Sunday, April 1, 2018

யூதாஸ் காரியாஸ் துரோகியா? புரட்சிக்காரனா? கவிஞர் தணிகை

யூதாஸ் காரியாஸ் துரோகியா? புரட்சிக்காரனா? கவிஞர் தணிகை

Image result for Judas Iscariot jesus christ


படித்ததில் பிடித்தது. இன்றைய நாளை உலகே யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது காலை எனக்கு ஒரு செய்தி வந்திருந்தது. அது உண்மையா? கதையா? எனத் தெரியாத போதும் பெரும்பாலான மனிதர்கள் அதை நம்பப் போவதில்லை என்றாலும் அந்தக் கோணம் எனக்குப் பிடித்திருக்கிறது.

அதாவது ரோமானியப் பேரரசு இஸ்ரேலை , யூதர்களை அடிமையாக நடத்தி வந்தபோது ரோமானியப் பேரரசுக்கு எதிராக எழுந்தவர்களில் இந்த யூதாஸ் காரியாஸ் மற்றும் பர்ணபாஸ் என்னும் ஒரு வாள் வீரன். இந்த வாள் வீரனை அழைத்தபடி ஜீஸஸ் இடம் சென்று எங்களையும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள் என யூதாஸ் கேட்டபோது பர்ணபாஸைப் பற்றிக் கேள்விப்பட்ட யேசு , வாள் எடுத்தவனுக்கு வாளால் தான் சாவு, என்று சொல்லிவிட்டு பர்ணபாஸை சேர்த்துக் கொள்ள மாட்டேன் எனத் திருப்பி அனுப்பி விட்டு யூதாஸ் (ஜுடாஸ் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்) காரியாஸை மட்டும் இணைத்துக் கொள்கிறார் சீடராக...12 வது சீடராக.

பேரதிசயங்களை செய்து காண்பிக்கும் யேசுவால் ரோமானியப்பேரரசை அழிக்க முடியும் அதிசயம் நடக்கும் என நம்பும் யூதாஸ் அதற்காக காத்திருப்பதாகவும். அது நடந்தேறாமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் உணர்கிறார்

இடையே ஒரு முறை ஜூலியஸ் சீசர் தலையிட்ட நாணயம் ஒன்றை  வரியாக கட்டுகிறார், தம்மிடம் காசு இல்லாதபோது அவரை வரி கட்டச் சொல்லி காவலர்கள் நிர்பந்திக்கும்போது இவர் என்ன செய்யப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும்போது, கடலின் அடி ஆழத்தில் இருந்து மீன் வலையிட்டு தமது சீடரைப் பிடிக்க வைத்து மீனிடமிருந்து அந்த நாணயத்தை வரித்தண்டலரிடம் கட்டும்போதும் கூட  ஆண்டவரின் நாணயம் ஆண்டவருக்கும் அரசின் நாணயம் அரசுக்கும் (அதாவது சீசர் தலை பொறித்த நாணயம் சீசர் ஆட்சிக்கும் என்று) என்று சொல்லி வரியைக் கட்டி விடுவதாக பைபிள் சொல்கிறது.

ஆக உலகின் நாயகன் ஆட்சிக்கு அதன் நியதிக்கு உட்பட்டு வரி கட்டுவதாக எந்த வித முரணையும் தெரிவிப்பதாக இல்லை.

இதனிடையே இவரால் பேரதிசயம் நிகழும் என்று நம்பி வெம்பும் யூதாஸ் காரியாச் உலகின் மேய்ப்பராக அவதரித்த யேசுவான‌ இவருக்கு கோபம் வந்தாலாவது இவரால் அந்த ரோமானிய ராஜ்ஜியத்துக்கு கேடு வந்து அழியும் என நம்பியே 30 வெள்ளிக் காசுகளுக்கு இவரைக் காட்டிக் கொடுப்பதாக பைபிள் சொல்வதும் , காவலர்கள் இவரை சிறை பிடிப்பதும், மன்னர் இவர் மேல் அப்படி ஒன்றும் தவறு இல்லை நீங்கள் என்ன சொல்கிறீர் எனச் சபையைப் பார்த்துக் கேட்பதும் திருடனைக் கூட விட்டு விடலாம் இந்த அரசுத் துரோகியை மனித துரோகியை கொல்லும் கொல்லுமென  அவைக்கூச்சலிட இந்த பழியும் பாவமும் தம்மைச் சாராது என அந்த ரோமானிய மன்னர் அங்கிருந்து எழுந்து சென்றுவிட...யேசு சிலுவையில் ஏற்றப்படுவதாகவும்

ஏலி ஏலி லெமா செபக்தானி, இறைவா, இறைவா அல்லது ஆண்டவா, ஆண்டவா அல்லது தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர் ? என அரற்றியபடி யேசு சிலுவையில் உயிர் மரிப்பதாகவும் பைபிள் சொல்கிறது..அதன் பின் பெரும் பாறையை உருட்டியபடி இவர் உடல் இருந்த குகையுள் இவர் உடல் இல்லாமல் இவர் அங்காங்கே திரிந்தார், கண்ணில் பட்டார் எல்லாம் இவர் தெய்வீகத்தை உணர்ந்தார் பரப்பினார்...அந்த 11 சீடரும் உலகின் மாபெரும் மதமாக இன்று விரிந்திருக்கும் கிறித்தவத்தை பரப்பினார் என்பதெல்லாம் செய்திகள்

ஆனால் அந்த யூதாஸ் காரியாஸ் அந்த 30 வெள்ளியையும் தூக்கி எறிந்து விட்டு சென்று மரத்தில் தூக்கிட்டுக் கொண்டு இறந்தார் அவர் உடல் கிழிந்து குடல் எல்லாம் வெளி வந்தன..அங்கு இரத்தம் சொட்ட அந்த நிலமே பாவ நிலம் இரத்த நிலம் எனப் பேர் பெற்றது என்றும் கூற்றுகள் உள்ளன.

இதில் சொல்லப்பட்ட இன்றைய யூதாஸ் காரியாஸ் ரோமானிய அரசுக்கு எதிராக அடிமை விலங்கை அகற்ற உதவுவார் என்ற எண்ணத்தில்தாம் அப்படி கோபமூட்ட யேசுவைக் காட்டிக் கொடுத்தார் கோபம் வந்தாலாவது யேசு அந்த ரோமானிய அரசை அழிப்பார் என நம்பிய‌ அதுவும் பலனளிக்காமல் போகவே தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணம்  சொல்லப்பட்டிருந்தது. அது எனக்குப் பிடித்திருக்கிறது. அது உண்மையா நடந்த இவை யாவும் சரித்திரப் பதிவுகளா?
அல்லது கதையா...எதுவும் தெரியவில்லை....

இதைப் பற்றி தெரிந்தவர் பகிர்ந்து கொள்ளலாம், எனக்கு வந்த வாட்ஸ் ஆப் பதிவுடன் எனக்கு உள்ள பைபிள் படித்த அறிவை பயன்படுத்தி இந்தப் பதிவை செய்திருக்கிறேன்...அந்தப் பதிவை அனைவர்க்கும் அல்லது தேவைப்படுவார்க்கு உணர்வின் மிகுதியால் அனுப்ப அவர் அதை தவறாக இன்று புரிந்து கொள்வரோ என்று உடனே எனது செல்பேசியிலிருந்தும் அழித்துவிட்டேன்..ஆனால் அதை யார் அனுப்பியது, அது வேறு எங்காவது இருக்கிறதா என பல மணி நேரம் தேடியும் கிடைக்காததால் அதைப் படித்த நினைவு உள்ள வரை, எனது சொற்களாலும் எனக்குண்டான பைபிள் அனுபவத்தாலுமே இந்த பதிவை இட்டிருக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: