Sunday, September 10, 2017

மழை, பயணம், அங்கமுத்து: கவிஞர் தணிகை

மழை, பயணம், அங்கமுத்து: கவிஞர் தணிகை

Related image


காகத்துடன் காகம் அணைந்தால் அதாவது அது ஆணும் பெண்ணும் (ஆண் காகமும் பெண் காகமும்)    சேர்வதை நாம் பார்த்தால் நமது நெருங்கிய உறவில் நமது குடும்பத்தில் ஒருவர் மரணம் நிகழும் . இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன் .உண்மை. இதனால் என்னை இடது இல்லை வலது என்று எவர் கருதினாலும் அது எனக்குப் பொருட்டில்லை நான் இடதும் வலதும் இணைந்த மனிதம்.பூவில் வண்டு கூடும் கண்டு போகும் கண்கள் மூடும் வேண்டுமானால் நமக்கு கவித்துவமாகத் தெரியலாம்.ஆனால் இது வேறு...


இது பற்றி எனது சகோதரி ஒருவர் வீட்டில் குடி இருந்த ஒரு பெண்மணி அவரது கணவர் மரணத்தின் போது என்னிடம் விரிவாக விளக்கிப் பேசினார். அது என்னுள் மறக்காமல் நன்கு பதிந்திருந்தது.

சில பல நாட்களுக்கும் முன்னால் வழக்கம்போல எனது சேவைப்பணிக்குச் செல்லும் பொருட்டு விடியற்காலை எழுந்து கடமைகளை செய்து வந்து பேருந்துக்குப் புறப்படும் முன் உண்ட சிற்றுண்டித் தட்டை கழுவி எடுத்து வ்ரும் முன் கவனித்தேன் எப்போதும் போல காகங்களுக்கு உணவிட்டே நான் உண்பது வழக்கம் என்பதால் நிறைய காகங்கள் கரைந்தன. அதில் எங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள கறிவேப்பிலை மரத்தின் கிளை மேல் ஒரு காகத்தின் மேல் அமர்ந்து மற்றொரு காகம் புணர்ந்தபடி இருந்தது. அது புனர்தல் இல்லை வெறும் சண்டைதான் என சமாதானப்படுத்திக் கொண்டேன் என்றாலும்  எனக்கு அந்தப் பெண்மணி சொல்லியது நினைவில் இருந்தது நமது குடும்பத்தில் நெருங்கிய உறவினர் அல்லது குடும்பத்தில் ஒருவர் இறக்க நேரிடும் என எண்ணினேன். பெரும்பாலும் எனது மூத்த சகோதரி அங்க முத்து சுமார் வயது 70 நோய் வாய்ப்பட்டிருந்தார் அவராகத் தான் இருக்கும் என எண்ணினேன்.

அவரது கதை நேற்று இரவு 7.30 மணியளவில் மூச்சடங்கி இன்றுடன் முடிந்தது. அதன் தொடர்ச்சிகள் பல உள்ளபோதும் எங்கள் குடும்பத்தில் ஒரு மூத்த பெண் , எமது பெற்றோருக்கு அடுத்த வரிசையில் நின்றவரின் மரணம் எங்களால் ஏற்றுக் கொள்ள முடிந்ததாய் இருந்த போதும், சற்று செரிக்க முடியாததாகவும் இருக்கிறது.

இந்தக் காகத்தின் அறிகுறி, அடையாளம் மட்டுமல்ல வீட்டில் எறும்பு புற்று பெரிதாக கட்டுவதும் கூட. அப்படித்தான் அப்போது மிகப்பெரிய அளவில் பூமியிலிருந்து தோட்டத்துப் பகுதியில் எழும்பியபடியே இருந்தது தாயை இழந்தோம் இப்போதும் கூட அது போல ஒரு எறும்புப் புற்று எழுந்தபடி இருந்தது எமது மூத்த சகோதரியை இழந்தோம்.

காரணம், பிணி ஆஸ்த்மா, மழை, ஈரக்கசிவு, சுற்றுச் சூழல் , தங்குமிடம், செய்த தொழில் வயது குடும்பப் பராமரிப்புகள் இப்படி இன்ன பிற.

அங்கமுத்து , மரகதம், செல்வம், இப்படிப்பட்ட பெயர்கள் ஆணுக்கும் வைக்கிறார்கள், பெண்ணுக்கும் வைக்கிறார்கள். அந்தக் காலத்தில் அப்படித்தான் இவை பொதுப்பேர்கள்.

இந்த அங்கமுத்தம்மாள் வாழ்வு மிகவும் கடினமானது. வங்கத்தின் சரத் சந்திரர் எழுதும் கதையில் வரும் பெண்போல படாத பாடு பட்டாள். எந்தவகையிலும் தமக்கு பொருத்தமில்லாத பணிகளை எல்லாம் செய்ய கற்றுக் கொண்டாள் தாம் கட்டிய கணவனின் சுகமே இவளுடைய சுகமாக வாழ்ந்து முடித்துக் கொண்டாள். தேர்வும், முடிவுகளும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் சரியாக அமையாவிட்டால் வாழ்வு மிகவும் கடினமானதாகவே இருக்கும் என்ற வாழ்வின் நிதர்சனம் இவருடையது.

அவரது வாழ்வின் கஷ்ட நஷ்டம் பற்றி எல்லாம் எழுதலாம் வேறொரு நாளில் அவை நெஞ்சுகச் செய்யும். எப்படியோ ஒரு வழியாக வாழ்வை நிறைவு செய்து வாழ்ந்த வாழ்வை உறுதி செய்து விட்டாள்.

சுருக்கமாக சொன்னால் மகாத்மா காந்தியின் தாய் புட்லிபாய் போல , மகாத்மாவின் மனைவி கஸ்தூரிபா போல தன்னை தாம் நினைக்கும் எண்ணத்துக்காக அல்லது தாம் எவருடன் வசிக்க விதிக்கப்பட்டதோ அவருக்காக அவரின் எண்ணத்துக்காக தம்மையே அர்ப்பணித்து தியாகம் செய்து முடிந்து போவது முடித்துக் கொள்வது போன்ற வாழ்க்கைதான் இவருடையதும்...

தொடர்வேன்...எப்போதாவது இவரது விரிவான கதையுடன்..

எனது கடைசி பங்களிப்பாக கடைசி சகோதரன் என்ற இரத்த பந்தத்துக்காக ஒரு பூ மாலை, ஒரு கடைசிக் கோடிச் சேலை, செலவளித்த முறைமைகளுக்கான ஒரு பங்கிடல் தொகையாக ஒரு ஆயிரம் ...அத்துடன் முடிந்ததா எங்களது உறவு?

இவரை அல்ல  கடைசியாக இவரின் உயிரற்ற உடலைப் பார்ப்பதற்காக புறப்பட்ட அதிகாலையிலும் மழையுடன் புறப்பட்டோம் எல்லாம் முடிந்து மழையுடன் வீடு திரும்பினோம்...பயணம்...சில மணி நேரம்...வாழ்வின் பயணம் 70 ஆண்டும் ஒரு சில நாளில்...தொடர்வேன்...எப்போதாவது இவரது விரிவான கதையுடன்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. மூத்த சகோதரியை இழந்து வாடும் உங்களுக்கு எங்கள் ஆறுதல்கள்.

    ReplyDelete
  2. thanks Sri RAm. for your consoling words. vanakkam. please keep contact.

    ReplyDelete