Wednesday, November 8, 2017

நன்னன் பாரடைஸ்: கவிஞர் தணிகை.

நன்னன் பாரடைஸ்: கவிஞர் தணிகை.
Related image


இந்தியாவின் அந்த 714 பேர் பற்றி பாரடைஸ் பேசிக் கொண்டிருக்க, தமிழாசிரியர் ம‌.நன்னன் என்னும் திருஞான சம்பந்தன் அவர்களுக்கு இந்தப் பதிவு அஞ்சலியைச் செலுத்துகிறேன். நன்னன் அவர்களின் வயது 94. முழு வாழ்வு.

தமிழாசிரியர்கள் இராஜசேகரனும் தாமோதரனும்:
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===================================================

அப்போது சொல்வார்கள், பேசிக் கொள்வார்கள் மாணவர்கள் தாமோதரன் தமிழாசிரியர் மிகவும் திறமைசாலி, ஒரு திருக்குறளுக்கே விளக்கம் கொடுப்பார் பாருங்கள் முக்கால் மணி நேரம் கொண்ட ஒரு பீரியடு போதாது. அடுத்த நாள் வரும் தமிழ் வகுப்பிலும் அது தொடரும். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, சிவந்த உடல். நேர்வகிடு எடுத்த தலைமுடியின் பாங்கு, இவை யாவுமே அவருக்கென்று ஒரு இடத்தை பள்ளியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருந்தது.

இதில் சொல்லப்பட்ட இரு தமிழாசிரியர்களுமே எனக்கு தமிழ் வகுப்பு எடுத்தவர்கள்தான். தாமோதரன் எனது வகுப்புத் தோழன் பாண்டுரங்கன் என்பவனின் சித்தப்பா. ஏதோ நெய்வேலி, கடலூர் பக்கம் அவர்கள் ஊர். எங்களது வைத்தீஸ்வரா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர். நான் குறிப்பிடுவது 1975 முதல் 1978 வரை.

தமிழாசிரியர் இராஜசேகரன் ஒல்லியான உருவம், சிரிக்கும்போது வெளியே வரும் சற்று துருத்திய சில முன் பற்கள். இவரும் வேட்டி சட்டைதான் . அந்தக் காலத்தில் பெரும்பாலுமே ஆசிரியர்கள் வேட்டி சட்டைதான். ஆனால் அது முழுக்கால் சட்டை வந்து விட்ட தருணம்தான். எனவே பாதிபேர் அப்படியும் பாதி பேரு இப்படியும் இருப்பார்கள்.

அவரின் சிரிப்பை இன்றும் என் மனக்கண் கொண்டு பார்க்க முடிகிறது.


இருவருமே இன்று இல்லை எனவே அவர்கள் பற்றி நான் நன்றாக எவரும்
கேட்காமல் எழுத முடியும் வெளிப்படையாகவே...

தாமோதரன் தோற்றப்பொலிவில் இராஜசேகரனை விட எடுப்பாக இருந்தாலும் புன் முறுவலால் இராஜசேகரன் ஆசிரியர் முந்திவிடுவார்.

இராஜ சேகரன் சார் சிதம்பரம் பகுதியில் இருந்து இந்த ஆசிரியத் தொழிலை ஏற்றுக் கொண்டவர் தாய் தந்தை, தம்பி என தமது மணம் முடிந்த பிறகும் ஒரே கூட்டுக் குடும்பமாக இருந்து அனைவர்க்கும் பயன்பட்டவர். தமது 65 வயது வாக்கில் காலமாகிவிட்டார்

மிக அளவுடன் பேசுவார், மிக கண்ணியமாக நடந்து கொள்வார். பேசுவது கூட அதிகம் இருக்காது. அவரது வகுப்பில் நான் படித்தபோது தமிழில் 80 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று முதல் மாணவனாக இருந்தது நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் தமிழில் என்னதான் எப்படித்தான் முழுதாக எழுதி இருந்தாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எல்லாம் தரமாட்டார்கள்.

இவர் எப்படி சொல்லித் தருவார் எனில் தேவையான அளவு மட்டுமே இருக்கும். மிகவும் தெளிவாக இருக்கும். சுருக்கமாகத்தான் இருக்கும். கேள்வி பதில்கள் மிகவும் சரியாக தயாரித்து நோட்ஸ் கொடுத்து எழுதிக் கொள்ளச் சொல்லி விடுவார். மிகவும் நன்றாக‌ இருக்கும் எனவே இப்போது நினைக்கும்போதும் பெரிய அளவில் பிரமிப்பூட்டும் பாடம் நடத்துவதாக இருந்த தாமோதரனை விட இராஜசேகரனின் முறைதான் மிகச் சிறந்ததாக இப்போதும் படுகிறது. தாமோதரன் தமிழை விட இராஜசேகரனின் தமிழ் சிறந்தது என்றும் மாணவர்களுக்கு ஏற்றது என்றும் படுகிறது.

தாமோதரன் பாடம் நடத்தலை சாண்டில்யனுக்கு ஒப்பிட்டால், இராஜசேகரனை நாம் கல்கிக்கு ஒப்பிடலாம். ஆரம்பத்தில் சாண்டில்யனே மலைக்க வைத்தது. ஆனால் கல்கியின் அணுகுமுறை போல இராஜசேகரனே காலத்தை விஞ்சி என்னுள் நிற்கிறார். ஏன் எனில் தாமோதரன் என்ன செய்தாரோ ஏது செய்தாரோ முழு விவரம் கிட்டவில்லை, எட்ட முடியவில்லை ஆனால் 3 உயர் நிலைப் பள்ளிக் கூட மாணவிகள் இறப்பிற்கு இவரும் ஒரு காரணம் என இவர் பேரும் அடிபட்டது. அதிலிருந்து அவரது புகழ் மறைய ஆரம்பித்து விட்டது.

ஆனால் இராஜ சேகரன் அப்படியே குணக்குன்றாய் இருந்தார். ஒழுக்கமாய் வாழ்வின் நெறிகளில் இருந்து பிறழாமல் வாழ்ந்து மறைந்து விட்டார்.

பத்தாம் வகுப்பில் பாரதியின்  பாஞ்சாலி சபதம் ஒப்புவித்தல் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது.

அவர் நடுவராக இருந்தபோது பதினொன்றாம் வகுப்பு ஒப்புவித்தல் போட்டியில் பாரதி தாசனின் பில்கணீயம் முழுப் பாடல்களுக்கு எனக்கு முதல் பரிசு கிடைத்தது . எனக்கு அடுத்து இரண்டாம் பரிசாக மற்றொரு தமிழாசிரியரின் மகளுக்கு கிடைத்தது. அப்போதெல்லாம் பெரும்பாலும் ஆசிரியர் வீட்டுக் கன்னுக்குட்டிகள்தான் பரிசுகள் பெறமுடியும், முதல் மதிப்பெண்களும்...

ஆனால் எனது வல்லமை அந்த போட்டியில் வெளிப்பட்டபோது அவர் சிரித்த அந்தப் புன்முறுவல் எனக்கு இன்றும் எனக்குள் மகிழ்வாடுகிறது. போட்டி முடிவை நோட்டீஸ் போர்டில் ஒட்ட வேண்டிய நேரம் வரை காத்திருந்து காணவேண்டிய அவசியமில்லை என்று பறை சாற்றும் வெற்றி அது. அந்த வெற்றி பற்றி இன்றும் நினைத்தால் எனக்கு இனிக்கவே செய்கிறது. சரி அதன் பின் எத்தனையோ படிகள் ஏறி விட்டபோதும் இன்றும் அது பசுமையான நினைவாக இருக்கிறது.

அப்போதெல்லாம் எங்களது வீட்டில் துணிக்கு சலவை செய்யும் இஸ்திரிப்பெட்டி, அதாங்க அயர்ன் பாக்ஸ் இல்லை. அப்போதெல்லாம் கரியை அள்ளிப் போட்டு ஊதி நெருப்பாக்கி அதன்  வெப்பத்தில் தான் துணி சலவை செய்யப்படும்.

ஒரு வீதி கடந்து இராஜசேகரன் ஆசிரியர் குடும்பம் குடி இருந்தது. எனது மூத்த சகோதரர் அவர்கள் வீட்டில் இருந்து அந்த அயர்ன் பாக்ஸை வாங்கிவர என்னைப் பணிப்பார். எத்தன முறை வாங்கி வந்திருப்பேன் என எனக்குத் தெரியாது ஆனால் ஒரு முறை கூட அவர்கள் வீட்டில் அவரோ அவர்கள் வீட்டைச் சார்ந்தோரோ அதை எடுத்துக் கொடுக்க முகம் சுளித்ததாய் இன்றும் என் நினைவில் இல்லை.

நன்னன் பரவாயில்லை 94 வயது வரை வாழ்ந்திருக்கிறார்

ஆனால் பொதுவாக நல்லவர்கள் எல்லாம் அவ்வளவு காலம் வாழ்ந்தது இல்லை. ஆனால் அவர்கள் நினைவு என்றும் தொடர்ந்தபடி இருக்கிறது என்பதுவே பெருமை.

அந்த இராஜசேகரனின் ஆசிரியர் மகன் அதிகம் உயர் படிப்பெல்லாம் படிக்காமல் ஒரு இரும்பு, சிமெண்ட் கடையில் கொஞ்ச காலம் உதவியாளராக இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

  1. அருமையான பதிவு. நன்றி

    ReplyDelete
  2. தமிழறிஞர் நன்னன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலியினைச் செலுத்துவோம்

    ReplyDelete