தமிழ் நாடு அரசின் பொங்கல் 2026: கவிஞர் தணிகை
அரசியல் என்பதும், ஆட்சி என்பதும், கட்சி என்பதும் வாக்கு வங்கியைப் பற்றியதுதான், சுற்றியதுதான்.அதில் பெரிதான விவாதம் நடத்துமளவு பொருளில்லை இக்காலத்தில். என்றாலும் மக்களுக்குச் செய்வதற்கு மனம் வேண்டும்.
அரசுக்கும் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியைத் தெரிந்த தலைமைகள் நேரடியாக மக்களுக்கு பலன் பயன் சென்றடையட்டுமே என்ற முடிவில் சில திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.
அப்படி வந்ததுதான் காமராசரின் மதிய உணவு, எம்.ஜி.ஆர் செய்த சத்துணவு, அதன் பின் வந்த அனைவரின் எண்ணங்களின் செயல்பாடுகளும். இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அதன் நீட்சியாகவே ரொக்கம் ரூபாய் 3000 அத்துடன் சேலை வேட்டி, பொங்கல் பரிசுப் பொருட்களை நியாயவிலைக் கார்டுதாரர்களுக்கு சுமார் 2,23,92,000 +(புள்ளி விவரத்தில் மாற்றம் இருக்கலாம். சொல்லப் பட்டது ஏறத் தாழ ஒரு கணக்கிற்காக மட்டுமே). கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
இவர் மேலும் இதே போன்று மகளிர் விடியல் பேருந்து பயணம், உரிமைத் தொகை, அரசுப் பள்ளியில் படித்த உயர்கல்லூரி மாணவர்க்கான உதவித் தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதும் யாவரும் அறிந்ததே அதன் பட்டியலை அடுக்குகளை அவர் கட்சி சார்ந்த கொள்கை பரப்பு செயலாளர்கள் சொல்வது போல சொல்வது நமது நோக்கமல்ல, அரசின் பொது உறவு அலுவலர்களும் சொல்லிக் கொள்ளட்டும்.
நிறைய பேர்களில்/(with Name and Schemes) நிறையத் திட்டங்கள் ஏழை எளிய மக்கள் நோக்கி....
அய்யோ கடனை சுமத்துகிறார்களே, தேர்தல் தோல்வி பயத்தில் செய்கிறார்களே என்றெல்லாம் பிதற்றுவதும், ஒப்பாரிச் சத்தங்களும் கேட்கவே செய்கின்றன.
எமது தந்தை ஒரு மில் தொழிலாளியாக இருந்தவர், எமது என்பது 8 பேர் பிள்ளைகளின் தந்தை என்பதற்காக.80களில் அல்லது அதற்கு முன் பொங்கல் வைக்க காசு இருக்காது,சூரியன் பொங்கலை வேறு ஞாயிற்றுக் கிழமைகளில் மாற்றி வைத்துக் கொள்வோம், அது சர்க்கரைப் பொங்கல், நாகர் பொங்கல் புற்றுக்கு வைப்பதை கோழி அறுத்து விருப்பப் படி வைத்துக் கொள்வார்கள்,விநாயகர் கோவிலில் பெரும் பொங்கல் அன்று ஒரு வெண்பொங்கல் வைத்து அதற்கு பூசணி அவரை போன்றவற்றை வைத்து ஒரு குழம்பு செய்து நெய்விட்டு பிசைந்து உண்ணச் செய்வார்கள். போகிப் பண்டிகை அன்று மொச்சை, அவரை, என்று வேக வைத்து சங்கராந்தி என்று படைத்து அந்த பயறுகளை வேக வைத்து தாளித்து பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுப்பார்கள். இது தான் எங்கள் வீட்டு பாரம்பரிய பொங்கல் விழா. காடு கழனி எல்லாம் இல்லாததால்.
அப்போது ஒரு கவிதை எழுதினேன்: அதில் கோவில் பொங்கல் கூட குருக்கள் வீடு செல்ல, குறுந்துண்டு கரும்புக்காக குறு குறுத்து காத்திருக்கிறான் ஒரு சிறுவன், அதில் இனிப்பே தெரியவில்லை, கோந்தாலை என்பதால் ஒரே உவர்ப்பு...என்பதாக...
இந்தக் குடும்பத்தை விட இன்னும் கீழ் தங்கிய குடும்பங்கள் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் அன்று பொங்கலைக் கொண்டாட காசு இல்லாமல் இருந்திருக்கின்றன தமிழ் நாட்டிலும்...
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்தப் போட்டிகளால்...மக்களுக்கு நன்மை கிடைத்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
முன்பெல்லாம் நியாய விலைக் கடைகளில் போட்டி, பொறாமை, சண்டை , சச்சரவு, காவலர் வந்து ஒழுங்கு செய்தல் இப்படி எல்லாக் கடைகளிலும் ஒரு நியாயமின்மை அரங்கேறிக் கொண்டே இருக்கும்...ஆனால் பல ஆண்டுகளாக எம்மால் கண்கூடாக காணமுடிகிறது சத்தமின்றி குறைவின்றி விநியோகம் நடந்து முடிகிறது...அரசு இத்திட்டத்தை நன்கு செய்து வருகிறது...
எனவே ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழும் இந்தப் பொங்கல் உண்மையிலேயே தமிழ் நாடு அரசின் பொங்கல் என ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது என்பது உண்மைதான்....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை