Thursday, April 23, 2026

நக்கீரன் பேசுகிறேன்:என் நாடு வீடு மனைவி மகன் மக்கள்: கவிஞர் தணிகை

 நக்கீரன் பேசுகிறேன்

என் நாடு வீடு மனைவி மகன் மக்கள்: கவிஞர் தணிகை


 ஈன்றாள் பசி காண்பான் ஆயினுஞ் செய்யற்க

 சான்றோர் பழிக்கும் வினை.



இந்த குறளுக்கேற்ப வாழ்க்கை 65ஆம் வயதில்...

இவனுக்கு மட்டுமென்ன ஸ்பெசல்? என்றார்கள், என்பார்க்கு:


இது வரை வாக்களிக்க மறுத்தும் கூட இருந்திருக்கிறேன் என்றாலும்

வாக்களிக்க காசு வாங்கியதே இல்லை...

இலஞ்சம் வாங்கியதும் கொடுத்ததும் இல்லை அதற்கெதிரான போராட்டத்தில் சுய வாழ்வு பெரிதும் பாதித்த போதும்...

மதுவுக்கு எதிராக போராடி இருக்கிறேன் பல்வேறு வழிகளில்

42 ஆண்டு கால தியானப் பயிற்சி தொடர‌

மாலை சுமார் 8 கி.மீ நடைப் பயிற்சியில் திரும்புகையில் தெரு விளக்கு ஏற்றுவதை தொடர்ந்து செய்து வருகிறேன்.

மழைக்காக தினமும் எனது தியான நேரத்தில் பிரார்த்திக்க சில நிமிடம் அல்லது சில நொடிகள் நினைவால் துதிக்கிறேன்.

எனது சீடர்கள், எனது உண்மையான சகோதர உறவுகள் , அவர் தம் குடும்பங்கள், நல்லவர்கள் நீடித்த காலம்  இந்த மண்ணில் நல்லபடியாக வாழ வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்


சில கோயில்கள் உருவாகவும், 11 புத்தகங்கள் சமூக மேம்பாட்டிற்காகவும் வெளியிட்டு சுயநலத்தை தாண்டி ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவியிருக்கிறேன்...


கலாம் போன்ற மகான்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மக்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோதே கடிதம் எழுத காரணமாக இருந்திருக்கிறேன்

இப்போதும் எப்போதும் நாட்டில் எனது வரிசைப்படி நின்று உரிமைகளைப் பெறப் போராடுகிறேன்.

கீழ்த் தட்டு மக்களின் பிரச்சனை தீர நாட்டின் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி அவையில்  எனது 24 ஆம் அகவையின் போதே அரசு அலுவலர்களின் நடப்பு எப்படி இருக்கிறது மக்களுடனான‌ அணுகுமுறை என சில நிமிடங்களில் விளக்கிச் சொல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்...இப்படி நிறைய ஸ்பெஷல்ல்கள் என்னிடம் உண்டு எனவே நான் ஸ்பெஷல் தான்...


தாய்க்கும், வீட்டுக்கும் என்னால் முடிந்ததை செய்து முடித்திருக்கிறேன் அதே போல இந்த மண்ணின் இளம் சிறார்களுக்கும்,ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் என்னால் முடிந்ததை செய்த பின் தாம் சொந்த வாழ்வில் அடி எடுத்து வைத்தேன்.


இனி மகனுக்கும் மனைவிக்கும் மட்டுமே செய்ய வேண்டிய நிலை ஏதாவது செய்ய முடிந்தால்...


 சட்டம், நீதி, நிர்வாகம் என்கிறார்கள் ஊடகம் என்கிறார்கள் யாவும் அவற்றின் பண்பு கெட இலக்கணம் இல்லாமல்...


ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து செய்யப் பட்ட பெரும் தியாகத்துக்கு துளி கூட எவருமே மதிப்பளிப்பதாய் இல்லை. பெண்கள் அதிக எண்ணிக்கை இருக்கையில் இப்போதுதான் 33% சதவீதம் என்கிறார்கள் 50% இருப்பது நியாயம் எனும்போது.


மீச்சிறு மானிடமோ மாபெரும் மகாத்மாவாகவோ இல்லாமல் ஒரு தனி மனிதம் எவ்வளவு இந்த உலக முன்னேற்றத்துக்கு பாடுபட முடியுமோ அவ்வளவு பாடு பட்டிருக்கிறேன்.


சுதந்திரத்துக்கு வயது 78, குடியரசுக்கு 75 என்னையும் எனது சகோதரத் தோழர்கள் சில இயக்க வழிகளில் கொண்டு சென்றனர்: அவை: 1. நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம்,2, காந்திய வழியில் ஊருக்குப் பத்துப்  பேர் இயக்கம், 3.தமிழக இலட்சியக் குடும்பங்கள்.4. அன்பு வழி அறப்பணி மன்றம்.அவை பெரிய அளவுகோல்களைத் தொட முடியவில்லை.


சசிபெருமாள், சின்ன பையன், பொறியாளர் மணி போன்றவர்கள் அதில் துடித்த இதயங்கள்.


 சில நாடுகளின் தலைமைகளைப் பார்க்கும் போது அவர்களின் சர்வாதிகாரத்தனத்தை பார்க்கும்போது அவர்கள் பைத்தியக்காரத் தனத்தை பார்க்கும்போது இந்த வாழ்க்கைத் தேவையா? முடிந்து விட்டது போலுள்ளதே என்ற விரக்தி நிலைக்குத் தள்ளப் படுகிறேன்.


உக்ரேன் ரசியா, ஈரான்,யு.எஸ். உலக கொந்தளிப்பு, சூடான் பசிக் கொடுமை இதெல்லாம் மனிதகுலத்தின் பெரும் தோல்வியைக் குறிப்பிட, உள் நாட்டிலோ அப்பட்டமான பொய்களை மக்களை நம்பவைக்க தலைமைகள் முயல்வது பார்க்க அசிங்கமாக இருக்கிறது. 


அரசுகளிடம் பணம் இல்லை, ஆனால் கட்சிகளிடம் பணம் அதன் தலைவர்களிடம் பணம் இலட்சக்கணக்கான கோடிகள் இருப்பதை தேர்தல்கள் உணர்த்துகின்றன, வெளிப்படைத்தன்மையுடனேயே தொலைக்காட்சிகளும், பண்பலைகளிலும் தேர்தல் மக்கள் பணம் பற்றி பேசுகின்றன, விமர்சிக்கின்றன.ஆனாலும் எந்த மாறுதலும் இல்லை.


எனவே தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவும் வெறும் மாய விளையாட்டுகளாகவும் இருப்பதற்கு பக்குவப்படாத ஆட்சிகள், கட்சிகள், தலைவர்கள், மக்கள் ஆட்சி நிர்வாக அமைப்புகள் யாவும் காரணமாக இருப்பதைக் காணமுடிகிறது


தேர்தல் வழிமுறைகள் இன்னும் மாபெரும் உலகின் முதல் மக்கள் தொகை உள்ள நாடான இந்தியாவில் விகிதாச்சார முறை, சரி இல்லா வேட்பாளரை திரும்ப அழைக்கும் முறை போன்றவைக்கு வழி செய்யப் படவில்லை.

ஜனநாயகத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றாக வேண்டிய மிக முக்கிய நிர்பந்தத்தில் இந்திய ஜனநாயகம் சென்று கொண்டிருக்கிறது.


அமெரிக்க ஜனநாயகத்தில் கூட 51% தலைமை மேல் எதிர்ப்பிருந்தும் துணைத் தலைமையும் செனட் என்னும் மந்திரிசபையும் ஏற்காமல் தலைவரை இறக்க முடியாத நிலை உள்ளதை மாற்ற வேண்டிய நிலை உள்ளது.


தேர்தல் நேரத்தில் பெரும் பணம் பிடிபட்டிருக்கிறது. எல்லாம் டிஜிட்டல் மயம் என்று சொல்லப் பட, பணக்கற்றைகள் எப்படி இப்படி வெள்ளமாகப் பாய்ச்ச வாய்ப்புகள் என்ற கேள்விகள் நிறைய உள்ளன...தடி எடுத்தவன் தண்டல்காரன், கோல் எடுத்தவன் கொண்டைக்காரன் என்ற ஆட்சி முறை முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு , தேர்தல் தொகுதி மறு வரையறை, மகளிர் இட ஒதுக்கீடு என 3 மசோதாக்களையும் ஒரு சேர இந்தியப் பாராளுமன்ற ஆளும் கட்சி நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கை அல்லது கூட்டு மன்றத்தில் பாதிக்கும் மேல் எண்ணிக்கை இல்லை என்ற போதும் நாலைந்து மாநிலங்களில் தேர்தல் நடந்து வரும் நிலையில் நிறைவேற்ற எத்தனித்து மண்ணைக் கவ்வி உள்ளதை இந்த தோல்வியை இந்திய ஜனநாயகம் வெற்றி எனக் கொண்டாடலாம், நிலை அப்படி இருக்க அதை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திசை திருப்பும் உத்தி அல்லது தேர்தலில் முளை விட வேண்டிய யுக்தி சக்தி என பிரச்சாரங்கள் போய்க் கொண்டிருக்கின்றன ஒரு சார்பாகவே...


ஊடகங்கள் நிறைய பக்கங்களை ஊதிப் பருக்க வைத்து உடைத்த படி இருக்கின்றன காற்றில்லா பலூன்களாக.

இந்தியத் தலைமைக்கென எப்போதுமே உலக அரங்கில் ஒரு உயரமான அங்கீகாரம்(அந்தஸ்து) இருந்திருக்கிறது, இருக்கிறது அது சரியாக செயல்பட்டிருந்தால் உள்ளரங்கில் நதிகள் இணைப்பு செய்திருக்கலாம் வெளி உலகில் உக்ரேன் ரசியா, ஈரான், யு.எஸ் போன்ற உலகை உலுக்கும் கொதிநிலைகளை அமைதிப்படுத்தி இருக்கலாம். சூடான் போன்ற நாட்டு மக்களின் பசி போக்கவும் முடியும் பேச்சு வார்த்தை வழி காந்திய நெறி உலகை வெல்ல எப்போதும் கையில் உள்ளது. ஆனால் அதற்கு  நாடெல்லாம் நாமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா வீடுகளிலும் நானே, எல்லா தொகுதிகளிலும் நானே எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன் என்று கீதையில் சொல்லப் பட்டது போல இருக்கத் தோன்றுவது போலுள்ளது.


முடிந்த வாழ்க்கை என்றே தோன்றுகிறது... எனவே இறந்தது பேசியதாக இதை நீங்கள் கொள்ளலாம். இந்த வலைப்பூவின் எழுத்துப் பதிவுகள் உலகெலாம் பரவுகிறது எனவே இந்த மனித இதயத்தின் அந்தரங்க சங்கீதத்தை வடிவம் தந்து பாட முடியாத போதும் முனகல்களாகவாவது கேட்க முடியும் என்பதற்காகவே இந்தப் பதிவு, எதையோ எதை எதையோ சொல்ல வேண்டும் என பல தூக்கமிலா இரவுகள், இன்றும் கூட விடியல் மூன்று மணி முதலே வார்த்தைத் தூறல்கள் ஆரம்பித்து விட்டன என்றாலும் ஏதோ இப்போது இதையாவது உங்களுடன் பகிர்ந்த நிலை இருக்கிறதே என குறைவான நிறைவைப் பெறுகிறேன். இடது கை சுண்டு விரல் மை அடையாளத்துடன்.


இந்த 4 வேட்பாளர்களில் இவர் சரியானவர், உயரமாக இருக்கிறார் என்றால் உடனே நீங்கள் அந்தக் கட்சியா என்கிறார்கள், பணம் கொடுக்க வில்லை என சண்டை செய்து வருகிறார்கள் கட்சிக்காரர்களுடன் இந்தியக் குடிமக்கள், இந்திய வாழ் பெருங்குடி மக்கள். தமிழகம் உலகுக்கே வழி செய்த தமிழ் நாடாகவும் வள்ளுவனை உலகுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடாகவும் என வாய் கிழிய பேசிய முழக்கமெல்லாம் அவமானமாகத் தெரிகிறது.

பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்து விடு பாப்பா

அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்றான் பாரதி

அதற்கு ஸ்ட்ரெந்த்(strength) வேணுமே ...


எனது வாழ்வெல்லாம் முடிந்து போனதாகவே யோசிக்கும் போது நினைக்கத் தோன்றுகிறது. இந்த கூத்துகளில் நான் எங்கே இருக்கிறேன் எனக் கேட்கும்போது இருப்பதாகவேத் தெரியவில்லை.


எங்காவது உங்கள் உள்ளங்களிலாவது ஒரு சிறு ஓரத்தில் இருப்பேன் கண்டு கொள்ளுங்கள்

உண்மையுடன்,பெருங்குணங்களுடன் நேர்மையுடன்  அன்பு நெஞ்சங்களே...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

THERE IS NO FREEDOM WITH OUT RESTRICTIONS.

THERE IS NO INDEPENDENCE WITH OUT DISCIPLINE

THERE IS NO ACHIEVEMENTS WITH OUT SACRIFICE

            BY DR.S.RADHA KRISHNAN

P.S:

சாலையில் நடப்பார் வலது பக்கத்தில் வாகனம் இடது புறத்தில்

செல்ல வேண்டுமென்பது இந்திய சாலை விதி...எவர் கேட்கிறார்

எவர் செய்கிறார் கடைப்பிடிக்கிறார், நானும் இன்னும் சில பேரும் மட்டுமே...

கடைசியில் நான் ஒருவன் மட்டுமே கடைபிடிப்பதாக, இருப்பதாகப் படுகிறது...

எனவே விதி சட்டம் இவற்றை மீறாமல் கடைபிடிப்பார்க்கு கடுக்கா கொடுப்பது அரசு


ஆங்கிலத்தில் லா மேக்கர்ஸ் ஆர் லா பிரேக்கர்ஸ் LAW MAKERS ARE LAW BREAKERS என்ற பழமொழிக்கேற்ப‌

அரசியலாளர்களே மக்களை குற்றவாளிகள் ஆக்கி வைக்கிறார்கள்.

எனவே இலஞ்சம் கொடுத்த அனைவர்க்கும் எமது பகுதியில் பட்டா கொடுக்கப் பட்டு விட‌

இலஞ்சம் கொடுக்காத எனக்கு இது வரை கொடுக்கப் படவில்லை பல்லாண்டுகளாக...

கேட்டால் எல்லாம் சட்டப்படி, ரூல்ஸ்படிதான் நடக்குமாம்.....

இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் எந்த விதியில் சட்டத்தில் வருகிறது\என்பதைத்தான்

சட்டம் அறிந்தார் சொல்ல வேண்டும்...


வாக்குகளுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் அதே நடைமுறையில் தாம் வருகிறதோ?








No comments:

Post a Comment