Wednesday, May 18, 2022

கிங் ரிச்சர்ட் (சினிமா சினிமா சினிமா):அழகு என்பது செயலே கவிஞர் தணிகை

 கிங் ரிச்சர்ட் (சினிமா சினிமா சினிமா):அழகு என்பது செயலே கவிஞர் தணிகை



சிறந்த திறம் படைத்த அனைவரிடமுமே கர்வம், தலைக்கனம், செருக்கு ,எல்லாரையும் விட நான் பெரியவர், உயர்ந்தவர் என்னும் எண்ணம் இருப்பதை பெரும்பாலும் காணலாம். அது சாதி, மதம், இனம், பொருள் பலம் இப்படி ஏதாவது ஒன்றைக் காரணமாகக் கொண்டிருக்கும். ஆனால் பூமியின் உச்சிக்கு ஏற வேண்டிய சிறந்த  மனிதரிடம் அதைக் காணமுடியாது. அதை எப்படி சொல்லி ஒரு தந்தை வளர்க்கிறார் என்பதை தொடு உணர்வாக கொண்ட படம்.



செயலே புகழ் பரப்பும் வாய் அல்ல என்ற ஒரு பழமொழி உண்டு. அழகு என்பது செயலே என்று பெரியார் கூட பேசியதாக நினைவு. கறுப்பு இனம், மிகவும் தோற்றத்தில் அழகில்லா தோற்றம்,ஏன் சொல்லப் போனால் அசிங்கமான உருவங்கள் எப்படி உலகின் பெண்கள் டென்னிஸ் எவரெஸ்ட் சிகரம் ஏறி அமர்ந்து சாதிக்கிறாரகள் என்பதை சொல்லி இருக்கும் படம்.



 உண்மையில்  கிங் ரிச்சர்ட்டாக நடித்து ஆஸ்கார் வாங்கிய வில் ஸ்மித் கர்வத்தில் கண் மண் தெரியாமல் கோபப்பட்டு ஆஸ்கார் மேடையில் அறிமுக உரை செய்யும் மற்றொரு நடிகரை  தமது மனைவி பற்றிக் குறிப்பிட்டார் தம் பேச்சில் என அறைந்து மன்னிப்பு கேட்டு அதற்கு உரிய வேதனையையும் பெற்றுவிட்டார் ஆனால் அவர் ஆஸ்கார் மற்றும் பல விருதுகளை வென்றதில் எந்த வியப்பும் இல்லை. அப்பேர்ப்பட்ட நடிப்பு. இவர் இந்தப் படத்தை தயாரித்துள்ள 3 வரில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நடித்தது அவர்தாமா என்று தெரியாத தந்தையாக கிங் ரிச்சர்ட் ஆக இருக்கிறார். உண்மையில் கிங் ரிச்சர்ட் கூட அப்படி இருக்கிறாரா என்பது தெரியாது.


 2021 நவம்பர் வெளிவந்த படம் இதைப்பற்றி நான் ஏன் பதிவிட வேண்டியதிருக்கிறது எனில் விளையாட்டைப் பற்றி ஹிந்தி தங்கல், தமிழ் கனா, மௌலி இயக்கத்தில் அஸ்வினி நாச்சியப்பாவின் ஓட்டம் ஆகியவை வந்திருந்த போதிலும் இந்தப் படம் எல்லாவற்றையும் தாண்டி டென்னிஸ் விளையாட்டின் வரலாற்றில் சரித்திரமாக நிற்கும் சரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் என்ற இரு சகோதரிகளின் அடையாளத்தை அழிக்க முடியாதிருக்கும் நிகழ்வை காலத்தில் காட்சி முறையில் எளிமையாக எடுத்து 144 நிமிடங்கள் ( அதில் கடைசியாக டைட்டில் நிறைய நிமிடங்கள் இடம் பிடித்துக் கொள்வதை தவிர்த்து விட்டால் இன்னும் குறைந்த நீளமே உள்ள படம்) பதிவு செய்திருக்கிறது..



கிங் ரிச்சர்ட்டை சாகடிக்குமளவு கூட அடித்து நொறுக்குகிறார்கள், பின் வாங்குவதில்லை தமது இலக்கிலிருந்து, மேலும் பணம் வரும்போது அந்த வாய்ப்புகளை எப்படி தவிர்த்து இதெல்லாம் எம் தகுதியல்ல என மேலும் மேலும் எப்படி தவிர்ப்பதன் மூலம் தொட முடியாத உயரம் செல்ல முடியும் என வீனஸ் வில்லியம்ஸ் ஸ்பான்சர்ஷிப் தொகை 1 மில்லியன் டாலர்களிலிருந்து அரஞ்சா சாஞ்சஸ் விகாரியோவிடம் வஞ்சகமாக முதல் கிராண்ட்ஸ்லாம் டைட்டிலில் வீழ்ந்த பின்னும் புகழ் ஏணியில் ஏறி ரிபோ காலணி நிறுவனத்தின் மூலம் முதல் வாய்ப்பிலேயே 13 மில்லியன் டாலரை அந்த மிகவும் கீழ் தட்டில் இருந்த குடும்பம் பெறுகிறது என்னும் போது பார்க்கும் எவருமே வியப்படையாமல் இருக்க முடியாது.



நோ காம்ப்ரமைஸ், நோ கன்வின்ஸ், எங்குமே சமரசம் செய்து கொள்ளாத திறமை மீது வைத்த  அசாதாரணமான நம்பிக்கை,எவராலும் சமாதானப் படுத்த முடியாத இறுக்கம், இவைதான் கிங் ரிச்சர்ட். அடிப்படையில் டென்னிஸ் பயிற்சியாளராக இருக்கும் இவரும் இவரது டென்னிஸ் பயிற்சியாளாரான மனைவியும் எப்படி இந்த வீனஸையும் , சரீனாவையும் உச்சிக்கு கொண்டு செல்கிறார்கள் என்ற அடிப்படையை மட்டும் விளக்கி எடுத்துள்ளார்கள். 


உண்மையில் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் மணமுறிவு முறித்து விவாகரத்து பெற்றுக் கொள்கிறார்கள் என்பது மேல் விவரம்.



 நடையிலேயே அசத்துகிறார் வில் ஸ்மித் அது வேறு...


இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்பதை விட இதில் சொல்லப் பட்டிருக்கும் கர்வம் கொள்ளாதே, அழகு என்பது செயலே போன்ற பாடங்கள் தாம் என்னை இதை எழுதவே நிர்பந்தித்தது. 



சில நாட்களுக்கும் முன் கூட ஒரு 17 அல்லதூ 18 வயது நிரம்பிய இளைஞன் ( அங்குதான் உரிமம் உண்டாமே துப்பாக்கி வைத்துக் கொள்ள) ஒரு பொது இடத்தில் அதிகமாக கறுப்பு இன மக்கள் புழங்கும் இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தி பலரைக் கொன்று இருக்கிறான். பலர் காயமடைந்ததாகவும் செய்தி. இது போல் அமெரிக்க  மண்ணில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு 


இதன் அடிப்படையில் பார்த்தால் இன்னும் அங்கு நிறவெறி அடங்காதது தெரியும், மார்ட்டின் லூதர் கிங் ரத்தம், ஆப்ரஹாம் லிங்கன் போன்றோர் மட்டுமல்ல இராபர்ட் கென்னடி போன்ற நாட்டின் முதல் மனிதர் யாவருமே சுட்டுத் தள்ளிய தேசம் அது...



இங்கும் இந்திராவும், ராஜீவும், மகாத்மாவும் சுட்டு தானே தள்ளப் பட்டிருக்கிறார்கள்... குண்டுகளுக்குத் தானே இரையானார்கள்... காரணங்கள் பல...ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படை கர்வம்...


இன்று உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்த செய்தியை போற்றி புகழ்ந்து வரும் நிலையில் நாம் இருக்கும் போது இலங்கை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது...இராமாயணத்தில் அனுமன் வாலுக்கு  பற்ற வைத்த தீ அந்த  தேசத்தையே எரித்ததான கதை தமிழ் இனத்தை அழித்த நாடு இப்போது தன்னைத் தாமே எரித்துக் கொண்டு இருக்கிறது...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



 

No comments:

Post a Comment