Sunday, July 29, 2018

என்ன புரட்சி? எண்ணெய் புரட்சி..கவிஞர் தணிகை

 என்ன வேண்டும் எண்ணெய் வேண்டும்: கவிஞர் தணிகை

Image result for gingili oil plant

என்ன புரட்சி? எண்ணெய் புரட்சி...எள் + நெய்= எண்ணெய்  என்பது எல்லா தாவர எண்ணெய்க்குமாகி: விளக்கெண்ணெய் ஆமணக்கு எண்ணெய்தான், கடலை எண்ணெய்... நிலக்க‌டலை எண்ணெய்தான், நல்லெண்ணெய் எள் எண்ணெய்தான், தேங்காய் எண்ணெய்... இப்படி பிரதானமாக மனிதர்க்கும் விலங்கினத்திற்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் எண்ணெய் இப்போது தனியார் முதலாளிகள் வாணிபக் கையில் கம்பெனி வடிவத்திலிருந்து சாதாரண சாமனிய கிராமிய விவசாயப் பெருமக்கள் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. இது ஒருநல்ல புரட்சி. எண்ணெய் புரட்சி. இது சத்தமில்லாமலே தமிழகத்தில் அரங்கேறி இருக்கிறது.

இது நம்மாழ்வார் இயக்கம், தமிழகத்தின் விவசாய ஆதரவாளர்களாக இயங்கிய அத்தனை சமூகப் பண்பாட்டு செயல்முறையாளர்கள் அனைவரையும் சாரும்.

இப்போது ஒரு மளிகை கடை வைத்திருக்கும் எனது சகோதரியின் மகன் சொல்கிறார் எண்ணெய் வியாபாரம் எல்லாம் கடைகளில் படுத்துவிட்டது. ஏன் எனில் கிராமம் சார்ந்து அல்லது அவரவர் இடங்கள் சார்ந்து நிறைய செக்கில் ஆட்டும் அதாவது மரச்செக்கிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் புராதானமான உடலுக்கு ஊறு விளைவிக்காத முறை நடைமுறைக்குத் திரும்பி இருக்கிறது. இது ஒரு நல்ல மாற்றம். வரவேற்கத்தக்க திருப்பம். சத்தமில்லாத ஒரு புரட்சி.

இதுவரை எண்ணெய் ஆலை முதலாளிகள் எல்லாம் கலப்படம் செய்து விற்று கொள்ளை இலாபம் அடித்து வந்த முறைகளுக்கு இது மாற்றாக வந்திருக்கிறது . எனவே இதை அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும், ஆதரித்தே ஆக வேண்டும் அவை வணிகம் சார்ந்த வியாபார நோக்கில் மட்டும் சொல்லப்படுவதல்ல...நமது உடலை நல்ல முறையில் பேணிக்காக்க வேண்டிய அவசியம் பற்றிய ஒரே காரணத்துக்காக முன் மொழியப்படல் வேண்டியதாகிறது.

நாங்கள், அதாவது எங்கள் குடும்பம் கடையில் எண்ணெய் வாங்குவதிலிருந்து விடுபட்டு வெகு நாட்களாகி விட்டது. தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய யாவுமே மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் மட்டுமே உபயோகிக்கிறோம்.

ஒரு காலக்கட்டத்தில் இரவில் அதிகம் கணினி முன் எழுதிப் படித்து பார்த்து வந்த பழக்கம் அதிகம் இருக்கும்போது இரவு மணி இரண்டு மணிக்கு எல்லாம் உறங்கச் செல்வது சர்வ சாதாரணம்...அப்போது ஒரு துளி தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விழிகளில் விட்டுக் கொள்வது வழக்கம்.
Image result for gingili oil plant
ஆனால் நாளடைவில் அவற்றில் கலந்துள்ள கலப்படம் உறுதியாகி அவை கண்களை உறுத்தி, எரிச்சல் தருவது கண்டு முதலில் தேங்காய் எண்ணெய் கிராமப் புறத்தில் ஒரு நண்பரிடம் இருந்து பெற ஆரம்பித்தேன் அவர்கள் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களில் இருந்து பிழிந்தெடுத்தது... மிக அருமையான மாற்றம்...

அதன் பின் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், கடலை எண்ணெய் ஆகிய எல்லா எண்ணெய்களுமே அதன் படி மரச்செக்கில் ஆட்டிய எண்ணெயாகவே வாங்க ஆரம்பித்து விட்டோம். மணம் மிகவும் அருமை, தனியார் ஆலை, கடைகளில் விற்கும் பாக்கெட் எண்ணெய்களுக்கும் தர வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும்... இதெல்லாம் தெரியாமல் சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய் என ரீ பைனடு ஆயில் என்றும் போர்னா எண்ணெய் உமியில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பயன்படுத்திய காலம் எல்லாம் எவ்வளவு தவறானது என்று இப்போது நன்கு புரிந்து விட்டது...

முதலில் அரிதாக ஆங்காங்கே இருந்த இது போன்ற கிராமிய முயற்சி இப்போது நாம் குடியிருப்புகளுக்கு வெகு அருகாமையிலேயே வந்து விட்டன. எனக்குத் தெரிந்தே நல்லப்பன் என்ற ஒரு நபர் கருப்பு ரெட்டியூரில் இந்த மரச்செக்கு எண்ணெய் ஆட்டி விற்பனை செய்கிறார். செல்வம் என்ற நபரும் வனவாசியில் செய்து வருகிறார். சொன்னால் வீடு தேடி கொண்டுவந்து கொடுத்து செல்வாரும் உண்டு.

எண்ணெய் உபயோகமே தவறு என்ற புரளி பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அது நல்ல எண்ணெய் தயாரிப்பாக இல்லாத போது சொல்லப்பட்ட விவாதச் சொல். எண்ணெய்ச் சத்து வேண்டும் அது ஊறு விளக்காமல் உடல் நலம் பேண உதவுவதாக இருக்கும்போது அதை பயன்படுத்துவதில் ஒரு தீங்கும் இல்லை.உண்மையில் நன்மையே. ஏன் பசுமாட்டு நெய் கூட உடலுக்கு நல்லது என்றே மீனாட்சி சுந்தரமா தெய்வநாயகமா அவர் பேர் மறந்து விட்டது, அந்த வெண்ணிற ஆடை அண்ணல் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி மறைந்து போனவர் தாம்பரம் புற்று நோய் மருத்துவ மனையில் சித்த மருத்துவப் பங்காற்றியவர்  அடிக்கடி கூறுவார்.

எனவே மனித குலம் மறுபடியும் சிறு தானிய உட்கொள்ளல், நல்ல எண்ணெய் பயன்படுத்தல், நல் விவசாயம் போன்ற பழங்கால மனிதர்க்கும் உயிர்களுக்கும் ஊறு விளைக்காத முறைகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறது இதை எல்லாம் பார்க்கும்போது ஒரு நல்ல ஆரோக்கியமான தமிழகத்தை மீட்டுக் கொண்டு வரலாம் சரியாக நோக்கத்துடன் பயணம் செய்தால் என்றே தோன்றுகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment