Tuesday, April 17, 2018

டாக்டர் வாசவய்யா எழுதிய‌ வாய் இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும்: கவிஞர் தணிகை

 டாக்டர் வாசவய்யா எழுதிய‌ வாய் இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும்: கவிஞர் தணிகை
Image result for veterinary science


கால்நடை மருத்துவர் டாக்டர் வி. வாசவய்யா அவர்கள் எழுதி  2010 ல் வெளியிட்ட வாய்  இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும் என்ற நூலை நான்  பொது மக்கள் தொடர்பு அலுவலராக இருந்து வரும் பல் மருத்துவக் கல்லூரியின் துணை   முதல்வரும் பேராசிரியருமான டாக்டர். வா. சுரேஷ்குமார் வழங்கி படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்.

நான் எப்போதுமே ஆர்வத்துடன் ஒரே முச்சில் ஒரு புத்தகம் படிக்க அவாவுறுகிறேன் என்றாலே அந்தப் புத்தகம் நல்ல நடையில் நல்ல சமூகப் பயன்பாட்டுடன் சொல்லப்பட்டிருக்கிறது  என்றே பொருள்.

இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் வாசவய்யா  இந்த நூலை  தமது காலப் பதிவாக தந்துள்ளார்.  ஒரு வயதான மூதாட்டி காக்கா தூக்கிக் கொண்டு வந்து தவறிப் போட்ட கோழிக்குஞ்சை காப்பாற்றச் சொல்லி  வேண்டுகோள் கொடுத்ததை துச்சமென கருதாமல் உயிராக கருதி மருத்துவ சிகிச்சை கொடுத்தது முதல் பல்வேறுபட்ட சூழலில் பல்வேறுபட்ட கோழி ,பறவை, கால்நடைகள் யானை உட்பட சிகிச்சை அளித்தவரை மட்டுமல்லாமல் கிண்டி அறிவியல் பூங்காவில் பல் வேறுபட்ட மிருகங்கள் சிங்கங்கள் முதல்  சிற்றுயிர்கள் வரை தம்மால் உயிருதவி பெற்றதையெல்லாம் மறக்காமல் பதிவு செய்துள்ளார் மனிதர் என்னும் பெருந்தன்மையுடன்.

இத்தனைக்கும் அடித்தளம் அவரின் அம்மா போட்ட பிள்ளையார் சுழியே என்றும் தெரிவித்துள்ளார். அவரின் அம்மாவே, அவர் என்ன மேல் படிப்பு படிக்கலாம் என்று கேட்டதற்கு : வாயில்லா ஜீவன்களுக்கு மருத்துவ சேவை செய்யும் படிப்பைப் படி என்றாராம்.

அந்தப் படிப்பை அவர் தேர்வு செய்து படித்ததும் அதன் மூலம் கால் நடை மருத்துவரான பின் அவரின் வாழ்க்கை போன பயணமும் மிகவும் சுவாரஸ்யமானவையும் ருசிகரமாயும் அவருடைய எண்ணத்தை எழுத்தாக்கி நமக்கெல்லாம் தந்து  இருக்கிறார்.
Image result for hen and animals


உயர்ந்த அனுபவம், செறிந்த கருத்துகள், தேர்ந்த வெளிப்பாட்டுடன் உண்மை உள்ளீடாக அமையும் எந்தப் படைப்பும் வணங்கத் தக்கதாகிவிடுகிறது. அதில் இயற்கை குடி கொண்டு விடுவதால்... உன்னத நிலை அடைந்து விடுகிறது.

பல்வேறுபட்ட ஊர்களில் பல்வேறுபட்ட அனுபவங்கள்...நட்டத்தில் இயங்கிய அரசுக் கோழிப்பண்ணையை முன் மாதிரியான இலாபத்துடன் இயங்கும் அரசுக் கோழிப்பண்ணையாக்கியது, மேலும் அரசாங்கத்தின் கெடுபிடி மீறி செய்யும் நல்ல செயல்கள், இலஞ்சம் ஊழல், அரசியல் பம்மாத்துகளை எல்லாம் மீறி செய்யும் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நல்ல முறையில் நியாயமாக விளக்குகிறார்.

இவர் இந்த புத்தகத்தை இன்னும் நல்ல முறையில் விரிவாகச் செய்து செதுக்கி இருந்தால் கால்நடைக் கல்லூரி பல்கலைக் கழகங்களுக்கு பாடமாகவே வைத்திருக்கலாம்.

Image result for good ground work to uplift society


இது போல அடித்தட்டில் களப்பணியாளராக இருந்து நியாயமாக நேரமையாக  செயல்புரிவோர்தாம் நல்ல ஆட்சி அதிகாரத்தில் இருந்திருப்பின் நல்ல பணிகளை செய்து மக்களுக்கு அற்புதமான நற்செயல்களை புரிய ஒரு காரணமாக அமைந்திருக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத கருத்து.

கால்நடைகள் எப்படி உணர்வு பூர்வமானவை என்பதை இவரது பசுவும் பஸ்ஸும் என்ற அத்தியாயத்தில் காணலாம். இது நீதி மன்றம், வழக்கு என்று கூட போனதாகவும் நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி உள்ளார். தனது கன்றுகுட்டியை இடித்து விடுமோ என்று இந்தப் பசு பஸ்ஸை சென்று முட்டி விடுகிறது அதனால் அதற்கு கொம்பு வளைந்து விடுகிறது. பசுவுக்கு நட்ட ஈடு தருவதா பஸ்ஸுக்கு நட்ட ஈடு தருவதா என்று நீதிபதிகள் தீர்ப்பு சொல்லப் புகும்போதுதான் அந்த உண்மை வெளிவருகிறது. அதாவது பேருந்து பசுவை இடிக்கவில்லை, பசுதான் போய் பேருந்தை இடித்திருக்கிறது என்று...

கால் நடைகளுக்கு சேவை செய்த இவரது இலட்சியம் இலக்கு இளைஞர்கள்  உள்ளத்து உறுதியுடன் நாட்டை மாற்றுவார்கள் என்பதே...

நூலின் விலை 60 , பக்கம்: 80. மூங்கில் பதிப்பகம், 82, கூலண்ணன் தெரு கம்பம் 625516. அச்சிட்டோர்: வைகை பிரிண்டர்ஸ் மதுரை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment