Tuesday, May 5, 2026

தமிழ் நாட்டில் நிகழ்ந்தது ஒரு அரிய ஒரு விரல் புரட்சி: கவிஞர் தணிகை

 தமிழ் நாட்டில் நிகழ்ந்தது ஒரு அரிய ஒரு விரல் புரட்சி: கவிஞர் தணிகை



எல்லாம் நன்மைக்கே. அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்து கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா இப்படி எல்லாத் தலைமைகளுமே காங்கிரஸ் அரசை தமிழகத்தில் வீழ்த்தியதில் இருந்து திரைத் துறை சார்ந்து அதன் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட்டார்கள். ஆட்சி அமைத்து அரசாண்டார்கள், ஆட்சி செய்தார்கள்.


அதன் இறுதியாக இன்று திரை நட்சத்திரம் விஜய் அவர்களுக்கு கிடைத்த வெற்றி முழுதும் அரசியலை திரை உலகும், திரை இரசிகர்களும் முழுவதுமாக துடைத்து எடுத்துச் சென்று விட்டார்கள் என்றே தோன்றுகிறது.மிகவும் குறுகிய காலத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றம் இது.


அந்த அளவு மக்கள் வெகுண்டு நொந்து போய் இருந்திருக்கிறார்கள் என்பதையே இந்நிகழ்வு அறிவுறுத்துகிறது.

மாற்றி மாற்றி இரண்டு திராவிட இயக்கங்களே அதற்கு மாற்றாக ஏதும் இல்லை என்ற ஒரு பல்லாண்டு காலமாக நிலவி வந்த பிம்பங்களை இந்த அடி அடித்து தூளாக்கி விட்டது. வாக்கு சதவீதம் அதிகமானதும் பதிவானதும் முதல் முறை வாக்களிப்பாரும், இளைஞர்களும் அதற்கு பெரும்பாலும் வித்திட்டார்கள் என்றே தோன்றுகிறது.இரண்டு அணிகளுக்கு மாற்றாக மூன்றாம் அணி ஒன்று உருவாகிவிட்டது. மக்கள் உருவாக்கி விட்டார்கள் இனி தமிழக அரசியலில் ஆடுகளம் புதிதாகவே இருக்கும்.


எவருமே இவ்வளவு பெரும் வெற்றி தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எந்தக் கட்சியுமே ஆட்சியில் பங்கு என்று சொன்னதற்கும் பிறகும்,கை நீட்டி எல்லாக் கட்சிகளையும் அழைத்த பிறகும் (எவருமே) வந்து சேரவில்லை. இப்போது தனியாக இவ்வளவு பெரிய வெற்றி இமாலய வெற்றி கிடைக்கும் கிடைத்திருப்பதை அவர்களே கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் சக்தி அப்படி இருக்கிறது.ஒரு வகையில் பார்க்கும்போது வாக்குக்கு பணம் என்ற வரையறையில் இருந்து மீண்டு இந்த வெற்றி வந்துள்ளதைப் பாராட்டலாம்


மத்திய ஆளும் கட்சி ஒரு தொகுதியில் அதுவும் சிறிய வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ஆனால் அவர்கள் நினைத்த மாறுதலை நிகழ்த்தி விட்டதாகவே படுகிறது. தனிபெரும் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் இல்லை என்பது தமிழக வரலாற்றில் ஏற்கெனவே ஒரு முறை கலைஞர் கருணாநிதியால் அனுபவிக்கப் பட்டு ஆட்சியைக் கொண்டு சென்றது எவரும் மறந்து விடக் கூடாது. அதே போன்ற வாய்ப்புதாம் நிகழ்ந்திருக்கிறது இப்போதும் ஆனால் அவர்களுக்கு இருந்தது தோழமை ஒத்துழைப்பு. இவர்களுக்கு தோழமை கட்சிகள் என்று எதுவும் இல்லை என்பதையும் நாம் மறந்து விட முடியாது. ஆனால் வெற்றி பெற்றாலே தாமாக உதிரிகள் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் வந்து சேர்ந்து கொள்ளும் என்பதையும் மறுத்து விட முடியாது.


 தேர்தல் நிகழ்ந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் மற்ற மாநிலங்களில் எல்லாம் கேரளம் தவிர மத்தியில் ஆளும் கட்சியே ஆக்ரமித்திருக்க தமிழகத்தில் இந்த முடிவு நேர்ந்திருக்கிறது இதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம் ஆத்மியின் 7 ராஜ்ய சபா உறுப்பினர்களின் கட்சி மாறல் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து மாநிலங்களையும் ஆக்ரமித்தல் எல்லாம் ஒரு அபாய சங்கொலியாகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூட இலக்கு நோக்கி அந்தக் கட்சி நெருங்கி வருவதை அனைவரும் அறிய வேண்டும்.

காலம் பேசாது பதில் சொல்லும் என்ற ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் நழுவ விட்ட வாய்ப்பை இவர் பெற்றுக் கொள்ள மக்கள் வாக்களித்து விட்டனர்.இதை ஒரு விஜய் அலையாகவே பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.


இந்த தேர்தலில் மட்டுமல்ல எந்த தேர்தலிலுமே வாக்கு சீட்டு முறை எந்திர முறை, அரசு அலுவலர்களின் உள் குத்து போன்றவை விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்களே.

குழந்தைகளை ஊக்குவித்தல் என்ற சட்டத்துக்குப் புறம்பான தேர்தல் பரப்புரை இருந்த போதும் சரியாக மாநிலம் முழுதும் பரப்புரை செல்லாத போதும் இந்த மாற்றம் மக்களால் நிகழ்த்தப் பட்டிருக்கிறது கவனிக்கத் தக்கது. வாக்குறுதிகளை நிறைவேற்றல் பற்றிய சிந்தனை இனி மக்களிடம் தொடரலாம்...



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment