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள் பலரும் வந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

 கைவிரல்களின் முனை குண்டு குண்டாக( அப்படி இருந்தால் அதிர்ஷ்டமாமே?) இருக்கும் சுரேந்திரன் நாயர் வென்றார் சென்றார் அவரது மகன் பின்னாளில் ஒப்பந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக எல்லாம் செய்தி உலவியது...சுரேந்திரன் நாயர் மிருதங்க சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் போல ஜிப்பா எல்லாம் போட்டுக் கொண்டு, மிகவும் மெதுவாக பேச ஆரம்பித்து போகப் போக ஒலியைக் கூட்டிக் கொண்டே போவார் பொதுக் கூட்டங்களில் . அது அவரது பாணி. மேட்டூர் மில், மால்கோ போன்ற நிறுவனங்களின் தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சனைக்காக காந்திய முறையில் சத்தியாக்கிரக போராட்டம், உண்ணா நோன்பு எல்லாம் இவருக்கு தண்ணி பட்ட பாடு.



 இந்த சுரேந்திரன் நாயர் சார்பாக பணம் அளித்த எங்கள் குடும்பத் தொடர்புள்ள உறவுக் குடும்பம் சார்ந்த பெரியவர் ஒருவர் ஒரு முறை பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வென்றார். ஆனால் அவர் பதவி ஏற்க சென்ற போது கும்பல் கும்பலாக இருளில் சாலையோரம் இருந்தபடி  கற்களால் தாக்கி , பேரூராட்சி அலுவலகத்தில் அவரது காரை அந்த சாதி வெறி பிடித்த கும்பல் காரையே தூக்கி அவர்களை காரில் இருந்து இறங்க விடாமல் செய்து பதவி ஏற்கவும் விடவில்லை...அப்போதிருந்து அந்த செல்வாக்கு மிக்க குடும்பத்தினர் இன்று வரை அரசியலில் கலந்து கொள்வதே இல்லை... 

அந்த நிலை தொடர்கதையாகவே...

எங்கள் வீதியில் எங்கள் குடும்பம், நாங்கள் மட்டுமே இந்த வாக்குக்கு காசு சுழற்சியில் சிக்காதவர்கள் எனலாம்.

தைப்பூசம், வள்ளலார் நினைவு தினம் என்பதை எல்லாம் மறந்து கூட்டம் குறையாமல் இருக்கிறது டாஸ்மார்க் கடை இருக்கும் திசை...நிறைய பேர்க்கு அது விடுமுறை என்பது நினைவு இல்லாமல் கடை இருக்கும் என சென்று பார்த்தனர், இடையே சந்து கடை பற்றி எல்லாம் யாமறியோம்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



No comments:

Post a Comment