Saturday, August 25, 2018

மணோகரா மறக்க முடியுமா?...கவிஞர் தணிகை


Image may contain: 2 people


மணோகரா மறக்க முடியுமா?...கவிஞர் தணிகை

இது கலைஞரின் மணோகரா திரைப்பட வசனமல்ல...வாழ்க்கையின் ஒரு அங்கம் பற்றிய பதிவு.

வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான‌ கட்டத்திலும் உறுதுணையாகி நின்றாய். தந்தையின் இறப்பின்போது இராணுவ விடுப்பு முடிந்தும் போகாமல் நீயாகவே  லீவை நீட்டித்துக் கொண்டு அதன் பின் அங்கு சென்று தண்டனை ஏற்றுக் கொண்டாய் என்பதையும் சொன்னாய்.
தாயின் இறந்த கடைசிக் காரியங்களிலும் பங்கு கொண்டாய்...உனக்கு தாய் இளமையிலேயே இல்லாதிருந்தன் அருமை உனக்குத் தெரிந்திருக்கிறது.

சகோதர சகோதரிகள் அனைத்து மண‌ நிகழ்வுகளிலும் பங்கு கொண்டாய்.
நீயும் நானும் பள்ளித் தோழர்கள் மட்டுமல்ல வகுப்புத் தோழர்களும் கூட.
நீ அப்போது படித்துக் கொண்டே பத்மா ரேடியோ ஹவுஸ்ஸில் பணி புரிந்து கொண்டிருந்தாய். நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கி அமைக்கும்போதும் அந்த ரேடியோ கடைக்காரர் சொல்லும்போதும் பள்ளிக்கு அடிக்கடி லீவு எடுத்துக் கொள்வாய். அங்கே கிடைக்கும் வருவாயில் அப்போதே திரைப்படம் பார்த்து வந்து கதை சொல்லி சினிமா பற்றிய ஆர்வத்தை அதிகப்படுத்துவாய்.
அதன் பின் கபடி ஆடினோம் சேர்ந்து. கையை ஒடித்துக் கொண்டாய். அதிலிருந்து கபடி ஆட்டத்தைக் கை விட்டாய்.

இராணுவத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள் என சென்று சேர்ந்து கொண்டாய். அது முதல் உனது குடும்பத்துக்கும் வறுமை அகன்றது. அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து உனது பெண்ணை இன்று எம்.ஈ. படிக்க வைத்து மணமுடித்துக்  கொடுக்கிறாய்.

இதைக் கவிதையாக்குவதை விட கடிதமாக்குவதே நன்றாக இருக்கும் என்றே உனக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 நீ சலுகை விலையில் வாங்கி வந்த 3 வி.ஐ.பி சூட்கேஸ்களில் ஒன்றை இப்போது எனது மகன் மணியம் கல்லூரிக்கு எடுத்து சென்று விடுதியில் தங்கிப் படித்து வருகிறான்.

நீ வீட்டுக்கு ஒரு சலுகை விலையில் குக்கர் கூட ஒன்று வாங்கிக் கொடுத்தாய்.

இவை மட்டுமே இப்போது என் நினைவிலாடும் நீ செய்த உதவிகளாய்...

மணோகரன் மிலிட்டரியிலிருந்து லீவில் வருகிறான் ஒரு மாதம், இரண்டு மாதம் என்றாலே எங்களுக்கு எல்லாம் அது நீ வரும்போதெல்லாம் ஒரு இனிய நிகழ்வு, நல்ல பொழுது. எனது மாமா கணேசன் அவர்களை அடுத்து நீயும் அது போன்ற வாழ்வின் சுவையை தந்தாய்...அதெல்லாம் வஸந்த காலம் .

வஸந்தம் சென்று விடும் பூக்கள் திரும்ப மலரும்
யௌவனம் சென்று விடும் அந்த நாட்கள் திரும்பி வரா...

இவை மட்டுமே இப்போது என் நினைவிலாடும் நீ செய்த உதவிகளாய்...

நீ எந்த நிலையில் இருந்து பார்த்தாலும் எனக்கு நல்லவனாகவேத் தெரிகிறாய். ஆனால் நான் தான் உனக்கு நல்லவனாக இல்லாமல்: ஒரேமுறை நீ கேட்டாய் என்று...எனது நீல வண்ண யமஹா பைக்கை உனக்காகக் கொடுத்தேன்...எனது அந்த வாகனத்தை இது வரை சவாரி செய்தது நான், நீ, எனது மகன் மட்டுமே. வேறு எவருக்குமே வண்டியைத் தராதவனாயிருந்தேன். இன்று அதை நானும் தொடுவதில்லை. மகன் மட்டுமே ஓட்டுகிறான். நீ உனது தின்னபெல்லூருக்கு எடுத்து சென்று திருப்பித் தருவதற்குள் கால தாமதமாகிவிட்டது. வண்டி பஞ்சர் என்றும் சொன்னாய், ஆனால் அதே நேரத்தில் இங்கு இளைய சகோதரியின் இரண்டாம்பிள்ளையின் பிரசவக் காலம்...அதற்கு வண்டி பயன்படவில்லையே என உன்னைக் கடிந்து கொண்டேன்...

எனக்கும் நண்பனாக பள்ளித் தோழனாக இருந்தவன் எனது மூத்த சகோதரனுக்கும் நண்பனானாய்... நாளடைவில் நமது நட்பு அப்படியே இருக்க உஙக்ளின் நடப்பும் நட்பும் அதிகமாக இருந்த போதும் குடும்பத்தையே நேசித்தாய்..

ஆனால் காலம் பல நம்மை மாற்றி இடம் மாற்றி வாழ்வை மாற்றிப் போட நீ ஒரு விவசாயி ஆனாய்...இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று. நல்ல முடிவுதான். ஏவல் சேவகம் புரியாமல் உலகின் உன்னத பணி...

இடையில் நீ உனது மூத்த சகோதரனை இழந்தாய்.
தந்தையை இழந்தாய்...நாங்களும் பெற்றோரை இழந்தோம்

காலம் பல கடந்து விட்டது...அடுத்த தலைமுறை அடி எடுத்து வைத்துவிட்டது

நீ மணம் புரிகிறாய் மகளுக்கு...
வாழ்த்தை வார்த்தையில் மட்டுமே தான் சொல்ல முடியுமா? சொல்ல வேண்டுமா?

என்றும் வாழ்வாய், என்றும் தொடர்வாய் என்றும் வளர்வாய்...
நல்லோரின் குலம் வாழையடி வாழை எனச் சொல்லும் மூதுரை...

என் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் மிகவும் இரசித்து பூவின் தேனை உறிஞ்சிக் கிடக்கும் தேன் சிட்டாய் மாறிக் கொண்டிருக்கிறேன். நாம் நிறைய காலம் கடந்து விட்டோம் எது வாழ்வென்று தெரியாமலே...

அடுத்தவரை இன்பப் படுத்தி நாமும் இன்பம் காணும் வாழ்வே உயர்ந்தது...
அதை நீ படிக்காமலே அனுபவப் பாடமாகவே கற்றதோடு மட்டுமல்ல அதை வாழ்வில் கொண்டு செலுத்தவும் அறிந்திருந்தாய்...

Image result for honey sucking bird
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: