Saturday, March 2, 2024

என்மகஜெ

 என்மகஜெ: அம்பிகா சுதன் மாங்காடு: கவிஞர் தணிகை

மலையாளச் சூழலியல் நாவல் தமிழில் : சிற்பி



படிக்கும் பழக்கம் போய் பார்க்கும் பழக்கம் காலம் வந்த நிலையிலும் எழுதியபடி இருக்கிறோம் இன்னும் சிலர்.எப்படி சொல்கிறேன் எனில் எனது தம்பி ஒருவர் ( அவருக்கு பெற்றோர் இருவரும் இல்லை சிறு வயது. நமக்கும் தான்) தனது தந்தை இறந்த நிலையில் நியாய விலைக் குடும்ப அட்டையில் இருந்து தந்தை பெயரை நீக்க கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார் உடனே எழுதிக் கொடுத்தவரான இவர் பெயரை நீக்கி விட்டனர். இறந்த தந்தையின் பெயர் இன்னும் இருக்கிறது. சரி செய்ய சட்டத்திற்கு புறம்பான வழியை நாடுவது தான் நம் நாட்டில் இருக்கும் சிறந்த வழி என்று அவரது மாமா அதே துறையில் நல்லதொரு பொறுப்பான பணியில் தொலை தூர மாவட்டத்தில் இருந்து வருபவர் அனுபவம் இருப்பதால் வழி காட்டி இருக்கிறார். எனவேதான் சொன்னேன் பார்ப்பதோடு சரி எவரும் படிக்க ஆர்வப் படுவதேயில்லை என.


என்மகஜெ: சொல்லின் பொருள் எட்டுப் பண்பாடுகளின் நாடு என்பதாகும் எனக் குறிப்பிட்டு இருக்கிறது. எண்மகஜெ என்று இருந்திருந்தாலாவது எண் வகை பண்புகள் கொண்ட இடம் என்ற முடிவுக்கு வர சரியாக இருந்திருக்கலாம். அப்படித்தான் எழுதியோர் சொல்கிறார்கள். இதை ஒரு ஆனந்த யாழை மீட்டுகிற ஆராரிராரோ பாடுகிற தங்க மீன்கள் போன்ற‌ நாவல் என்று பேரை வைத்து நினைத்தேன். பெரும்பாலும் அனைவர்க்கும் அப்ப‌டித்தான் தோன்ற வாய்ப்பு. ஆனால் இது என் மக(ள்) ஜெ அல்ல. முற்றிலும் வேறு.


சிற்பி( பாலசுப்ரமணியம் ) பொள்ளாச்சி தொழில் நுட்பக் கல்லூரிக்கு 1979ல் வந்த போதும் எளியவராகவே காட்சி அளித்தார். அவரும் எனது தோழர் ஒருவரின் நண்பர் இளையபாரதி என்னும் ராஜேந்திரன் என்பவரும் அன்றைய கல்லூரி+ கோவை வானொலி ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு விருந்தாளிகளாக இருந்தனர். இருவரும் அப்போது கோவை வானொலி நிலையத்தில் பகுதி நேர சேவை செய்ததாகவும் நினைவு.


சிற்பியை விட, ராஜேந்திரனை விட நாம் அதிகம் சாதிக்க முடியும் என்ற பெருமிதம் காணாப் போனது வாழ்வுச் சூறைக் காற்றில்.சிற்பி பாலசுப்ரமணியம் தான் இந்த நாவலின் மொழிபெயர்ப்பாளர்.அவர் தமிழறிஞராக நின்று நிறைய மைல்கற்களைத் தாண்டி சென்றபடியே இன்னும் 84ல் ஓய்வறியா பயணத்தில். ராஜேந்திரன் மத்தியக் கலால் வரித் துறையில் அப்போது நீண்ட முயற்சிக்கும் பின் ஆய்வாளர் ஆனார். இப்போது பெரும் பொறுப்புக்கும் பின் ஓய்வு பெற்றிருக்கலாம்.


வித்தியாசமான நாவல் "என்மகஜெ" இதன் ஆசிரியர் மாங்காடு அம்பிகா சுதன் சொல்லியபடி நடந்தவைகளுள் கற்பனையும் கலந்திருக்கிறார்.


நீலகண்டன் கருத்தடை செய்து கொண்ட ஆண்,உடலை விற்றுப் பிழைத்த ஒருபக்கம் மார்பகத்தை இழந்த( ஒரு முலையை அறுத்து எடுத்த பின் வாழ்வதாகவே நூல் சொல்) கர்ப்பப் பை எடுத்துக் கொண்ட தேவயானியுடன் (இருவரும்) உலகை விட்டு ஒதுங்கி யாருடனும் பேசாமல்  எவரும் எளிதில் தொட முடியா ஒரு மலைக்காட்டில் குடி அமைத்துக் கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்கள். இந்த உலக வாழ்வும் மனிதர்களும் வேண்டாமென்று புறக்கணித்து விட்டு. ஒருவர்க்கொருவர் துணையாக இருக்கிறார்கள். அதிக நாட்கள் ஒருவர்க்கொருவர் துணையின்றி வாழ முடியாத நிலையிலும் இருக்கிறார்கள்.


நீலகண்டன் தேவயானியை குற்றுயிரும் கொலையுயிருமாக 4 கல்லூரி இளைஞர்களிடம் சிக்கி சின்னாபின்னப் பட்டு ஒரு காட்டில் கிடக்கும் உடலாகவே கண்டு எடுத்து மூச்சி இருக்க கொண்டு வந்து காப்பாற்றுவதுதான் அவர்களின் முதல் சந்திப்பு. அதன் பின் அவர்களின் சேர்ந்த தேர்ந்தெடுத்துக் கொண்ட‌ வாழ்வுதான் இந்த நாவலின் கதை .


 கீழே சந்தைக்கு வர நேரும் போது  ஒரு நாள் கீழ் சிறு கிராமம் ஒன்றில் பெற்றோர் தூக்கிட்டு மாய்ந்து விட ஒரு குழந்தை அனாதையாக யாரும் இன்றி கிடக்க‌ அதை எடுத்து வருகிறாள் தேவயானி. அந்த குழந்தைக்கு அப்போதே நரைமுடி, அழ முடிந்தால் சத்தம் வராமை , தொண்டைக்குழி இல்லாமை ஓரிரு வயது இருக்கலாம் என்று நினைத்தால் அதற்கு 8 வயதுக்கும் அதிகமாக இருப்பதாக அதற்கு மருத்துவம் பார்த்த நல்ல மருத்துவரின் மொழி,  அதன் பின் தெய்வக் குற்றத்தால் அந்த மலையெங்கும் அதே பல்லவியுடன் சரணங்களாக சோக கீதங்கள், நிறைய குழந்தைகள் (அப்நார்மலாக) சாதாரண‌ மனித இயல்புக்கு மாறாக...அது மட்டுமல்ல 3 கால் கன்றுக் குட்டிகள், இரு தலை மாடு,தேனிக்கள் கூட இல்லாமை, புழு பூச்சிகள் இல்லா, மண்ணும், நீரும்...இப்படி அதிர்ச்சிகள் எங்கெங்கும்... எல்லாம் ஜடாதாரிக் கடவுளின் தண்டனை என... பாவத்துக்கு பழி வாங்க என... நமக்கு போபால் விஷ வாயு பற்றி ரயில்வே மேன் தொடர் சொன்ன கதை நினைவிலோட மேலும் படிக்க நேர்கையில்...


ஒத்த மனம் உள்ள சிலர் சேர்கிறார்கள் அது "என்டோ சல்பான்" என்ற மருந்து ஹெலிகாப்டர் மூலம் அரசு முந்திரிப்பண்ணைகளில் தெளிப்பதன் தெளித்ததன் தெளிக்கப் போவதன் விளைவே என...முடிந்த வரை உயிரைப் பணயம் வைத்து அதற்கு எதிராக போராட ஆரம்பிக்கிறார்கள். பெரும் வாழ்வா சாவா போராட்டம். அதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை. வழக்கமான அரசியல் மந்திரி, தலைவர், அவர்கள் செல்வாக்குக்கு உட்பட்ட அரசுத் துறைகள், காவல் நிலையம் இப்படி சென்று கடைசியில் முடிவாக யார் பக்கம் வெற்றி தோல்வி என்றெல்லாம் சொல்லாமல் 288 பக்கம் நூல் விலை ரூ.200 நமக்கு கேள்விகள் எழுப்பி நிற்கிறது. 2013 வெளியீடு. இது கேரள மாநிலத்தில் நடந்த கதை.


 கடைசியில்  நீலகண்டனையும் தேவயானியையும் மரத்தில் ஆடையின்றி தலைகீழாக கட்டித் தொங்க விட்டு தீ இட்டு கொளுத்த  தமது அடியாட்களுக்கு ஆணையிட்டு விட்டு சிரித்தபடி இருக்கும் தலைவருக்கு திடீரென வயிறு ஏதோ கோளாறு செய்ய‌ இயற்கை உபாதையை துணியை எல்லாம் கழட்டி விட்டு நிர்வாணமாக கழிக்கச் சென்ற தலைவரை வெகு இயற்கையாக பெரும் பாம்பு ஒன்று தோளில் மேல்  போட்டு விடுவதுடன்/தீண்டி விடுவதுடன் கதையின் அத்தியாயம் தொக்கி நிற்கிறது... நிர்வாணமாக கத்தியபடி அலறுகிறார் தமது அடியாட்களை உடனே வந்து காப்பாற்ற எடுத்துச் செல்லும்படி.அதற்குள் நிறைய படிப்பவரும் அனுபவப் படுகிறோம்.


திரைப்படத்துக்கான ஒரு நல்ல கதை.

என்டோ சல்பான், கார்பைடுக் கல், டைக்ளோபினக் எல்லாமே விலக்கி வைக்கப் பட்ட மருந்து பிற முன்னேறிய நாடுகளில். இந்தியாவில் இன்னும் புழக்கத்தில் இருக்கிறதென செய்திகள் இருக்கின்றன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment