Tuesday, July 30, 2024

மேட்டூர் அணையும் தொழில் நுட்பமும்: கவிஞர் தணிகை

 மேட்டூர் அணையும் தொழில் நுட்பமும்: கவிஞர் தணிகை



மேட்டூர்க்காரர்கள் மற்றும் சரித்திர புள்ளி விவரங்கள் மேல் பற்றுள்ளார்க்கு இந்த அணையின் சிறப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. என்றாலும் தற்போதைய ஒரு செயல் இதைப் பற்றி எனைச் சொல்லத் தூண்டியிருக்கிறது. கட்ட ஆரம்பித்து 100 ஆண்டை நெருங்கியும் இதன் பலம் சொல்ல முடியாதது. மேலும் இந்த அணைக்கட்டும் காவிரியுமே தமிழகத்துக்கு நீர் வார்க்கும் தாய்.


16 கண்மாய் வளைவு வானவில்லை நிலத்தில் இறக்கி போட்டது போலவும், முக்கியத்துவம் குறிக்க ப்ராக்கெட் குறியிடும்போது இரண்டாவதாக போட்டு முடிக்கும் குறி போலவும் இருக்கும் இந்தக் எல்லீஸ் டங்கன் மதகுகள் மற்றும் பாலம் ஒரு அற்புத கட்டமைவு.இரு மலைகளுக்கு இடையே அணை கட்ட இடத் தேர்வு யாவுமே அற்புதம்


உபரி நீர் வந்து தானே வழிவது போலவும் அணைக்கு எந்த சேதமும் அதிக வெள்ளத்தால் பாதிப்படையாது காக்கவும் மற்றும் அணையின் நீளம், உயரம், அடிமட்டம் நீர் சேகரிப்பு புள்ளி விவர நில அளவுகள் பற்றி எல்லாம் எளிதாக உங்களுக்குத் தெரிய வர இன்றைய அறிவியல் துணை செய்கிறது. எனவே அவை பற்றியும் நாம் கூறியது கூறி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை.


அடுத்து கீழ் பாலம் எனப்படும் கீழ் மேட்டூரில் அமைந்துள்ள  அந்தப் பாலம் வாகனம் செல்லும்போது தொய்வடைந்து ஊஞ்சல் போல அசையும் ஆனால் உடைய வாய்ப்பில்லை எனவே அதைக் காக்கும் பொருட்டு நமது அரசுகள் அதற்கு மாற்று பாலங்கள் போக்குவரத்துக்கு என செய்து விட்டதைப் பற்றியும் நாம் சொல்லியாக வேண்டும்.


 நமது இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்தின் சர். ஆர்தர் காட்டன் நமது நாட்டின் நீர்ப்பாசனத் தந்தை என அழைக்கப் பெறுவது மாபெரும் சரித்திரம் அதைப்பற்றி எல்லாம் இந்த சிறிய பதிவில் குறுக்கி சொல்ல எனக்கு எண்ணமில்லை இவை பற்றி எனது ஒரு கட்டுரையில் நதி நீர் இணைப்பு பற்றி எழுதியதில் தொண்ணூறுகளிலேயே குறிப்பிட்டு விட்டதாக நினைவு.


அவரால்தாம் முதன் முதலில் அணைக் கட்ட திட்டமிடப்பட்டு பார்வையும் இடப்பட்டது, அதன் பிறகு கவர்னர்கள் ஸ்டேன்லி, கட்டுமான வேலையை நிர்வாகம் வந்த ஸ்டேன்லி,எல்லீஸ் டங்கன், சர்.விஸ்வேஸ்வரய்யா, சர்.சி.பி. இராமசாமி இப்படி நிறைய பேர் குறிப்பிடத் தக்கவராகிறார்கள்.


சரி இப்போது ஏன் எழுதுகிறேன் எனில்: யாம் சிறுவனாக இருந்த போதிருந்து இந்த தாய்மடியை அடிக்கடி தரிசிக்க அந்தப் பக்கம் நடை போடுவது எனது பிடித்த வழக்கங்களில் ஒன்று. அப்படி செல்கையில் பல ஆண்டுகளில் அணை நிரம்பி வழிந்ததும் உண்டு. அப்போதெல்லாம் மதகை அதாவது 16 கண் கதவுகளை நீர் தொட்டுவிட்டாலே மகிழ்வு ததும்பும் அந்த நீர் கதவுகளின் இரு பக்கங்களிலும் இருப்பு கொள்ளாமல்  பீச்சி அடிக்கும் தரைப்பகுதி கண்ணாடியை நினைவு படுத்தும்படி நீர் விரைந்து செல்லும் கண் கொள்ளாக் காட்சிகள் அதில் விளையாட நிறைய பேர், மீன்களும் கூட தப்பி போகும்.இவை அணை முழு கொள்ளளவை எட்டும் முன்பே நடப்பவை.அப்போதெல்லாம் அந்தப் பாலத்தில் அனைவரையும் சென்று வர அனுமதித்தும் வந்தனர்.


இப்போதும் எல்லாவற்றுக்கும் தடை ஏற்படுத்துமளவு மனிதர்களின் குணம் மலிந்து விட...


நேற்று நாங்கள் பார்க்கும் போது கதவு நிறைய இன்னும் 2 அடி மட்டுமே பாக்கி, அதாவது 118 அடி அந்தப் பக்கம் பாசனத்துக்கு இருபதாயிரம் கன அடிக்கும் மேல் வெளி அனுப்பியும்...

ஆனால் துளி நீர் கூட கதவின் இருப்பக்கங்களிலும் இருந்து கசிவில்லாமல், கீழ் பக்க காரையிலும் நீர் வெளிவராமலும் மிகத் துல்லியமாக அரசுப் பணி நடைபெற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.


மதகை, இயற்கையாக கொள்ளும் நீருக்கும் மேல் இயல்பாக 120அடிக்கும் மேல் நீர் வந்தால் மட்டுமே வழியுமளவு வெளியேறுமளவும் கீழ் இறங்கி பெரு வாகனங்கள் கருவிகள் கொண்டு பணி செய்ததை ஒவ்வொரு கதவருகிலும் போகும் போதும் அவ்வழி வரும்போதும் கவனித்ததுண்டு. அதன் பலன் இதுதான் போலும்.


மனித தொழில் நுட்பம் வளர்ந்தபடியே இருக்கிறது.


உண்மையிலேயே பாராட்டத்தான் வேண்டும்.

குறையே சொல்லிச் சொல்லி பழக்கப் படும் எண்ணங்களுக்கிடையே இது போன்ற நிறையும் கவனிக்கப் பட வேண்டியது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை. 






No comments:

Post a Comment